
வீயெஸ்வி, ஓவியங்கள்: எஸ்.ராஜம், மணியன் செல்வம்
கலை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பொற்றாமரைக் குளத்தின் எதிரில் உயரமான நடுவயதுக்காரர், நடைபாதையின் உட்கூரையைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருக்கிறார். அங்கே வரையப்பட்டிருக்கும் தேவியின் வெவ்வேறு வகை ஓவியங்கள் அவரைக் கவர்ந்திழுக்கின்றன.
``ஆமாம்... இதுவேதான்... நாளை காலை நான் இங்கே வரலாமா?’’ என்று உடன் வந்த கோயில் சிப்பந்தியிடம் கேட்டு சம்மதம் பெறுகிறார்.
மறுநாள் காலை மிகச் சரியாகப் பத்து மணிக்கு, வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்த இடம் வந்தார் உயர்ந்த மனிதர். கையில் காகிதச் சுருள்கள், கூர்தீட்டப்பட்ட பென்சில்கள், ஓவியம் வரையத் தேவைப்படும் மற்ற பொருள்கள். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குக் கழுத்தை வளைத்து உட்கூரையை கவனமாகப் பார்த்துக்கொண்டே அவர் வரைய, தேவியின் உருவம் காகிதத்தில் பதிந்தது. தேவியின் ஆடை ஆபரணங்களும் அடுத்தடுத்து வந்து அதனதன் இடத்தில் உட்கார்ந்தன. அந்த இடத்தைக் கடந்து செல்லும் பக்தர்களின் பேச்சொலியும், ஒரு சிலர் சற்று நின்று அவர் வரைவதை உற்றுப் பார்ப்பதும் அவரின் கவனத்தைக் கலைக்கவில்லை.

அதிகபட்ச கவனத்துடன் உட்கூரையில் காணப்பட்ட ஓவியங்களை அச்சு அசலாகத் தன் ஓவியத்தில் மறுபதிவு செய்தார் அவர். வரைந்து வரைந்து ஒரு பென்சில் `கரைந்து'விட்டால் பக்கத்திலிருக்கும் இளைஞரிடமிருந்து இன்னொன்று வாங்கிக்கொள்வார். ஒவ்வோர் ஓவியத்தின் அடியிலும் உட்கூரையில் இருப்பதுபோலவே தேவியின் பெயரை எழுதிக்கொள்வார்.
ஒவ்வோர் இரண்டு மணி நேரம் கடந்த பிறகும் இருவரும் கோயிலுக்கு வெளியே வந்து தெருமுனைக் கடையில் தேநீர் அருந்துவார்கள். கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க அவருக்கு மிகவும் பிடிக்கும். குடித்ததும், ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்வார். முடிந்ததும், கோயிலுக்குள் மறுபடி செல்வார். ஓவியம் வரைதல் தொடரும். நான்கு மணிக்கு அன்றைய தினத்தை முடித்துக்கொள்வார். இப்படி உட்கூரை மீதிருந்த 36 ஓவியங்களை வரைந்து முடிக்க அவருக்கு ஒரு வாரத்துக்கும்மேல் ஆனது.
அவர்... மிகச் சிறந்த பாடகராகவும் ஓவியராகவும் வாழ்ந்து 2010-ம் ஆண்டு மறைந்த எஸ்.ராஜம் புகைப்படம் எடுப்பார். சினிமாவில் நடித்திருக்கிறார். பன்முகம்கொண்ட இந்த மகா கலைஞருக்கு இது நூற்றாண்டு வருடம். அன்று கோயிலில் அவருடன் இருந்த இளைஞர் ஜி.சி.சேகர், ராஜத்தின் இளைய சகோதரரின் மகன்.
மிகவும் எளிமையானவராக வாழ்ந்தவர் எஸ்.ராஜம். காவி நிற வேட்டி அல்லது லுங்கி அணிவார். வந்த வாழ்வையும், வளம்பெற்ற செல்வத்தையும் அவை தனக்கானவை அல்ல என்று கருதியவர். எளிதில் யாராலும் அணுகக் கூடியவராக இருந்தார். பேதம் பார்க்காமல் எவருக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார். சிக்கனமின்றி ஓவிய நுணுக்கங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்வார். எந்தவிதப் புகழுரைகளையும் பாராட்டு வார்த்தைகளையும் எதிர்பார்க்காமல் பாடிக்கொண்டும், பாடாத நேரத்தில் ஓவியம் வரைந்துகொண்டும், வரையாத நேரத்தில் எழுதிக்கொண்டும், எழுதாத பொழுதில் இசை கற்பித்துக்கொண்டும் இருந்த கர்மயோகி அவர்.

அப்போது சென்னை, வானொலி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார் எஸ்.ராஜம். பல்லாவரத்துக்கு அருகில் வீடு. தினமும் வீட்டிலிருந்து பல்லாவரம் ரயில் நிலையம்வரை சைக்கிள் மிதித்து வருவார். அங்கே சைக்கிளைப் பூட்டி நிறுத்திவிட்டு, ரயிலில் மாம்பலம் வரை பயணிப்பார். அங்கே அவருடைய இன்னொரு சைக்கிள் இருக்கும். அதிலேறி அமர்ந்து ரேடியோ ஸ்டேஷன் வரை மிதித்துச் செல்வார். மாலை பணி முடிந்ததும், மாம்பலம் ஸ்டேஷன் வரை சைக்கிள், ரயிலில் பல்லாவரம், இறங்கி வெளியே வந்து வீடுவரை சைக்கிள்! ரெக்ஸின் துணியில் பை ஒன்றை அவரே தைத்துக்கொண்டு, அதைத் தோளில் மாட்டிக்கொண்டுதான் வெளியே போவதும் வருவதும்!
பல்லாவரத்திலிருந்து மயிலாப்பூர், நம்பர் 41, நடுத்தெரு வீட்டுக்குக் குடியேறிய ராஜம், தன் இறுதிக்காலம் வரை அங்கேயே தங்கிவந்தார். வீடு எப்போதும் திறந்தபடிதான் இருக்கும். எந்த நேரத்திலும் குறுகலான படிகளேறி மாடிக்குச் சென்று அவரைச் சந்திக்கலாம்.
எதிர்ப்படும் எவரையும் `சார்...' போட்டுத்தான் அழைப்பார் எஸ்.ராஜம். பாபநாசம் சிவனின் முதல் மாணவராக அவர் சேர்ந்தார். முத்துசுவாமி தீட்சிதரின் வம்சாவளியில் வந்த அம்பி தீட்சிதரிடமும், அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடமும் பாட்டுப் பயின்றவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மதுரை மணி ஐயர் ஆகியோர் இவருக்கு சங்கீத குருவாக இருந்திருக்கிறார்கள். மயிலாப்பூரிலிருந்து ஜார்ஜ் டவுன் வரை சென்று, அங்கே மெட்ராஸ் லலிதாங்கியிடம் (எம்.எல்.வசந்தகுமாரியின் தாய்) புரந்தரதாஸர் பாடல்களைக் கற்றுவந்தார். மயிலாப்பூர் கௌரி அம்மாளிடமிருந்து பதங்கள் இவருக்குப் பாடமாகின.

அப்போது எஸ்.ராஜத்துக்கு 12 வயது. மியூசிக் அகாடமி நடத்திய புரந்தரதாஸர் பாடல்கள் போட்டியில் கலந்துகொண்டார். அதே போட்டியில், லலிதாங்கியும் பங்கு கொண்டிருக்கிறார். இறுதிச்சுற்று முடிந்ததும் இருவருக்கும் சமமான மதிப்பெண்கள் கிடைக்க, மறுபடியும் பாடச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள். இறுதியில், சீடர் எஸ்.ராஜம் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற, குரு லலிதாங்கிக்கு இரண்டாவது இடம்!
72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியவர் கோடீஸ்வர ஐயர். இவற்றுள்
40 விவாதி ராகங்கள் அடங்கும். இந்தப் பாடல்கள்மீது தனிப் பிரியம்கொண்டிருந்தார் எஸ்.ராஜம். இத்தனைக்கும், `விவாதி ராகப் பாடல்களைப் பாடுபவர்களுக்குக் கெடுதல் விளையும்’ என்றொரு மூட நம்பிக்கை இருந்துவந்திருக்கிறது. ராஜம் அதில் நம்பிக்கைகொண்டிருக்கவில்லை. விவாதி ராகப் பாடல்களைப் பாடி ஆல் இந்தியா ரேடியோவில் அவற்றைப் பதிவுசெய்தார். `விவாதி ராகங்களைப் பாடுவதால், எனக்கு எந்தவிதக் கெடுதலும் ஏற்பட்டதில்லை. சொந்த வீட்டில் வசிக்கிறேன்... வசதியாக இருக்கிறேன். தொடர்ந்து ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறேன். எனவே, தயவுசெய்து எல்லோரும் விவாதி பாடுங்கள்...’ என்பார். கோடீஸ்வர ஐயரின் பாடல்களை ஸ்வரக் குறிப்புகளுடன் பதிப்பித்தார். ஒலி நாடாக்களிலும், சி.டி-க்களிலும் அவற்றைப் பதிவுசெய்தார்.
`சங்கீத மும்மூர்த்திகள் மூவரும் இப்படித்தான் இருந்திருப்பார்கள்’ என்று இசை ரசிகர்களின் மனதில் ஓர் பிம்பத்தைத் தன் ஓவியத்தின் மூலம் உருவாக்கியவர் எஸ்.ராஜம். இன்று பல இடங்களில் ஒரே ஃப்ரேமில் ஒன்றாகக் காணப்படும் தியாகராஜர் - சியாமா சாஸ்திரி - தீட்சிதர் ஓவியங்கள் ராஜத்தின் கை வண்ணம்தான்!
ஈகோ பார்க்காதவர் எஸ்.ராஜம். ஓர் உதாரணம். காஞ்சி மகா பெரியவர் பிரதோஷகால பூஜை செய்வதுபோலவும், மேலே காற்று வெளியில் கடவுளர்கள் இருப்பதுபோலவும் ஓர் ஓவியத்தை ராஜம் வரைய வேண்டும் என்று காஞ்சி மடம் கேட்டுக்கொண்டது. தன்னுடைய ஸ்டைலில் கடவுள்களை மட்டும் வரைந்தார் ராஜம். காஞ்சி மகானின் ஓவியம் உயிரோட்டமாக இருக்க, ஓவியர் மணியம் செல்வம்தான் அதை வரைய வேண்டும் என்று வற்புறுத்தினார். சாதாரணமாக எந்த இரண்டு ஓவியர்களும் ஒரே கேன்வாஸைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஜீனியஸ் எஸ்.ராஜம், இளம் ஓவியர் ஒருவருக்குத் தன் நிழலில் இடம் கொடுத்தார்.

பாடகியும் இசை ஆராய்ச்சியாளருமான டாக்டர் பிரமீளா குருமூர்த்தி, எஸ்.ராஜத்தின் மருமகள். `சங்கீத சிக்ஷா' என்ற முறையை வகுத்துக்கொண்டார் இவர். ``ராஜம் அவர்களை குருவாகவும், நான் மாணவியாகவும் இருந்து எங்கள் இசை வகுப்புகளைப் பதிவுசெய்வோம். ஸ்வர வரிசைகள், அலங்காரம், வர்ணம் மற்றும் எளிமையான கீர்த்தனைகளைப் பதிவுசெய்வோம். ஆர்வமுள்ள ஆரம்ப மாணவர்கள் ஆடியோ காஸெட்டுகளிலிருந்து இவற்றைக் கற்றுக்கொள்ளலாம். விவாதி கீர்த்தனைகளை அவரிடமிருந்து நான் கற்றேன்... இரவு 10:30 மணிக்கு எங்கள் கிளாஸ் நடக்கும்...’’ என்கிறார் பிரமீளா.
தினமும் காலை ஏழரை, எட்டு மணிக்கு எழுந்துகொள்வாராம் ராஜம். ஃபிளாஸ்க்கில் மனைவி கலந்துவைத்திருக்கும் டீயைப் பருகியபடியே ஓவியம் வரைய உட்கார்ந்துவிடுவார். இவருக்குச் சாப்பாடு மெதுவாகத்தான் பரிமாறப்பட வேண்டும். சாதத்தைக் கூழ் மாதிரியாகப் பிசைந்து, முதலில் `கறி - சாதம்' சாப்பிடுவார். பின்னர் ரசம்தான். வறுவல் அல்லது வடகம் பக்கவாத்தியமாக இருக்கும். இறுதியாக மோர் சாதம், ஊறுகாய் அல்லது மனைவி தயாரித்து வைத்திருக்கும் பச்சைக் காரட் - வெங்காயம் - பச்சை மிளகாய் - எலுமிச்சைப்பழம்! சாப்பிட்டு முடித்ததும், பகல் இரண்டு மணிவரை ஓவியம் வரைந்துகொண்டிருப்பார். பின்னர் சாய்வு நாற்காலியில் குட்டித் தூக்கம். விழித்ததும், ஒருவர் பின் ஒருவராக இசை மாணவர்கள் வர, மாலை ஐந்தரை மணி வரை பாட்டு கிளாஸ்.
``சாயந்தரமாக வெளியே போய் பழங்கள் வாங்கிவருவார். திராட்சையாக இருந்தால், உதிர்ந்ததாகத் தேர்ந்தெடுப்பார். எங்கள் எல்லோருக்கும் போண்டா பார்சல் வரும்...’’ என்கிறார் பிரமீளா.
எஸ்.ராஜத்தின் 90-வது பிறந்த நாளன்று அவரை வாழ்த்தவும், கேக் வெட்டிக் கொண்டாடவும் அவருக்கு நெருக்கமானவர்கள் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.
``என் விரல்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. இனிமேலும் ஓவியம் வரைய இயலும் என்று எனக்குத் தோன்றவில்லை. இனிமேல் முழுநேரமும் சங்கீதம்தான்...’’ என்று சொல்லியிருக்கிறார். அஜந்தா பாணியில் ஓவியம் வரைவதைத் தன் ஸ்டைலாகக்கொண்டிருந்தவர் எஸ்.ராஜம்.
குறிப்பிடத் தவறிவிட்டேன்... வீணை மேதை எஸ்.பாலச்சந்தர், ராஜத்தின் இளைய சகோதரர்!
படங்கள் உதவி: ஜி.சி.சேகர்