
குறிப்பிட்ட சூழலில் மட்டுமே இயங்கவேண்டிய நிர்பந்தம். பாத்திரங்கள் பெரிதாக நகர்வதில்லை.
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய். காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சவாலை எதிர்கொள்ளாத கலைவடிவங்கள் வரலாற்றில் நிலைப்பதில்லை. இன்று சினிமா என்னும் கலைவடிவம் உலகம் முழுவதும் இரு சவால்களை எதிர்கொள்கின்றன. திரையரங்குகள் திறக்கப்படவில்லை, ‘சமூக இடைவெளி’யால் பலர் ஒன்றிணைந்து படப்பிடிப்பை மேற்கொள்ளவில்லை. இந்தச் சவாலை முறியடித்து இந்தியாவிலும் சில குறும்படங்கள் வந்திருக்கின்றன என்றாலும், அடுத்தகட்ட அசுரப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது ஃபகத் ஃபாசில் தயாரிப்பில், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அமேசான் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘C U Soon’ மலையாளத் திரைப்படம்.
டேட்டிங் தளத்தின் மூலம் அறிமுகமாகும் அனு (தர்ஷனா ராஜேந்திரன்)மீது காதல்வயப்படும், துபாயில் பணிபுரியும் ஜிம்மி (ரோஷன் மேத்யூ) அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். திடீரென ஒருநாள் அனு தற்கொலை செய்யப்போகும் வீடியோவை அனுப்பிவிட்டு மாயமாகிறாள். ஐ.டி துறைப் பணியாளனும் தன் உறவினருமான கெவின் (ஃபகத் ஃபாசில்) மூலம் அந்த மர்மத்தை அலசும்போது அதிர்ச்சியளிக்கும் சமூக அவலம் ஒன்று வெளியாகிறது.

குறிப்பிட்ட சூழலில் மட்டுமே இயங்கவேண்டிய நிர்பந்தம். பாத்திரங்கள் பெரிதாக நகர்வதில்லை. குறிப்பாக ஃபகத் ஒற்றை அறையை விட்டு படத்தின் இறுதிவரை எங்கேயுமே நகரவில்லை. ஆனால் நம்மையும் எங்கேயும் நகரவிடாமல் கதை பரபரப்பாக நகர்கிறது. வீடியோ கால், வாட்ஸப் சாட், இணையத்தில் உள்ள கோப்புகள், ஹேக்கிங் என்று முழுக்க முழுக்க கணினித் திரையிலேயே கதை சொல்லப்படுகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரையைத் தாண்டி கணினித்திரையின் மூலமே கதை சொல்ல முடியும் என்று நிரூபித்திருப்பது ஆச்சர்யம்தான்.
ஒரேநேரத்தில் வாடிக்கையாளரிடம் தொலை பேசியில் பேசியபடியே, வாட்ஸப்பில் அனுவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான் ஜிம்மி. ஒரேநேரத்தில் பல திரைகளின் வழியே சென்று மர்மத்தைக் கண்டடை கிறான் கெவின். என்ன செய்ய, நம் உலகமும் வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கின்றன! இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டி ருக்கும்போதே அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வருகிறது, பார்க்கவேண்டும்.
படம் முழுக்கவே மொபைல், கணினி சாட் கொண்டு நகர்வதால், உரையாடலின் ஒரு வாக்கியத்தைத் தவறவிட்டாலும் நாம் குழம்பிப் போகும் அபாயம் உண்டு.சிம்கார்டு இல்லா விட்டாலும் இணையதளங்கள் மூலம் ஜிம்மியையும் தன் தாயையும் தொடர்புகொள்ளும் அனு ஏன் துபாய் காவல்துறையைத் தொடர்பு கொள்ளவில்லை போன்ற சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனாலும், கையிலிருக்கும் வசதியைக் கொண்டே கலைநேர்த்தியும் சமூக அக்கறையும் இழையோடும் ‘C U Soon’ போன்ற சினிமாக்கள் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவை!