கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“எல்லாம் ரஜினி ஆசீர்வாதம்!”

ஆர்.ஜே விக்னேஷ்காந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.ஜே விக்னேஷ்காந்த்

பேசுகிறவர்கள் பேசிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அப்படி பேசி முடிச்சிக் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். இது ஒரு பிசினஸ். ஒவ்வொரு கட்டத்திலும் இன்வெஸ்ட்மென்ட் வரும்.

யூடியூப் சேனல் டு டி.வி சேனல் என வேற லெவலில் களமிறங்கியிருக்கிறார் யூடியூபரும் நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ்காந்த். ‘வைகைப்புயல்' வடிவேலுவையே தனது ‘பிளாக் ஷீப்' டி.வி சேனலுக்கு அம்பாசிடராக்கி, சோஷியல் மீடியாவை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ‘‘முன்னாடியெல்லாம் பிசினஸ் மீட்டிங் பன்னிரண்டு மணிவரைக்கும் போகும். இனிமே அப்படியெல்லாம் பண்ணமுடியாது. காட்டாற்று வெள்ளமா இருந்தேன். திருமணம் மூலமா அதை அணைபோட்டுத் தடுத்திருக்காங்க. நம்பமேல எப்பவும் அக்கறையோடு ஒருத்தர் கூடவே இருக்காங்கங்குறது புது அனுபவம். அதுவும், என்னை மாதிரி லவ் பண்ணாம, ரொமான்ஸ்னா என்னன்னே தெரியாதவங்களுக்கு இது புதுசு. இதுவும் ரொம்ப நல்லாருக்கு. அதனால, நான் என்ன சொல்ல வர்றேன்னா 90-ஸ் கிட்ஸ் கல்யாணம் பண்ணிக்கோங்க. லைஃப் நல்லாருக்கும்’’ என்று ஜாலியாக ஆரம்பிக்கிறார்.

‘‘உங்க திருமணத்துல சிவகார்த்திகேயன் கலந்துக்கிட்டாரே, உங்களுக்கும் அவருக்குமான நட்பு?’’

‘‘என்னுடைய எல்லாத் தொடக்கத்திலும் எஸ்.கே அண்ணன் இருப்பாரு. காலேஜ் படிக்கும்போது, நான் முதல்முதலா ஆங்கர் பண்ணின ஷோவுக்கு கெஸ்ட்டே எஸ்.கே அண்ணன்தான். அதுதான், அவருடனான முதல் சந்திப்பு. ஆர்.ஜே ஆனபிறகு முதல் பேட்டியையும் எஸ்.கே அண்ணனைத்தான் எடுத்தேன். இப்படி, நிறைய முதல் அவருடன் பயணிச்சிருக்கேன். என்னுடைய எல்லாத்திலேயும் அண்ணன் சப்போர்ட்டா இருந்திருக்கார். அவரோட புரொடக்‌ஷன்லதான் எங்க டீம் முதல் படம் பண்ணினது. பணத்தேவைகளின் போதுகூட உதவிகள் செஞ்சாரு. அப்படியிருக்கிறவர் என் திருமணத்துக்கு வராம இருப்பாரா? கோயில்ல நடந்த கல்யாணத்துக்கும் வந்தார், ரிசப்ஷனுக்கும் வந்து ஆசீர்வாதம் பண்ணினார். இவ்வளவு நாள்கள் என்னை சந்தோஷப்படுத்தினவர், அந்தத் திருமணத்தின்போது எங்கள் குடும்பத்தையே மகிழ்ச்சிப்படுத்திட்டார். எங்க ஆபீஸுக்கு அடிக்கடி வருவார். எங்க டீம் பசங்க எல்லாம் அவர்கூடதான் கிரிக்கெட் விளையாடுவாங்க. அந்த அளவுக்கு எளிமையா பழகுவார். நாங்க போடுற வீடியோக்களில் ஏதாவது தப்புன்னா, இப்படியெல்லாம் போடக்கூடாதுன்னு கரெக்‌ஷன் சொல்லுவார். எனக்காக இவ்ளோ பண்ணியிருக்கார் அண்ணன்.’’

“எல்லாம் ரஜினி ஆசீர்வாதம்!”

‘‘யூடியூபிலிருந்து டி.வி... எப்படி வந்தது இந்த எண்ணம்?”

‘‘இத்தனை நாள் யூடியூப் மூலம் மக்களை மகிழ்வித்தோம். இனிமே டி.வி-யா வந்து மகிழ்விக்கப்போறோம். அவ்வளவுதான். ஆனால், ‘பிளாக் ஷீப்' தலைப்பு வைக்க ரஜினி சார்தான் காரணம். அவர் சொன்ன ‘பிளாக் ஷீப்’பையே யூடியூபுக்குத் தலைப்பா வச்சோம். இப்போ, அதே பேர்ல டி.வி-யாகவும் வரப்போகுது. 2018-ம் ஆண்டு ரஜினி சாரை முதல் தடவை பார்க்கும்போது ‘பெரிய ஆங்கர் ஆகணும், என் பேருலயே நேம் ஷோ பண்ணணும்ங்கிறதுதான் ஆசை'ன்னு சொன்னேன். ‘இன்னும் வரலியா’ன்னு கேட்டுட்டு, ‘வரும் வரும்’னு நம்பிக்கையோடு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே பிளாக் ஷீப் டி.வி-யில், ‘ஆர்.ஜே விக்னேஷ்காந்த் ஷோ’ ஒன்னு வரப்போகுது. தேவா சார் இசை நிகழ்ச்சியை நாங்கள் நடத்தியபோது, ரஜினி சார் மேடைல ஏறினதும் ‘பிளாக் ஷீப்’க்கு வாழ்த்துகள் சொன்னது பெரிய ஆசீர்வாதம்.’’

‘‘தொடர்ந்து யுவன் இசை நிகழ்ச்சியா பண்றீங்களே?’’

‘‘நான் யுவன் சாரோட பயங்கர ஃபேன். வெளில எல்லோரும் யுவன் ரொம்ப அமைதியான டைப்புன்னு சொல்றதெல்லாம் நிஜம் கிடையாது. இறங்கி கலாய்க்கணும்னு முடிவுப் பண்ணிட்டா தெறிக்கவிட்டுடுவாரு. அப்படியொரு ஜாலி டைப். ரொம்ப நட்பா பழகுவாரு. அவரோட கான்செர்ட் பண்ணணும்ங்கிறது நீண்டநாள் விருப்பம். ராஜா சாரின் ஷோ பண்ணினதால ‘யுவன் 25' பன்றது எங்களுக்கு ஈஸியானது. அடுத்ததா கோவை, திருச்சி, திருநெல்வேலியில் யுவன் சாருடன் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கோம்.’’

‘‘வடிவேலு எப்படி பிளாக் ‌ஷீப் டி.வி அம்பாசிடரா ஒத்துக்கிட்டாரு?’’

‘‘தமிழக மக்கள் விரும்புற ஒரு பிராண்ட் அம்பாசிடர் இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சோம். மாஸ், ஃபேமிலி, மண்வாசனை இந்த மூன்றையும் மையப்படுத்தின டி.வி-க்கு யோசிக்கும்போது வடிவேலு சார் மட்டும்தான் கண்ணு முன்னாடி வந்து நின்னாரு. இதுவரைக்கும் அவர் எந்த பிராண்டுக்குமே அம்பாசிடரா இருந்ததில்ல. எப்படியாவது அம்பாசிடர் ஆக்கணும்னு பல நாள்களா ஃபாலோ பண்ணினோம். எங்க நம்பிக்கை வீண் போகல. அவருடைய மருமகன் கணேஷ் பிரதர் பெரிதும் உதவினார். `சின்னப் பசங்க இவ்ளோ பெரிசா பன்றீங்க. நீங்கல்லாம் அடுத்தகட்டம் வளரணும். உங்க ஆர்வத்துக்காகத்தான் ஒத்துக்கிறேன்'னு சொல்லி என்கரேஜ் பண்ணினதோடு ஷூட்டுக்கும் வந்துட்டாரு. இப்படிப் பண்ணுங்கன்னு நாம ஒண்ணு சொல்லுவோம். ஆனா, அதையே அவர் வேற லெவல்ல பெர்ஃபாமன்ஸ் பண்ணிடுவாரு. ஷூட் நடக்குற ரெண்டு நாளும் அவரோடு இருந்தது வாழ்க்கையில் பெரும் பாக்கியம்.’’

“எல்லாம் ரஜினி ஆசீர்வாதம்!”

‘‘உங்கள் வீட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து வாழ்த்தியது பேசுபொருள் ஆனதே?’’

‘‘அன்பில் மகேஷ் சாரை என்னோட திருமணத்துக்கு இன்வைட் பண்ணியிருந்தேன். திருச்சியில நடந்த மேரேஜுக்கு அவரால வரமுடியல. ரிசப்ஷனுக்கும் வரமுடியாத சூழல் ஆகிடுச்சு. அதனாலதான் வீட்டுக்கு வந்தார். அவருக்கும் எனக்கும் நல்ல பாண்டிங் இருக்கு. ரொம்ப சந்தோஷம். ஆனா, என் வீட்டுக்கு ஏன் வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு சோஷியல் மீடியாவுல பண்ணினாங்க. ‘நீங்க தி.மு.க-வை அந்த மாதிரி பேசினீங்களா'ன்னு எங்கிட்ட கேட்டார். ‘பேசியிருக்கோம் சார். ஆனா, சீமான், அன்புமணி, தமிழிசைன்னு எல்லா அரசியல்வாதிகளையும் விமர்சனம் பண்ணியிருக்கோம். அப்படித்தான், தி.மு.க-வையும் விமர்சனம் பண்ணினோம்’னு சொன்னேன். அவர், புரிஞ்சுக்கிட்டார். இப்போ, அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நாங்க பண்ணின தவறுகளைத் திருத்திக்கிட்டு அடுத்த கட்டத்துக்குப் பயணிக்கிறோம். ஆரம்பத்துல நாம பன்றது சரியா தப்பான்னு தெரியல. ஆனா, அப்படி சில விமர்சனங்கள் பண்ணினது தப்புன்னு இப்போ உணர்றோம். அப்போ கொஞ்சம் மெச்சூரிட்டி இல்லாமப் பண்ணிட்டோம். இன்னைக்கு எங்களைக் கலாய்க்குற நிறைய வீடியோக்கள் வருது. அதை நாங்க ரிமூவ் பண்ணச் சொல்றதில்ல. ஏன்னா, நாமும் அன்னைக்கு பர்சனல் அட்டாக் பண்ணியிருக்கோம், கலாய்ச்சிருக்கோம், உருவகேலி செஞ்சிருக்கோம். அதெல்லாம் தப்புங்குறதாலதான் ‘பிளாக்‌ ஷீப்' ஆரம்பிச்சவுடன் நையாண்டிகள் செய்வதை கம்மி பண்ணிட்டோம். அதேநேரம், நாங்க சரியான அரசியலைப் பேசி, தவறான அரசியலையும் சுட்டிக்காட்டியிருக்கோம்.’’

‘‘பி.எஸ் வேல்யூ ஓ.டி.டி தளத்தை 80 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறதே?’’

‘‘பேசுகிறவர்கள் பேசிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அப்படி பேசி முடிச்சிக் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். இது ஒரு பிசினஸ். ஒவ்வொரு கட்டத்திலும் இன்வெஸ்ட்மென்ட் வரும். ஷேர் பண்ணிக் கிறோம். இது எல்லாருக்குமே நடக்குற விஷயம்தான். நாங்க கடுமையா உழைச்சிருக் கோம். அந்த உழைப்புக்குப் பலன் கிடைக்குது, என் மாதிரி இருக்குற யூடிபயூர்ஸுக்கு இது பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். எதுவுமே சும்மா நடக்கல. வாங்கணும்னு நினைச்சா யாரை, எதை வேணும்னாலும் வாங்கலாம். நம்பள நம்பி வாங்குறாங்கன்னா உழைப்பு முக்கியம்.’’