சினிமா
Published:Updated:

தனியே... தன்னந்தனியே!

புஜிதா
பிரீமியம் ஸ்டோரி
News
புஜிதா

`எதிர்காலம் எப்படி இருக்குமோ’ங்கிற கலக்கம், `எப்படி இருந்தா நல்லா இருக்கும்’ங்கிற ஆசைகளுடனேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்திட்டிருந்தேன்.

கொரோனாவை விடுங்க, இதற்கு முன் எப்போதாவது எதற்காகவாவது வாழ்க்கையில் தனித்திருந்தது உண்டா? எப்படி நகர்ந்தன அந்த நாள்கள்? பிரபலங்கள் பேசுகிறார்கள்...
தனியே... தன்னந்தனியே!

கவிஞர் பா.விஜய்

“சினிமாவுக்கு வருவதற்கு முன் சென்னையில நான் தங்கியிருந்தது சூளைமேட்டில் ஒரு சிறு அறை. ஒவ்வொரு நாளும் நிறைய கனவுகளுடன் புறப்பட்டு இயக்குநர்களைச் சந்திச்சு வாய்ப்புக் கேக்கறதுதான் வேலை. வாக்குறுதிகள் நிறையவே கிடைச்சது. அங்க இருந்த நாள்கள் அதிகம். ஆனா மனசுல வெறுமை மட்டுமே குடியிருந்ததுங்கிறதுதான் சோகம். `எதிர்காலம் எப்படி இருக்குமோ’ங்கிற கலக்கம், `எப்படி இருந்தா நல்லா இருக்கும்’ங்கிற ஆசைகளுடனேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்திட்டிருந்தேன். அதேநேரம் இன்னொரு பக்கம், புத்தியும் மனசும் கூர்பட்டதும் இந்தக் காலம்தான்ங்கிறதையும் சொல்ல மறக்க மாட்டேன்.’’

தனியே... தன்னந்தனியே!

கவிஞர் குட்டி ரேவதி

“இயல்பிலேயே நான் தனிமை விரும்பி. கவிஞராகவும் இருப்பதால், `தனிமை’ங்கிறது, அவசியமான ஒண்ணா எப்பவுமே இருந்துவந்திருக்கு.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவியா இருந்ததுதான் முதல் தனிமைக் காலம். ஐந்து ஆண்டுகள் விடுதியில தங்கியிருந்தேன். வாசிப்புக்கும், எனக்குள்ள இருந்த ஆளுமையக் கண்டறியவும் காரணமா இருந்தது அந்தத் தனிமை.

சென்னையிலும் ரொம்ப வருஷங்கள் தனியா தங்கியிருக்கேன். பொதுவாகவே, சென்னையின் தனிமையான வாழ்வுக்கும் பெண்ணின் விடுதலை உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பிருக்குன்னு நான் நம்பறேன். எவ்வளவு பின்தங்கிய கிராமங்கள்ல இருந்து வந்தாலும், எவ்வளவு அறியாமையோட இருந்தாலும், சென்னையில் தங்கள் ஆளுமையைப் பெண்களால கண்டுபிடிச்சுட முடியும். சென்னையின் அந்தத் தனிமை எனக்குப் பெரிய அளவுல உதவுச்சு. நானே தனிமையைத் தேடிப் போன அனுபவங்களும் உண்டு. ’விபஸ்ஸனா’ங்கிற பௌத்த தியான முறைக்குப் போயிருக்கேன். யாரையும் பார்க்காம, பேசாம பத்து நாள்கள் முழுக்க தனிமையில இருக்கறதுதான் அது.’’

தனியே... தன்னந்தனியே!

பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா

‘`தனிமை, பிரைவஸி பத்தியெல்லாம் இப்பதானங்க பேசுறோம். நான் காலேஜ் முடிச்ச 1979-ம் வருஷம் வரைக்கும் மதுரைய விட்டு வெளியில எங்கயும் போனதே இல்லை. காலேஜ் விட்டா வீடு, வீடு விட்டா காலேஜ். வீட்டுலயுமே ஒரு அறைதான் உண்டு. அதனால தனியா எங்க போய் இருக்கறது? காலேஜ்ல 84 சதவிகித மதிப்பெண்களோட முதல் ஆளா பாஸ் ஆனேன். உடனடியா வேலை கிடைக்கல. கொஞ்ச நாள் கழிச்சு இந்திய விமானப்படையில அலுவலக அதிகாரி பணிக்கானத் தேர்வுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அதுக்காக மைசூருக்குக் கிளம்பிப் போய் அங்க ஒரு வாரம் தங்கி இருந்ததுதான் முதன்முதலா நான் தனியா இருந்த காலகட்டம். அதுவரைக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து பழகிட்டவனை ரொம்பவே தனிமையா உணர வச்ச நாள்கள் அவை. அந்த வேலை கிடைக்கலை. ஆனா அந்த ஒரு சின்னப் பயணம், அனுபவம்தான் வெளியுலகம் பத்தின என்னுடைய பார்வையைத் திறந்து விட்டுச்சு.

தனியே... தன்னந்தனியே!

”தொகுப்பாளர் புஜிதா

“மீடியா தொடர்பான படிப்புக்காகக் கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூரு கிளம்பிப் போனேன். மூணு மாசம் அங்க தங்கியிருக்கணும். பத்தாவது நாளே எனக்கு போர் அடிச்சிடுச்சு. அப்பாவுக்குப் போன் போட்டு கண்ணைக் கசக்கினேன். மிலிட்டரி ஆபீஸரான அவர், ‘உனக்கு நல்ல சாப்பாடு, தங்க வசதியான ஹாஸ்டலெல்லாம் இருக்கு. 19 வயசுல நான் பார்டருக்குப் போனப்ப அங்க பாலைவனத்துலயும் பனிமலையிலயும் டெண்ட் போட்டுத்தான் தங்கியிருந்தோம். வெயில், மழை, பனி எல்லாமே இருக்கும். அந்தந்த இடத்துல என்ன கிடைக்குதோ அதுதான் சாப்பாடு. அன்னைக்கு நான் ஓடி வந்துட்டேனா, மிலிட்டரி மேன் பொண்ணு பேசற பேச்சா இது?’ன்னு கேட்டார். கப்சிப்னு ஆகிட்டேன். எப்படியோ மூணு மாசம் ஓடிடுச்சு. தொடர்ந்து மீடியா வேலைக்கு சென்னை வந்து இப்பவும் வருஷம் நாலு தாண்டிடுச்சு. ஆரம்பத்துல இருந்தே க்வாரன்டீன் வாழ்க்கைதான். முதல்ல கஷ்டமா இருந்தாலும் போகப் போகப் பழகிடுச்சு. டிவி, வெப் சீரிஸ், சினிமான்னு ஒரு இலக்கை நோக்கி ஓடிட்டே இருக்கறதால தனிமை இப்ப வரைக்கும் பெரிசா பாதிக்கலை. ஆனாலும் சமயத்துல எப்பவாவது என்னையும் மீறி ஃபீலிங் வந்திடும்.

உடல்நலன் சரியில்லாமப் போச்சுன்னா, பெண்ணுக்கே உரிய மாதவிலக்கு நாள்கள் வந்தா, ஒரு டீ போட்டுத் தரக்கூட ஆள் இல்லைன்னு நினைக்கிறப்ப அப்படியே உட்கார்ந்துடுவேன். பழையபடி அப்பா அன்னைக்குச் சொன்னது காதுகள்ல ஒலிக்குமா, பத்து நிமிஷத்துல நார்மலுக்கு வந்திடுவேன். இப்படியேதான் போயிட்டிருக்கு.’’

தனியே... தன்னந்தனியே!

கால்பந்து வீரர் ராவணன்

“ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2012-ம் ஆண்டு. கோவாவுல `சர்ச்சில் பிரதர்ஸ்’ டீமுக்காக ஆடிட்டிருந்த சமயம். சீசன் முடிஞ்சு டீம் மேட்ஸ் எல்லாரும் அவங்கவங்க ஊருக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. நான் மட்டும் வாடகை வீட்ல தனியா அங்க இருந்தேன். ஏன்னா, அப்போ லவ் போயிட்டிருக்கு. அவங்களுக்கு (தற்போது மனைவி) சொந்த ஊர் கோவா. அவங்களுக்குமே வீட்லவேற நிறைய கட்டுப்பாடுகள். நான்பாட்டுக்குத் திருச்சிக்கு வந்துட்டா, அவங்க மனசை மாத்தி வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா? அந்த பயத்துலயே ஒன்றரை மாசம் அங்கேயே தனியாளா இருந்தேன். ஒரே ஊர்ல இருந்தோமே தவிர, எங்களால அடிக்கடி சந்திக்கவும் முடியலை. அதனால கொஞ்சம் கொடுமையாகவே நகர்ந்தன நாள்கள்

வெளியூர்ப் பையன். கூட பிரெண்ட்ஸ்னு யாரும் இல்ல. அதனால எங்க போறதுன்னும் தெரியாது. மனச கூலா வச்சிக்க டி.வி-ல காமெடி பார்த்துட்டு, இளையராஜா பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.’’

தனியே... தன்னந்தனியே!

கேப்ரில்லா செலஸ்

“டிவி, சினிமாவுல ஜெயிக்கணும்னு நினைக்கிற பொண்ணுங்களுக்கு முதல் சவாலே சென்னையில தனியா இருக்கணும்கிற விஷயம்தான். டிவி, சினிமாவுல இருக்கணும்னா சென்னையில இருந்தாகணும், ஆனா எத்தனை பேர் வீட்டுல `நடிக்கப் போறேன்னு சொன்னதும் உடனே சம்மதம் சொல்லி அனுப்பறாங்க? சொந்த ஊரான திருச்சியில இருந்து சொல்லாமக் கொள்ளாமத்தான் சென்னைக்குப் பஸ் ஏறி வந்தேன். தெரிஞ்ச சில பிரெண்ட்ஸ் மூலமா ஒரு ரூமைப் பிடிச்சு நம்ம இலக்கை நோக்கிப் பயணிக்கலாம்னா சரியா மூணாவது நாள் வீட்டுல இருந்து நான் இருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு வந்துட்டாங்க. ஆனா, முயற்சியை நான் விடலை. மறுபடியும் கிளம்பி வந்தேன். அதுக்குப் பிறகுதான் தனிமையும் வந்தது. கூடவே தைரியமும் வந்தது. வீட்டை விட்டுப் பிரிஞ்சு இருந்தாலும் நல்ல நட்பு வட்டம் உருவாச்சு. அதனால விரக்தி, சோர்வுங்கிற பேச்சுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. தொடர்ந்து குறும்படம், ரியாலிட்டி ஷோன்னு இயங்கி இப்ப சீரியல் ஹீரோயினாகியிருக்கேன்.’’