
இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா போயிருந்தேன். அந்த நேரத்துலதான் சினிமா சான்ஸ் வந்தது.
“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு என்ன?” என்று இவர்களிடம் கேட்டோம்.

ஜனனி
“இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா போயிருந்தேன். அந்த நேரத்துலதான் சினிமா சான்ஸ் வந்தது. குழப்பமே இல்லாம தைரியமா நடிப்புப் பக்கம் போகலாம்னு முடிவு செய்தேன். ஒருவேளை அன்னைக்கு அந்த முடிவை எடுக்காமப் போயிருந்தேன்னா, படிச்ச படிப்புக்கேத்த மாதிரி ஏதாவது ஒரு கம்பெனியில 9 டு 5 ஆபீஸ் போய் வர்ற ஒரு வேலையில இருந்திருப்பேன். அப்ப இந்த ஜனனியை யாருக்காவது தெரிஞ்சிருக்குமா? இன்னைக்கு பிடிச்ச ஒரு துறையில சந்தோஷமா இருக்கேன்னா, அன்னைக்கு ஆஸ்திரேலியாவை விட்டுட்டு வந்ததுதானே நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு?’’

பாலாஜி தரணீதரன்
“படிப்பின் மீது பெரிதாக ஆர்வமில்லை. விளையாட்டும் எனக்கு வராது. கவிதை எழுதவும் கதை எழுதவும் வந்தது. பிளஸ் டூ படிக்கும்போது நாடகம் போட்டு டைரக்ட் பண்ணி அதில் ஒரு சின்ன வேடத்திலும் நடிச்சேன். அந்த நாடகத்தை எல்லோரும் பாராட்ட, கலைத்துறையில் நுழையலாம்னு யோசித்தேன். வீட்டில் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதையும் மீறி சினிமாவிற்குள் வந்துவிட்டேன். வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் தாண்டி, சினிமாவில் இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அதுதான் நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!”

ப்ரீதா (ஒளிப்பதிவாளர்)
“சின்ன வயதிலிருந்தே சினிமாமீது ஆர்வம் உண்டு. என் தாய்மாமா பி.சி.ஸ்ரீராமும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சினிமா பற்றிப் பேசுவார். ‘நீ என் வயிற்றில் இருக்கும்போது ஸ்ரீராம் வந்து என்கிட்டே சினிமா சினிமான்னு பேசிக்கொண்டே இருப்பார். உள்ளே இருந்த நீ அதைக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம்’ என அம்மா வேடிக்கையாகச் சொல்வார். பிளஸ் டூ முடித்தவுடன் நான் உடனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர வேண்டும் என முடிவு எடுத்துவிட்டேன். கொஞ்சம்கூட யோசிக்காமல் அப்படி எடுத்த முடிவுதான் நான் வாழ்க்கையிலேயே புத்திசாலித்தனமாக எடுத்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஆற அமர்ந்து யோசித்தாலும் இதைவிடச் சிறப்பான முடிவை எடுத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது.”

சுசீந்திரன்
“ ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் ஆரம்பிக்கும்போது விஷ்ணு விஷால் போட்டோஸ் பார்த்தேன். படத்தின் கேரக்டருக்கு கொஞ்சமும் செட் ஆகாத லுக்ல ரொம்பவும் செவப்பா இருந்தார். கதைக்கு அவர் செட் ஆகமாட்டார்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அவரோ, ‘விஷ்ணுவை செலக்ட் பண்ணினா, தயாரிப்புக்கும் உதவுவார். அதனால இவரையே ஹீரோவா கமிட் பண்ணலாம்’கிறார்.என் நண்பர்களெல்லாம் ‘முதல் படம் பண்ற. இத்தனை வருஷம் கஷ்டப்பட்டுட்டு, தப்பான முடிவை எடுத்துடாதே, இந்தக் கதைக்கு விஷ்ணு செட் ஆகமாட்டார்’னு சொல்றாங்க. ‘ஆனந்த் சார் நான் சொன்ன கதையை நம்பி ரெண்டு கோடி ரூபாய் வரை முதலீடு பண்றார். அவர் இவ்வளவு ரிஸ்க் எடுக்கும்போது நாம ஏன் ரிஸ்க் எடுக்கக் கூடாது’ன்னு என்னையே கேட்டுக்கிட்டேன். விஷ்ணுவை ஹீரோ ஆக்க முடிவு செஞ்சேன்!”

ரவிமரியா
“விருதுநகரில் எம்.ஏ சமூகப்பணி படிச்சேன். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், காலேஜ்ல ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்ல ஆக்டிவா இருந்தேன். நிறைய கலை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டுப் பரிசுகள் வாங்கியிருக்கேன். அதனால படிச்ச அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளரா வேலை கிடைச்சது.
அந்தத் தகவலை என் புரொபசர் என்கிட்ட சொன்னபோது, ‘`தயவு செஞ்சு இந்த விஷயத்தை என் வீட்ல சொல்லிடாதீங்க சார். எனக்கு சினிமாவுக்குப் போகணும்னுதான் ஆசை’’ன்னு சொல்லிட்டேன். சொன்னதோடு நில்லாம, அன்னைக்கு ராத்திரியே சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன்.
சினிமாவுக்கு வந்து எத்தனையோ வலிகள், போராட்டங்கள், மன உளைச்சல்கள் இருந்தாலும் நினைச்ச இடத்துக்கு வந்துட்டோம்னு ஒரு ஆத்ம திருப்தி இப்ப இருக்கு. அதனால, கல்லூரி வேலை வேண்டாம்னு முடிவெடுத்ததுதான், நான் எடுத்த நல்லதொரு முடிவு.”

மஞ்சிமா மோகன்
“மலையாளத்துல நடிச்ச `வடக்கன் செல்ஃபி' நூறு நாள் ஓடியும்கூட, அதன் பிறகும் படிப்பைத் தொடரணும்னுதான் நினைச்சேன். அதனால தமிழில் வந்த வாய்ப்புகளை ஏத்துக்கலை. தமிழே பேச வராத எனக்கு அப்ப ரெண்டு நல்ல கதைகள் வந்துச்சு. நல்ல இயக்குநர்களும்கூட. ஆனாலும் அப்ப `இன்னொரு நல்ல வாய்ப்பு வரலாம்'னு ஒரு உள்ளுணர்வு சொன்னதால அந்த வாய்ப்புகளை விட்டுட்டுக் காத்திருந்தேன். இப்ப நினைச்சா, அப்படிக் காத்திருந்ததுதான் என்னுடைய நல்ல முடிவுன்னு தெரியுது.
என் காத்திருப்பு வீண் போக்கல. நான் எதிர்பார்த்த மாதிரியே கௌதம் சார் படம் அமைஞ்சது. முதல் படமான `அச்சம் என்பது மடமையடா' தமிழ் ஆடியன்ஸ்கிட்ட என்னை நெருக்கமாக்கி, ஹேப்பியான ட்ராவலைத் தொடங்க வச்சுது.''

ஆர்.ஜே கண்மணி
“என்னைப் பொறுத்தவரையில் எடுக்கும் எந்த முடிவுன்னாலும், அதன்பிறகு வரும் விளைவுகளைக் கண்டு பின்வாங்குவதில்லை...பிரபலமான ஆர்.ஜே.வாக இருந்தபோதும், நிர்வாக ஏரியாவில் காலூன்ற நினைத்தது பெரிய முடிவுதான். அப்படி எடுத்ததாலேயே ஆர்.ஜேவா மட்டும் இருந்த என்னால அதே ரேடியோவில் இன்னைக்கு நிர்வாக ரீதியிலான தலைமைப் பொறுப்பில் இருக்க முடியுது.
அதனால, `இன்னைக்கு என்ன டிரஸ் போடுறது'ங்கிற சாதாரணமான விஷயம்னாலும் சரி, என்ன செஞ்சா டார்கெட் அச்சீவ் பண்ணலாம்கிற சீரியசான விஷயம்னாலும் சரி, எல்லா முடிவும் எனக்கு முக்கியமானதே.”

பூர்ண சந்திரிகா (மனநல மருத்துவர்)
“வாழ்க்கையில ஒவ்வொரு சமயமும் நாம எடுக்கிற முடிவு புத்திசாலித்தனமானதுதான். இது சிலருக்கு அப்போவே தெரியும்; சிலருக்குக் கொஞ்ச நாளைக்குப் பிறகே தெரிய வரும். பொதுவா நான் என்னுடைய எமோஷன்ஸை அதிகமா வெளிப்படுத்த மாட்டேன். அதுதான் என் வாழ்க்கையில் நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவாகக் கருதுகிறேன். ஏதோ ஒரு கோபத்தை சட்டுன்னு ஒருத்தர்கிட்ட வெளிப்படுத்திட்டு, பிறகு அதற்காக வருத்தப்படுறதனால எந்தப் பலனும் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டு, எமோஷனலா ரீயாக்ட் பண்ணாம இருக்கறதை நான் இன்னைக்கு வரைக்கும் கடைபிடிச்சிட்டு இருக்கேன்.”