
இந்த இருபெரும் கலைஞர்களுடன் மற்ற நடிகர்களும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.
செல்வாக்கு மிக்க குடும்பத்தில் நடக்கும் பெரிய மனிதரின் கொலை, அதற்கான காரணங்கள் ஆகியவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையாகச் சொல்லும் சினிமா, நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `ராத் அகேலி ஹை’ (தனிமையான இரவு).
நேர்மையான இன்ஸ்பெக்டர் ஜட்டில் யாதவுக்கு ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வருகிறது. இளவயதுப் பெண்ணை மணமுடிக்கும் வயதான ரகுவீர்சிங், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அரண்மனையில் யார் கொலைசெய்திருப்பார்கள் என்பது புரியாத புதிர். ஒவ்வொரு முடிச்சும் புதுப் புதுப் பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன. கர்ப்பிணி மகள், எல்லாவற்றையும் சுருட்டக் காத்திருக்கும் மருமகன், முறைத்துக்கொண்டே இருக்கும் ரகுவீரின் ராஜமாதா, எப்போதும் குதர்க்கமாகப் பேசும் ராஜமாதா மகள், அங்கு வேலை பார்க்கும் சிறுமி, அவள் பாட்டி, பணக்காரக் குடும்பத்துடன் உறவாட நினைக்கும் எம்.எல்.ஏ என, படத்தில் வரும் எல்லோருமே நம்மை சந்தேகம்கொள்ளச் செய்கிறார்கள். ரகுவீர்சிங்கின் புது மனைவியான ராதாவும், அவள் காதலனும் இதில் முன்னணியில் இருக்கிறார்கள். காவல்துறைத் தலையீடுகளையும் கடந்து, இந்தக்கூட்டத்தில் பலியாடுகளைக் காப்பாற்றிக் கறுப்பாட்டை ஜட்டில் யாதவ் கண்டுபிடிக்க வேண்டும்.

‘கொஞ்சம் கறுப்புதான்’ல என க்ரீமும் கையுமாகப் பெண் தேடி அலையும் ஜட்டில் யாதவாக நவாஸுதின் சித்திக்கி. அதிரடியா, அண்டர்பிளேவா என்னும் போட்டியில் மையமாக நடித்துவைத்திருக்கிறார். நெட்ஃபிளிக்ஸ் படம் என்றாலே ராதிகா ஆப்தே என்றானபின், ராதா பாத்திரத்துக்கு வேறு நபரையா ஒப்பந்தம் செய்வார்கள்? இந்த இருபெரும் கலைஞர்களுடன் மற்ற நடிகர்களும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.
குற்றமும் காதலுமென இரு தளத்தில் பயணிக்கும் அடர்த்தியான த்ரில்லர் கதையை புரியும்படி தன் அறிமுகப் படத்திலேயே இயக்கியிருக்கிறார் ஹனி ட்ரீஹான். யார் கொலை செய்திருப்பார்கள் என்னும் ‘அதே கண்கள்’ டைப் கதைதான்.
பொதுவாக இத்தகைய த்ரில்லர்கள் நம்மை சீட் நுனியில் உட்காரச் செய்யும். ஆனால், ‘ராத் அகேலி ஹை’ மண்ணெண்ணெயில் எரியும் விளக்குபோல் சூடுபிடிப்பதற்குள்ளேயே நம்மைச் சோர்வடையச் செய்துவிடுகிறது. இணையத்திரை த்ரில்லர்கள் எல்லாம் 100 நிமிடங்களுக்குள் இருக்கும் காலமிது. 150 நிமிடங்கள், அதில் மாண்டேஜ் பாடல்கள் என நத்தையாய் நகர்கிறது திரைக்கதை.
பாலிவுட் திரைப்படம் என்றாலும், இந்தியைத் திணிக்காமல் நாம் பார்க்கும் வகையில் ஆங்கிலமொழிப்படமாக நெட்ஃபிளிக்ஸ் நல்கியிருப்பது சிறப்பு. அடர்த்தியானதொரு கதைக்கு, இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கும் திரைக்கதை சேர்ந்திருந்தால் தனிமையான இரவு திகிலூட்டி நிலைபெற்றிருக்கும்.