சினிமா
தொடர்கள்
Published:Updated:

“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”

ஷைன் டாம் சாக்கோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷைன் டாம் சாக்கோ

மலையாள சினிமாவுல தினசரி நாம பார்க்கிற நபர்களைப் பத்திதான் படம் எடுக்கிறாங்க. அதனால, நாம சந்திச்ச நபர்களைப் பிரதிபலிக்கிறது ஈஸி.

கதைக்களம், நடிப்பு என எப்போதும் மலையாள சினிமா நம்மை பிரமிக்க வைக்கும்; ஆச்சர்யப்படுத்தும். ஸ்டார் வேல்யூ என்பதெல்லாம் இல்லாமல் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே நமக்கு அறிமுகமாகும் நடிகர்களை மலையாள சினிமாவில் பார்க்கலாம். அந்த வகையில், ஷைன் டாம் சாக்கோ சமீபத்திய சென்சேஷன். ‘Who', ‘Love', ‘இஷ்க்', ‘குருதி', ‘குரூப்' என்று பல படங்கள் அதற்கு உதாரணம். சமீபமாக வெளியான, ‘பீஷ்மபர்வம்' படத்தில் மம்மூட்டி, செளபின் சாகிர் எனப் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு திரையைத் தீப்பிடிக்க வைத்தது. ‘பீஸ்ட்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருச்சூரில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன்.

“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”

``9 வருடங்கள் உதவி இயக்குநரா இருந்த நீங்க, படம் இயக்காமல் நடிப்புப் பக்கம் வந்தது எப்படி?’’

‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேலதான் ஆர்வம் அதிகம். என் அப்பா அம்மா என்னைப் படத்துக்குக் கூட்டிட்டுப் போனபோது, வெள்ளைத்திரைக்குப் பின்னாடி இருந்துதான் எல்லோரும் நடிக்கிறாங்கன்னு இன்டர்வெல் டைம்ல போய் எட்டிப்பார்ப்பேன். கொஞ்சம் வருஷத்துக்குப் பிறகுதான், சினிமாவுல டைரக்‌ஷன், கேமரா இருக்குன்னெல்லாம் புரிஞ்சது. நான் ஸ்கூல் படிக்கும்போது, இயக்குநர் கமல் சார் எங்க காலனிக்குக் குடி வந்தார். அவங்க குடும்பமும் எங்க குடும்பமும் அப்படியே பழக்கமானாங்க. அப்போதுதான் அவர் சினிமாவுல வளர்ந்து வந்துக்கிட்டிருந்தார். என் மனசுக்குள்ள ‘நம்ம அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்ச இயக்குநர் ஒருத்தர் இருக்கார். அவர் எப்படியும் நமக்கு நடிக்க வாய்ப்பு தருவார்’னு என்னவோ ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தது. நான் சினிமா அதிகம் பார்க்க ஆரம்பிச்ச பிறகு, என் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்துட்டு, இவனுக்குப் படிப்புல ஆர்வமில்லைன்னு என் அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. +2 தேர்வுக்கு முன்னாடியே நான் கமல் சாரைப் பார்க்க ஷூட்டிங்கிற்குப் போனேன். அங்க செட், நடிகர்கள் எல்லாம் பார்த்துட்டு, எனக்கு திரும்பி வர மனசில்லை. அவர்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டா சின்னதா ஏதோவொரு கேரக்டர் கொடுப்பாங்க, முடிச்சுட்டுக் கிளம்ப வேண்டியதுதான். ‘அவர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்துட்டோம்னா, அவர்கூட சினிமா ஷூட்டிங்கிலேயே இருக்கலாம்’னு அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். போய் +2 எக்ஸாம் எழுதுற வழியைப் பாருன்னு அனுப்பிட்டார். அப்புறம், எக்ஸாமெல்லாம் முடிச்சுட்டு ஒரு நாள் ஷூட்டிங்கிற்குப் போய், ‘சார், நான் சேர்ந்துட்டேன்'னு சொன்னேன். ‘நீயா எப்படிச் சேர முடியும். நான்தானே சேர்த்துக்கணும்'னு கேட்டார். ‘நான் கேட்டா நீங்க படி, அடுத்த படத்துல பார்க்கலாம்னு சொல்லிடுவீங்க. அதனால, நானாவே சேர்ந்துட்டேன்'னு சொன்னேன். சிரிச்சுக்கிட்டே சரின்னு சொல்லிட்டார். அப்படி இருந்தால், அவர் படத்துடைய நடிகர்கள் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் ஷூட்டிங் வரலைன்னா, அந்தக் கேரக்டர்ல நடிக்கச் சொல்வார்ங்கிற ஆசையிலேயே ஒவ்வொரு நாளும் இருப்பேன். அப்படியே ஒன்பது வருடங்கள் ஓடிடுச்சு. அப்போ என்கூட ஆஷிக் அபுவும் உதவி இயக்குநரா இருந்தார். அவர் இயக்கின சுயாதீன படத்துல நடிக்கக் கூப்பிட்டார், நடிச்சேன். அப்படியே வெளியே வந்து நண்பர்களோட கதை, டிஸ்கஷன்னு மாதங்கள் ஓடுச்சு. அந்தச் சமயத்துல முடியெல்லாம் வெட்டாமல் நிறைய வெச்சிருந்தேன். கமல் சாருடைய ‘கத்தம்மா' படத்துல ஒரு கேரக்டர் நிறைய முடி வெச்சுக்கிட்டு வாழ்க்கையைத் தொலைச்ச மாதிரி இருக்கணும்னு தேடிக்கிட்டு இருந்திருக்கார். அப்போ ஒருத்தர் என் பேரைச் சொல்ல, சார் என்னைக் கூப்பிட்டார். என்னைப் பார்த்ததும் ‘சூப்பர், நீயே பண்ணுடா'ன்னு சொல்லிட்டார். இந்த ஒரு வார்த்தைக்கு ஒன்பது வருஷம் காத்திருந்தேன்.''

“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”

``இந்திய சினிமாவுல மலையாள நடிகர்கள் தனிச்சுத் தெரியுறாங்க; பாராட்டப்படுறாங்க. காரணம், யதார்த்தம். அந்த யதார்த்தம் எப்படி வருது?’’

``மலையாள சினிமாவுல தினசரி நாம பார்க்கிற நபர்களைப் பத்திதான் படம் எடுக்கிறாங்க. அதனால, நாம சந்திச்ச நபர்களைப் பிரதிபலிக்கிறது ஈஸி. மத்த மொழியில வேறொரு உலகத்தைக் காட்டுறாங்க. நாம பார்க்காத உலகத்துல இருக்கிறவங்களைத் திரையில கொண்டு வர்றதுதான் கஷ்டம். இன்னொரு விஷயம், ‘பாகுபலி' மாதிரி பெரிய படங்கள் எடுக்க பட்ஜெட் வேணும். கேரளா சின்ன மாநிலம். சினிமா மூலமா வரக்கூடிய வருமானம் குறைவுதான். கதாசிரியர்களும் இயக்குநர்களும் குறைவான பட்ஜெட்ல படங்கள் பண்ணணும்னுதான் நினைப்பாங்க. அந்த பட்ஜெட்ல ஒரு சாமானியனுடைய வாழ்க்கையைத்தான் எடுக்க முடியுது. அதனால, அது ரொம்ப யதார்த்தமான படைப்பா வெளிவருதுன்னு நினைக்கிறேன்.''

`` ‘இஷ்க்', ‘குருதி', ‘குரூப்', ‘பீஷ்மபர்வம்'னு பயங்கரமா வெரைட்டி காட்டுறீங்க. அந்தக் கேரக்டரா மனதளவுல மாற எவ்வளவு நேரம் எடுத்துக்கும்?’’

‘‘அந்தக் கதையும் கதாபாத்திரமும் கேட்டவுடன், அது பத்தியே யோசனை போய்க்கிட்டிருக்கும். அப்போ நிறைய ஐடியாக்கள் வரும். சில மேனரிசங்கள் தோணும். நாம சந்திச்ச மனிதர்கள் ஞாபகத்துக்கு வருவாங்க. அந்தக் கேரக்டர் பத்தி இயக்குநர், உதவி இயக்குநர்கள்கிட்ட பேசப்பேச அந்தக் கேரக்டர் நமக்குள்ள வந்திடும். அது பற்றிய சிந்தனைதான் முதல் படி. சரியான காஸ்ட்யூம், சூழலும் நம்மளை அந்தக் கேரக்டர்கிட்ட எடுத்துட்டுப் போகும். அதே போல, மக்களைக் கவனிக்கிறது ரொம்ப முக்கியம். ‘குரூப்' படம் முழுக்க நான் பீடி பிடிச்சுக்கிட்டே இருப்பேன். அது 80கள்ல நடக்கிற கதை. நான் ஸ்கூலுக்குப் போகும்போது ஒருத்தர் உட்கார்ந்து பீடி பிடிச்சதைப் பார்த்தேன். செம ஸ்டைலா அதைப் பற்ற வைப்பார். அது என் மனசுக்குள்ள பதிஞ்சுடுச்சு. 80கள்ல நடக்கிற கதைன்னு சொன்னதும் அவர் ஞாபகத்துக்கு வந்தார். அவருடைய மேனரிசத்தைத்தான் பண்ணினேன். அதே மாதிரி ‘பீஷ்மபர்வம்' படத்துல வர்ற டான்ஸ் மூவ்மென்ட் வைரலாகிடுச்சு. பப்ல ஒருத்தர் அந்த மூவ்மென்ட் ஆடிக்கிட்டு இருந்தார். அது ஞாபகத்துக்கு வந்தது. இயக்குநர் அமல் நீரத்கிட்ட ‘இப்படிப் பண்ணவா’ன்னு கேட்டதும் அவர் ஓகே சொல்லிட்டார். நான் பண்ணினேன்.''

“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”
“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”

`` ‘பீஸ்ட்' படத்துல நீங்க நடிக்கணும்னு நெல்சன் எப்படி உங்களை அணுகினார்? கதை கேட்டீங்களா?’’

‘‘சன் பிக்சர்ஸ்ல இருந்து ஒரு மேனேஜர் போன் பண்ணி, விஜய் சார் படத்துல நீங்க ஒரு கேரக்டர் பண்ணணும்னு சொன்னாங்க. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். அப்புறம், படத்துடைய இணை இயக்குநர், இத்தனை நாள் கால்ஷீட், இங்க ஷூட், சம்பளம்னு எல்லாம் பேசினாங்க. தீவிரவாதி கேரக்டர்னு மட்டும் சொன்னாங்க. மத்தது எதுவும் சொல்லலை. எனக்குத் தமிழ் தெரியாதே, என்ன பண்ணப் போறோம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். தீவிரவாதி கேரக்டர்னு சொன்னதும் மும்பை அட்டாக்ல ஈடுபட்டிருந்த அஜ்மல் கசாப்புடைய வீடியோஸ் எல்லாம் பார்த்துட்டு சில ரெஃபரென்ஸ் எடுத்தேன். நெல்சனுடைய ‘கோலமாவு கோகிலா' பார்த்திருக்கேன். ஆனா, இவர்தான் நெல்சன்னு எனக்குத் தெரியாது. அதனால, உடனே சென்னை கிளம்பி வந்து நெல்சனைச் சந்திச்சேன். அப்போ பேசும்போது, ‘இந்தக் கதையில நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை'ன்னு சொல்லி, கதையைச் சொன்னார். அப்போ கதை எதைச் சுத்தி நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கான ஸ்கோப் குறைவுதான். இருந்தாலும், அதுல எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். இந்த மாதிரி பெரிய படத்துல இவ்வளவுதான் ஸ்கோப் இருக்கும். நான் ஹேப்பிதான்.''

“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”
“விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்!”

``தமிழ் பேசாமல் தமிழ்ப் படத்தில் நடிச்சிருக்கீங்களே!’’

‘‘ஆமா. அதுதான் காமெடி. தமிழ்ப் படத்துல நடிக்கிறோம்னு கொஞ்சம் தமிழெல்லாம் படிச்சுக் கத்துக்கிட்டேன். ஆனா, படத்துல நான் தமிழே பேசலை. உருது பேசணும்னு சொன்னாங்க. எனக்கு ஷாக். இந்தி மாதிரிதான் இருக்கும், டோன்ட் வொரின்னு சொன்னாங்க. எனக்கு இந்தி பிடிக்காது. ரொம்பக் குறைவான இந்திப் படங்கள்தான் பார்த்திருக்கேன். அவங்க பெரும்பாலும் சாமானியனுடைய கதையைச் சொல்லமாட்டாங்க. அவங்க உலகம் வேற. சமீபமா நான் பார்த்த இந்திப் படம், ‘ஆர்ட்டிக்கிள் 15.' ரொம்ப நல்ல படம். தமிழ், மலையாளப் படங்கள்தான் பார்ப்பேன். தெலுங்குப் படம் பார்த்ததே இல்லை.''

``விஜய் என்ன சொன்னார் ? நீங்க விஜய்கிட்ட என்ன சொன்னீங்க?’’

‘‘ ‘பீஸ்ட்' படத்துல நான் இருக்கேன்ங்கிற தகவல் வெளியான பிறகு, என்னுடைய சோஷியல் மீடியா பேஜ்ல லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் அதிகமாகிட்டாங்க. அதுதான் விஜய் சாருடைய பவர். அவருடைய ரசிகர்கள் எல்லாம் எனக்கு மெசேஜ் பண்றாங்க, அன்பை வெளிப்படுத்துறாங்க. மம்மூட்டி சார், மோகன்லால் சார்கூட நடிச்சிருக்கேன். ஆனா, அவருடைய ரசிகர்கள் எல்லோரும் வந்து என்கிட்ட பேசினதில்லை. விஜய் ரசிகர்கள் செம ஸ்வீட்டா இருக்காங்க. விஜய் சார் ரொம்ப அமைதி. அதிகம் பேசமாட்டார். செட்ல அவர் இருக்காரானே தெரியாது. ஆனா, கேமரா முன்னாடி வந்து நின்னா, வேற நபரா இருக்கார். ‘துள்ளாத மனமும் துள்ளும்', ‘கில்லி', ‘போக்கிரி' இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட ‘ஒரு சின்னப் படம் பண்ணுங்க'ன்னு சொன்னேன். சிரிச்சார்.''