சினிமா
Published:Updated:

முதல் அலைபேசி!

வித்யா பிரதீப்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யா பிரதீப்

நான் முதல் போன் வாங்கினது 2011-ல. ரிலையன்ஸ்ல அப்ப 501 ரூபாய்க்கு ஒரு போன் கொடுத்தாங்களே அதை வாங்கினேன்.

முதன்முதலாக மொபைல் போன் கைக்குக் கிடைத்த தருணம் குறித்து இவர்களிடம் கேட்டோம்.
முதல் அலைபேசி!

லீஸா எக்லர்ஸ், நடிகை

“கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கு செல்போன் கிடைத்தது. அதை வாங்குவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. வாங்கித் தந்துவிட்டாலும், நினைத்த நேரத்தில் பேசுவதற்கும் வீட்டில் ஏகப்பட்ட கெடுபிடி. அதனால நான் ஒரு ஐடியா பண்ணினேன்.

பர்மிய மொழியில் ‘அலாகா லூ’ என்றால், ‘உஷாரா இரு’ என்று அர்த்தம். நண்பர்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும் போது, அம்மா அப்பா வந்துட்டாங்கன்னா, ‘அலாகா லூ’ சொல்லிட்டு பேசறதை நிறுத்திடுவேன். பல சமயங்கள்ல இந்தப் பர்மிய வார்த்தை என்னை சிக்கல்கள்ல இருந்து காப்பாத்தியிருக்கு. மொபைலைப் பொறுத்தவரைக்கும் சரியா பயன்படுத்தினா நல்லது. அப்படிச் செய்யாவிட்டால் தொந்தரவுகளும் அதிகம்தான்.”

முதல் அலைபேசி!

ஜீவிதா, டிவி நடிகை

‘‘ நான் முதல் போன் வாங்கினது 2011-ல. ரிலையன்ஸ்ல அப்ப 501 ரூபாய்க்கு ஒரு போன் கொடுத்தாங்களே அதை வாங்கினேன். சென்னை வந்த புதுசுல பெருசா நட்பு வட்டம் இல்லாத காலகட்டங்கள்ல என் பக்கத்துலேயே எல்லாரும் இருக்கற மாதிரியான ஒரு தைரியத்தைக் கொடுத்தது அந்தப் போன்தான். இப்ப லாக்டௌனுக்கு முன்னாடி ஐபோன் ஆசை வந்து அதையும் வாங்கியாச்சு. ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு பாக்ஸைப் பிரிச்சுக்கலாம்னு பத்திரமா பீரோவுக்குள்ள பூட்டியெல்லாம் வெச்சிருந்தேன்.

இன்னொரு விஷயம், அதை சரியா யூஸ் பண்ணவும் தெரியல. வாங்கி சில மாசம் கழிச்சு வெளியில எடுத்ததுக்கே என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சிரிச்சுக் கலாய்ச்சிட்டாங்க‌. ஏன்னா, இப்ப அதைவிடப் பல மடங்கு அட்வான்ஸா அப்டேட் வெர்சன் வந்திடுச்சுன்னு சொல்றாங்க. அதனால அந்தப் போனை அப்படியே ஓரமா வெச்சிட்டேன். எப்படியாவது ஒன்றரை லட்சத்துல லேட்டஸ்ட் ஐபோன் இந்த வருஷம் வாங்கிடணும்னு புது ப்ளான் இருக்கு.”

முதல் அலைபேசி!

வித்யா பிரதீப், நடிகை

‘‘அ ப்பா ஆர்மி ஆபீசர்னால சின்ன வயசில இருந்தே படிப்பில் கவனம் செலுத்தி வளர்த்தாங்க. நான் டிகிரி படிக்கும் போதுகூட போன் கிடைச்சதில்ல. எனக்கும் போன் மேல ஆர்வம் இருந்ததில்ல. பயோ டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரி பண்ணும் போதுதான் முதன்முதலா எனக்கு வீட்ல போன் வாங்கிக் குடுத்தாங்க. அதுவும் ஒரு சாதாரண பேஸிக் மாடல் போன். மூவாயிரம் ரூபாய்னு நினைக்கறேன். நாம எங்கே போறோம் வாறோம்னு வீட்ல தகவல் சொல்லிக்கறதுக்காக வாங்கிக் கொடுத்ததுதான். ரொம்ப வருஷமா அந்தப் போனைப் பாதுகாத்து வெச்சிருந்தேன். அப்புறம், எப்படியோ அதை மிஸ் பண்ணிட்டேன். இன்னைக்கு ஐபோனே வெச்சிருந்தாக்கூட, அந்த பேஸிக் போன் குடுத்த சந்தோஷத்தை மிஸ் பண்றேன்னுதான் சொல்வேன்.”

முதல் அலைபேசி!

‘குக்கு வித் கோமாளி’ கனி திரு

“தி ருவிடம் காதல் வயப்பட்டிருந்த நேரம் அது. எங்கள் வீட்டிலிருந்த தொலைபேசியில்தான் அவர் என்னைத் தொடர்பு கொள்வார். அதை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பேசுகிற மாதிரி இருந்தது. அது கொஞ்சம் அவஸ்தையாத் தெரிஞ்சதால திரு எனக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தார். அதனால நினைச்ச நேரத்துல எவ்ளோ நேரம்னாலும் பேசிக்க முடிஞ்சது. செல்போன் தொடர்பா வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யம்னா, அடுத்தடுத்து காய்களை நகர்த்தி எங்களுடைய காதல் வெற்றி பெற உதவியதே அந்த செல்போன்தானே? இப்பவும் அந்த மொபைலை பத்திரமா வச்சிருக்கேன்.”

முதல் அலைபேசி!

ஹேமா ருக்மணி, தயாரிப்பாளர்

‘‘மொ பைல் போன் வந்த புதுசுலேயே எங்க மாமாவும் (இராமநாராயணன்), என் வீட்டுக்காரர் முரளியும் போன் வாங்கிட்டாங்க. முரளி என்கிட்ட, ‘நீயும் ஒரு போன் வாங்கிக்க’ன்னார். நம்ம வீட்லதான் லேண்ட்லைன் இருக்கே அது போதும். தனியா வேணாம்னு சொல்லிட்டேன். அந்த டைம்ல நாங்க தயாரிச்சிட்டிருந்த ‘பாளையத்தம்மன்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ரம்யாகிருஷ்ணன் மொபைல் போன் வெச்சிருந்தாங்க. அவங்க சொல்லித்தான் எஸ்.எம்.எஸ். வசதி பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பதான் எனக்கும் செல்போன் வாங்கணும்னு ஆசை வந்துச்சு. உடனே நோக்கியா போன் வாங்கிட்டேன். கிரேகலர். செங்கல் மாதிரி பெருசா இருக்கும்.”

முதல் அலைபேசி!

ஆர்த்தி கணேஷ்கர், நடிகை

ரிலையன்ஸ்ல 501 ரூபாய்க்குத் தந்த அந்த மொபைல் போன்தான் என்னுடைய முதல் மொபைல். சென்னை மீனாட்சி காலேஜ்ல பி.பி.ஏ முதலாண்டு. காலேஜுக்கு யாரும் போன் எடுத்துட்டுப் போகக் கூடாது. நாமதான் ஆர்ட்டிஸ்ட்டாச்சே. தேவைப்படும்னு எடுத்துட்டுப் போனேன். கிளாஸ் டைம்ல எடுக்காம பிரேக்ல எல்லார்கிட்டயும் காட்டிப் பந்தா பண்ணினதுல பிரின்சிபால் வரைக்கும் விஷயம் போயிடுச்சு. கூப்பிட்டு அவங்க ரூம் முன்னாடி மணிக்கணக்குல நிக்க வெச்சிட்டாங்க. வேடிக்கை என்னன்னா, எங்கிட்ட இருந்து பறிச்ச அந்தப் போனை பிரின்சிபல் உட்பட புரபசர்ஸ் எல்லாருமே ஆச்சர்யமாப் பார்க்கிறாங்க. ஏன்னா, அப்ப அவங்ககிட்டயுமே போன் கிடையாது.

ஒரு வழியா எங்கிட்ட போனைத் திருப்பித் தந்துட்டாங்க. அதன் பிறகுமே காலேஜுக்கு எடுத்துட்டுதான் போனேன். ஆனா வெளியில எடுக்க மாட்டேன். ஒருகட்டத்துல என்னுடைய பேராசிரியர்களே அவசரத்துக்கு யாருக்காச்சும் போன் பண்ணணும்னா, எங்கிட்ட மொபைலைக் கேட்டதெல்லாம் நடந்தது. அப்பெல்லாம் எங்கிட்ட இருந்து போனைப் பிடுங்கியதும் பிரின்சிபல் சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த எச்சரிக்கை, ‘‘ஒரே போடுதான்; ரெண்டா உடைஞ்சிடும்.’’

முதல் அலைபேசி!

அசார், டிவி தொகுப்பாளர்

‘‘எ ன்னுடைய முதல் மொபைல் நான் வேலைக்குப் போன பிறகு வாங்கியது. ஆனா என் அப்பாதான் வாங்கிக் கொடுத்தார். நோக்கியா 2100 மாடல். ரொம்பப் பாதுகாப்பா அவ்ளோ பத்திரமா வெச்சிருந்தேன். அந்தப் போன்ல எப்.எம் மட்டும்தான் இருக்கும். மொபைல்ல எப்.எம் கேட்குறதும் அதுக்கு சார்ஜ் போட்டுப் பயன்படுத்துறதும் அப்போ தனி ஃபீல்தான். சம்பவம்னா, நான் நோக்கியா கம்பெனியில சேல்ஸ் டீம்ல வேலைக்குச் சேர்றதுக்கு இன்டர்வியூ போயிட்டு பஸ்ல‌ வந்திட்டிருந்தேன். எப்போவும் பஸ்ல போனா, ஹெட்போன் போட்டு எப்.எம் கேட்கிறது வழக்கம். அன்னிக்கு பஸ் கூட்டமா இருந்ததனால, காதுல இருந்த ஹெட்போனைக் கழட்டிட்டேன். டிக்கெட் எடுத்துட்டுப் பாட்டு கேட்கலாம்னு ஹெட் போனைக் காதுல வெச்சா, பாட்டு கேட்கலை. பாக்கெட்டைத் தொட்டு பார்த்தா போனைக் காணோம். உடனே பயத்துல முகமெல்லாம் வேர்த்திடுச்சு. ‘போனைக் காணோம்’னு கத்தி பஸ்ஸை நிறுத்தி எல்லோர்கிட்டேயும் கேட்டேன். யாரும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போதிலிருந்து பஸ்ல பாட்டு கேட்கிறதையே விட்டுட்டேன்.’’