
இளம் பிராயம் அலகாபாத்தில். அப்பா அலகாபாத் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர். இரண்டு மூத்த சகோதரர்களோடு நான் கடைக்குட்டி. அப்பாவின் செல்லம்.
''ஜாடி மதுவும் கவிதை நூலும்
ரொட்டித் துண்டும் போதும்...
கூடவே யாருமற்ற இடத்தில் நீயும் நானும்...
சுல்தானின் ராஜாங்கத்தைவிட
அதிக செல்வம் நமக்கு சொந்தமாகும்!''
உருதுக் கவிஞர் உமர் கய்யாமின் கவிதையை ஆங்கிலத்தில் சிலாகித்துப் பேசுகிறார் திக்மான்ஷு துலியா. பாலிவுட் இயக்குநர்களில் வித்தியாசமானவர். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை இயக்கி வருபவர். முதல் படம் 'ஹாசில்' இப்போதுவரை பாலிவுட்டின் தலைசிறந்த பொலிட்டிகல் த்ரில்லர்களில் 'கல்ட்' அந்தஸ்தில் முக்கிய இடம் பிடிக்கும். 2012-ல் 'பான் சிங் தோமர்' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர். த்ரில்லர் ஜானரில் மிரட்டிய 'சாஹேப் பீவி அவுர் கேங்ஸ்டர்' தலைப்பில் 3 படங்களை இயக்கியவர். உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி இன்று சினிமா, வெப்சீரிஸ் என இந்தியாவின் பிஸியான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சென்னையிலிருந்து என்றதும் உற்சாகமாகப் பேசினார்...

"வணக்கம். உங்களது சினிமா வாழ்க்கை இயக்குநர் மணிரத்னத்திடமிருந்து துவங்கியதாக கேள்விப்பட்டேன். எப்படி அது சாத்தியமானது?"
''அருந்ததி ராய் திரைக்கதையில் சூழலியல் செயற்பாட்டாளர் பிரதீப் கிருஷன் இயக்கிய 'எலக்ட்ரிக் மூன்' என்ற படத்திலும் கேதன் மேத்தா இயக்கிய 'சர்தார்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அதன்பின் 'பண்டிட் குயின்' படத்தில் சேகர் கபூரிடம் காஸ்ட்டிங் இயக்குநராக கேரியரை ஆரம்பித்தேன். அந்தப் படத்தில் உதவி கலை இயக்குநர் வரை எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தேன். அதன்பிறகு என் முதல் சினிமா 'ஹாசில்' படத்துக்காக எழுத்துப் பணியில் இருந்தபோது நடிகரும் கவிஞருமான பியூஷ் மிஸ்ரா என்னை மணி ரத்னத்தைப் போய் சந்திக்கச் சொன்னார். என்ன ஏதென்று யோசிக்க அவகாசம் கொடுக்கவில்லை.
நான் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் படிக்கும்போதே பியூஷ் மிஸ்ரா எனக்குப் பழக்கம். 1997-ல் சென்னைக்கு வந்து மணிரத்னத்தைச் சந்தித்தேன். பியூஷ் மிஸ்ரா அனுப்பியதைச் சொன்னதும், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவர், சன்னமான குரலில், 'நான் ஒரு சினிமா (தில் சே- உயிரே) உருவாக்கத்தில் இருக்கிறேன். கதை மட்டும் என்னுடையது. திரைக்கதை உருவாக்க எனக்கு அவகாசம் இல்லை. வடகிழக்கு மாகாணத்தில் ராணுவ ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போராளிப் பெண்ணுக்கும் குறும்புத்தனமான ஒரு இளைஞனுக்குமான ஆழமான காதல்தான் கரு. ஆனால், கனமான அரசியலைப் படம் பேச வேண்டும். ஆனால், நீங்கள் நேற்றே வந்திருந்தால் உங்களையே திரைக்கதையாசிரியராக ஃபிக்ஸ் செய்திருப்பேன். ஒரு முன்னணி எழுத்தாளரும் இன்று என்னைச் சந்திக்க வருகிறார். இருவரில் ஒருவரை மட்டுமே என்னால் சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லையே' என்றார். 'பரவாயில்லை சார்' என்றேன். மனீஷா கொய்ராலாவுக்கும் ஷாருக் கானுக்கும் இடையே லே-லடாக்கில் நிகழும் ஒரு காட்சியை விளக்கி 'இந்தக் காட்சியை டீட்டெய்லாக எழுத முடியுமா?' என்று கேட்டார். எழுதிக் கொடுத்தேன். அன்று சந்தித்த அந்த பிரபல திரைக்கதை ஆசிரியரை இதே சூழலைச் சொல்லி எழுதிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இறுதியில் என்னைத் தேர்வு செய்தார். மும்பையில் ஓட்டல் ஒன்றில் தங்கச் செய்து என்னை முழுத்திரைக்கதையை எழுத வைத்தார். வசனங்களை வெகுவாக ரசித்தார். 'தில் சே' படம் ரிலீஸானபிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பாலிவுட்டின் பிரமாண்டமான கதவை எனக்குத் திறந்து காட்டிய சாவி தான் 'தில் சே'..!''

''ஹாசில் படத்துக்குப் பிறகு தேசிய விருது வாங்கிய 'பான் சிங் தோமர்' உருவான விதத்தைச் சொல்லுங்களேன்...''
''நான் ஏதோ ஒரு வேகத்தில் எடுத்த சினிமா 'ஹாசில்'. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்தப் படத்தை தயாரிப்பாளர் இல்லாமலே இயக்க ஆரம்பித்தேன். நண்பர்களிடம் பணம் வாங்கி படத்தின் க்ளைமேக்ஸான கும்பமேளாவை கொரில்லா ஸ்டைலில் முதலில் படமாக்கினேன். என் உயிர் நண்பன், நடிகர் இர்ஃபான் கான் அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அசுதோஷ் ராணா, ஜிம்மி ஷெர்கில் என எல்லோருக்குமே அது ஆரம்ப காலம். 2000 கும்பமேளாவில் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே அனுமதியே வாங்காமல் ஷூட் அவுட் காட்சியைப் படமாக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் நிச்சயம் விளைவு பயங்கரமாக இருக்கும். இதைத் தெரிந்துதான் ஜாக்கிரதையாகத் திட்டமிட்டு வேறொரு இடத்தில் ரிகர்சல் செய்து பார்த்துவிட்டு அலகாபாத்தில் படமாக்கினோம். அந்த க்ளைமேக்ஸ் காட்சியை எடிட் செய்து எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்களை அணுகினேன். க்ளைமேக்ஸுக்கு மொத்தமே 4 லட்சம்தான் செலவானது. அதைப் பார்த்துவிட்டு 4 கோடி ரூபாய் பட்ஜெட் தந்தது ஒரு நிறுவனம். படம் விருதுகளை வாரிக் குவித்தாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை.

அதனால் 'ஹாசி'லுக்குப் பிறகு நிறைய சீரியல் மற்றும் ஷோக்கள் இயக்கும் வாய்ப்புகள்தான் கிடைத்தன. காஸ்ட்டிங் டைரக்டர், நாடக அனுபவமெல்லாம் இருந்ததால் நிறையவே டிவி சேனல்களில் பிஸியாக இருந்தேன். சோனி டிவியில் 20 வருடங்கள் வந்த இந்தியாவின் புகழ்பெற்ற 'சி.ஐ.டி' என்ற க்ரைம் சீரிஸில் இயக்குநர் பி.பீ.சிங் நீண்ட விடுப்பில் இருந்தபோது சில எபிசோட்களை இயக்கினேன். 'இப்படியே டிவியில் வாழ்க்கை போய்விடுமோ' என ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தபோது நண்பன் இர்ஃபான் கானும் நானும் டின்னரின் போது பான் சிங் தோமர் என்ற மனிதரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் இளம் வயதில் நான் பார்த்த மிகப்பெரிய கொள்ளைக்காரர். முன்னாள் ராணுவ வீரரான அவர் தடை ஓட்டப் பந்தயத்தில் 7 முறை தேசிய சாம்பியன். இர்ஃபான் கண்களில் மின்னலைப் பார்த்தேன். உடனே, 'இது சினிமாவாக செமையாக ஒர்க் அவுட் ஆகும். நீ இயக்கு. நானே பண்ணுகிறேன்!' என்றான். 2012-ல் ரிலீஸான அந்தப் படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. நண்பன் இர்ஃபான் கானுக்கு தேசிய விருது வாங்கித் தந்த பெருமையும் எனக்குக் கிடைத்தது!''
''இர்ஃபான் கானுடனான உங்கள் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள். அவர் திடீர் மறைவு உங்களை எப்படி பாதித்தது?''
''டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் படிக்கும்போதே இருவரும் மிக நெருக்கம். டெல்லியின் டீக்கடைகளில் அந்நாளில் எங்களை நிறைய பேர் பார்த்திருக்கக்கூடும். சாப்பாடுகூட ஸ்கிப் பண்ணிவிட்டு டீ குடிப்போம். விதம்விதமாக...சாலையோரங்களில், மால்களில், மின்சார ரயிலில், மொட்டை மாடியில்...சொல்லிக் கொண்டே போகலாம். டெல்லியில் இரவில் கொலைகாரர்கள் உலாவுவார்கள் என்று வீட்டில் அப்போது பயமுறுத்துவார்கள். டீ குடிப்பது என்பது எங்களுக்கு ஒரு காரணம்தான். பேச்சு... பேச்சு... பேச்சு...மூச்சு போல எனக்கும் இர்ஃபானுக்கும். மாலையில் ஆரம்பித்து மறுநாள் நண்பகல் வரை பேசிக் கொண்டிருப்போம். சினிமா, இலக்கியம், கவிதையில் ஆரம்பித்து ஏ ஜோக் வரை பேசிக் கொண்டிருப்போம். நான் பார்த்ததிலேயே மிக மிக நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதனென்றால் இர்ஃபான் கானைத்தான் சொல்வேன். குழந்தையைப் போன்ற மனம் கொண்ட அற்புதமான பிறவி. நாள் முழுதும் ஏதாவது ஒரு மைதானத்தில் யாருக்கும் தெரியாமல் பட்டம் விடுவான். சாலையோர உணவகங்களில் சாப்பிடுவான். உலக சினிமாக்களில் நடித்து பிரபலமான பிறகும் அவன் முன்பு சாப்பிட்ட சாலையோர உணவகங்களை மறக்காமல் தேடிப்போய் உண்பான். என்னையும் அழைத்துச் செல்வான். உடல்நலம் குன்றி மரணத் தருவாயிலும் நகைச்சுவை உணர்வைக் கைவிட்டதில்லை. அவனது மன உறுதிக்காகவேனும் கடவுள் இன்னும் சில ஆண்டுகள் அவனை பூமியில் வாழ வைத்திருக்கலாம். இந்தியாவின் உன்னதமான நடிகன் பாதியில் நம்மை விட்டுச் சென்றான்.உயிரோடிருந்தால் இன்னும் நிறைய டீ குடித்திருப்போம். அவன் மறைவுக்குப் பிறகு டீ குடிக்கும்போதெல்லாம் அவனையும் என் நினைவுக்கோப்பையில் நிரப்பிக் கொள்வேன்!''

''ஓடிடி-யில் இப்போது பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஓடிடி வருகை சினிமாவுக்கு வரமா, சாபமா?''
''நிச்சயமாக வரம் தான். மக்கள் செல்போனில் சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்டிலேயே படம் பார்ப்பார்கள் என 2000-க்கு முன்பே யூகித்திருந்தேன். இவ்வளவு நெருக்கமாக கைகளில் வசப்பட்ட பிறகு அதை சாதகமாக்கிக் கொள்ள வேண்டுமல்லவா? தவிர ஓடிடியில் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. கலைக்காக மெனக்கெடும் நிறைய கலைஞர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வைத்துப் படமாக்க வெப் சீரீஸ்கள் பயன்படுகின்றன. திறமைசாலிகள் வெப்சீரிஸில் பிரமாதப்படுத்துகிறார்கள். 'ரங்பாஸ்', 'ஃபிக்ஸர்', 'தாண்டவ்', 'தி கிரேட் இண்டியன் மர்டர்' போன்ற சீரிஸ்கள் என்னை பொருளாதார ரீதியாகவும் கலை ரீதியாகவும் உயர்த்தியிருக்கின்றன. இப்போதுகூட போபாலில் 'கர்மி' என்ற வெப்சீரிஸ் இயக்கத்தில் தான் பிஸியாக இருக்கிறேன். இந்த வெளிச்சம் பிடித்திருக்கிறது. என் பெயரில் இருக்கும் திக்மான்ஷு என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தமே சூரியன் என்பதுதான்!''
''குடும்பம் பற்றி...''
''இளம் பிராயம் அலகாபாத்தில். அப்பா அலகாபாத் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர். இரண்டு மூத்த சகோதரர்களோடு நான் கடைக்குட்டி. அப்பாவின் செல்லம். என்னை சிகரெட்டும் கையுமாக பார்த்த பிறகும் அடிக்காமல் விட்ட அப்பா அவர். அம்மா சம்ஸ்கிருத ஆசிரியை. வீட்டில் புத்தகங்களாக இருக்கும். எ ரியல் த்ரிவேணி சங்கமம் எங்கள் வீடுதான். அப்பாவைப் பார்க்க பெரிய பெரிய அதிகாரிகள், ஆளுமைகள் சர்வசாதாரணமாக வருவார்கள். ஆங்கில இலக்கியம் முடித்த கையோடு, டெல்லிக்கு நாடகத்தில் மாஸ்டர் டிகிரி பண்ண வந்தேன். தூலிகா... என் மனைவி. எட்டாம் வகுப்பிலிருந்தே எங்களுக்குள் காதல். அலகாபாத்தில் எதிர் வீட்டுப் பெண். பார்வையாலேயே காதலைப் பரிமாறிக்கொள்வோம். வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் என்னைத்தேடி டெல்லிக்கே வந்துவிட்டாள். என்னை நம்பி வந்தவளை அங்கு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன். என்னிடம் அப்போது வயதுக்கான முறையான சான்றிதழ்கள்கூட கிடையாது. என் இடுப்பு எலும்பின் எக்ஸ்-ரேவை வைத்து என்னை வயதுக்கு வந்தவன் என கணக்கிட்டார்கள். 20 வயதில் குடும்பஸ்தன் ஆகிவிட்டேன். 'தில் சே' படத்தின்போது மகள் பிறந்தாள். படத்தில் 'ஜான் சி' என்ற வரியில் பாடலை எழுதியிருந்தார் கவிஞர் குல்ஸார். அதனால் அவள் பெயரை ஜான்சி என்று வைத்தேன். பெங்களூரில் சிரிஷ்டி கல்லூரியில் சினிமா பயில்கிறாள்.''
''உங்களை வயதான தோற்றத்தில் அனுராக் காஷ்யப்பின் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படத்தில் ரமாதிர் சிங் பாத்திரத்தில் பார்த்து மிரண்டிருக்கிறேன்... நடிப்புக்கலை பயின்ற உங்களுக்குத் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?''
''ரொம்பவே இருக்கிறது. என்னை இனம் கண்டு கொண்டவர் அனுராக் காஷ்யப். காஸ்ட்டிங் டைரக்டராக ஒரு பாத்திரத்துக்கு என்ன உடல்வாகு தேவை என்பதுவரை நுணுக்கமாக இருப்பேன். கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூரில் பிரதான வில்லன் பாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகு என்னிடம் இருந்தது. அதனால் ஓகே சொன்னேன். சோகம் என்னவென்றால் வயதான பாத்திரத்தில் நடித்த பிறகு என்னை நிஜமாகவே வயதானவன் என்று நினைத்து விட்டார்கள். அதேபோல ரோல்களில் நடிக்கக் கேட்டார்கள். மறுத்துவிட்டேன். 'ஷாஹித்', 'ராத் அகேலே ஹாய்' போன்ற படங்களில் நடித்தேன். இயக்கும் நேரம்போக நேரம் கிடைத்தால் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் வயது இருக்கிறது. நிறைய நடிக்கலாம். ஸ்டார்களுக்குத்தான் வயது தேவை. நடிகர்களுக்குத் தேவை இல்லை. அமிதாப் பச்சன் ஆரம்பத்திலிருந்தே நல்ல நடிகர். அதனால்தான் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் வயது ஸ்டார்கள் எல்லாம் ஃபீல்டிலேயே இல்லை. ஒதுங்கி விட்டார்கள். நடிகர்களை சினிமா ஒதுக்காது. நான் கடைசிவரை நடிப்பேன்!''