Published:Updated:

``அஜித்தின் அக்கறை; விஜய்யின் வாய்ப்பு!''- சுவாரஸ்யம் பகிரும் ஸ்டார் ஜிம் டிரெய்னர்! #LifeStartsAt40

அஜித்

அஜித், அர்ஜுன், பரத் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் ஃபிட்னஸ் டிரெய்னர் சிவக்குமார் பேட்டி

Published:Updated:

``அஜித்தின் அக்கறை; விஜய்யின் வாய்ப்பு!''- சுவாரஸ்யம் பகிரும் ஸ்டார் ஜிம் டிரெய்னர்! #LifeStartsAt40

அஜித், அர்ஜுன், பரத் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் ஃபிட்னஸ் டிரெய்னர் சிவக்குமார் பேட்டி

அஜித்

ஒவ்வொரு படத்திற்கும் தங்களின் உடல்வாகை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், நடிகர்கள். அதற்கு உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் தயாராக வேண்டும். அவ்வாறு தயார் நிலைக்குக் கொண்டுவர அபார உழைப்பு தேவை. அதன் முக்கிய அங்கமாக இருப்பது நடிகர்களின் ஃபிட்னெஸ் டிரெய்னர்கள்தான். அர்ஜுன், அஜித், பரத் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களின் ஃபிட்னெஸ் டிரெய்னர் சிவக்குமாரை சந்தித்துப் பேசினோம்.

அர்ஜுன்
அர்ஜுன்

``நீங்க நடிகர்களுக்கு ஃபிட்னெஸ் டிரெய்னரானது எப்போ?"

" 2000ல இருந்து பாடி பில்டிங் துறையில இருந்துட்டு இருக்கேன். மிஸ்டர். தமிழ்நாடு, மிஸ்டர். இந்தியானு பட்டங்கள் வாங்கியிருக்கேன். சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அப்படிதான் 'துரை' படத்துல சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஸ்பாட்ல அர்ஜுன் சார் என்னைப் பார்த்து கூப்பிட்டு, 'நீ பாடி பில்டரா?'னு கேட்டார். நானும் என் பாடி பில்டிங் கரியரைப் பத்திச் சொன்னேன். உடனே 'இந்தப் பட க்ளைமாக்ஸ்ல நான் சிக்ஸ் பேக் காட்டணும். என்னை டிரெயின் பண்றியா?'னு அவர் கேட்டதும் செம ஷாக். சரினு ரெண்டு மாசம் அவரை டிரெய்ன் பண்ணேன். முறையான பயிற்சி மூலமா அந்தப் பட க்ளைமாக்ஸ்ல அவர் நினைச்சதைவிட சூப்பரா அவர் உடல்வாகை கொண்டு வந்தேன். அவருக்கும் என்கூட வொர்க் பண்ணது ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போ இருந்து இப்போ வரைக்கும் அர்ஜுன் சார்கூட பயணிச்சுட்டு வர்றேன். அதுதான் நான் செலிபிரிட்டி ஃபிட்னெஸ் டிரெய்னரான தருணம்"

``அர்ஜுனுடைய வொர்க் அவுட் முறை என்ன? என்னென்ன சாப்பிடுவார்?"

``அவருடைய இடுப்பு 32 யைத் தாண்டியதே இல்லை. வொர்க் அவுட்டை விட்டாலும் ரன்னிங், வாக்கிங்னு கார்டியோ பண்ணிக்கிட்டே இருப்பார். அவருக்கு கை, மார்பு உள்ளிட்ட பகுதியில் இருக்கிற தசைகள் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது. அதுக்குத் தனியா வொர்க் அவுட் பண்ண வெச்சு தளர்ந்து இருந்த தசைக்களை இறுக்கமாக்கினேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தினமும் ரெண்டு மணி நேரம் ஜிம்ல வொர்க் அவுட் பண்ணுவார். பன்ச், கிக்னு அசால்டா ஐம்பது பண்ணிடுவார். ஷூட்டிங் போனால் நைட் பத்து மணிக்கு கூட ஜிம்முக்கு வந்து வொர்க் அவுட் பண்ணுவார். யாராவது அவருக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லிட்டாங்கன்னா, உடனே 'ஷர்ட்டை கழட்டு, உனக்கு பேக்ஸ் இருக்கா? எனக்கு இருக்கு'னு காட்டி அசத்திடுவார். காலையில கொஞ்சம் ராகி, பழங்கள், வேகவைத்த 5 முட்டை (வெள்ளைக் கரு மட்டும்). எப்போதாவது இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவார். மதியம் கொஞ்சம் சாப்பாடு, மாலை சூப் அல்லது ஜூஸ் எடுத்துக்குவார், இரவு சப்பாத்தி. வாரம் இருமுறை அசைவம் குறிப்பா மீன் சேர்த்துக்குவார். எந்தளவுக்கு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவுக்கு உணவு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்"

"நீங்க அஜித்துக்கு எப்போ அறிமுகம்?"

அஜித்
அஜித்

"அர்ஜுன் சார் மூலமா பரத் எனக்கு பழக்கமானார். '555' படத்துக்கு தீவிர முயற்சி செஞ்சு அவர் உடம்பை தயார்படுத்துகிட்டார். மூணு மாசம் டைம் எடுத்துக்கிட்டு சிக்ஸ் பேக் வரவெச்சோம். எல்லோரும் கிராஃபிக்ஸ்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 'மத்தவங்க நம்ப முடியாத அளவுக்கு நம்ம உடம்பை ரெடி பண்ணிட்டோம்'னு சந்தோஷமா இருந்தாலும், பாலிவுட் நடிகர்களுடைய வொர்க் அவுட்டுக்குக் கொடுக்கிற மரியாதையையும் பாராட்டையும் நம்ம ஊர் நடிகர்களுடைய கடின உழைப்புக்குக் கொடுக்கிறதில்லைங்கிற வருத்தம் இருந்தது.

அந்தச் சமயத்துல பரத் போன் பண்ணி, ‘அஜித் சார் மேனேஜர் பேசணும்னு சொன்னார்’னார். அப்புறம், அவர் பேசிட்டு 'அஜித் சார்கிட்ட பேசுங்க'னு அஜித் சார்கிட்ட போனை கொடுத்தவுடனே எனக்கு ஒண்ணுமே புரியலை. 'நான் அஜித் பேசுறேன். நீங்க சென்னையா?'னு கேட்டார். 'ஆமா'னு சொன்னவுடனே 'இப்போ என் வீட்டுக்கு வர முடியுமா?'னு கேட்டார். நைட் 11.30 மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். என் கார் கதவைத் திறக்க வந்தார். நான் அதுக்குள்ள இறங்கி அவர்கிட்ட போயிட்டேன். சூப்பரா பேசினார். அப்படிதான் 'ஆரம்பம்' படத்துக்கு அவர் ஃபிட்னஸ் டிரெயினரா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகுதான், நான் வெளியே தெரிய ஆரம்பிச்சேன். மனிதனை மனிதனா பார்க்கிற நல்ல மனிதர், அஜித்"

'இது பண்ணா என் ரசிகர்களுக்குப் பிடிக்கும்'னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுவார். 'நம்ம நல்ல விஷயங்கள் பண்ணா, அவங்களும் அதைப் பண்ணுவாங்கன்'னு நிறைய ரிஸ்க்கான வொர்க் அவுட்லாம் கூட பண்ணார்.
ஃபிட்னஸ் டிரெய்னர் சிவக்குமார்

அஜித்துடைய வொர்க் அவுட் முறை என்ன ? ஃபிட்னஸ்ல அவர் விரும்பிப் பண்ற விஷயம் எது ?

"அவர் செம ஹார்டு வொர்க்கர்னு எல்லோர் சொல்லி கேள்விப்ப்பட்டிருப்போம். ஆனா நான் நேர்ல பார்த்தேன். அவருக்கு உடம்புல நிறைய காயங்கள் இருக்கு. இருந்தும் வொர்க் அவுட்ல ரொம்ப மெனக்கெடுவார். அவர் ரசிகர்கள்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கார்னு நம்ம நினைப்போம். ஆனா, அவர் மனசுக்குள்ள ரசிகர்கள் மேல அவ்வளவு பாசம் வெச்சிருக்கார். 'இது பண்ணா என் ரசிகர்களுக்குப் பிடிக்கும்'னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுவார். 'நம்ம நல்ல விஷயங்கள் பண்ணா, அவங்களும் அதைப் பண்ணுவாங்கன்'னு நிறைய ரிஸ்க்கான வொர்க் அவுட்லாம் கூட பண்ணார். ஒரு சில நாள்கள் ஆறு மணி நேரமெல்லாம் கூட ஜிம்ல இருப்பார். திடீர்னு 'பரத் என்ன சாப்பிட்டார்? அதைச் சாப்பிட்டா டயர்ட் ஆகிடாதா? நானும் அதே ஃபாலோ பண்ணலாமா?'னு ஒவ்வொண்ணையும் கேட்டு ரசிச்சு ரசிச்சு பண்ணுவார். எவ்ளோ தூரம் நடக்கச் சொன்னாலும் ஜாலியா நடப்பார். ஆனா, டிரெட்மில்ல நடக்கிறது பிடிக்கவே பிடிக்காது.

'வீரம்' பட ஷூட்டிங்கின்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில அவரும் நானும் கிலோமீட்டர் கணக்குல நடப்போம். வாக்கிங் போறது அவருக்கு அவ்ளோ பிடிக்கும். 'ஆரம்பம்' படத்துல ஆரம்பிச்சு 'வேதாளம்' வரை நாலு படங்களுக்கு அஜித் சாருக்கு டிரெய்ன் பண்ணேன். 'என்னை அறிந்தால்' படத்துக்கு அருண் விஜய்யை டிரெய்ன் பண்ணச் சொன்னதே அஜித் சார்தான். 'இந்தப் படத்துடைய க்ளைமாக்ஸ்ல நான் சிக்ஸ் பேக் காட்டுறேனோ இல்லையோ அருண் விஜய் சிக்ஸ் பேக்ஸ் காட்டணும். இதுக்குப் பிறகு, அவர் கிராஃப் எங்கேயோ போகப் போகுது'னு சொன்னார். அந்தப் படத்துல அருண் விஜய் உடம்பைப் பத்தி அஜித் சார் அவ்ளோ அக்கறையா கேட்டுத் தெரிஞ்சுப்பார். தன்கூட இருக்கிறவர் மேல வரணும்னு மத்தவங்க நினைப்பாங்களானு தெரியலை. அவர் சொன்னபடி ’என்னை அறிந்தால்’ அருண் விஜய்க்கு செம பிரேக்!"

"40 வயத்துக்கு மேல் ஒருத்தர் ஜிம்முக்கு வந்து வொர்க் அவுட் பண்ணணும்னு நினைக்கிறது சாத்தியமா?"

``தாராளமா பண்ணலாம். 'அதிகமா வெயிட் தூக்கி வொர்க் அவுட் பண்ணாதான் உடம்பு ஏறும், சாப்பிடாமல் இருந்தால்தான் சிக்ஸ்பேக்ஸ் வரும்'னு நிறைய தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில இருக்கு. எல்லோருடைய உடலிலும் இயற்கையாகவே சிக்ஸ் பேக் இருக்கு. ஆனா, அதை வெளியே கொண்டுவர்றதுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை. 40 வயசுக்கு மேல ஹார்மோன் சுரக்கறது கம்மியாகும்போது வெள்ளை அணுக்கள் உற்பத்தியும் குறைஞ்சிடுது. அதனாலதான் அந்தக் காலட்டத்துல அத்தனை பிரச்னைகள் வருது. அதை நம்ம உடற்பயிற்சி, உணவு பழக்கம் மூலமா சரி செஞ்சிடலாம்.

நாற்பது வயசுல சர்க்கரை நோய் வரும், மாரடைப்பு வரும்னு மருத்துவர்கள் நம்மளை பயமுறுத்தி வெச்சிருக்காங்க. மனதளவுல நம்ம ஆரோக்கியமா இருந்தால் போதும். எல்லாமே சாத்தியம்தான். வெயிட் லிஃப்டிங்லாம் இல்லாமல் அந்தக் காலத்துல ஸ்கூல்ல 'பிடி சார்' சொல்லிக்கொடுத்த உடற்பயிற்சிகளை தினந்தோறும் பண்ணாலே போதும். மூச்சு இழுத்து விடுறது மூலமாகவே உடம்பில இருக்கிற கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிவிடலாம். அது வெளியேறிட்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதுனாலதான் யோகாவுல மூச்சுப்பயிற்சினு தனியா ஒண்ணு வெச்சிருக்காங்க. 40 ஏன் 80 கூட உடல் பயிற்சியை ஆரம்பிக்கலாம், சிக்ஸ் பேக்லாம் வெச்சு பாடி பில்டர் கூட ஆகலாம். ஆனா, அதுக்குக் கொஞ்சம் டைம் கொடுக்கணும். படிப்புக்கு எப்படி வயது வரம்பு இல்லையோ அது மாதிரி உடற்பயிற்சி பண்ண ஆரம்பிக்கிறதுக்கும் வயது வரம்பு கிடையாது."

"ஸ்டீராய்ட்ஸ் ஊசிபோட்டு சீக்கிரம் பாடி பில்டிங் பண்றாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?"

பரத்
பரத்

``நிறைய பேர் அதைப் பயன்படுத்துறாங்கங்கிறது உண்மைதான். ஆனால், அது அவசியமே இல்லை. ஸ்டீராய்ட்ஸ் நம்ம உடம்புல இருக்க ஹார்மோன்களைத் தூண்டிவிடும். சோர்வடையாமல் அதிக நேரம் வெயிட் தூக்கி வொர்க் அவுட் பண்ண முடியும். அதனால் தசைகள் சீக்கிரமாவே விரிவடையும். ஆனால், உடலுக்கு அது நல்லதே இல்லை; ரொம்பத் தவறான விஷயம். இந்தியாவுல இயற்கையான பாடி பில்டிங் அசோசியேஷனே இல்லைங்கிறதுதான் பிரச்னை. அதனால, பசங்க எல்லோரும் எப்படியாவது சாதிக்கணும்னு நினைச்சுத் தப்பான வழியில போறாங்க. பாடி பில்டிங்ல ஸ்டீராய்ட்ஸ் பயன்படுத்தவும் ஒரு லெவல் இருக்கு. அதைத் தாண்டிடுச்சுன்னா, மிஸ்டர். இந்தியா மாதிரியான போட்டிக்கு முன் வெக்கிற டெஸ்ட்ல தகுதி நீக்கம் பண்ணிடுவாங்க."

ஒரே ஒரு ரெக்வெஸ்ட் என்னன்னா, ஃபிட்னஸைப் பொறுத்தவரை யூ டியூப்பே பார்க்காதீங்க!
ஃபிட்னஸ் டிரெய்னர் சிவக்குமார்

``சினிமா பிரபலங்களின் வொர்க் அவுட் வீடியோஸ் பார்த்து நிறைய பேர் அதிக வெயிட் போட்டு வொர்க் அவுட் பண்றாங்களே!"

"நடிகர்கள், யூ டியூப்ல வொர்க் அவுட் வீடியோ போடுறதைப் பார்த்து அதே மாதிரி பண்ணணும்னு நினைக்கிறது தவறு. அதுல, குறிப்பிட்ட படத்துக்காக மட்டும் அதிக வெயிட் போட்டு வொர்க் அவுட் பண்ணியிருப்பாங்க. அந்தப் படம் முடிஞ்ச பிறகு, அந்த வொர்க் அவுட்ஸ் பண்ணாமல் நார்மலான உடற்பயிற்சிக்கு வந்திடுவாங்க. எல்லா செலிபிரிட்டீஸும் அப்படிதான். 'இந்தப் படத்துக்கு நாங்க இவ்ளோ உழைக்கிறோம்'னு காட்டுறதுக்காகத்தான் சோஷியல் மீடியால போடுறாங்க, அவ்ளோதான். யூடியூபை மட்டும் பார்த்துட்டு நம்மளும் அதை ஃபாலோ பண்ணக் கூடாது. அந்த வொர்க் அவுட்டுக்குப் பிறகு அவங்க என்ன சாப்பிடுறாங்க, அந்தப் படம் முடிஞ்ச பிறகு, அவங்க எந்தெந்த வொர்க் அவுட்டைத் தவிர்க்கிறாங்கனு வீடியோ பார்க்குறவங்களுக்குத் தெரியாது. ஆக, ஒரே ஒரு ரெக்வெஸ்ட் என்னன்னா, ஃபிட்னஸைப் பொறுத்தவரை யூ டியூப்பே பார்க்காதீங்க!"

''புதுசா உங்ககிட்ட ஜிம் டிரெயினிங்க்கு வந்த செலிபிரிட்டி யார்?"

அருண் விஜய்
அருண் விஜய்

'' ’அசுரன்’ படத்துக்காக கருணாஸ் அண்ணனின் பையன் 'கென்.' பத்துக் கிலோ குறைக்கவெச்சு அவரை அந்தப் படத்துக்குத் தயார் செஞ்சேன். அப்புறம், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, சிம்புசார் கூப்பிட்டு உடம்பைக் குறைச்சு சிக்ஸ் பேக் வைக்கணும்னு பேசினார். அதுக்குப் பிறகு, லண்டனுக்குப் போய் கொஞ்சம் உடல் எடையைக் குறைச்சுட்டு வந்திருக்கார். ஒரு படத்துக்காக பயங்கரமா அவரை ரெடி பண்ணச் சொல்லியிருக்கார். சீக்கிரம் அதுக்கான வேலைகள் ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். எனக்கு விஜய் சாருக்கு டிரெய்ன் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. லாரன்ஸ் மாஸ்டருக்கு நான்தான் டிரெய்ன் பண்ணிட்டு இருக்கேன். அவரும் விஜய்சாரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்னு எல்லோருக்குமே தெரியும். அவர்கிட்ட சொல்லி, 'விஜய் சாருக்கு டிரெய்ன் பண்ண கேட்டுச் சொல்லுங்க'ன்னு சொல்லியிருக்கேன். ’பிகில்’ படத்துக்குப் பிறகு, அந்த வாய்ப்பு வருதானு பார்ப்போம். விஜய் சார் இப்போவும் செம ஃபிட்தான். இருந்தாலும், இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டு வொர்க் அவுட் பண்ணா வேற லெவலில் இருப்பார். அப்படி அவரை ரெடி பண்றதுக்காக வெயிட்டிங்!”