Published:Updated:

`வஸ்திராபரணம்!'- அறக்கட்டளைக்குத் தன் பட்டுப்புடவைகள் மூலம் நிதிசேர்க்கும் சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன், தன் கச்சேரிகளின் மூலம் வசூலான தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வந்ததோடு 1999-ம் ஆண்டு `சமுதாயா' அறக்கட்டளையைத் தொடங்கினார்.

Published:Updated:

`வஸ்திராபரணம்!'- அறக்கட்டளைக்குத் தன் பட்டுப்புடவைகள் மூலம் நிதிசேர்க்கும் சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன், தன் கச்சேரிகளின் மூலம் வசூலான தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வந்ததோடு 1999-ம் ஆண்டு `சமுதாயா' அறக்கட்டளையைத் தொடங்கினார்.

சுதா ரகுநாதன்

ன்னுடைய விலையுயர்ந்த புடவைகளை இணையத்தில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையைத் தனது `சமுதாயா' அறக்கட்டளைக்கு அளித்து வருகிறார், கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன்!

திரையிசையிலும் கர்னாடக சங்கீத உலகிலும் தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு புகழ்பெற்று விளங்குபவர், சங்கீத கலாநிதி கலைமாமணி சுதா ரகுநாதன். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய பட்டங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கும் சொந்தக்காரர். இவர், கலை வாழ்வோடு பொதுத்தொண்டிலும் நிறையவே ஈடுபாட்டுடன் பங்கெடுத்து வருகிறார். அரசுப் பள்ளிகளுக்கும் முதியோர் இல்லங்களும் தனது கர்னாடக இசையைக் கொண்டு சேர்த்து வருகிறார். உறுப்பு தானம் குறித்த தனது முதல் விழிப்புணர்வு நிகழ்விலேயே 20 பேரை தானத்துக்குப் பதியச் செய்திருக்கிறார்.

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

தன் கச்சேரிகளின் மூலம் வசூலான தொகையை வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்குக் கொடையாக அளித்து வந்ததோடு, 1999-ம் ஆண்டு `சமுதாயா' எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு உதவிடத் தொடங்கி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற ஆதரவற்ற குழந்தைகளை குறிப்பாகத் தினமும் பிச்சை எடுப்பதற்கு அடித்துத் துன்புறுத்தப்படுகிற குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கான செயல்பாடுகளை இந்த அறக்கட்டளை செய்து கொண்டிருக்கிறது. இதன்படி 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அறக்கட்டளையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கான படிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக நிதிதிரட்ட வேண்டியிருந்திருக்கிறது.

இதற்காக, கடந்த காதலர் தினத்தன்று, `வஸ்திராபரணம்' என்ற பெயரில் தனது இணைய விற்பனை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தத் தளம் வழியே, தன்னிடம் உள்ள காஞ்சிபுரம் பட்டுகளை விற்று அதில் கிடைக்கும் வருவாயை அறக்கட்டளைக்கு நிதியாக அளிக்கும் முடிவை எடுத்துள்ளார், சுதா. இந்த யோசனையை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதும் அவர்கள் பெரிதும் ஊக்கமும் வாழ்த்தும் தந்ததாகக் கூறுகிறார். இந்தப் புடவைகள் தனது உணர்வோடு பிணைந்தவை எனக் கூறியிருக்கிற அவர், கச்சேரி மேடைகளில் இசை நிகழ்வு நடத்திக் கொண்டிருக்கும்போதுகூட ரசிகர்கள் தான் அணிந்திருக்கிற புடவைகளைப் பெரிதும் ரசித்து மகிழ்வதாகக் கூறுகிறார்.

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

இந்தப் புடவைகளைப் பற்றி அவர் நினைவுகூரும்போது, இந்தக் காஞ்சிப்பட்டுகள் ஒவ்வொன்றும் தன்னோடும் தனது வாழ்வோடும் உணர்வுபூர்வமாகப் பிணைந்தவை என்று உருக்கமாய்த் தெரிவித்துள்ளார். மஞ்சள் பார்டர் பிரவுன் புடவை, தான் பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகத் தன் கணவர் தனக்குப் பரிசளித்தது என்றும் அதைத் தனது பாராட்டு விழாவிற்கு அணிந்து சென்றதாகவும் கூறியுள்ளார். பெங்களூரு கச்சேரியில் அமிர்தவர்ஷினி பாடியதும், அன்றிரவே மழை வந்ததாக மெய்சிலிர்க்கக் கூறுகிறவர், அன்றைய தினம் மெரூன் புடவை அணிந்திருந்தாகக் கூறுகிறார்.

என்னதான் பிடித்த புடவைகளாய் இருந்தாலும் அவற்றை நல்ல நோக்கத்துக்காக விற்பது நிறைவளிப்பதாகக் கூறுகிறார். ``மனிதநேயம், மனதுக்கு அமைதியைத் தருகிறது!" என்பது, சுதா ரகுநாதன் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!