கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

அந்தக்காலம் திரும்பிடுமோ?

ஷப்னம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷப்னம்

கொஞ்சம் பேர் மட்டுமே கலந்துகிட்டாலும் அவ்ளோ கிராண்டா இருந்தது. சாப்பாடு முடிச்சிட்டு வீடு திரும்ப லேட் நைட் ஆகிடுச்சு

தனிமைப்படுத்தல், லாக்டௌன் என்று மாறிப்போய்விட்ட சூழலில், ‘நீங்கள் கலந்துகொண்டதில் உங்களால் மறக்கமுடியாத, கலகலப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சி எது?’ என்று கேட்டதற்கு இவர்கள் பதில்கள்...
அந்தக்காலம் திரும்பிடுமோ?

தேனி ஈஸ்வர்

“ `பேச்சிலர்’ பட ஷூட்டிங் போயிருந்தோம். ஜி.வி.பிரகாஷ், இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட பெருங்கூட்டம் கேலியும் கிண்டலும் பண்ணிக்கிட்டு, அதேநேரம் வேலையும் விறுவிறுப்பா நடந்த ஒரு அற்புதமான சூழல். ஷூட்டிங் முடிஞ்சதும் மிச்சமிருக்கிற சில வேலைகளுக்காக மீண்டும் கூடுவோம்னு நினைச்சிட்டிருந்த சமயத்துலதான் ஊரடங்கு. ‘பேரன்பு’க்குப் பிறகு மம்மூட்டி, பார்வதி நடிக்கிற ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிற வாய்ப்பு அமைஞ்சது, ஆனா, இப்ப லாக்டௌன்ல எல்லாமே மாறி நிற்கிறது. இப்ப சொந்த ஊரான தேனிக்கு வந்து மலையையும் அதன் ஆச்சரியங்களையும் பார்த்தபடி மௌனமா நாள்களை நகர்த்திட்டிருக்கேன்.”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

ஷப்னம்

“சின்னத்திரையின் பாப்புலர் ஜோடி ஆல்யா மானஸா சஞ்சீவ் ஜோடியின் கல்யாணம் சென்னை நந்தம்பாக்கத்துல இருக்கிற பிரபல நட்சத்திர ஓட்டல்ல நடந்தது. நட்பு வட்டாரத்துல நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தாங்க. எங்களுக்கு ரொம்ப வருஷமா ஃபேமிலி ஃப்ரண்ட்ங்கிறதால அழைப்பு வந்தது. குடும்பத்துடன் போய் கலந்துகிட்டேன். என்னுடைய திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல நடந்த ஃபங்ஷன்ங்கிறதால ஜோடியாப் போயிருந்தோம். அந்தப் பொண்ணு மாப்பிள்ளையுடன் எங்களையும் சேர்த்து வாழ்த்தினாங்க நிறைய பேர். கொஞ்சம் பேர் மட்டுமே கலந்துகிட்டாலும் அவ்ளோ கிராண்டா இருந்தது. சாப்பாடு முடிச்சிட்டு வீடு திரும்ப லேட் நைட் ஆகிடுச்சு. இது மாதிரி இன்னொரு ஃபங்ஷன்ல எப்ப கலந்துக்குவோம்னு ஒரே ஏக்கமா இருக்கு.”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

ரக்‌ஷன்

“ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு தன் படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறாங்கன்னு நேர்ல பார்க்கணும்னு இருக்கும். அதுவும் முதல் படம்னா கேக்கவே தேவையில்லை. போன வருஷம். சரியா ஊரடங்கு போடுவதற்கு நாலு நாள் முன்னாடி. நானுமே அந்த எதிர்பார்ப்புடன்தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ஓடிட்டிருந்த வடபழனி ஃபோரம் மால் போனேன். படம் ரிலீசாகி மூணாவது வாரம். தியேட்டர் நிரம்பி இருந்தது. பார்க்கவே சந்தோஷமா இருந்தது. நான் அங்க போனதுக்கு இன்னொரு காரணம், என் பள்ளி நண்பர்கள் 40 பேர் படம் பார்க்க வந்திருந்தாங்க. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவங்களையும் பார்த்த மாதிரி இருக்குமே!

என் கேரக்டருக்குக் கிடைச்ச வரவேற்பு, ‘சூப்பர் மச்சி’ன்னு நண்பர்கள்கிட்ட கிடைச்ச பாராட்டுன்னு அன்னைக்குப் பொழுது ஒரே ஹேப்பியா இருந்தது. முதல் படம் ஓகேன்னு ஆகிடுச்சுன்னா, அடுத்த படம் குறித்த பேச்சு தானா வந்திடும். ஆனா என் முதல் படம் வெளியான சில நாள்கள்ல மொத்த சினிமாவும் முடங்கிக் கிடக்கு. ‘இதுவும் கடந்து போகும்’னு நம்பிட்டு இருக்கேன்.”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

பாக்கியம் சங்கர்

“ஆனந்த விகடனில் வெளியான ‘நான்காம் சுவர்’ தொடர், புத்தகமா வெளிவந்த நிகழ்வு திருவிழா மாதிரி நடந்தது. இலக்கியவாதிகள், சினிமா நண்பர்கள்னு எல்லாரும் வந்து சிறப்பிச்ச அந்த நிகழ்ச்சியை ஒருநாளும் மறக்க மாட்டேன். இந்தக் கொரோனா காலகட்டத்தில் அப்படியான விழாக்களுக்கு வாய்ப்பே இல்லாமப் போயிடுச்சு. இன்னைக்கு நிலவரத்துக்கு இந்த உலகமே ரொம்பச் சாதாரணமான ஒரு நாள் கிடைச்சாலே போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்திடுச்சு. ஏன்னா, இப்ப அந்தச் சாதாரண நாளுக்காகவும் ஏங்கிட்டு இருக்கோமே. இயல்பா டீக்கடைக்குப் போறது, நாலு முகங்களைப் பார்க்கறதுன்னு எதுவுமே இல்லாம, வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடப்பது ரொம்பச் சிரமமா இருக்கு. அச்சத்தையும் தாண்டி, அந்த சாதாரண நாள் வந்துவிடாதாங்கிற ஏக்கம் எல்லார்ட்டயும் இருக்கு. இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடுகள்ல கலந்துக்க முடிகிற அந்தச் சாதாரண நாள் எப்ப வருமோ தெரியலை.”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

சீனு ராமசாமி

“என் ரெண்டாவது மகள் திவ்யரஞ்சனா பிறந்தபோது வேண்டிக்கிட்ட நேத்திக்கடன் ஒண்ணு பாக்கி இருந்தது. மதுரை பாண்டி கோயில்ல கிடா வெட்டணும்கிறதுதான் அது. மனித குலத்துடைய இயல்பான ஒன்று கூடுதலுக்கும் கொண்டாடுதலுக்கும் எதிரியா வந்து நிற்கிற இந்தக் கொரோனா தொடங்கறதுக்குக் கொஞ்சம் முன்னாடிதான் போய் அந்த நேர்த்திக்கடனை நிறைவேத்திட்டு வந்தோம். அதுவும் ரெட்டைக் கிடா. சொந்தக்காரங்களை ஒருத்தர் விடாம வரவழைச்சு, அவங்களோடு ஒண்ணுமண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு, கறியைக் கொண்டு போய் பாண்டிக்குப் படைச்சோம்.

உறவுக்காரங்க எல்லாரையும் கடைசியாப் பார்த்தது அந்த விசேஷத்துலதான். மாஸ்க் இல்லாத முகங்கள். பார்த்த உடனேயே `மாப்பிள்ளை’ன்னு கட்டிப்பிடிச்சு, கைகுலுக்கி, போதையில முத்தமும் கொடுத்துட்டுப் போனாங்க. கறியை வீட்டுக்குக் கொண்டு வரக் கூடாதுங்கிறது ஐதீகம். சுத்தி இருந்த அத்தனை ஜனங்களுக்கும் கொடுத்துச் சாப்பிட்டு வந்த அந்த ஒன்றுகூடுதல்தான் இன்னமும் அப்படியே மனசுல தங்கிப்போய் நிற்குது. இப்ப பத்துக்குப் பத்து அறையில இருந்து வெளியில் வரத் துடிக்கிறேன். பால்கனியில் நிற்கறதை விட்டுத் திறந்தவெளியில் சுவாசிக்க விரும்பறேன். குற்றால அருவியில குளிக்கவும், ‘ஆத்தா, இந்த ஜனங்களை இந்தத் துயரத்துல இருந்து விடுவி’ன்னு வேண்டிக்கிட்டு மீனாட்சி அம்மனைச் சுத்தி வரவும் ஆசையாயிருக்கு!”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

ராமன் விஜயன்

“கால்பந்து வீரர்களுக்கு ஃபங்ஷன், செலிபிரேஷன் எல்லாமே ஃபுட்பால்தான்! மூணு மாசம் முன்னாடி கன்னியாகுமரி மாவட்டத்துல இருக்கிற தூத்தூர் பக்கத்துல `நீரோடி’ங்கற ஊருக்குப் போயிருந்தேன். அங்க நடந்த செவன்ஸ் டோர்னமென்ட்டுக்குச் சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அந்த ஊரோட கால்பந்து கலாசாரம் அவ்வளவு அட்டகாசமா இருந்துச்சு. அந்த ஊர்ல இருக்கற ஒவ்வொரு வீட்லயும் ரெண்டு F கட்டாயம் இருக்கு. ஒண்ணு, Fish; இன்னொன்ணு, Football. இந்த யூரோப்பியன் ஃபுட்பால் பத்தி, ஏன் என்னைப் பத்திக்கூட அவங்களுக்குப் பெருசா தெரியாது. ஆனா, அந்த செவன்ஸ் டோர்னமென்ட்டை அப்படிக் கொண்டாடுறாங்க. ஊர்ல பசங்க முழுக்க ஃபுட்பாலோடதான் சுத்துறாங்க. நைட் 2 மணிக்கு ஃபைனல் நடந்தப்பகூட அதைப் பாக்க கிரவுண்ட்ல 7,000 பேர் இருக்காங்க. இந்தியால ஃபுட்பால்னா கொல்கத்தா, கோவானுதான் சொல்வாங்க. இந்த ஊர் இன்னும் வேற லெவல்ல இருக்கு. பிரேசில் கடற்கரையில ஃபுட்பால் ஆடுற பசங்கள பாக்குற மாதிரி இருந்துச்சு. இதைவிட நான் சந்தோஷப்பட வேற என்ன விஷயம் இருந்திட முடியும்? ஃபுட்பால், அட்டகாசமான மீன்னு அந்த நாளை வாழ்க்கையில மறக்கவே முடியாது. அதேபோல இயல்பான இன்னொரு நாள் வரணும்!”

அந்தக்காலம் திரும்பிடுமோ?

மனோகர் தேவதாஸ்

“கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது கிடைச்சப்ப, மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. மதுரையில நான் படிச்ச பள்ளிக்கூடம், கல்லூரி, அரவிந்த் கண் மருத்துவமனை என (மனோகர் விழித்திறன் சவால் கொண்டவர்) மூணு இடத்துல நிகழ்வுகளை ஒருங்கிணைச்சு நடத்தப்பட்ட விழா அது. பள்ளியில் பேண்டு வாத்தியங்களுடன் என்னை வரவேற்றது தொடங்கி, விழாவின் ஒவ்வொரு அம்சமும் என்னைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. என்னுடைய 80-வது பிறந்தநாள் விழாவில் மறைந்த என்னுடைய காதல் மனைவி மகிமாவையும் என்னையும் பத்தி வெளியிட்ட பாடல் ஒன்றையும் இந்த விழாவில் பாடினாங்க. அந்த நிமிஷம் என் நெஞ்சத்தை உருக்கிடுச்சு.”