
என் மகன் நிலன் பிளே ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டார்.
சஞ்சீவ் - என் மனைவியும் இன்னோர் உயிரும்!
என்னுடைய ரீசன்ட் லவ், ஆல் டைம் லவ், கிரஷ் எல்லாமே ஆல்யாதான். என் வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியே அவங்கதான். சீக்கிரமே என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இன்னோர் உயிரை இந்த உலகத்துக்குக் கொண்டுவரப்போறாங்க. ஐ'ம் எக்ஸைடட்!

ஆல்யா மானசா - பேனா!
திருமணத்துக்கு முன்னாடி கிரஷ் பத்தி கேட்டிருந்தீங்கன்னா நிறைய விஷயங்கள் சொல்லியிருப்பேன். இப்போ என்னோட லவ், கிரஷ் எல்லாமே சஞ்சீவ்தான். ஆனா, என்னன்னு தெரியலை... பேனா மேல திடீர்னு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கு. விதவிதமான பேனாக்களை வாங்கி சேகரிக்கணும்னு ஆசையா இருக்கு!
விஜயலட்சுமி - மகனோடு சிறு பயணம்!
என் மகன் நிலன் பிளே ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டார். ஸ்கூல் முடிஞ்சதும் என்னுடைய வரவை எதிர்பார்த்து ஏக்கத்தோடு நின்னுட்டிருப்பார். என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடிச்சுப்பார். காரில் என் மடிமீது உட்கார்ந்துகிட்டு வழி முழுக்க எதையாச்சும் பேசிட்டே வருவார். இந்தத் தருணங்களை நான் ரொம்ப ரசிக்கறேன்.

நிலன் ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டதால, சூப்பரா டான்ஸ் ஆட வைக்கிற மியூசிக் கேட்க நேரம் கிடைச்சிருக்கு. வீக் எண்ட்ல நான், நிலன், அவங்க அப்பா மூணு பேரும் குத்தாட்டம் போடுவோம். ‘ரெளடி பேபி’ நிலனுக்கு ஆல் டைம் ஃபேவரைட்!
ஃபெரோஸ் - புது பைக்!
விஜி என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்டா ‘டுகாட்டி பைக்’ வாங்கிக் கொடுத்தாங்க. கார் வைச்சிருந்தாலும்கூட, இப்பதான் நான் ஆசைப்பட்ட பைக் கிடைச்சிருக்கு. விஜியோடு லாங்க் ரைடு போனேன். செம அனுபவம் அது. நான் போன வேகத்தில விஜியோட ஹெல்மெட், என் ஹெல்மெட் மேல முட்டிக்கிட்டே வந்தது செம காமெடி!
உதவி நடன இயக்குநர் ரகு - ஏர்பாட்ஸ்!
‘என் மனைவிதான் உலகிலேயே எனக்கு ரொம்ப விருப்ப மானவங்க. அவங்களுக்கு அடுத்தபடியா அவங்க கிஃப்ட் பண்ணின காஸ்ட்லியான ஏர்பாட்ஸ் (AirPods). ஆனா, அதைத் தொலைச்சுட்டேன். தாபாகிட்ட செமையா வாங்கிக் கட்டிக்கிட்டேன். எங்க கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஆனதையொட்டி 17,000 ரூபாய் கொடுத்து மறுபடியும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. எனக்கு செம சர்ப்ரைஸ். இப்ப என்னோட ரீசன்ட் கிரஷ் இந்த ஏர்பாட்தான். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னு மேடம் ஆர்டர் போட்டுட்டாங்க!

தாபா - பெட்ரூம் அலங்காரம்!
திடீர்னு பெட்ரூம் மேல எனக்குக் காதல் வந்திருக்கு. காரணம் ரகு. ஆமா, காதலர்களா இருந்தவரை பார்த்துப் பேசிட்டு அவங்கவங்க வீட்டுக்குப் போயிடுவோம். ஆனா, இப்ப ஒரே ரூம், நான், அவர், எங்க காதல்... ஸோ, என்னதான் வேலைப்பளு இருந்தாலும், எங்க அறைக்குள்ள வந்ததும் புத்துணர்ச்சி பிறந்துடும். எங்களுடைய ஸ்பெஷல் ரூமை அடிக்கடி அலங்கரிக்கிறதுதான் என் முக்கிய வேலையே!
ஷியாம் - சந்தியா - சாக்கோஸ்!
எங்க இருவருக்குமே ரீசன்ட் கிரஷ், லவ் எல்லாமே எங்களோட நாய்க்குட்டி `சாக்கோஸ்’ மேலதான். ஒரு வயசுதான் ஆகுது. பீகிள் இனத்தைச் சேர்ந்தது. ரொம்ப வாலு. சமீபத்தில் சாக்கோஸுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினோம். சர்க்கரை, பேக்கிங் சோடா சேர்க்காம ஆரோக்கியமான கேக்கை கிஃப்ட் பேக் பண்ணி சாக்கோஸுக்குக் கொடுத்தோம்.

நாங்க ரெண்டு பேருமே பெட் லவ்வர்ஸ். டீன்ஏஜில் ஆசையோடு நாய் வளர்த்து, அதைப் பறிகொடுத்த வலியும் எங்க ரெண்டு பேருக்குமே நேர்ந்திருக்கு. நாங்க காதலிக்கும்போதே... திருமணத்துக்குப் பிறகு கண்டிப்பா நாய் வளர்க்கணும்னு முடிவு பண்ணினோம். இப்போ அந்தக் கனவு நிறைவேறிடுச்சு. சாக்கோஸ்தான் எங்க உலகம்!’’
`மைனா’ நந்தினி - மேக்கப்
திருமண நாள் அன்னிக்கு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒன்பது பொருள்களைப் பரிசளிச்சார் என் கணவர் யோகி. அதுல இருந்த ஒவ்வொண்ணுமே நான் வாங்கணும்னு ஆசைப்பட்ட பொருள்தான். ஐபோன் 11 புரோ, கூலர்ஸ், பாபி பிரவுன் ஃபவுண்டேஷன், ஐ லவ் யூ சொல்லும் பொம்மைனு அத்தனையும் செம க்யூட். ஸோ... இப்ப என்னோட செம செம கிரஷ் அந்த ஃபவுண்டேஷன்தான். ஆனா, நீண்ட நாள் லவ் ஒண்ணு இருக்கு. அழகா, அமைதியா, சின்னதா ஒரு வீடு வாங்கணும். சீக்கிரம் நிறைவேறும்னு நம்பறேன்!

யோகேஷ் - கார் கிரஷ்
எனக்கு ஒரு கார் வாங்கிக்கொடுத்து என்னை கார் லவ்வராவும் மாத்திட்டாங்க நந்தினி. இப்பலாம் ரோட்டுல ஒரு கார் போனாகூட, உடனே அது என்ன மாடல், என்ன விலைனு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். லாங் டிரைவ் போகணும்னு ஆசை வந்துட்டா, உடனே நந்தினியைத் தொல்லை பண்ணி கார்ல கூட்டிட்டுக் கிளம்பிடுவேன். அந்தளவுக்கு செம கிரஷ் என் கார் மேல எனக்கு!
தீபக் - புரொக்கோலி காதல்!
சின்ன வயசுல குக்கிங் மேல இருந்த ஆர்வம், இப்ப செம கிரஷ்ஷா மாறிடுச்சு. ஸோ, கிச்சனுக்குள்ள இறங்கி தாறுமாறு சுவையில குடும்பத்துக்கே சமைச்சு கொடுத்துட்டு இருக்கேன். ஃப்ரீ டைம் கிடைக்கும்போதெல்லாம் கிச்சன்தான் நம்ம சாய்ஸ். யூடியூப் பார்த்து புதுப்புது டிஷ் செய்றப்ப மனசு நிறைவா இருக்கு. நான் சமைக்கும் புரொக்கோலி டிஷ் என் மனைவியோட ஆல் டைம் ஃபேவரைட்!

சிவரஞ்சனி தீபக் - ஃபிட்னஸ்!
தீபக் கிச்சனுக்குள்ள புகுந்து செமையா சமைச்சு கொடுக்கிறாரே... அவரோட அன்புச் சமையலால கூடுதல் எடை போட்டிருமோங்கிற பயத்துலேயே வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி பண்றேன்!
ஆமா... சமீபகாலமா ஃபிட்னஸ் மேல அதிக ஈர்ப்பு வந்திருக்கு. இப்போ தினமும் ஒருமணி நேரம் உடற்பயிற்சி நேரம்!
ராஜ்குமார் - மாருதி சுஸுகி பெலினோ!
என் கிரஷ் லிஸ்ட்டில் எப்போதுமே இருக்கும் இரண்டு பேர் என் மனைவி ராகவியும் மகள் கிருத்திகாவும்தான். அவங்க மேல உள்ள காதல் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது. அதைத் தாண்டி சொல்லணும்னா, என்னோட கார் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
மாருதி சுஸுகி பெலினோ... என் ரீசன்ட் கிரஷ் இதுதான்.
என் கார் மீது ஒரு சின்ன கீறல் விழுந்தாகூட என் மேல கீறல் விழுற மாதிரி ரொம்ப வலிக்கும்.

ராகவி - காஸ்மெடிக்ஸ்!
எனக்கு மேக்கப் சாதனங்கள்மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கு. ஹெர்பல், ஆர்கானிக்னு புதுசு புதுசா மேக்கப் கிட் வாங்கி பயன்படுத்தி பார்க்கப் பிடிக்கும். பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்தான். சமீபத்தில்கூட ரொம்ப ஆசைப்பட்டு M.A.C காஸ்மெடிக்ஸ் கிட் ஆர்டர் பண்ணி வாங்கினேன். கணவருக்கும் மகளுக்கும் மேக்கப் போட்டுக்க பிடிக்காது. ஆனா, நான் உபயோகப்படுத்துறதுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பாங்க!
அன்வர் - திருமணம்!
‘‘திருமணத்துக்கு முன்னாடி வரைக்கும் வேலை வேலைன்னு ஓடிட்டிருந்தேன். இப்போ என் வாழ்க்கைல ஒருவித அமைதியும் நிம்மதியும் வந்திருக்கு. என் சமீபத்திய கிரஷ் புதுசா எனக்குக் கிடைச்சிருக்கிற நிம்மதியான கல்யாண வாழ்க்கைதான். இந்த நிம்மதி... வாழ்க்கை முழுக்க நிலைச்சு இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

சமீரா - குடும்பம்!
எனக்கு எப்பவும் என் குடும்ப மக்களோட நேரம் செலவழிக்க ரொம்பப் பிடிக்கும். இப்ப புதுசா இன்னொரு குடும்பம் கிடைச்சிருக்கு. அவங்ககூட இருக்கிறப்ப நான் குழந்தைமாதிரி ஃபீல் பண்றேன். ஸோ, என் ரீசன்ட் கிரஷ் என் குடும்பம்தான்!
வைஷ்ணவி - சர்ஃப்பிங்!
சர்ஃப்பிங் செய்யணும் என்கிறது என் நீண்ட நாள் ஆசை. அதுக்கெல்லாம் கோவா மாதிரியான இடத்துக்குத்தான் போகணும்னு இவ்வளவு நாள் நெனச்சிட்டு இருந்தேன். ஆனா, சென்னைக்கு மிக அருகில் இருக்கிற கோவளம் பீச்ல சர்ஃப்பிங் பண்ணலாம்கிற விஷயம் சமீபத்துலதான் தெரிஞ்சது. இப்பல்லாம் நேரம் கிடைக்கிறப்ப நானும் அவரும் சர்ஃப்பிங்ல இறங்கிடுறோம். வாழ்க்கையில த்ரில்லா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும்ல!

அஞ்சான் - பற!
நான் பைலட் என்பதால் என் லவ், கிரஷ் எல்லாமே பறப்பதும் இயற்கையை ரசிப்பதும்தான். இப்போ இந்தியாவுக்குள்ளதான் பறந்துட்டு இருக்கேன். ஸோ, விமானத்துல ஏறிட்டா நம்ம நாட்டை, அதன் அழகை கண்கொட்டாம ரசிக்க ஆரம்பிச்சிடுவேன். இமயமலையை ரொம்பவே பக்கத்தில் பார்த்து மெய்சிலிர்த்துட்டேன். பறக்கிறப்ப பச்சையும் நீலமும் கலந்த கடற்பகுதிகளைப் பார்க்க அவ்வளவு பிரமிப்பா இருக்கு!
ஆனந்தி - ஐஸ்க்ரீம்!
கொஞ்ச நாள் டயட்ல இருந்தேன். அதனால எதையுமே சரியா ருசிச்சு ரசிச்சு சாப்பிட முடியாம இருந்துச்சு. இப்போ டயட்டுக்கு லீவ் விட்டிருக்கேன். ஸோ... கிடைக்கிற, பிடிக்கிற உணவுகளை வெளுத்துக் கட்டுறேன். குறிப்பா, தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடுறேனா பார்த்துக்கோங்க. என்னன்னு தெரியலை... ஐஸ்க்ரீம் மேல திடீர்னு கன்னாபின்னா கிரஷ் வந்திருச்சு. என் பையன் ஆர்யாவீர்க்குத் தெரியாமா ஒளிந்து ஒளிந்து சாப்பிடறேன்!

அஜய் - ஸ்விம்மிங்!
கொஞ்ச நாளா ஸ்விம்மிங் மேல ஆர்வம் அதிகமாகி யிருக்கு. ரெகுலரா ஸ்விம் பண்ண தொடங்கியிருக்கேன். சைக்ளிங் பண்ணவும் ரொம்பப் பிடிக்கும். இரண்டுமே உடம்புக்கு நல்லது. இப்போ ரொம்ப ஆரோக்கியமா இருக்கிற மாதிரி உணர்றேன். சில நேரம் ரொம்ப உற்சாகமாகி, அலுவலகத்துக்குக்கூட சைக்கிள்லேயே போயிடறேன். நல்லதுதானே... என்ன சொல்றீங்க!