
பெற்றோர்கள் ‘தமிழ்ப் படிப்பைப் பிறகு விருப்பமும் நேரமும் இருக்கும்போது படித்துக்கொள்’ என்றார்கள். சரியான அறிவுரைதான். ஆனால் ....
‘இன்னும் நிறைவேறாத உங்களுடைய ஒரு ஆசை என்ன?’ என்று இவர்களைக் கேட்டோம்...

ஸ்ருஷ்டி டாங்கே (நடிகை)
“அப்பாவுக்குத் தன் ரெண்டு மகள்கள்ல ஒருத்தராவது டாக்டராகணும்னு ரொம்ப ஆசை. அதனாலேயே என்னையும் என் சகோதரியையும் நல்லாப் படிக்கவெச்சார். ஆனா என்னுடைய சிஸ்டருக்கு டாக்டருக்குப் படிக்க விருப்பமில்லை. அதனால நானாவது அவர் விருப்பத்தை நிறைவேத்துவேன்னு எதிர்பார்த்தார். நானும் அதைச் செய்ய விரும்பினேன். ஆனால் டாக்டர் ஆகாம ஆக்டர் ஆகிட்டேனா... கடைசியில தன்னுடைய ஆசை நிறைவேறாமலேயே போயிடுச்சுன்னு ரொம்பவே வருத்தப்பட்டார்.”

கவிஞர் தாமரை (பாடலாசிரியர்)
“தமிழ்த் திரைப்பாடலாசிரியராக 25 ஆண்டுகளைத் தொட்டுவிட்டேன். எனினும் தமிழ் இலக்கியத்தில் முறையாகப் படித்துப் பட்டம் பெறாதவள் நான். அதை இன்றுவரை ஒரு குறையாகவே கருதுகிறேன். +2 படித்ததும் தமிழ் இலக்கியம் படிக்கப் பெருவிருப்பம் இருந்தது. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு புரட்சி நிகழ்ந்தது. பெண் குழந்தைகளுக்கும் சாமானியர் வீட்டுக் குழந்தைகளுக்கும் மருத்துவம், பொறியியல் என்கிற இரு உயர்ந்த தொழில்துறைகளில் நுழைவதற்கான பெரும் வாய்ப்பு கிடைத்தது. +2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும், நுழைவுத்தேர்வெல்லாம் கிடையாது. அதனால் பலரும் தொழிற்கல்வியில் நுழைந்தார்கள். அப்படித்தான் நானும் பொறியாளர் ஆனேன். நான், அண்ணன், தங்கை அனைவருமே பொறியியல் பட்டதாரிகளே.
பெற்றோர்கள் ‘தமிழ்ப் படிப்பைப் பிறகு விருப்பமும் நேரமும் இருக்கும்போது படித்துக்கொள்’ என்றார்கள். சரியான அறிவுரைதான். ஆனால் அந்தப் ‘பிறகு’தான் வரவேயில்லை. திரைப்படத்துறைக்கு வந்த பிறகு, திருமணத்திற்கு முன்புவரைகூட எப்படியாவது அஞ்சல் வழிக்கல்வியாகவாவது தமிழ் இலக்கியம் கற்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பாடல் துறையில் காலூன்ற, திருமணத்திற்குப் பிறகு குழந்தை, குடும்பம், என்று திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடிவிட்டது இந்த 25 ஆண்டுகளும். தமிழ் படிக்காத குறை இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.”

கீதாஞ்சலி (டி.வி நடிகை)
‘நாதஸ்வரம்’ சீரியலில் கிட்டத்தட்ட லீடு கேரக்டரில் நடித்த போது எனக்கு நல்ல ரீச் கிடைத்தது. ‘ஹோம்லியான கேரக்டருக்கு நல்லா செட் ஆவீங்க, சீரியல்ல இருந்து அப்படியே சினிமாவிலும் அந்த மாதிரி நல்ல ரோல் கிடைக்கும் பாருங்க’ன்னு நிறைய பேர் சொன்னாங்க. கொஞ்சம் கொஞ்சமா எனக்குமே அந்த ஆசை வந்தது. ஒருசில பட வாய்ப்புகளும் வந்துது. ஆனா, அந்தப் படங்கள்லாம் சாதாரணப் படங்களாகவே அமைஞ்சிடுச்சு. நல்ல பேனர்ல ஓரளவு பெரிய ஸ்டார்களுடன் லீடு ரோல் நடிச்சிடணும்கிற ஆசை இன்னும் அப்படியே இருக்கு. இப்ப கல்யாணமாகி கணவருடன் துபாய் வந்துட்டேன். இனி அந்த ஆசை நிறைவேறுமாங்கிறதைக் காலம்தான் தீர்மானிக்கணும்.”

சல்மா (கவிஞர்)
“நான் கல்லூரிக்குச் சென்று படிக்க நினைத்தேன். ஆனால் என்னால் ஒன்பதாவது வகுப்பு தாண்டிப் படிக்க முடியவில்லை. இன்றுவரைக்கும் அது பெரிய வருத்தமாக நீடிக்கிறது. தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் படித்துப் பட்டம் பெற்றாலும், கல்லூரிக்குச் செல்கிற ஆசையைக் கடைசிவரைக்கும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் என் புத்தகங்கள் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் என்னைப் பேச அழைத்து, பேசியுமிருக்கிறேன். உலகம் முழுவதும் சுற்றி, பல்கலைக்கழகங்களில் பேசியும் கல்லூரியில் படிக்கப்போக முடியவில்லை என்ற வருத்தத்தைப் போக்க இந்த ஆண்டு ஏதாவது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கப்போகிறேன். படிப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லைதானே!”

சாரு நிவேதிதா (எழுத்தாளர்)
“இந்தியா முழுவதுமே மொழிக் கல்வியில் பின்தங்கித்தான் இருக்கிறது. பலருக்கும் தாய்மொழியிலேயே எழுதவோ படிக்கவோ தெரியவில்லை. இந்தியாவில் பல மாநில மொழிகள் வெறும் பேச்சுமொழியாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தி உட்பட அதுதான் நிலை. தமிழ் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இரண்டாவது மொழியாகவும், உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கான மொழியாகவும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டாலும் அதிலும் யாருக்கும் சரியான தேர்ச்சி இல்லை. 12 ஆண்டுகள் பயின்ற பிறகும் பலருக்கு ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம்கூட எழுதத் தெரியவில்லை. ஆனால், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளை ஒரே வருடத்தில் பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. எனக்கு அந்த இரண்டு மொழிகளின் மீதும் அடங்காத ஆர்வம் உண்டு. இளம் வயதில் அந்த நிறுவனங்களில் சேர்ந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய்தேன். முடியாமல் போய்விட்டது.
சமீபத்தில் மீண்டும் முயற்சி செய்தேன். நன்றாகக் கற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் தொடர்ந்து படிக்க நேரம் இல்லை. அதேபோல் அரபி மொழிமீதும் எனக்கு ஆர்வம் அதிகம். காரணம், ஏராளமான சமகால அரபி இலக்கியங்களை நான் ஆங்கிலம் வழியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய மொழி இலக்கியத்துக்கு நிகரான இலக்கிய ஆக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் படிப்பதைக் காட்டிலும் அரபியிலேயே படிக்கலாம் என்று நினைத்து இரண்டு முறை முயன்றேன். நேரமின்மையால் முடியாமல்போனது. ஒரு புதிய மொழியைக் கற்க நீங்கள் ஒரு நாளில் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது செலவு செய்ய வேண்டும். அது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் என் நண்பர்கள் சிலர் மூன்று நான்கு ஐரோப்பிய மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முடிந்தால் அரபி மொழியோடு பார்சி மொழியும், சம்ஸ்கிருதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை.”

கஸ்தூரிராஜா (இயக்குநர்)
‘`நான் இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அது நடந்தது. ஆனா, நான் ஆசைப்பட்ட ஒரு இயக்குநரா இன்னும் ஆகல. ‘குடும்பத்துக்காக ஒரு படம்’, ‘பசங்களுக்கு ஃபீஸ் கட்டணுமே’ன்னு ஒரு படம்... இப்படி இதுவரை நான் இயக்கிய எல்லாமே சர்வைவலுக்காகப் பண்ணின படங்கள். நம்பர் ஒன் இயக்குநரா ஆகணும்னு நான் நினைச்ச இடத்தை நோக்கி என் கவனத்தைச் செலுத்த முடியல. ‘நாட்டுப்புறப்பாட்டு’ ஒரு வருஷம் ஓடுச்சு. அதுக்கடுத்து நான் பெரிய இடத்துக்குப் போக முடியல. ஏன்னா, குடும்பத்தை நடத்த அடிப்படையான பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்கேத்த மாதிரிதான் ஓடினேன். என் குழந்தைங்க நாலு பேரையுமே உயர் படிப்பு படிக்க வச்ச திருப்தி இருக்கு. மத்தபடி அந்த ‘நம்பர் ஒன் இயக்குநர்’ ஆசை, கனவாகவே போயிடுச்சு!”