
‘’நான் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்ச பொண்ணு. ஏழாவது படிச்சப்போ, பக்கத்து ஸ்கூல் பையன் ஒருத்தனுக்கு என் மேல பயங்கர லவ்.
‘`முதல் காதல்... வாழ்வின் முதல் அங்கீகாரம்!’’
கருவில் உதித்து கையில்சேராத குழந்தைபோன்றது, நிறைவேறாத முதல் காதல். அந்தக் கதைகள் சொல்கிறார்கள் இந்தப் பிரபலங்கள்.
நாஞ்சில் சம்பத்
‘`நான் பயின்ற கல்லூரியின் விழா ஒன்றில், என் உரையாடலைக் கேட்டு அடுத்த நாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது. ‘உன்னை நான் நேசிக்கிறேன்...’ என்று முடியும் அந்தக் கடிதம் வந்து சேர்ந்த நாள் முதல், என் வாழ்க்கை வசந்தகாலமாய் மாறியது.

கடிதம் வந்த அடுத்த நாளே அவளைச் சந்தித்தேன். அவள் ஆங்கில இலக்கிய மாணவி, நான் தமிழ் இலக்கிய மாணவன். மூன்று ஆண்டுகள் கழிந்தது. கல்லூரி இறுதி ஆண்டின்போது, அவளுக்கு மூளையில் கட்டி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சில நாள்களில் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திவர, என் வாழ்வு அந்நொடியிலேயே உறைந்து நின்றது. எங்கள் காதல் விஷயம் வீட்டுக்குத் தெரியாது என்பதால், அவள் நண்பனாக அந்த துக்க வீட்டுக்குச் சென்றேன். அவள் பெயர் மங்கையர்க்கரசி.’’
மனுஷ்யபுத்திரன்
“17 வயதில் இலங்கை வானொலியில் நிறைய கதைகள் எழுதினேன். பிரபல அறிவிப்பாளர் பி.ஹெச் அப்துல்ஹமீது அந்தக் கதைகளை அற்புதமான குரலில் வாசிப்பார். அக்கதைகளைக் கேட்டு இலங்கையிலிருந்து நிறைய பெண்கள் கடிதங்கள் எழுதுவார்கள். அப்படி எழுதியவர்களில் ஒருத்தியின் நேசம் 40, 50 பக்கக் கடிதங்கள் என வளர்ந்தன. எனது பிறந்தநாள் ஒன்றில், என்னிடம் தன் காதலைச் சொல்லும் அவள் கடிதம் வந்தது. புதிதாய்ப் பிறந்த உணர்வில் அதிர்ந்துபோனேன்.

ஏனென்று தெரியாமல் உடைந்து அழுதேன். அந்தக் காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தோம். போன்கூட இல்லை. வெறும் எழுத்துகள். யுத்த காலத்தில் பதுங்குகுழிகளிலிருந்து எழுதிய காதல் கடிதங்கள். அவற்றை எங்கோ தொலைத்துவிட்டேன். பிறகு யுத்த நெருப்பு அவளை எங்கோ கொண்டு சென்றது. ஐரோப்பிய நாடொன்றில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். பல வருடங்களுக்குப் பிறகு எப்படியோ எனது எண்ணைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டு பேசினாள். முதன்முதலாக அந்தக் குரலை அப்போதுதான் கேட்கிறேன். ‘உயர் கல்வி பயிலும் என் மகள் ஒரு புராஜெக்ட்டிற்காக நண்பர்களுடன் தமிழ்நாடு வருகிறாள். உன்னை வந்து பார்ப்பாள்’ என்றாள். காலம் எனும் தீராத கடல்.
வேல.ராமமூர்த்தி
‘`நான் பத்தாம் வகுப்பு, அந்தப் புள்ள ஒன்பதாம் வகுப்பு. தினமும் என் வீட்டைக் கடந்து பள்ளிக்கூடம் போகும்போது, வீட்டு மாடியில இருக்கிற கம்பி வலையிலேருந்து பார்ப்பேன். பேரழகி. ரொம்ப சீரியஸாவும் சின்சியராவும் படிக்கிற புள்ள. குறுகுறு பார்வையும் நடையுமா, பார்க்கிறப்போவெல்லாம் ஒரு கிறக்கம் உண்டாகும்.

ஆனா, திடுதிப்புனு அவங்க வீட்டுல சின்ன வயசுலேயே அந்தப் புள்ளையைக் கட்டிக்கொடுத்துட்டாங்க. கடைசிவரைக்கும் நான் என் காதலைச் சொல்லவே இல்லை. அதுக்கப்புறம் இப்போவரை அந்தப் புள்ளையைப் பார்க்கல. இப்போ பேரன், பேத்தியெல்லாம் எடுத்துடுச்சாம்.’’
வி.ஜே. சித்ரா
‘’நான் கேர்ள்ஸ் ஸ்கூல்ல படிச்ச பொண்ணு. ஏழாவது படிச்சப்போ, பக்கத்து ஸ்கூல் பையன் ஒருத்தனுக்கு என் மேல பயங்கர லவ்.

நான் எங்க போனாலும், அங்க வந்து நின்னுடுவான். ஆனா, அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. என் கூடப் படிச்ச பிள்ளைங்க, என்னை கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. `இப்படிப் பேசாதீங்க, எனக்கு அவனைப் பிடிக்கலை’ன்னு எத்தனையோ தடவை சொல்லியும் யாருமே விடறதா இல்ல. கடைசியா, என் கையில போட்டிருந்த கண்ணாடி வளையலை எல்லாம் சுவர்ல கையை இடிச்சே உடைச்சேன். கை முழுக்கக் கீறல், ரத்தம். அழ ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் என்னை யாரும் கிண்டல் பண்ணல. கேள்விப்பட்டு அந்தப் பையனும் ஆஃப் ஆகிட்டான். ‘இது முதல் காதலா?’ன்னு கேக்காதீங்க. என்னை முதன்முதலா ஒருத்தன் காதலிச்ச கதைன்னு வெச்சுக்கோங்க.’’
‘`என்னோட ஃபர்ஸ்ட், பெஸ்ட், ஆல்டைம் ஃபேவரைட் க்ரஷ், ப்ளஸ் ஒன்ல எனக்குக் க்ளாஸ் எடுத்த மேத்ஸ் சார்.

அந்த வயசுக்கே இருக்குற ஒரு இன்னசன்ஸ் பதினொன்றாவது முழுக்க அவரை ரசிச்சு ரசிச்சுக் கழிஞ்சது. பன்னிரண்டாம் வகுப்பு தொடங்கின கொஞ்ச நாள்ல, கல்யாணப் பத்திரிகையோட க்ளாஸுக்கு வந்த மனுஷன், `எல்லோரும் அவசியம் வந்துடுங்க’ன்னு சொன்னாரு. அவ்வளவுதான்... அங்கேயே தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டேன்!’’