
நடனம், சண்டை ஆகியவற்றில் கெத்து காட்டும் மனிதர் படத்தில் சும்மா வந்து நின்றாலே நமக்கும் பற்றிக்கொள்கிறது எனர்ஜி.
குற்றவுணர்வில் தள்ளாடும் உளவாளிக்கும், தங்கள் லாப நோக்கங்களுக்காக மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் - தீவிரவாதிகளுக்கும் இடையிலான கண்ணாமூச்சி ஆட்டமே இந்த ‘பீஸ்ட்.’
‘ரா’ அமைப்பின் சீனியர் மோஸ்ட் உளவாளி வீரராகவன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர் தலைமையில் நடக்கும் ஒரு மிஷனில் சாமானியரின் உயிர் போய்விட, குற்றவுணர்வில் வேலைக்கு முழுக்குப் போடுகிறார். காலம் அவரை தீவிரவாதிகள் கடத்தும் ஒரு மாலுக்குள் சிக்க வைக்கிறது. இவர் மாலுக்குள் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் அரசாங்கமும் இவர் வழியே தீவிரவாதிகளைப் பிடிக்கத் திட்டமிட, இறுதியில் வீரராகவன் என்னும் விஜய் அந்த மிஷனில் வெற்றியடைந்தாரா இல்லையா என்பதே சர்ப்ரைஸ்கள் எதுவுமில்லாத வழக்கமான கமர்ஷியல் க்ளைமாக்ஸ்.
விஜய் - ஸ்டைலும் இளமையும் துளியும் குறையாத பக்கா பேக்கேஜ். நடனம், சண்டை ஆகியவற்றில் கெத்து காட்டும் மனிதர் படத்தில் சும்மா வந்து நின்றாலே நமக்கும் பற்றிக்கொள்கிறது எனர்ஜி. வழக்கமான கலகல வெர்ஷன் இல்லையென்றாலும் அவரின் இந்த சீரியஸ் முகமும் நம்மை ரசிக்கவே வைக்கின்றது. பூஜா ஹெக்டேவுக்கு பாடல்களில் நடனமாடும் வேலை மட்டுமே.

நெல்சன் படங்களின் முதுகெலும்பே காமெடிதான். ஆனால் யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லீ, சுனில், ஷிவ அரவிந்த் என ஏராளம்பேர் இருந்தாலும் காமெடி கடமையை ஓரளவிற்குச் செய்வது விடிவி கணேஷ் மட்டும்தான். அலுப்பும் சலிப்புமாய் அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாய் நன்றாக நடித்திருக்கிறார் செல்வா. ஷாஜியின் மிகை நடிப்பு ஒட்டவே இல்லை. மலையாளத்தில் வெரைட்டி காட்டும் ஷைன் டாம் சாக்கோவையும் தமிழுக்கு அழைத்துவந்து வீணடித்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் நிஜமாகவே திரை தீப்பிடித்து அதிர்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் பரபர ஒளிப்பதிவு படத்தின் பலம். அன்பறிவின் சண்டைக்காட்சிகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன. கிரணின் கலை இயக்கமும், அழகிய கூத்தன் - சுரேனின் ஒலிக்கலவையும் கவர்கின்றன. இப்படி டெக்னிக்கல் குழுவில் ஒவ்வொருவரும் பீஸ்ட் மோடில் உழைத்திருக்கிறார்கள், இயக்குநரைத் தவிர!

பழைய டெம்ப்ளேட் கதையில் கொஞ்சமும் மெனக்கெடாமல் காட்சிகளை அடுக்கியிருப்பதே படத்தின் பிரச்னை. தனியொருவனாக இரு அரசுகளுக்கும் தெரியாமல் ப்ளைட்டை எடுத்துக்கொண்டு பறப்பது போன்ற லாஜிக் மீறல்களின் பட்டியல் எல்லாம் தனி.
ஹீரோவின் புத்திசாலித்தனம் எல்லாம் செல்வராகவன் சொல்லும் வசனங்களில் மட்டுமே இருக்கிறதே தவிர விஜய்யின் கதாபாத்திர வரைவிலும் இல்லை, நெல்சனின் திரைக்கதையிலும் இல்லை.
தொழில்நுட்பக் கலைஞர்கள் காட்டிய அக்கறையை இயக்குநரும் காட்டியிருந்தால் ‘பீஸ்ட்’ மிரட்டியிருக்கும்.