பேரன்பு, கல்லி பாய், கும்பளங்கி நைட்ஸ், டூலெட், 2.0, ஆர்ட்டிகள் 15... 2019-ன் ஃபர்ஸ்ட் ஹாப் ஹிட்ஸ்!

இத்தனை மொழிகள், இத்தனை விதங்கள் எனப் பல வேறுபாடுகளைக் காட்டிக்கொண்டே இருப்பதால்தான் என்னவோ, இந்திய சினிமாவுக்கு உலகம் முழுக்க ஒரு தனி வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது.
பொழுதுபோக்காக இருந்தாலும் சரி, ஆழமான கருத்தோட்டமாக இருந்தாலும் சரி, இந்தியத் திரைத்துறை எப்போதுமே தனது பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கத் தவறியதில்லை. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பெரும் திரைத் துறைகள் தொடங்கி, கன்னடம், மராத்தி, பெங்காலி எனச் சிறு துறைகள் வரை... இங்கே எல்லா விதமான சினிமாக்களும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை மொழிகள், இத்தனை விதங்கள் எனப் பல வேறுபாடுகளைக் காட்டிக்கொண்டே இருப்பதால்தான் என்னவோ, இந்திய சினிமாவுக்கு உலகம் முழுக்க ஒரு தனி வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், ஏற்கெனவே பல இந்தியப் படங்கள் உலக அரங்கில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் சில.

பேரன்பு - தமிழ்
பொதுவாக இயக்குநர் ராமின் இரு படங்களுக்கு நடுவே நீண்ட இடைவெளி இருக்கும். ஆனால், வெளியாகும்போது அந்தப் படங்கள் ஏற்படுத்தும் சத்தம் பெரிதாகவே இருக்கும். இதுவரை வந்த நான்கு ராம் படங்களில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம், `பேரன்பு' என்றே சொல்லலாம். பல நிலை திரைக்கதை, இயற்கையின் முரண்கள் எனப் படம் முழுக்கத் தன் மன ஓட்டத்தைப் படமாக்கியிருந்த ராமிற்கு, யுவன் ஷங்கர் ராஜா ஒரு பெரும் பலமாக இருந்தார். ராமின் கோபத்தை, விரக்தியை, கருத்தியலை, குழப்பத்தைக் காட்டும் அவரது பொதுவான தாடி வைத்த நாயகனாக மட்டுமல்லாமல், அந்தத் தாடிக்குள் ஒளித்துவைக்காமல், இயல்பான நடிப்பையும் வெளிக்காட்டிய மம்மூட்டியும் இந்தப் படம் உலக அளவில் புகழ்பெற மற்றொரு காரணம்.

கல்லி பாய் - இந்தி
ஹிப்-ஹாப் கலாசாரத்தைக் குறித்த பதிவுகள் இந்திய சினிமாவில் குறைவுதான். முழுக்க முழுக்க மேற்கத்திய இசை வடிவமாக இருந்தாலும், அடிமைத்தனத்தின் விளைவாகச் சுரக்கும் வியர்வையும், வடியும் ரத்தமும் ஈரமாக்கிய அத்தனை நிலங்களிலும் ஹிப்-ஹாப்பின் வேர்கள் பரவும் என்பதுதான், இயற்கை அந்த இசை வடிவத்துக்கு விதித்த பண்பு. அப்படி ஒடுக்கப்பட்ட சமூகம் குடியேறிக் குழுமியிருக்கும் உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து ஹிப்-ஹாப் வேர்விட்டு முளைத்துவரத் துடிக்கும் ஒரு தெருப் பாடகனின் கதையை எவ்வளவு உண்மைத் தன்மையோடு பதிவு செய்யமுடியுமோ, அவ்வளவு இயல்பாகக் `கல்லி பாய்' படத்தில் பதிவு செய்திருப்பார், இயக்குநர் ஜோயா அக்தர். கூரிய ஒளிப்பதிவு, அதைவிடச் சீரிய வசனங்கள் எனக் `கல்லி பாய்' படத்தை மெச்சிப் புகழ வேண்டும் என்றாலே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். இப்படி ஒரு படம் வெளியானால், அது உலக அளவில் கவனம் பெறவில்லை என்றால்தான் அதிர்ச்சி.

கும்பளங்கி நைட்ஸ் - மலையாளம்:
ஒரு வாழ்வியலை அப்படியே படம் பிடிப்பதில் மலையாளத் திரைத்துறையின் இயக்குநர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதை எந்தச் சந்தேகமுமின்றி சொல்லலாம். அதிலும், ஸ்யாம் புஷ்கரன் போன்ற எழுத்தாளர்கள் செதுக்கிய திரைக்கதையாக இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி, ஸ்யாம் புஷ்கரனின் எழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்வியலை இயக்குநர் மது சி. நாராயணன் முழுக்கப் பதிவுசெய்த படம்தான், `கும்பளங்கி நைட்ஸ்'. ஃபஹத் ஃபாசில், ஷேன் நிகாம், செளபின் சாஹிர் என நடிப்பு அரக்கர்களை வைத்துப் படமாக்கப்பட்டது, `கும்பளங்கி நைட்ஸ்'. ஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பாசம், தேவை, ஆணாதிக்கம், அன்பு என உறவுகளுக்கு நடுவில் நேரும் பல உணர்வுப் பரிமாற்றங்களை நுணுக்கமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பார்கள்.

டூ லெட் - தமிழ்
ஒரு படத்தை எடுத்து, அதைப் பார்வையாளர்களின் பெரும்பகுதியைப் பார்க்க வைத்து, ரசிக்க வைத்து, தொடர்புபடுத்திக்கொள்ள வைப்பது அத்தனை எளிதல்ல. பார்க்கும் அனைவரையும் முழுமையாகச் சென்று சேரும் படங்கள் இங்கே குறைவுதான். புதிதாக சென்னைக்கு வருபவர்கள், சென்னையில் நீண்ட நாள்களாக வசித்து வருபவர்கள் என எல்லோராலும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும்விதத்தில் அமைந்த படம், `டூ லெட்'. ஒருபுறம் வாடகைக்கு வீடு தேடுபவர்கள், மறுபுறம் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் என இரு தரப்பினரின் எண்ண ஓட்டங்களையும், அப்படியே திரையில் மீட்டுருவாக்கம் செய்து, அதைத் திரையிலிருந்து பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் வெற்றி, சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற பகுதிகள், இந்தியாவின் பிற பகுதிகள், உலகின் அத்தனை கண்டங்கள் எனப் பல இனம், மொழி, கலசாரத்தைச் சேர்ந்த மக்களிடமும் அந்த வலியைக் கொண்டு சேர்த்து, அதன் மூலம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது.

வைரஸ் - மலையாளம்
இன்னும் சில ஆண்டுகளில் மலையாள சினிமா, இந்திய சினிமாவின் மொத்த அடையாளமாய் மாறிவிடும் என்று பல திரைப்பட ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அங்கே சொல்லப்படும் கதைகளும், அவை சொல்லப்படும் விதங்களும்தான் அதற்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. `வைரஸ்' படத்தைப் பார்த்தால், நமக்கும் அதுவே தோன்றும். ஒரு சுகாதாரச் சிக்கல், எக்கச்சக்க கதாபாத்திரங்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய `வைரஸ்' படத்தைக் காண்பவருக்கு, அதன் அனுபவமே வேறுவிதமாக இருக்கும். இவ்வாறான 'ஹைப்பர்-லிங்க்' திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்களில் 'வைரஸ்' படத்துக்கு உலக சினிமாவிலேயே ஒரு தனியிடமுண்டு.

ஜெர்ஸி - தெலுங்கு
'சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை' என்ற ஒற்றை வரியைவைத்து, அதைச் சுற்றி ஒரு கதை எழுதி, பார்ப்பவர்களையெல்லாம் ஊக்குவிக்கும் படமாக இருந்தது 'ஜெர்ஸி'. பொதுவாக தெலுங்கில் வெளியாகும் படங்கள் அதீத கமர்ஷியலிசத்துடன் உருவாகும் என்ற பொதுப் பார்வை இங்கே உள்ளது. அந்தக் கருத்தைப் பொய்க்கும் வண்ணம் அவ்வப்போது இதுபோன்ற படங்களும் அந்த மொழியில் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. வலி, இலக்கு நோக்கிய பயணம், தன்னம்பிக்கை என ஒரு சாதனையாளனின் வாழ்க்கையை முழுவதுமாய் பதிவு செய்திருந்தது 'ஜெர்ஸி'. அதையெல்லாம் விட, அவனது முடிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் மிக அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் காண்பித்தது.

சூப்பர் டீலக்ஸ் - தமிழ்
பல கதைக்களங்களை உள்ளடக்கிய படங்களை அடிப்படையில் `ஆந்தாலஜி அல்லது `ஹைப்பர் லிங்க்' என இருவகைப்படுத்தலாம். ஆந்தாலஜியில் வெவ்வேறு கதைகள் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் இருக்கும். ஹைப்பர் லிங்கில் எல்லாக் கதைக்களங்களும் மாறிமாறி தொடர்புபடும். ஆனால், `சூப்பர் டீலக்ஸ்' படம் இந்த இரண்டு வகையிலும் சேராமல், மூன்றாவதாக ஒரு வகையாக இருந்தது. ஒரு ஆந்தாலாஜிக்கல் ஹைப்பர் லிங்க் திரைக்கதையோடு, பல மனிதர்கள், பல கதைக்களங்களுக்கு நடுவே உள்ள மறைமுகத் தொடர்புடன் வெளியானது, இப்படம். எது, எது; எப்படி, எப்படி இருக்கிறதோ.. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான இந்தப் படம், மனித இனத்தின் பல முன் முடிவுகளை, அப்படியே போட்டு உடைத்து, இவ்வளவுதான் வாழ்க்கை என முகத்தில் அறைந்தபடி சொல்லியிருந்தது. அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணம்.

ஆர்ட்டிகள் 15 - இந்தி
கேளிக்கைப் படங்களை மட்டுமே அதிகம் தயாரிக்கும், இந்தி திரைத்துறையிலிருந்து இப்படியொரு படமா எனப் பலரை வியக்கவைத்த படம், `ஆர்ட்டிகிள் 15'. கடந்த ஆறு மாதத்தின் இறுதிக் கட்டத்தில் வெளியாகி, இந்திய சமூகத்தின் சாதியக் கட்டமைப்பு குறித்த கேள்விகளை எழுப்பி, பாலிவுட்டை அப்படியே புரட்டிப்போட்ட படம் இது. சாதியக் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் சிலரை, இந்தக் கட்டமைப்பின் ஓர் உதாரணமாக வைத்து 2000 ஆண்டு அடிமைத்தனத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது படம். இந்தப் படத்தின் சிறப்பம்சம், க்ளைமாக்ஸில் இதன் கதாபாத்திரங்கள் சந்திக்கும் முடிவுகள்தாம். சில முடிவுகளை அப்படித்தான் கூற வேண்டும். ஏனென்றால், இந்தச் சமூகம் இப்படிப்பட்ட முடிவுகளுக்கு மேல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையையும், சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றது.

பிற படங்கள்
மேலே பட்டியலிடப்பட்ட படங்களன்றி, இன்னமும் பல இந்தியப் படங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழில் வெளியான `தடம்', `நெடுநல்வாடை', `கேம் ஓவர்', மலையாளத்தில் வெளியான, `உயரே', `அதிரன்', `லூசிஃபர்', தெலுங்கில் வெளியான, `ப்ரோச்சேவரேவரூரா', ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா' மற்றும் இந்தியின் `உரி', `மணிகர்ணிகா', `ஃபோட்டோகிராப்' உள்ளிட்ட படங்கள் உலக அளவில் பிரபலமடைந்தன.