சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பளிச்சுனு எரியுது பல்பு!

நீபா
பிரீமியம் ஸ்டோரி
News
நீபா

‘எக்கச்சக்க பல்புகள் வாங்கி, உடைச்சிருக்கேன். சமீபத்துல நடிச்ச ஒரு படத்துலகூட பல்பாகிடுச்சு

‘நீங்கள் பல்பு வாங்கிய மொமன்ட் எது?’ என்று இவர்களிடம் கேட்டபோது...
பளிச்சுனு எரியுது பல்பு!

மகேஷ் முத்துஸ்வாமி (ஒளிப்பதிவாளர்)

“எங்க ஊரான‌ திண்டுக்கல்லில் அபிராமின்னு தியேட்டர் இருக்கு. அங்கதான் புதுப் படங்கள் ரிலீஸாகும். முன்னதாகவே ட்ரெய்லர் போடுவாங்க. அப்படி ஒரு தடவை ‘ஊமை விழிகள்’ படத்தின் ட்ரெய்லர் பார்த்துட்டு வாங்கின பல்பு மறக்க முடியாது. அந்தப் படம் என்னைக்கு ரிலீஸாகுங்கிறது தெரியாம, அடிச்சுப் புடிச்சு டிக்கெட் வாங்கிப் போய் உட்கார்ந்தா அன்னைக்கு படம் இல்லை, மறுநாளாம். வேற படம் ஓடுச்சு.

ஆனா மறுநாள் அதே ‘ஊமை விழிக’ளைப் பார்த்தாச்சு. சினிமாவுக்கான எண்ணத்தை எனக்குள் தூண்டினதும் இதே ‘ஊமை விழிகள்’னுதான் சொல்வேன். அந்தச் சின்னப் புள்ளி மாதிரி தெரிஞ்சு பெரிதாகி வருகிற கார்களின் வரிசைக்குக் கிடைத்த கைத்தட்டல்தான் பின்னாளில் எனக்கு இன்ஸ்பிரேஷன். பிறகொரு நாள் அந்தக் காட்சியை எடுத்த ரமேஷ் சாரைப் பாராட்டியதும்கூட இப்பவும் ஞாபகத்துல இருக்கு.’’

பளிச்சுனு எரியுது பல்பு!

ஷில்பா மஞ்சுநாத்

‘’கன்னடப் படம் ஒண்ணுல (பேர் வேண்டாம்) கமிட் ஆனேன். அப்ப படத்தின் தயாரிப்பாளர் என்னைத் தனியா கூப்பிட்டு ‘எக்காரணம் கொண்டும் உங்க சம்பளத்தை வெளியில எங்கும் சொல்லாதீங்க’ன்னு சொன்னார். அந்தச் சமயத்துல நானும் சரின்னு சொல்லிட்டேன்.

படம் நாங்க எதிர்பார்க்காத அளவு ஹிட் ஆகி சக்சஸ் பார்ட்டி நடந்தது. பார்ட்டியில் புரொடியூசர், ஹீரோ, நான் மூணு பேரும் பேசிட்டிருந்தப்ப, திடீர்னு ஹீரோ எங்கிட்ட ‘என்ன சம்பளம் வாங்குனீங்க’ன்னு கேட்டுட்டாங்க. அப்படியொரு கேள்வியை அவர்கிட்ட இருந்து நானும் எதிர்பார்க்கலை. அதேபோல ஏற்கெனவே தயாரிப்பாளர் எங்கிட்ட சொல்லிவச்சிருந்ததும் மறந்துபோக, டக்குனு அந்த இடத்துல சம்பளத்தைச் சொல்லிட்டேன்.

அதுக்குப் பிறகுதான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. படத்துல என்னைவிட ஹீரோவுக்கு சம்பளம் குறைவாம். அதனாலதான் தயாரிப்பாளர் எங்கிட்ட ‘வெளியில சொல்லக் கூடாது’ன்னு சொல்லியிருக்கார். இது தெரியாம நானும் உளறி, அந்த இடத்துல பல்பு வாங்கினது நானா அல்லது தயாரிப்பாளரான்னு தெரியல. ஆனா உங்க கேள்விக்கு எங்கிட்ட இந்த பதில்தான் சரியானதாத் தெரிஞ்சது.”

பளிச்சுனு எரியுது பல்பு!

பாலாஜி சக்திவேல்

‘‘எக்கச்சக்க பல்புகள் வாங்கி, உடைச்சிருக்கேன். சமீபத்துல நடிச்ச ஒரு படத்துலகூட பல்பாகிடுச்சு. டேக் போறதுக்கு முன்னாடி ரிகர்சல். செம ஒர்க் அவுட் பண்ணிட்டு, ரிகர்சல்ல பயங்கரமா ஸ்கோர் பண்ணினேன். ‘பிச்சு உதறுறீங்களே’ன்னு பாராட்டுகளும் அள்ளுச்சு. ரிகர்சல்ல செமையா நடிச்சிட்டு, டேக் போனேன். அவ்ளோதான், சுத்தமா பிளாக் அவுட் ஆகிடுச்சு. எனக்கு அழுகையே வந்திடுச்சு.’’

பளிச்சுனு எரியுது பல்பு!

நீபா

“இப்ப கொஞ்ச நாள் முன்னாடிதான் நடந்தது. இன்னைக்குத் தேதிக்கு மூணு சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கேன். அதனால் எந்த சீரியலின் ஷூட்டிங்ல நடந்ததுன்னு சொன்னா யூனிட்ல கோவிச்சுக்குவாங்க.

வழக்கமாவே காலையில 7 மணிக்கெல்லாம் செட்ல இருக்கணும்னு அறக்கப்பறக்கதான் ஓடுவோம். அன்னைக்கும் அதேபோலத்தான் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து அவசர அவசரமா வீட்டு வேலைகளை முடிச்சுட்டுக் கிளம்பினேன். கார்ல ஏறி உட்கார்ந்ததும், ‘எங்கே மேம்’னு டிரைவர் கேட்டார். ‘ஏம்ப்பா, காலையிலேயே ‘எங்க போற’ன்னு கேப்பிங்களாக்கும்’னு அவர்கிட்டயும் கடுகடுத்துட்டு, வேகமா ஸ்பாட்டுக்குப் போய் இறங்கினா, அங்க ஒரு ஈ எறும்பைக்கூடக் காணோம்.

அன்னைக்கு ஷூட்டிங் அந்த இடத்துல இல்லையாம். அவசரத்துல முதல் நாள் ஷூட் நடந்த இடத்துக்கே வந்து பல்பு வாங்கி நின்னப்ப, என்னை அந்த டிரைவர் பார்த்த பார்வை இருக்கே, அது இன்னும் பெரிய பல்பு!”

பளிச்சுனு எரியுது பல்பு!

ஆர்.பாண்டியராஜன்

‘‘ஒரு சமயம் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா போயிருந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கமிட் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால், திட்டமிட்டபடி ஒரு வாரம் முன்னதாகவே கிளம்பிப் போயிட்டேன். ஸ்டேஜ்ல பத்து நிமிஷம் நாடகம் ஒண்ணு பண்றதாகவும் சொல்லிட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு வேறு சில கலைக்குழுக்களும் வந்திருந்தாங்க. என் ஸ்கிரிப்டுக்கு ஒரு சின்னப் பையன் தேவைப்பட்டான். அங்கேயே ஒரு பையனைப் பிடிச்சாச்சு. எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல பேசி அவனை நடிக்கவும் ரெடி பண்ணிட்டேன். ஷோவுக்கு ரெண்டு மூணு நாள் டைம் இருந்த‌தால தினமும் அவ‌னுக்கு ரிகர்சல் கொடுத்துட்டே இருந்தேன். மலேசியாவுல இருக்கிற என்னுடைய முக்கியமான நண்பர்களையெல்லாம்கூட பார்க்க நேரமில்லாதபடி ரிகர்சல் போயிட்டிருந்தது. சில நண்பர்கள் என்னைப் பார்க்கணும்னு வந்து பார்க்க முடியாமத் திரும்பிப் போனதெல்லாம் நடந்தது. கடைசியில பார்த்தா, அந்தக் கலைநிகழ்ச்சியில் நேரமில்லைன்னு சொல்லி என் நாடகமே இடம்பெறாமப் போயிடுச்சு.

சும்மா ஆடியன்ஸைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு கையைக் காட்டிட்டுப் போனா போதும்னு சொல்லிட்டாங்க‌. நானும் அப்படியே கையை மட்டும் ஆட்டி டாட்டா காட்டிட்டுத் திரும்பிட்டேன். அன்னைக்கு விழா அரங்கத்துக்கு என் நிகழ்ச்சி பார்க்கணும்னு வந்திருந்த என் நண்பர்களெல்லாம், ‘இதுக்காகத்தான் ஒரு வாரமா ரிகர்சல் போனீங்களா’ன்னு கேட்டது செம பல்பா ஆகிடுச்சு. மறக்க முடியாத பல்பு அது.’’

பளிச்சுனு எரியுது பல்பு!

கே.ஏ.சக்தி வேல் (ஒளிப்பதிவாளர்)

‘ரேணிகுண்டா’ முடிஞ்சதும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படம் செய்தேன். அந்தப் படத்துக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. விசாவுக்காக போட்டோ எடுக்கணும். வடபழனியிலிருக்கும் ஒரு ஸ்டூடியோவுக்கு நானும் நண்பர் ஒருத்தரும் போயிருந்தோம். அங்க போட்டோகிராபர் இல்லை. அவரது உதவியாளர்னு ஒரு சின்னப் பையன் இருந்தான்.

‘அப்படி உட்காருங்க, இப்படி உட்காருங்க’ன்னு மாத்தி மாத்தி உட்கார வச்சு என்னைப் படம் எடுத்துட்டே இருந்தான், அந்தப் பையன். ஒருகட்டத்துல டென்ஷன் ஆன என் நண்பர், ‘டேய், அவரு ரேணிகுண்டா கேமரா மேன்டா’ன்னு சத்தாமச் சொன்னார். அதுக்கு அந்தப் பையன், ஒரு லுக் விட்டபடி, ‘அதுக்கென்ன இப்ப’ன்னு கேட்டுட்டு பழையபடி அவன் போக்குலயே போட்டோ எடுக்கத் தொடங்கினான்.

எனக்கு அந்தப் பையன் மேல கோபமெல்லாம் வரலை. சின்னப் பையன், துறுதுறுன்னு இருந்த அவனுடைய சுபாவம்... அதையெல்லாம் பார்த்தப்ப, ‘அதனாலென்ன’ன்னு அவன் கொடுத்த பல்பு பெரிசா தெரியலை.’’