சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மறக்க முடியாத மாமனிதர்!

அக்‌ஷரா கௌடா, ஆனந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அக்‌ஷரா கௌடா, ஆனந்தி

அந்தப் பள்ளியில் ராமு என்றொரு ஆசிரியர் இருந்தார். ஓவியரான அவர், வகுப்பறையில் வரலாற்று, அரசியல் ஆளுமைகளின் படங்களை அவ்வளவு அழகாக வரைவார்.

“உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் யார், ஏன்’’ என்று இவர்களிடம் கேட்டோம்.
மறக்க முடியாத மாமனிதர்!

தி. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

“முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பக்கல்வியை சொந்த ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் ராமு என்றொரு ஆசிரியர் இருந்தார். பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். ஓவியரான அவர், வகுப்பறையில் வரலாற்று, அரசியல் ஆளுமைகளின் படங்களை அவ்வளவு அழகாக வரைவார். பாடப் புத்தகத்தில் இருந்ததையும் தாண்டி, அந்தத் தலைவர்கள் வாழ்வில் நிகழ்ந்த மற்ற சம்பவங்களையெல்லாம் சொல்லிப் பாடமெடுப்பார். அவருடைய அந்த வகுப்பின் மூலம்தான் அரசியல், வரலாறு சார்ந்த ஆர்வம் என்னுள் வந்ததென்று நம்புகிறேன். 4-வது படித்தபோது என்னை வகுப்புத் தலைவனாக நியமித்தார் அவர். பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி இறக்கப்படும்போது உதவுவது; சத்துணவு ஒருங்கிணைப்பு போன்ற பணிகளில் என்னை ஈடுபடுத்தினார். தலைமைப்பண்பு என்னுள் உருவாக இந்த அனுபவங்கள் உதவியது என்பதைப் பிறகு உணர்ந்தேன். அரசியல் நோக்கி என்னை நகர்த்திய முதல் புள்ளி அவர்தான். அந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இன்று இல்லை. என்றாலும், என் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நபர்களில் ஒருவர் அவர்.

மறக்க முடியாத மாமனிதர்!

”ஆனந்தி (சீரியல் நடிகை)

“டிவி, சினிமாவுக்கு வரணும்னு ஆசை நிறைய இருந்தது. அந்த ஆசைக்கு வீட்டுல முழு ஆதரவு தந்தது அம்மா. அம்மா புள்ளைக்குச் செய்யறதெல்லாம் ஆச்சரியமா? அம்மாவைத் தாண்டி என் வாழ்க்கையில நான் மறக்காத ஒருத்தர்னா அது விஜய் டிவி ரமணன் சார். ‘கனா காணும் காலங்கள்’ல எனக்கு வாய்ப்பு தந்து முதன்முதலா என் முகம் ஸ்க்ரீன்ல வரக் காரணமா இருந்ததால அவரைத்தான் குறிப்பிடுவேன்.

மறக்க முடியாத மாமனிதர்!

’’சிங்கம்புலி (நடிகர்)

‘‘அஜித்தின் ‘ரெட்’ படத்தை இயக்கினேன். படம் சரியாப் போகலை. பதினைஞ்சு வருஷமா சினிமால வேலை பார்த்தும் இப்படி நம்ம வாழ்க்கை இருட்டாகிடுச்சேன்னுதான் நினைச்சேன். அந்த நேரத்துலதான் இயக்குநர் பாலா கூப்பிட்டு, ‘பிதா மகன்’ல இணை இயக்குநரா வேலை தந்தார். அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது. அந்த டைம்ல பாலா கொடுத்த பேட்டிகள்ல கூட என்னை அவரோட வலதுகரம்னு சொன்னதும் இன்னும் நினைவில் இருக்கு. பிறகு ‘பி ஸ்டூடியோ’ ஆரம்பிச்சப்ப, ‘மாயாவி’ படத்தை இயக்க வச்சு அழகு பார்த்தார். சூர்யா, ஜோதிகான்னு அத்தனை பேருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு கலகலப்பான படமா எடுத்தோம்.

அதேபோல எனக்குள் நடிகன் இருக்கான்னு கண்டுபிடிச்சவரும் அவருதான். ‘நான் கடவுள்’ல குய்யன்-னு ஒரு ரோல் கொடுத்து படம் முழுக்க நடிக்க வச்சார். சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு. இன்னிக்கும் நான் உயிர்ப்போட இருக்க பாலா சார்தான் காரணம்.’’

மறக்க முடியாத மாமனிதர்!

அக்‌ஷரா கௌடா (நடிகை)

‘`புரொபஷனலா மறக்க முடியாத பர்சன்ஸ்னா, அது நாசர் சாரும் அஜித் சாரும்தான். அதிலும் அஜித் சார்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். ‘ஆரம்பம்’ படத்தில் அவரோட நடிச்சிருக்கேன். அப்ப நான் ஒரு புதுமுகம். அவர் பெரிய ஹீரோ. எளிமையா இருந்தார். பெரிய ஆள், சின்ன ஆள்னு வித்தியாசம் பார்க்க மாட்டார். செட்ல என்னைப் பார்த்த முதல் நாளே எனக்கு அவ்ளோ மரியாதை கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல, யூனிட்ல இருந்த லைட்மேன் வரை அத்தனை பேருக்குமே விஷ் பண்ணிட்டு, நலம் விசாரிப்பார். அஜித் சார்- ஷாலினி மேம் ஜோடியைப் பார்க்கும்போது, ஆதர்ஷ தம்பதியா இருந்தாங்க. அவங்களோட லவ் ஸ்டோரியைக் கேட்கும்போது, ஆச்சரியமா, பிரமிப்பா இருந்துச்சு. வாழ்க்கையில லைஃப் பார்டனரைத் தேர்ந்தெடுக்கறதுலேயும், அவங்க முன்னேற்றத்துல பெரிய பங்காற்றணும்னு கத்துக்கிட்டேன். நம்ம வாழ்க்கை சிறப்பா அமையணும்னா எப்படி வாழ்ந்துகாட்டணும்னு அந்த ஜோடியைப் பார்த்துக் கத்துக்கிட்டேன்.”

மறக்க முடியாத மாமனிதர்!

காளி வெங்கட் (நடிகர்)

‘‘என் வாழ்க்கையில மறக்கமுடியாத நபர் இயக்குநர் விஜய பிரபாகரன். 2008-ல ‘தசையினை தீச்சுடினும்’னு ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்துக்கான ஆடிஷனுக்குப் போய் அவர்கூட அப்படியே நல்ல பழக்கமாச்சு. ‘அட்டகத்தி’ தினேஷுக்கு இதுதான் முதல் படம். தினேஷ், நான்னு நிறைய பேர் நடிச்சோம். அந்தப் படத்துலதான் எனக்குக் காளின்னு ஒரு கேரக்டர் கொடுத்தார். அப்படித்தான் என் பெயருக்கு முன்னாடி ‘காளி’ வந்தது. இப்போ நான் யதார்த்தமா நடிக்கிறேன்னு ஒரு பெயர் இருக்குன்னா, அதுக்கு காரணம், இயக்குநர் விஜய பிரபாகரன்தான். அவர்தான் என் குருநாதர். இப்போ அவர் மும்பையில விளம்பரத் துறையில இருக்கார். அவரை என் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டேன்.’’

மறக்க முடியாத மாமனிதர்!

கோபிநாத் (ஒளிப்பதிவாளர்)

“உதவி ஒளிப்பதிவாளரா இருந்த சமயத்துல திடீர்னு இயக்குநர் தரணி சார்கிட்ட இருந்து போன். அடுத்து இயக்குகிற ‘தில்’ படத்தின் ஒளிப்பதிவாளர் நீங்கதான்னு சொல்லி, என் திரைப்படக் கணக்கைத் தொடங்கி வச்சார். படம் பெரிய வெற்றி. குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா, அதுக்கு முன்னாடி அவர் எனக்குப் பரிச்சயமே இல்லை. ஆனாலும் லஷ்மி புரொடக்‌ஷனின் பெரிய படத்துக்கு என்னை சிபாரிசு செய்தார். என் வாழ்க்கையைத் திருத்தி அமைச்சது அவருடைய அந்த போன் கால்தான்.”

மறக்க முடியாத மாமனிதர்!

எஸ்.ஆர். பிரபாகரன் ( இயக்குநர்)

“நான் சினிமாவுக்கு வர்றதுக்கு என்னுடைய மொத்தக் குடும்பமும் தடையா இருந்தப்ப, `தம்பி நல்லா வருவான்’னு ஆதரவு கொடுத்த ஒரே ஜீவன் என் மூத்த அக்கா பங்கஜம், `சுந்தர பாண்டியன்’ படம் பண்ற தகவலை இயக்குநர் சசிகுமார் விகடன் நேர்காணல்ல முதன் முதலா சொல்றார். அந்த இதழ் வெளிவர்ற அன்னைக்கு பங்கஜம் அக்காவுக்கு கேன்சர் ஆபரேஷன் நடக்குது. அந்த நிலையிலும் என்னுடைய படம் குறித்த அந்தச் செய்தியைப் பார்த்து சந்தோஷப்பட்டார். அதேபோல படத்தையும் நாலஞ்சு முறை பார்த்திருப்பாங்க. இன்னைக்கு அக்கா இல்லை. ஆனாலும் அவங்க ஆசி எனக்கு இருந்துட்டேதான் இருக்கு. நான் தொடங்கியிருக்கிற தயாரிப்பு நிறுவனத்துக்கு அவங்க பெயரைத்தான் வச்சிருக்கேன்.’’

மறக்க முடியாத மாமனிதர்!

‘பிகில்’ காயத்ரி ரெட்டி (நடிகை)

‘‘வாழ்க்கையில எதுவுமே இல்லைனாகூட மகிழ்ச்சியா இருக்க முடியும்னு எனக்கு உணர்த்தின ஒரு பொண்ணு பத்தி ஷேர் பண்ணிக்கறேன். அந்தப் பொண்ணை ஒரே ஒரு தடவதான் சந்திச்சிருக்கேன். என்னோட 18வது பிறந்தநாளை ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துல கொண்டாடினேன். அங்கே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும் இருந்தாங்க. நான் அவங்க பக்கத்துல போக முயன்றதும் அங்கே உள்ளவங்க பலரும் ‘அவங்ககிட்ட போகாதீங்க. உங்களைத் தாக்கினாலும் ஆச்சரியமில்ல’ன்னு சொன்னாங்க. அந்த டைம்ல அங்கே யாரோ ஒருத்தர் என் காலைச் சுரண்டி என்னைக் கூப்பிட்டார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே எழுந்து நடக்க முடியாத நிலைமையில் உள்ள ஒரு பெண். அவளால எழுந்து நிற்க முடியும். ஆனா, நடக்க முடியாதுன்னு அங்கே உள்ளவங்க சொன்னாங்க. ஸோ, நான் அந்தப் பொண்ணைத் தூக்கி, நிற்க வச்சேன். அந்தப் பொண்ணுக்கு அவ்ளோ சந்தோஷம். என் கன்னத்தை வருடிக்கொடுத்து அவ்ளோ உற்சாகமா சிரிச்சாங்க. அந்தக் கள்ளங்கபடமில்லாத சிரிப்பை என்னால இப்பவும் மறக்க முடியல. எதுவுமே இல்லாத சூழலிலும் மகிழ்ச்சி நமக்குள்ளதான் இருக்குதுன்னு உணர்த்திய அந்தப் பொண்ணை என்னால மறக்கவே முடியாதுங்க.’’