
தமிழில் ஒரு ஸ்போர்ட்ஸ் சினிமா எப்படி இருக்கும்? முக்கியமான போட்டிகளுக்கு ஆள்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் இருக்கும்;
பணம் சம்பாதிக்கும் வில்லன்களின் சதி இருக்கும்; ஹீரோ அணியின் விடாமுயற்சி இருக்கும்; தோற்பதுபோலவே இருக்கும், ஆனால் மாபெரும் வெற்றி காத்திருக்கும். சரி, இந்த வழக்கமான டெப்ம்ளேட்டில் வழக்கமான விஜய்யும் அவர் டெம்ப்ளேட்டுகளும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ‘பிகில்’போல இருக்கும்!
வடசென்னையைத் தன் விரலசைவில் வைத்திருக்கிறார் சி.எம் (படத்தில் அப்படித்தான் அழைக்கிறார்கள்) என்கிற ‘கேப்டன்’ மைக்கேல். எதிர்பாராத சம்பவத்தால் அவர் தமிழகக் கால்பந்து அணிகளுக்கு கோச்சாக வேண்டிய நிர்பந்தம். ‘அவர் அவ்வளவு பெரிய தவ்லத்தா’ எனக் கேட்பவர்களுக்கு ராயப்பன் என்ற காட்ஃபாதர் வழி கதை சொல்லிக் காட்சிகளை அடுக்குகிறார் அட்லி. அப்புறம்..? முதல் பத்தியை மறுபடி படிக்கவும்.

அப்பா ராயப்பன் மற்றும் மகன் மைக்கேல் (எ) பிகில் - இரட்டை வேடங்களில் விஜய். மைக்கேல் கதாபாத்திரத்தில் வழக்கமான குறும்பும் ஹீரோத்தனமும் கலந்த விஜய். அவரது இளமை லுக் எப்போதும் நம்மை வியக்கவைப்பது. அவருடைய குறும்புத்தனமான உடல்மொழி ஆரம்பத்தில் ரசிக்கவைத்தாலும் பின்னர் சலிப்பு தருகிறது. ராயப்பனோடு நாம் பொருந்த முடியாமல் போவதற்கும் விஜய்யின் இளமைத்தோற்றம்தான் காரணம். அவரும் நிறைய பிரயத்தனப்படுகிறார். ஆனால் ஒருகட்டத்தில் மைக்கேலின் உடல்மொழி ராயப்பனின் உடலுக்குள் கூடுபாய... கஷ்டம்தான்!
நயன் தாரா ஸ்டூடன்ட்டா என ஷாக் தந்தாலும், அவர் வரும் காட்சிகள் க்யூட். கால்பந்தாடும் சிங்கப்பெண்களில் ரெபா ஜானும், அம்ரிதாவும் மட்டுமே ‘யார் இவர்கள்!’ எனக் கேட்கவைக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி, மாஸ் வசனங்களுக்கு கவுன்ட்டர் தரும் இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறது. விவேக், ஆனந்தராஜ், கதிர், தேவதர்ஷினி என நிறைய பேர் இருக்கிறார்கள், வெளிச்சமே படாத பெஞ்ச் பிளேயர்களாய்! டேனியல் பாலாஜி உட்பட எல்லா வில்லன்களுக்கும் படத்தில் வேலையே இல்லை. அதிலும் ஜாக்கி ஷெராஃப் போன்ற யானையின் பசிக்கு மசாலா பாப்கார்ன் கொடுத்திருக்கிறார்கள்.
கதையில் பெரிதாக இல்லாத ஸ்போர்ட்ஸ் டெம்போவைத் திரையில் கடத்துவது ஜி.கே.விஷ்ணுவின் கேமரா ஜாலம்தான். ரஹ்மானின் பாடல்களில் `சிங்கப்பெண்ணே’, `வெறித்தனம்’ மட்டும் வெறித்தனம். பிரசன்டேஷன், ஹைலைட்ஸ் எனத் தொடர்ந்து பார்த்தால்கூட இவ்வளவு நேரம் ஆகாது. ரூபனின் கத்தரி தவறுவது இங்கேதான்! சில போட்டிகள் வீடியோ கேம் போல இருக்கின்றன.

வசனங்கள் மூன்று, நான்கு உலகக்கோப்பை சீசன்களுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை. அதிலும் “திருடன் பையன் போலீஸ் ஆகறதில்லையா? சாதாரண செருப்பு தைக்கிறவர் மகன் அமெரிக்க ஜனாதிபதி ஆகலையா?” என்ற வசனத்தில் உள்ள அரசியல் அபத்தம், வசனம் எழுதியவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.
சமூகத்தின் பல அடுக்குகளிலும் உள்ள பெண்கள் டீமாக இணைகிறார்கள். சரிதான்! ஆனால் அவர்களையும் ‘வீரமான’ ஆண் கோச்தான் ஒவ்வொருமுறையும் காப்பாற்றுகிறார். அந்தப் பெண்களின் கதைகள் சில இடங்களில் நெகிழவைக்கின்றன. சில இடங்களில் நாடகத்தனம். உடல்கேலி செய்து பெண்களை ஊக்கப்படுத்தும் ‘புதுமை’ கொடுமை!
தன் அணிப் பெண்களுடன் விஜய் ஆடும் அதிரடி கேம், போலீஸ் ஸ்டேஷன் அதிரடி போன்ற சுவாரஸ்யமான காட்சிகள் படம் முழுக்க இருந்திருந்தால் இன்னும் சத்தமாக ‘பிகில்’ ஊதியிருக்கலாம்.