
அங்கே குற்றச் சம்பவங்கள் குறைவு. வீடுகள் அனேகமாக பூட்டப்படுவதில்லை. மக்கள்தொகைக் குறைவினால் மனிதர்கள் எதிரில் வந்தால்கூட வணக்கம் தெரிவித்துப் புன்னகைகிறார்கள்.
மறக்க முடியாத பயண அனுபவங்களை இவர்களிடம் கேட்டோம்.

சஞ்சிதா ஷெட்டி (நடிகை)
``நிறையவே இருக்கு. சினிமா என்னோட தொழில். நான் ஒரு ஆன்மிகவாதிங்கிறதனால `ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ அமைப்பு, ஸ்ரீரமணாஸ்ரமம்னு என் நட்பு வட்டத்துல பக்தர்கள் அதிகம் பேர் உண்டு. கிருஷ்ணர் பிறந்த இடமான பிருந்தாவனத்துக்குப் போயிட்டு வரணும்னு ரொம்ப வருஷமாவே எண்ணினேன். அவங்க பிருந்தாவனம் போறப்ப, என்னையும் கூப்பிடுவாங்க. ஆனா, நான் எதாவது ஒரு படப்பிடிப்பில் இருக்க வேண்டியதாகிடும். சமீபத்துல கிருஷ்ண ஜயந்திக்கு முன்னாடி வழக்கம்போல, என்கிட்ட ‘நாங்க துவராகா, பிருந்தாவனம் போறோம்’னு சொன்னாங்க. நானும் வரட்டுமான்னு கேட்டேன். அவங்களுக்கு ஆச்சரியம். திடீர் பயணமா துவாரகா, பிருந்தாவனம் போவேன். இதுல ஆச்சரியத்துலேயும் ஆச்சரியம். சரியா கிருஷ்ண ஜயந்தி அன்னிக்கே பிருந்தாவனத்தில் இருந்தேன். மதுரா, ராதை அவதரித்த பர்ஸானான்னு நிறைய இடங்களுக்குப் போனோம். இன்னொரு அற்புத அனுபவம், யமுனாவில் பரிக்ரமா (கிரிவலம் மாதிரி) போனோம். படகில் யமுனாவில் பரிக்ராமா போன போது சரியான மழை. யமுனை நதியில் படகில், மழையில் நனைஞ்சுக்கிட்டே பயணிச்சதும் மறக்க முடியாத அனுபவம்.''

கரு பழனியப்பன் (இயக்குநர்)
“1994 ஜூன் 3ஆம் தேதி சென்னைக்கு முதன்முதலில் வந்தேன். உதவி இயக்குநராகச் சேர்வதற்காக இங்கே வந்து சேர்ந்தேன். சினிமாவில் யாரையும் எனக்குத் தெரியாது. என்னுடைய கல்லூரி நண்பர் ஜெரால்டு, பள்ளிக்கூட நண்பர் பேஸ்டின் ஜெரால்டு என இருவர் மட்டுமே சென்னையில் இருந்தனர். பேருந்திலிருந்து அண்ணா சாலையில்தான் இறக்கிவிட்டார்கள். அத்தனை வாகனங்களும் பரபரப்பதைப் பார்த்து அச்சமாக இருந்தது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் பயணப்பட்டாலும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பயணமே பெரும் ஞாபகமாய் நிற்கிறது. பெரிய ஊரில் வந்து இறங்குறோம், துறை சார்ந்த பெரிய அறிவுகூட இல்லை. சினிமா ஆசை மட்டுமே இருந்தது. சுற்றியிருந்த நண்பர்களின் உதவியுடன் பிறகு எல்லாமே காலத்தில் நடந்தது. ஒன்பது வருடத்தில் இயக்குநர் ஆகியிருந்தேன். ஒன்பது வருடங்களாக உதவி இயக்குநராகக்கூட ஆக முடியாதவர்களை எனக்குத் தெரியும். இவ்வளவு காலம் கடந்தும் அந்தப் பயணத்தில் வருடமும் மாதமும் நாளும்கூட ஞாபகத்தில் இருப்பதே அதற்குச் சான்று!”

ஹலிதா ஷமீம் (இயக்குநர்)
“என்னுடைய மின்மினி படத்துக்காக சமீபத்தில் லடாக் போயிருந்தேன். அந்த இடம் கொண்டிருக்கிற பெரும் அமைதி என்னை வேறு மனநிலைக்குத் தள்ளிவிட்டது. அங்கே குற்றச் சம்பவங்கள் குறைவு. வீடுகள் அனேகமாக பூட்டப்படுவதில்லை. மக்கள்தொகைக் குறைவினால் மனிதர்கள் எதிரில் வந்தால்கூட வணக்கம் தெரிவித்துப் புன்னகைகிறார்கள். அந்த மக்களின் எளிமையும் கனிவும், வழிகாட்டுதலும் என் முழுப் பயணத்துக்கான சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது. அங்கே படம் எடுக்கிற இயக்குநர் ஒருவரைச் சந்தித்தேன். அவரே இன்டர்நெட் மூலம் விவரங்களைச் சேகரித்துத் திரை நுட்பங்களைத் தெரிந்துகொண்டு படம் எடுக்கிறார். அது ஒன்றும் மாற்றுக் குறைவாக இல்லை. எனக்குப் பயணங்களில் ஈடுபடும்போது திரும்பும் நோக்கம் இல்லை. திசை அறியாத விதமே உண்மையானது. எனக்கு சில படங்களை இன்னும் எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் மட்டுமே திரும்பிவருகிறேன்.”

அம்ரிதா ராம் (ஆடை வடிவமைப்பாளர்)
``கடந்த 2014-ல தேவி ஸ்ரீபிரசாத்தோட அமெரிக்க இசை நிகழ்ச்சிக்குப் போனதுதான் ஞாபகத்துக்கு வருது. சென்னையில் இருந்து நிகழ்ச்சிக்கான உடைகளை எல்லாம் கார்கோ பிளைட்ல அனுப்பி வச்சிருந்தோம். நாங்க அமெரிக்கா போய் இறங்கினதும், அங்கே அதை எடுத்துக்கறது மாதிரி ஷெட்யூல் போட்டிருந்தோம். ஆனா, நிகழ்ச்சிக்கு முதல்நாள் வரை காஸ்ட்யூம்கள் போய்ச் சேரல. நடுவே எங்கோ பிரேக் ஆகி நிற்குதுன்னு நினைச்சு விசாரிச்சோம். ஜூலை நாலுல அமெரிக்கா சுதந்திர தினம்னால, அன்னிக்கு அதை எடுக்க முடியாத சூழல்னு சொல்லிட்டாங்க. ஆனா, அதே தினத்தில்தான் எங்க ஷோவும் நடக்குது. காஸ்ட்யூம்களை ஜூலை 5-ம்தேதி அன்னிக்குத்தான் கொடுக்க முடியும்னு உறுதியாச் சொல்லவே, என்னைத் தவிர எல்லாருக்கும் படபடப்பு. எனக்கு அமெரிக்காவில் எங்கங்கே காஸ்ட்யூம், அக்சஸரீஸ் கிடைக்கும்னு தெரியும்னால, பதற்றமே படாம, ஒரே நாள்ல நிகழ்ச்சிக்கான காஸ்ட்யூம்களைப் புதுசாவே ரெடி பண்ணினேன். ஒரு சவாலான சூழலை வெற்றிகரமா எதிர்கொண்டு, நிகழ்ச்சியைச் சிறப்பாக்கினோம். மறக்கமுடியாத பயணம்னா அதான்.''

மதுரை முத்து (சின்னத்திரை கலைஞர்)
“பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் மேற்கொண்ட ஒரு பயணம் பெரும் காமெடி.. நிகழ்ச்சிக்காக மதுரையில இருந்து மேலூருக்குப் போகணும். அப்ப என்னிடம் கார் இல்லை. 'வடிவேல்' கணேசன் `கார்ல போய் இறங்கினாத்தான் கெத்தா இருக்கும்’னு தன்னுடைய அண்ணனுடைய மெக்கானிக் ஷெட்ல இருந்து ஒரு காரை ஏற்பாடு செய்து போகலாம்னு சொன்னார். சொன்னபடியே ஒரு அம்பாசிடர் காரைக் கொண்டு வந்துட்டார். அது ஒரு மழைக்காலமும் கூட. நாங்க எடுத்துட்டுப் போன கார் `கரகாட்டக்காரன்' கார் மாதிரிதாங்கிறது காரில் ஏறின பிறகே தெரிஞ்சது. கதவு பூட்ட மாட்டேங்குது. வைப்பர் ஒர்க் பண்ண மாட்டேங்குது. வழியில மழையும் சேர்ந்துகிடுச்சு.
பஸ்ல போனாலே அரை மணி நேரத்துல போயிடக் கூடிய மேலூருக்கு ஒன்றரை மணி நேரம் கடந்தும் நாங்க போய்ச்சேரலை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுப்பாகி, 'நடந்து வந்தாலே இந்நேரத்துக்கு வந்திருக்கலாமே'ன்னு கேட்டு எரிச்சலோட கடைசியில ரெண்டு பைக்கை எடுத்து வந்து எங்களைக் கூட்டிட்டுப் போனாங்க.
என்ன ஒண்ணு, வழியில 'ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம்'னு யாரும் வரலை, அவ்ளோதான்!”

வனிதா ஹரிஹரன் (சின்னத்திரை நடிகை)
“என் கணவர் ஜெர்மனியில் வேலை பார்க்கிறார். நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட அவர் ஜெர்மனி கிளம்பிட்டார். எங்களுடைய கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்குப் பிறந்தநாள் வந்துச்சு. பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக நான் ஜெர்மனி கிளம்பிப் போய்ட்டேன். அவருக்கு பயங்கர ஷாக். ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணினார். ரெண்டு பேரும் அங்கே நிறைய இடங்களுக்குப் போனோம். எங்களுடையது அரேஞ்ச் மேரேஜ். அதனால அப்போதான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டோம். அந்த ஃபர்ஸ்ட் டிராவல் எனக்கு லைஃப் லாங் ஸ்பெஷல்.”