அலசல்
Published:Updated:

ரஜினி... கமல்... விஜய்... சூர்யா... டான்ஸ் ரகசியங்கள்!

ஹே சினாமிகா படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஹே சினாமிகா படத்தில்...

பிருந்தா மாஸ்டர் ஷேரிங்ஸ்

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா... தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழி படங்களில் இவரது பங்கு இருக்கும். இவரது வருகை அந்தப் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். எல்லா நடிகர், நடிகைகளுக்கும் பிருந்தா என்றால் அவ்வளவு மரியாதை; அவ்வளவு பிரியம். நடன இயக்குநராக பல சாதனைகள் படைத்துவிட்டு, இப்போது இயக்குநராகவும் பிஸியாக இருக்கிறார். ‘ஹே சினாமிகா' படத்தைத் தொடர்ந்து ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்ற ஆக்‌ஷன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

‘ஹே சினாமிகா' உங்களுக்கு இயக்குநரா முதல் படம். அதுக்குக் கிடைச்ச வரவேற்பு எப்படி இருந்தது?

‘‘ரொம்ப சந்தோஷமா இருந்தது. சின்னதாதான் ஆரம்பிச்சேன். இதுக்கு உதவியா துல்கர், அதிதி மற்றும் காஜல் அகர்வால்னு எல்லோரும் இருந்தாங்க. கோரியோகிராபரா இருந்தாலும் இயக்குநரா எனக்கு முதல் படம். என்னை நம்பி வந்ததற்கு அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். டீம் எல்லோரும் ரொம்ப சப்போர்ட் செஞ்சங்க. அந்தப் படத்துக்குப் பிறகு, இதே மாதிரி நிறைய ஆஃபர் வந்தது. ஏற்கெனவே லவ் சப்ஜெக்ட் செஞ்சாச்சு. அடுத்து வேற ஜானர் படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். கோரியோகிராபரா நடனத்துல வித்தியாசம் காட்டுற மாதிரி, டைரக்டரா வித்தியாசம் காட்டணும்னு நினைச்சேன். தயாரிப்பாளர் ஷிபு முதல்ல பேச வந்தார். சப்ஜெக்ட் எனக்கு ரொமபப் பிடிச்சிருந்தது. நாம நினைச்சுப் பார்க்காத ஒரு முயற்சி. ஒரு பொண்ணு இந்தக் கதையை டைரக்‌ஷன் பண்ணுவாங்களான்னு இல்லாம சவால் விடுற மாதிரியான சப்ஜெக்ட்டா இருந்தது. பண்ணலாம்னு முடிவெடுத்தேன். ஷிபு ரொம்ப என்னை நம்பினார். அதுக்கு நன்றி. ‘என் பையன் இதுல நடிச்சா எப்படி இருக்கும்’னு கேட்டார். ஏற்கெனவே, அவர் ஒரு இந்திப் படத்துல நடிச்சிருந்தார். அதுல சில காட்சிகள் பார்த்தேன். அப்புறம் வீட்டுக்குக் கூப்பிட்டு வந்தார். ஹிருது ஹாரூன் கண்களைப் பார்த்தேன். செம பவர் இருந்தது. ஒரு கோரியோகிராபர் முதல்ல கண்ணைத்தான் பார்த்து ஓகே பண்ணுவோம். உடனே வேலைகளில் இறங்க ஆரம்பிச்சிட்டோம். பாபி சிம்ஹா, முனீஷ்காந்த், ஆர்.கே சுரேஷ் எல்லோரும் சப்ஜெக்ட் உள்ளே வந்தாங்க.’’

ரஜினி... கமல்... விஜய்... சூர்யா... டான்ஸ் ரகசியங்கள்!

கோரியோகிராபரா பிஸியா இருந்துட்டு, டைரக்‌ஷன் ஆசை எப்படி வந்தது?

‘‘15 வருஷத்துக்கு முன்னாடியே என்னை டைரக்‌ஷன் பண்ணக் கேட்டாங்க. ‘வேண்டாம்’னு தவிர்த்தேன். இப்போ, கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி கேட்டாங்க. யோசிச்சுட்டு இருந்தேன். ஜியோ ரமேஷ் வந்து கேட்டப்போ, ‘இந்தக் கதைக்கு துல்கர் ஓகே சொன்னா பண்ணலாம், இல்லனா விட்டுடலாம்’னு நினைச்சேன். ஆனா, துல்கர் ஓகே சொல்லிட்டார். நானும் முடிவு பண்ணினேன். டெக்னிக்கலா வேலை பார்க்குறதும் பிடிக்கும்... டைரக்‌ஷன் பண்ண ஆரம்பிச்சேன். முதல் படம் முடிச்சுட்டு, இப்போ ரெண்டாவது படம் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்' முடிச்சிட்டேன். நிறைய கத்துக்கிட்டேன்.’’

முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கே..?

‘‘இந்தப் படம் செம ரக்கடா இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி லைட்டிங், கலர் டோன் எல்லாம் செட் பண்ணி எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினார் ஒளிப்பதிவாளர் ப்ரியேஷ். அதேமாதிரி, ஸ்டன்ட்ஸ் இந்தப் படத்துல பேசப்படும். இந்தப் படத்துல வேலை பார்த்தப்போ ஸ்டன்ட் மாஸ்டர்களுடைய கஷ்டம் புரிஞ்சது. ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணினாங்க. டான்ஸ், ஃபைட் எல்லாம் ஹிருது சூப்பரா செய்திருக்கார். ரிகர்சல்ல பெண்டைக் கழட்டிட்டேன். அவுட்புட் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தது. டான்ஸ்க்கு ரிகர்சல் பண்ணுற மாதிரி ஒவ்வொரு சீனுக்கும் ரிகர்சல் போனேன். கண்ணால நிறைய பேசணும்னு சொன்னேன். படத்துல எல்லோரும் சூப்பரா நடிச்சிருக்காங்க. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிச்சிருக்காங்க. திறமையான பொண்ணு. பாபி சிம்ஹா, முனீஷ்காந்த் ஒரு சீனை மெருகேத்துறது அழகா இருக்கும். மணி சார் ஷூட்டிங், ரிகர்சல் எல்லாம் நிறைய பார்த்துட்டு வந்ததால எனக்கு ஈஸியா இருந்தது.’’

ரஜினி... கமல்... விஜய்... சூர்யா... டான்ஸ் ரகசியங்கள்!

முதல் படம் மதன் கார்க்கி எழுதியிருந்தார். இந்தப் படத்துடைய கதை யாருடையது?

‘‘டீமா வொர்க் பண்ணியிருக்கோம். நிறைய பேருடைய இன்புட்ஸ் இருக்கு. சில உண்மைச் சம்பவங்களுடைய தாக்கமும் இருக்கும். தவிர, கதையில ஒரு சர்ப்ரைஸான பெயரும் இருக்கு. படத்துக்குப் பின்னணி இசை ஒரு கேரக்டர்னே சொல்லலாம். சாம் சி.எஸ் பிரமாதமா பண்ணியிருக்கார்.’’

இந்தப் பட ட்ரெய்லருக்கு என்ன ரெஸ்பான்ஸ்?

‘‘என் வீட்ல நான்தான் இதை டைரக்ட் பண்ணினேன்னு சொன்னா, நம்பவேயில்லை. ‘நீயா... நீயா?'ன்னு எல்லோருக்கும் ஷாக். அதுதான் எனக்கு வேணும். ‘ஹே சினாமிகா' மாதிரியே ஒரு படமான்னு யாரும் சொல்லிடக் கூடாது.’’

எப்படி கோரியோகிராபி, டைரக்‌ஷன் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுனீங்க?

‘‘ஷூட்டிங் முடிச்சவுடனே கோரியோகிராபி பண்ணப் போயிட்டேன். இல்லனா, வீட்ல விடமாட்டாங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்னு சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டாங்க. தொடர்ச்சியா வொர்க் பண்ணுறது எப்போதும் பிடிக்கும். படம் முடிச்சவுடனே போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைதான் கஷ்டமே. டைரக்டரான பிறகுதான், அது பத்தித் தெரியுது. எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங், ரீ ரெக்கார்டிங், கிரேடிங், ஃபர்ஸ்ட் கட், செகன்ட் கட், சென்சார்னு அவ்வளவு வேலை இருக்கு. அதெல்லாம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். எல்லாமே ரசித்துச் செய்தேன்.’’

ரஜினி... கமல்... விஜய்... சூர்யா... டான்ஸ் ரகசியங்கள்!

அடுத்து என்ன?

‘‘இப்போ டான்ஸ் கோரியோகிராபில கவனம் செலுத்திக்கிட்டிருக்கேன். அடுத்த படம் பத்தி யோசிக்கலை. இப்போ இந்தியில ரெண்டு படங்களுக்கு கோரியோ பண்ணிட்டிருக்கேன். தெலுங்குல அனுஷ்கா நடிக்கிற படத்துல அவங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபி செய்றேன். ரொம்ப வருஷம் கழிச்சு மறுபடியும் அனுஷ்கா நடிக்கிறாங்க. ரொம்ப நல்ல சப்ஜெக்ட்.’’

இப்போ பாடல்கள் இல்லாமல் படங்கள் வரத் தொடங்கியிருக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?

‘‘படத்துக்கு எது பொருத்தமோ, அதைச் செய்யறாங்க. இப்போ நான் இயக்கியிருக்கிற படத்திலும் பாடல்கள் குறைவுதான். நான் ஒரு கோரியோகிராபர்ங்கிறதால படத்துல பாடல்களைத் திணிக்க முடியாது. எங்கே வேணுமோ அங்கதான் வைக்கணும். கதையோட்டத்தைப் பாட்டு கெடுத்திடக் கூடாது.”

இயக்குநரான பிறகு, மணிரத்னம்கிட்ட ஏதாவது டைரக்‌ஷன் பத்திப் பேசியிருக்கீங்களா?

‘‘மணி சார்தான் ‘ஹே சினாமிகா' பட பூஜைக்கு கெஸ்ட். அவர்தான் ஷூட்டிங்கை ஆரம்பிச்சு வெச்சார். டீசர், ட்ரெய்லர் எல்லாம் அனுப்பி வெச்சேன். படத்தைப் பார்த்துட்டு அவர் என்ன சொல்வாரோன்ற பயத்துல அவரை நான் படம் பார்க்கக் கூப்பிடலை. அவரா பார்க்கட்டும்னு விட்டுட்டேன். இந்தப் பட ட்ரெய்லரைப் பார்த்துட்டு, ‘தக்ஸ் பிருந்தா. ஆக்‌ஷன் டைரக்டர்'னு அனுப்பியிருந்தார்.’’

ரஜினி... கமல்... விஜய்... சூர்யா... டான்ஸ் ரகசியங்கள்!

எல்லா மொழிகளிலும் நடிகர்களுக்கு டான்ஸ் கோரியோகிராபி பண்ணுறீங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மேனரிசம் இருக்கும். அதுக்கு தகுந்த மாதிரி எப்படி சொல்லிக்கொடுக்கிறீங்க?

‘‘ஆர்ட்டிஸ்டுடைய பாடி லாங்குவேஜை முதல்ல கவனிச்சிடுவேன். அதுலயே ஒரு ஐடியா வந்திடும். ரஜினி சாருக்கு கை மூவ்மென்ட் சூப்பரா இருக்கும். கமல் சார் பிரமாதமான டான்ஸர். விஜய் என்ன கொடுத்தாலும் ஆடிடுவார். புது ஆர்ட்டிஸ்டா இருந்தாங்கன்னா, ஒரு ஸ்டெப் கொடுத்து அதை வெச்சே அவங்களுக்கு என்ன நல்லா வரும், வராதுன்னு தெரிஞ்சுக்குவேன். துல்கருக்கு செம ஸ்டைலா பண்ணணும். அவருக்கு ஃபோர்ஸ் பண்ணி ஒரே பீட்ல நிறைய ஸ்டெப் போட வெச்சா செட்டாகாது. சூர்யாவுக்கு பாடி லாங்குவேஜ் ரொம்ப அழகா இருக்கும். அவங்கவங்களுக்கு ஒரு ஸ்டைல். அதைப் பிடிச்சு அதுக்குத் தகுந்த மாதிரி கோரியோகிராபி பண்ணுறதுதான் எங்க வேலை.’’

மலையாளப் படங்களுக்கு கோரியோகிராபி பண்ணும்போது எப்படியிருக்கும்?

‘‘அவங்களுடையது அப்படியே வேற. மோகன்லால் சார் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர். என்ன கொடுத்தாலும் பண்ணமாட்டேன்னு சொல்லமாட்டார். மம்மூட்டி சார் அவ்வளவா ஆடமாட்டார். ஆனா, திடீர்னு டான்ஸ் பண்ண ரெடின்னு ஆர்வமா சொல்வார். ப்ரித்விராஜ், குஞ்சாக்கோ போபன் எல்லோரும் சூப்பரா டான்ஸ் பண்ணுவாங்க. செம பர்ஃபாமர்ஸ்.’’

நீங்க டைரக்டரான பிறகு, உங்க ஃப்ரெண்ட் குஷ்பு என்ன சொல்றாங்க?

‘‘குஷ்புகிட்ட அவ்வளவு சீக்கிரம் பாராட்டு வாங்கிட முடியாது. கெஞ்சணும். ‘நல்லாருக்கு. பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்'னு சொல்வா. ‘ஹே சினாமிகா' ரொம்ப பிடிச்சுப்போயிடுச்சு குஷ்புவுக்கு. என் கணவரும் அப்படித்தான். நல்லாருக்கு, சூப்பர்னு எல்லாம் சொல்லவேமாட்டார். ‘பொன்னியின் செல்வன்' டான்ஸை நிறைய பேர் பாராட்டினாங்க. ஆனா, என் கணவர் ஒரு வார்த்தைகூட சொல்லலை. அப்படியொரு க்ரிட்டிக் இருக்கணும்.’’