
என் சின்ன வயசில என் கிராமத்துல நிகழ்ந்த ஒரு விஷயத்தை இதில சொல்லியிருக்கேன். நம்ம வாழ்க்கையில் கல்வி முக்கியமானது.
ஆணவக்கொலையைக் கதைக்களமாகக் கொண்ட ‘கன்னிமாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். முதல் படம் கவனமும் வரவேற்பும் பெற்ற நிலையில், ‘‘என் அடுத்த படமும் முக்கியமான பிரச்னையைப் பேசும் அரசியல் படம்தான்’’ என்கிறார். விமலை வைத்து ‘மா.பொ.சி.' என்ற அந்தப் படத்தை, தான் பிறந்து வளர்ந்த அறந்தாங்கியிலேயே எடுத்து முடித்து வந்தவரிடம் பேசினேன்.
``நடிகர் டு இயக்குநர்... இந்தப் பயணம் எப்படி இருக்கு?’’
‘‘பத்து வருடப் போராட்டத்துக்குப் பிறகுதான் இயக்குநரானேன். நான் கதை சொல்லப் போன இடங்கள்ல எல்லாம், ‘கதை நல்லா இருக்கு. ஆனா, அதை இவர் எப்படி எடுப்பார்'னு யோசிச்சாங்க. சீரியல்ல இருந்து சினிமாவுக்குப் போய் ஜெயிச்சவங்க பட்டியலை எடுத்துப் பார்த்திருப்பாங்க. நடிகனா இருந்து இயக்குநரா ஜெயிச்சவங்க யாரெல்லாம்னுகூட தேடியிருப்பாங்க. இவ்வளவு தயக்கங்களையும் தடைகளையும் உடைச்சு என்னையும் ஒரு இயக்குநரா நிலைநிறுத்தியது ‘கன்னிமாடம்.' ஒவ்வொரு படத்திலும் இந்தச் சமூகத்துக்கான பிரச்னைகளைப் பேசணும் என்கிற பொறுப்பை ‘கன்னிமாடம்' கொடுத்திருக்கு. அதை உணர்ந்தே ‘மா.பொ.சி.'யை உருவாக்கியிருக்கேன்.''
என் சின்ன வயசில என் கிராமத்துல நிகழ்ந்த ஒரு விஷயத்தை இதில சொல்லியிருக்கேன். நம்ம வாழ்க்கையில் கல்வி முக்கியமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் காமராஜர் ஐயா. அண்ணாவில் இருந்து இப்ப ஸ்டாலின் வரை திராவிட இயக்கத் தலைவர்கள் கல்விக்கான பல திட்டங்களை வகுத்திருக்காங்க. இந்தக் கல்வி ஒருகாலத்தில் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது ஏன்? வேதகாலம், சமணர்கள், ஆங்கிலேயர் காலம்னு ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வி எப்படியெல்லாம் மாறிவந்திருக்குன்னு ‘மா.பொ.சி'யில் பேசியிருக்கேன். இது 1980-ல் நடக்கும் பீரியட் படம். ஆனாலும், 1940கள்ல இருந்தே சில விஷயங்களைத் தொட்டுச் சொல்லியிருக்கேன்.
‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்' என்பதன் சுருக்கம்தான் ‘மா.பொ.சி.’ மாங்கொல்லை என்கிற இடத்துல ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இப்படி ஒரு கதை எழுதினதும் விமல்கிட்ட சொன்னேன். மாப்பிள்ளை ஆச்சரியமாகி ‘மாமா... நானே நடிக்கறேன்'னு சொன்னார். ஆறு மாசத்திற்குப் பின், படத்தைத் தயாரிக்க சிராஜ் முன்வந்தார். அவர்கிட்ட கதையைச் சொன்னதும், ‘இதுல விமல் நடிப்பாரா?'ன்னு கேட்டார். ஒரே ஆச்சரியம். ஒரே அலைவரிசையா இருக்கேன்னு தோணினதும், விமலையே கமிட் பண்ணிட்டேன். விமல் தவிர, ‘கன்னிமாடம்' சாயாதேவி, மகேஷ்பிள்ளை, ‘பருத்தி வீரன்' சரவணன், நெறியாளர் செந்தில், விஜய் முருகன்னு கதைக்கான ஆட்கள் இருக்காங்க. தயாரிப்பாளர் சிராஜ் வில்லனா நடிச்சிருக்கார். இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை' சித்துகுமார் இசையில் ஐந்து பாடல்கள் இருக்கு. விமல் இதுல ஆசிரியரா வர்றார். அழுத்தமான வசனங்கள் இந்தப் படத்தில் இருக்கு. ‘சாமியைக் கொன்னுட்டேன்'னு ஒரு வசனம், கண்டிப்பா பரபரப்பா பேசப்படும். எதுக்காக இந்த வசனம்னு படம் பார்த்தா உங்களுக்குப் புரியும்.''
``தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயோபிக்கை நீங்க எடுக்க இருப்பதா பேச்சு இருக்கே?’’
‘‘ஆமா, அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ‘மிசா' காலத்தை மட்டும் படமாக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அஜயன்பாலா எழுதியிருந்தார். யாரையும் பாதிக்காத பார்வை அதில் இருந்ததால, என் முயற்சியில் அவரையும் இணைத்துக்கொண்டேன். ரெண்டு பேரும் விவாதித்து, முழுக்கதையையும் உருவாக்கியிருக்கோம். 85 சீன்கள் ரெடியாகிடுச்சு. தளபதியின் பிறப்பு முதல் அவர் அரசியலுக்கு வரும் தருணம் வரை எழுதியிருக்கோம். முதல்வரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.’’