சினிமா
தொடர்கள்
Published:Updated:

தொலைத்தேன்... மறக்கவில்லை!

சங்கீதா - ஜனனி - சுபிக்‌ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கீதா - ஜனனி - சுபிக்‌ஷா

வாழ்க்கையில நிறைய தொலைச்சிருப்போம். ஆனா, அதுல ஒரு பொருள் மட்டும் காதல் மாதிரி நம்மள உறுதிட்டே இருக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போது நிகழ்ந்த விஷயம் இது.

’’“நீங்கள் தொலைத்ததில் உங்களால் மறக்க முடியாத பொருள் எது?” என்று இவர்களிடம் கேட்டோம்.
தொலைத்தேன்... மறக்கவில்லை!

வி.ஜே. சங்கீதா

‘‘அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது. எங்க வீட்டுப் பக்கத்துல அழகான ஒரு நாய்க்குட்டி ஆதரவில்லாம தெருவுல கிடந்தது. வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டேன். வீட்டுல தனி இடம் ஒதுக்கி அழகாப் பராமரிச்சுட்டு வந்தேன். ஆனாலும் அதுகிட்ட ஒரு கெட்ட பழக்கம். நான் வீட்டுல இருந்தா பேசாம இருக்கும். நான் வெளியில போயிட்டா ஒரே சத்தம். அக்கம் பக்க வீட்டுல இருந்தெல்லாம் பிரச்னை. ஒரு நாள் நான் வீட்டுல இல்லாத நேரம் வழக்கம் போலக் கத்தியிருக்கு. எங்க வீட்டுல கார்ப்பரேஷனுக்கு போன் பண்ண, அவங்க வந்து பிடிச்சுட்டுப் போயிட்டாங்க.

வீட்டுக்கு வந்து விஷயம் தெரிஞ்சதும், அதை விட அதிகமா எல்லாரையும் கத்தித் தீர்த்துட்டேன். ஆனாலும் பிரயோஜனமில்லை. மறுநாளே கூட்டி வந்துடணும்னு கார்ப்பரேஷனுக்கும் போனேன். ஆனா,அங்கயும் அதைப் பார்க்க முடியலை. அவ்ளோதான், அது எனக்குத் திரும்பக் கிடைக்கவே இல்லை. வீட்டுல கோபிச்சுட்டு நாலு நாள் சாப்பிடாம இருந்தேன்.”

தொலைத்தேன்... மறக்கவில்லை!

ஜி. மாரிமுத்து (இயக்குநர்+ நடிகர்)

‘‘வாழ்க்கையில நிறைய தொலைச்சிருப்போம். ஆனா, அதுல ஒரு பொருள் மட்டும் காதல் மாதிரி நம்மள உறுதிட்டே இருக்கும். நான் ஸ்கூல் படிக்கும்போது நிகழ்ந்த விஷயம் இது. தொலைச்ச பொருளைச் சொல்றதுக்கு முன்னாடி அதோட முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிடுறேன்.

எங்க கிராமத்துல இருந்து 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் பள்ளிப் படிப்பைப் படிச்சிருக்கேன். நல்ல படிப்பாளி. பத்தாவது வரைக்குமே முதல் மாணவனா வந்திருக்கேன். லீவு நாள்ல கூட யாருமே இல்லாத ஸ்கூல்ல, அந்த நிசப்தமான சூழல்ல தவமிருப்பேன். அந்த அளவுக்கு ஸ்கூலை நேசிப்பேன். என் கையெழுத்து அவ்ளோ அழகா இருக்கும். ஆறாவதுல இருந்து பத்தாவது வரைக்குமே இங்க் பேனாதான் அப்ப பயன்படுத்துவோம். நான் நேசிக்கும் தமிழாசிரியர் புலவர் காளிமுத்து அப்ப ஹீரோ பேனா வச்சிருந்தார். நான் அப்ப ஏழாவது படிச்சிட்டிருந்தேன். எனக்கு ஹீரோ பேனா மேல தீராத காதல். கோல்டு கலர் மூடி, ஆரோமார்க்னு அது செமையா கவர்ந்திழுக்கும். ஹீரோ பேனா வாங்கி எழுதிடணும்னு ஏங்கின காலம் அது. அந்தப் பேனா வாங்கணும்னா மதுரைக்குத்தான் போகணும். எங்க ஏரியா தேனி, உசிலம்பட்டிலகூடக் கிடைக்காது. அந்த ஹீரோ பேனாவோட விலை அப்ப 25 ரூபா, மதுரைக்குப் போக வர பஸ் டிக்கெட், சாப்பாட்டுச் செலவுன்னு கணக்கு போட்டா ஐம்பது ரூபா இருந்தா மட்டும்தான் பேனா வாங்க முடியும். ஸோ, ஏழாவது படிக்கும்போது உண்டியல்ல காசு சேர்க்க ஆரம்பிச்சேன்.

இப்ப நினைச்சாலும் சிரிப்பாகவும் இருக்கும். நினைச்ச மாதிரி காசு சேர்க்க முடியல. நாங்க விவசாயக் குடும்பம்னால, வீட்ல விளை பொருள்கள் சேர்த்து வச்சிருப்பாங்க. தட்டாம்பயிறு, மிளகாவத்தல்னு இப்படிப் பொருள்கள் இருக்கற சாக்கு மூட்டையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா திருடி அதைக் கடையில் வித்து, ஐம்பது ரூபாய் தேத்தினேன். எட்டாம் வகுப்புக்கு முதல் நாள் போகும்போது புதுப் பேனா, புது நோட்டுனு மனசு பறக்குது. அதுல பச்சைக் கலர் பேனாதான் வாங்க விரும்பினேன். மூடியில மேட் இன் சைனான்னு பொடி எழுத்துல வேற இருக்கும். ஒரு வழியா மதுரைக்குப் போய் அந்தப் பேனாவையும் வாங்கிட்டேன். அந்தத் தருணத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது. பேனாவை வாங்கிட்டு ஊருக்குத் திரும்பும் போது டவுசர் பைல அந்தப் பேனாவை வச்சு, யாரும் திருடிடக்கூடாதுன்னு ஊக்கு வச்சுக் குத்திட்டேன். கூடவே ப்ரில் இங்க்கும் வாங்கினேன். பத்தாவது பப்ளிக் எக்ஸாம் வரை மூணு வருஷமா அந்தப் பேனாவைப் பாதுகாப்பா வச்சிருந்தேன். மூணு வருஷத்துல மாடு மேய்ச்சிட்டு, விவசாய வேலைகளைப் பார்த்திட்டு இருந்தாக்கூட, அந்தப் பேனாவை வச்சிட்டிருந்தேன். கோடு கூட விழுந்திடாம, பத்திரமா வச்சிருந்தேன். பரீட்சை முடிச்சிட்டு அந்த இடைவெளியில கொஞ்ச நாள் பேனாவைத் தொடாமல் இருந்தேன், அடுத்து ப்ளஸ் ஒன் சேரும்போது, ஃபார்ம் நிரப்ப பேனா தேவைப்பட்டுச்சு, அப்ப ஹீரோ பேனாவைத் தேடினா, காணோம். எப்படித் தொலைஞ்சது? இல்ல யார்கிட்டேயும் கொடுத்துட்டு, திரும்ப வாங்காமல் இருந்தேனான்னு எனக்கு இன்னும் விளங்கல. அந்தப் பேனா காணோம்னு நான் அழுத அழுகை... என் கண்ணீரெல்லாம் தீர்ந்திடுச்சு. டைம் டிராவல்ல மறுபடியும் நான் ஸ்கூலுக்குத் திரும்பினது மாதிரி, உங்க கேள்வி எல்லாத்தையும் நினைவுபடுத்திடுச்சு.’’

தொலைத்தேன்... மறக்கவில்லை!

அன்னம்

``கல்லூரியில் படிச்சிட்டிருந்தபோது ஒரு வீதி நாடகத்துல நடிச்சேன். நாடகத்தைப் பார்த்திட்டிருந்த, கல்லூரியில் துப்புரவு வேலை செஞ்சிட்டிருந்த ஒரு மூதாட்டி, நாடகம் முடிஞ்சதும் என்னைத் தனியா கூப்பிட்டு முந்தானையில முடிஞ்சு வச்சிருந்த இருபது ரூபாய்த் தாளை எடுத்து எங்கிட்ட தந்தாங்க. அது எனக்கு அன்னைக்குப் பொழுது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த ரூபாய் நோட்டை என் வீட்டு அலமாரியில ரொம்ப நாளா பத்திரமா வச்சிருந்தேன். பிரேம் போட்டு வைக்கணும்னு நினைச்சவ, அதை உடனே செய்யாததுதான் தப்பு. கொஞ்ச நாள் கழிச்சுப் பார்த்தப்ப அந்த ரூபாய் நோட்டைக் காணலை. என் தப்புக்கு வீட்டுல இருந்தவங்களைக் கோபிச்சு என்ன ஆகப்போகுது? என்னிடம் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷத்தைத் தொலைத்த துயரம் ஒருநாளும் ஆறாது.’’

தொலைத்தேன்... மறக்கவில்லை!

ரமேஷ் திலக்

‘`என் அப்பா நான் ஸ்கூல் படிக்கும்போது புது சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். பார்க்கவே சூப்பரா இருக்கும். ரெண்டு வீட்டுக்கு முன்னாடி பெல் அடிச்சா, எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு கேட்கும். சைக்கிள்ல ஒருநாள் ஸ்கூலுக்குப் போவோம்னு ஆசைப்பட்டுப் போனேன். அன்னைக்கே அதுவும் ஸ்கூல்லயே காணாமப் போயிடுச்சு. ‘எவன் எடுத்துட்டுப் போயிருப்பான்’னு இன்னைக்கு வரைக்கும் யோசிச்சிட்டிருக்கேன். அந்த சைக்கிள் தொலைஞ்சது ரொம்பக் கஷ்டமா இருந்தது. அதே மாதிரி, என் மனைவி எனக்கு நிறைய கிஃப்ட் பண்ணுவாங்க. அதுல பெரும்பாலும் கூலர்ஸ்தான் இருக்கும். இது வரைக்கும் அவங்க கொடுத்த எந்த கூலர்ஸையும் நான் பத்திரமா வெச்சுக்கிட்டதில்லை. அதிகபட்சம் ரெண்டு மாசம்தான். நான் தொலைச்சுக்கிட்டே இருக்கேன்னு எனக்கு கூலர்ஸ் வாங்கித் தர்றதையே நிறுத்திட்டாங்க. ஆக, அப்பா கொடுத்த சைக்கிளும் மனைவி கொடுத்த கூலர்ஸும்தான் ‘தொலைச்சுட்டோமே’ன்னு நான் வருத்தப்பட்ட பொருள்கள்.’’

தொலைத்தேன்... மறக்கவில்லை!

ஜனனி

‘‘நான் முதன்முதல்ல சம்பாதிச்ச காசுல HTC மொபைல் ஒண்ணு ஆசைப்பட்டு வாங்கினேன். அந்தச் சமயத்துல அந்த மாடல் போன் ரொம்ப பாப்புலரா இருந்தது. அதுக்கு முன்னாடிகூட, வீட்ல போன் வாங்கிக்கொடுத்திருக்காங்க. ஆனாலும், இது என் சம்பளத்துல வாங்கியதால ரொம்ப ஸ்பெஷல். அப்படி வாங்கின போனை ரெண்டாவது நாளே தொலைச்சதுதான் கொடுமை. காரை விட்டு இறங்குறப்ப எங்கேயும் விழுந்ததாத் தெரியலை, தொலைஞ்சிடுச்சு. ரொம்ப ஆசைப்பட்டு வாங்கின போன்ங்கிறதால ரொம்பவே வேதனையா இருந்தது. அதுக்குப் பிறகு, பல மொபைல் மாத்திட்டாலும் முதல் சம்பளத்துல வாங்கின பொருளைத் தொலைச்ச வருத்தம் இன்னைக்கும் இருக்கு.’’

தொலைத்தேன்... மறக்கவில்லை!

சுபிக்‌ஷா

‘‘பாரதிராஜா சாரின் ‘அன்னக்கொடியும் கொடி வீரனு’ம் படத்துலதான் நான் அறிமுகமானேன். நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடி, சினிமாவில் நான் வாங்கும் முதல் சம்பளத்துல இருந்து ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அப்ப தேனியில ஷூட் போயிட்டிருக்கு. அப்ப நான் புதுமுகம்னால ரொம்பவும் சின்ன அமௌன்ட் தான் குடுப்பாங்க. அதுல இருந்து உதவி செய்யறதுக்கென தனியா ஒரு தொகையைப் பிரிச்சு வச்சிருந்தேன். என்னோட பேமென்ட் அமௌன்டையும் சேர்த்து என் ஹேண்ட்பேக்குல வச்சிருந்தேன். ஷாட்ல நடிச்சிட்டு திரும்பி வந்து ஹேண்ட் பேக்கைத் தேடினால் அதைக் காணோம். ஸ்பாட்ல எங்கே தவறவிட்டோம். எப்படித் தொலைஞ்சதுன்னு இப்ப நினைச்சாலும் கண்டுபிடிக்க முடியல. அப்புறம் என்னோட ரெண்டாவது படமா மலையாளத்துல பகத் பாசில் சார் படத்துல கமிட் ஆகும்போது கிடைச்ச பேமென்ட்ல இருந்துதான், அந்த டிரஸ்ட்டுக்கு என்னால உதவ முடிஞ்சது.’’

தொலைத்தேன்... மறக்கவில்லை!

ரம்யா

“என்னுடைய எல்லா சந்தோஷங்களிலும், அதேபோல வருத்தங்களிலும் என்னை வழி நடத்திட்டு வந்தது என் அம்மாதான். கொஞ்ச நாள் முன்னாடி அவங்க இறந்துபோனாங்க. அம்மா எனக்குப் பரிசளித்த ஒரு செட் ஜிமிக்கி கம்மலை பொத்திப் பாதுகாத்து வச்சிருந்தேன். போன வாரம் அதில் ஒண்ணு எப்படியோ காணாமப்போயிடுச்சு. வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கலை. அம்மா அவங்க மடியில் என்னை உட்கார வச்சுப் போட்டு விட்ட கம்மல் அது. அப்படிப்பட்ட கம்மலை அதுவும் அம்மாவை இழந்த கொஞ்ச நாள்லயே தொலைச்சுட்டோமேன்னு நினைச்சு நினைச்சு அன்னைக்குத் தூக்கமே இல்லை. சாப்பாடும் இல்லை. எப்படியாவது கிடைச்சிடாதான்னு ஏங்கிட்டிருக்கேன். ‘தலைமுறைகள்’ படத்துல நடிச்ச போதுகூட, அந்த ஜிமிக்கியைப் போட்டு நடிச்சிருந்தேன். ‘இந்த ஜிமிக்கியில நீ அழகா இருக்கே’ன்னு பாலு மகேந்திரா சார் சொன்னதும் ஞாபகத்துல வந்து போயிட்டிருக்கு.