சினிமா
Published:Updated:

பாலிவுட்டின் லவ்வர் பாய்!

கார்த்திக் ஆர்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக் ஆர்யன்

பயோடெக்னாலஜியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோதே கார்த்திக் ஆர்யனுக்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது

”ஒருமுறை என் சொந்த ஊரான குவாலியரில் என் படத்தின் ஷூட்டிங் நடந்தது. அங்குதான் நான் நிஜமாகவே என்னை ஒரு நட்சத்திரமாக உணர்ந்தேன். ஷூட்டிங் நடந்த இடத்தைச் சுற்றி எப்போதும் பெருங்கூட்டம் கூடியிருக்கும். அப்போதெல்லாம் நான் என்னை ஒரு பெரும் அரசியல் தலைவரைப்போல நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் கையை உயர்த்திக் காட்டினால், கூடியிருக்கும் மக்கள் அனைவரும், ‘நம்ம தலைவர் யாரு, கார்த்திக் பையா பாரு' எனக் கூச்சலிடுவார்களோ என்று எண்ணிக்கொண்டேன்.’’

பாலிவுட்டின் லவ்வர் பாய்!

நாட்டின் ஏதோ ஒரு மூலையில், தனிப்பட்ட அடையாளங்கள் ஏதுமின்றி, எல்லோரையும்போல சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவர், ஓவர்நைட்டில் கற்பனைக்கும் எட்டாத பேரையும் புகழையும் அடைந்தால் எப்படியிருக்கும்? அந்த ஓவர்நைட் வெற்றிக்காக வருடக்கணக்கில் அவர்பட்ட கஷ்டங்கள், சந்தித்த இன்னல்கள் நமக்குத் தெரியாது என்பதால் அவரின் வெற்றிக் கதையை அதிர்ஷ்டம் என்று ஒதுக்கிவிடுவோம். தொடக்கத்தில் கார்த்திக் ஆர்யனின் வெற்றி இப்படியான ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது. ‘பியார் கா பன்ச்நாமா' படமும், அதன் மூன்று ஹீரோக்களில் ஒருவராக இவர் ஏற்று நடித்த பாத்திரமும் இளைஞர்கள் மத்தியில் பெருங்கவனத்தைப் பெற்றன. இத்தனைக்கும் படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆண் - பெண் இரு பாலரையும் இரு துருவங்களாக நிறுத்தி அவர்களுக்கிடையே இருக்கும் உறவுச் சிக்கல்களை ஆண்களின் பார்வையிலிருந்து மட்டும் பேசியது. காதலிகளால் காதலன்கள் சந்திக்கும் இன்னல்களை விரக்தி கலந்த நையாண்டியில் அதில் நான்கு நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் பேசி நடித்திருப்பார் கார்த்திக். இந்தக் காட்சியே பலரை இவரின் ரசிகர்களாக்கியது.

ஆனால், இந்த வெற்றிக்கு முன்னர், கார்த்திக் எடுத்த முடிவுகள், அதனால் அவர் சந்தித்த இன்னல்கள், அவரின் போராட்டங்கள் ஒரு பயோபிக் எடுக்கும் அளவுக்கு உணர்ச்சிகரமானவை.

பாலிவுட்டின் லவ்வர் பாய்!
பாலிவுட்டின் லவ்வர் பாய்!

பயோடெக்னாலஜியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோதே கார்த்திக் ஆர்யனுக்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. அப்போது ஃபேஸ்புக்கில் ‘புதுமுக நடிகர்கள் தேவை’ என்ற ஒரு விளம்பரம் இவர் கண்ணில்பட, அதை முயன்று பார்க்க முடிவு செய்கிறார். ஆறு மாதங்கள் போராட்டத்துக்குப் பின், பல ஆடிஷன்களுக்குப் பின், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்த கார்த்திக், 12 பேருடன் சேர்ந்து ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கினார், தன் தேவைகளுக்காக, மற்ற 11 பேருக்குச் சமைத்துக் கொடுத்து அவர்களிடமே சம்பளமும் பெற்றார்.

இந்த ஆடிஷனை நடத்திய காஸ்டிங் இயக்குநர் மூலமாக, பாலிவுட்டில், தன் முதல் படமான ‘பியார் கா பன்ச்நாமா'வை எடுக்க முயன்றுவந்த இயக்குநர் லவ் ரஞ்சனின் அறிமுகம் கார்த்திக்குக்குக் கிடைத்தது. நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெற்றோரிடம்கூட எதுவும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டார் கார்த்திக். படம் வெளியான போது கார்த்திக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர். பெரும்பாலும் புதுமுகங்களை வைத்தே உருவான படம், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட்டடித்தது. அதற்கு முக்கியக் காரணம், நஸ்ரத் பருச்சா - கார்த்திக் ஆர்யன் ஜோடி அனைவரையும் ஈர்த்ததுதான். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான், தன் தாயாரின் வற்புறுத்தலின் பேரில், தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் கார்த்திக்.

பாலிவுட்டின் லவ்வர் பாய்!
பாலிவுட்டின் லவ்வர் பாய்!

2013-ல் மீண்டும் லவ் ரஞ்சன் இயக்கத்தில் அதே நஸ்ரத் பருச்சாவுடன் ஜோடி சேர்ந்து ‘ஆகாஷ்வாணி' படத்தில் நடித்தார். படம் வெற்றியடையவில்லை என்றாலும், அதைப் பார்த்து பாலிவுட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சுபாஷ் கய், தன் ‘கான்ச்சி: தி அன்பிரேக்கபிள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

2015-ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் லவ் ரஞ்சன் ‘பியார் கா பன்ச்நாமா' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். இதிலும் நஸ்ரத் பருச்சாவுடன் ஜோடி சேர்ந்த கார்த்திக், இதில் 7 நிமிடங்களுக்கு நீளும் ஒரு ஷாட்டில் வசனம் பேசி நடித்தார். படம் சர்ச்சையில் சிக்கினாலும் விமர்சகர்கள் ‘பாலிவுட்டின் அடுத்த லவ்வர் பாய்’ என்று கார்த்திக்கைப் புகழ்ந்தனர். படத்தின் பெண் வெறுப்புக் காட்சிகளைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பியபோது, ‘‘அது நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் மட்டுமே. என் தனிப்பட்ட சித்தாந்தங்களுடன் அது எந்த வகையிலும் பொருந்தவில்லை’’ என்று பதிலளித்தார் கார்த்திக்.

பாலிவுட்டின் லவ்வர் பாய்!
பாலிவுட்டின் லவ்வர் பாய்!

இந்தப் படத்துக்குப் பிறகு தோல்வி முகம் கண்ட கார்த்திக் ஆர்யனை ‘Two Film Wonder' என்று விமர்சனம் செய்தது பாலிவுட். ஆனால், கார்த்திக் அதைப் பொய்யாக்கினார். மீண்டும் இயக்குநர் லவ் ரஞ்சன், ‘சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' என்ற ரொமான்டிக் காமெடியுடன் வந்தார். கார்த்திக் ஆர்யனின் கரியரில் மிகப்பெரிய வெற்றியாக ரூ.100 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது இந்தப் படம்.

ரொமான்ஸ் தன் முகவரி என்பதை உணர்ந்த கார்த்திக் ஆர்யன், 2019-ல் அடுத்தடுத்து ‘லுக்கா சுப்பி', ‘பதி பத்தினி அவுர் வோ' என்று அடுத்தடுத்த ரொமான்டிக் காமெடி படங்கள் செய்தார். இரண்டுமே நூறு கோடிகளுக்கு மேல் வசூல் மழை பொழிந்தன. தொடர்ந்து நூறு கோடிகளைத் தாண்டி வசூல் செய்த மூன்று படங்களை கார்த்திக் கொடுத்துவிட்டதால், அவரின் கிராஃப் தற்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில்தான் பாலிவுட்டின் இளம் கதாநாயகர்கள், குறிப்பாக சினிமாப் பின்புலமின்றி வருபவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்னையை கார்த்திக்கும் சந்திக்க நேர்ந்தது. நெப்போட்டிசம்! சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு, அந்த விவாதத்தின் இரண்டாம் அலையைத் தொடக்கி வைத்தது கார்த்திக் ஆர்யன் சந்தித்த பிரச்னைகள்தான். 30 வயது இளம் நடிகரான கார்த்திக் ஆர்யன் ‘சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' வெற்றிப் படத்தைக் கொடுத்தபோதே ரூ.10 கோடி சம்பளத்தில் அவரை அடுத்தடுத்து புக் செய்ய ஓடிவந்தனர் பாலிவுட் தயாரிப்பாளர்கள்.

கரண் ஜோஹரும் தன்னுடைய தர்மா புரொடக்‌ஷன்ஸுக்காக கார்த்திக் ஆர்யனை ‘தோஸ்தானா 2' படத்துக்கு புக் செய்திருந்தார். இந்தப் படத்தில் கார்த்திக்கின் ஜோடி, வாரிசு நடிகையும் கரணின் ஃபேவரைட் ஆர்ட்டிஸ்டுமான ஜான்வி கபூர். 2019-லேயே பாதிப் படம் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென கார்த்திக் இதிலிருந்து நீக்கப்பட்டார். ‘கார்த்திக்கிற்கும் ஜான்விக்கும் பிரச்னை, அதனால் கார்த்திக்கைக் கரண் நீக்கிவிட்டார்’ என்று கிசுகிசுத்தது பாலிவுட். சமூக வலைதளங்களில் கார்த்திக்கிற்கு ஆதரவு பெருகியது.

தொடர்ந்து அவர் கமிட்டாகியிருந்த ஷாருக்கானின் சொந்தத் தயாரிப்புப் படத்திலிருந்தும், பாசிட்டிவ் பேச்சுவார்த்தையிலிருந்த இயக்குநர் ஆனந்த எல்.ராய் படத்திலிருந்தும் விலகினார், அல்லது, விலக்கப்பட்டார். ‘இதற்குக் காரணம் கரண் ஜோஹர்தான்’ என ஒரு தரப்பு குற்றப்பத்திரிகை வாசித்தது.

பாலிவுட்டின் லவ்வர் பாய்!

கார்த்திக் ஆர்யன் தற்போது ‘தமாகா' என்ற படத்திலும் ‘பூல் புலய்யா' (Bhool Bhulaiyaa 2 - பாலிவுட் சந்திரமுகி) இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகிறார். இந்தப் பிரச்னைகள் குறித்து கார்த்திக் தொடர்ந்து மௌனத்தையே பதிலாகக் கொடுத்துவருகிறார். பாலிவுட்டும் அவரை உறங்கும் எரிமலை கணக்காக நோட்டமிட்டு வருகிறது. அவர் வாய்திறந்து பேசிவிட்டாலே கன்டென்ட்தான் எனத் தவம் கிடக்கின்றன மீடியாக்கள். அதுவரை அவருக்குப் பிடித்த உணவு என்ன, அவர் எந்த பிராண்ட் ஆடைகளை விரும்புவார் என்று செய்திகள் வாசித்துக்கொண்டிருக்கின்றன. கார்த்திக் ஆர்யன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், அவரின் படங்கள் இனியும் தொடர்ந்து பேசும்!