Published:Updated:

பிகினிங் - சினிமா விமர்சனம்

பிகினிங் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பிகினிங் படத்தில்...

முதல் படத்திலேயே பரிசோதனை உத்தியை மேற்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயாவுக்குப் பாராட்டுகள்.

வெவ்வேறு இடங்களில் நடக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு சம்பவங்கள் அருகருகில் இரு திரைகளில் விரிந்தால்... அதுதான் ‘பிகினிங்.'

மனநலம் குன்றிய இளைஞன் வினோத் கிஷனை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுகிறார் அம்மா ரோகிணி. கௌரி கிஷனை மூன்றுபேர் கடத்திவந்து ஒரு அறையில் அடைத்துவைக்கிறார்கள். கையில் கிடைக்கும் பழைய மாடல் செல்போனில் வினோத்தைத் தொடர்புகொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார் கௌரி. மனநலம் குன்றிய வினோத், கௌரி சொன்னதை உள்வாங்கிக் காப்பாற்றினாரா, இல்லையா என்பதை இரு திரைகளில் சொல்கிறது படம்.

மனநலம் குன்றிய இளைஞனாக ஒரே வார்த்தையை இருமுறை சொல்வது, குழந்தை போன்ற உடல்மொழி ஆகியவற்றில் அசத்தியிருக்கிறார் வினோத் கிஷன். பிரச்னையை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கௌரியைக் காப்பாற்ற அவர் துடிப்பது நம்மையும் கலங்கவைக்கிறது. ‘எப்படியாவது தப்பிக்க வேண்டும்' என்ற தவிப்பு, விரக்தி, வேதனை, குழப்பம் அனைத்தையும் முதல்பாதியில் பிரதிபலிக்கும் கௌரி கிஷனுக்கு இரண்டாம் பாதியில் நடிப்பதற்கான வெளி சுருங்கிவிடுகிறது. ரோகிணியும் மகேந்திரனும் தங்கள் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வில்லன் சச்சினின் நடிப்பு ஆரம்பத்தில் மிரட்டினாலும், போகப்போக காற்றுப்போன பலூனாகிவிடுகிறது.

இரண்டு திரைகளில் வெளிப்படும் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போன்ற பின்னணி இசையைக் கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் கே.எஸ்.சுந்தரமூர்த்தி. ஸ்பிளிட் ஸ்க்ரீன் போன்ற வித்தியாசமான பரிசோதனை முயற்சிக்கு ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் சரியான புரிதலுடன் இணைந்து பயணிக்க வேண்டியது அவசியம். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வீரகுமாரும் படத்தொகுப்பாளர் பிரேம்குமாரும்.

பிகினிங் - சினிமா விமர்சனம்

தன் அம்மாவின் துயரை வினோத் விவரிக்கும் காட்சிகளும், மனநலம் குன்றியவர்களைவிட நல்ல மனநிலை உடையவர்கள் எவ்வளவு வக்கிரத்துடன் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திய விதமும் நெகிழ்ச்சி.

முதல் படத்திலேயே பரிசோதனை உத்தியை மேற்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயாவுக்குப் பாராட்டுகள். அதேநேரத்தில் இதே கதைக்கருவில் ஆங்கிலத்தில் ஒரு படமும் தமிழில் இரண்டு படங்களும் வெளியாகியிருக்கின்றன என்பதையும் அவர் நினைவு வைத்திருக்கலாம். ‘ஸ்பிளிட் ஸ்க்ரீன்' என்னும் புதுமையான உத்திக்கு வலுச்சேர்க்கும் புதுமையான கதையைக் கையாண்டிருக்கலாம்.

பிகினிங் - சினிமா விமர்சனம்

முதல்பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதுவும் க்ளைமாக்ஸ் பாலாவின் காமெடிக் காட்சிகள் உட்பட செயற்கையாக இருக்கின்றன. வடிவத்தைப் போலவே உள்ளடக்கமும் புதுமையாக இருந்திருந்தால் ‘பிகினிங்' இன்னும் நல்ல தொடக்கமாக இருந்திருக்கும்.