
இன்ஸ்டா போஸ்ட்கள்.
செலிபிரிட்டி பெண்கள், தங்கள் குழந்தைகளோடு கொஞ்சும், கெஞ்சும் புகைப்படங்கள் அவர்களின் நட்சத்திர இமேஜையும் மீறி நம்முடன் சட்டென ஒரு நெருக்கத்தை உண்டாக்கிவிடும். குறிப்பாகப் பெண்களுக்கு, ‘ஸ்டாரா இருந்தாலும் இவங்களும் நம்மளமாதிரி குழந்தைங்களோடு பாடாப்படுற அம்மாதானா...’ என்று அவர்களை எக்ஸ்ட்ராவாக ரசிக்கவைக்கும். அப்படி தங்களின் இன்ஸ்டா பக்கத்தில், தாய்ப்பால் முதல் டயப்பர்வரை போஸ்ட் செய்து, தங்களின் ஃபாலோயர்களுக்கு #மாம்கோல்ஸ் தந்துகொண்டிருக்கும் செலிபிரிட்டி பெண்களிடம் பேசினோம்.
குஷ்பூ
“என் ரெண்டு பொண்ணுங்களும் இன்ஸ்டா அக்கவுன்ட் ஆரம்பிச் சதுக்கு அப்புறம்தான், இன்ஸ்டான்னு ஒண்ணு இருக்கிறதே எனக்குத் தெரியும். என் இன்ஸ்டா பக்கத்தில், ‘மை ஏஞ்சல்ஸ்’, ‘என் பொம்மைக் குட்டி’, ‘ஆல்வேஸ் அப்பா பொண்ணு’ன்னு என் பொண்ணுங்களைக் கொஞ்சி போஸ்ட்ஸ் போட்டுட்டே இருப்பேன். இன்ஸ்டால மட்டுமல்ல, நிஜத்திலும் என் பொண்ணுங்களை நான் இப்படிக் கொஞ்சிக் கிட்டேதான் இருப்பேன். டெய்லி ராத்திரி எனக்கு முத்தம் கொடுத்துட்டுத்தான் அவங்க தூங்கப்போவாங்க.

17, 20 வயதுகளில் இருக்கும் என் பொண்ணுங்க அனி, அவந்திகாவும் எனக்குத் தோழிகள். யாராச்சும் ஒரு பையன் மெசேஜ் அனுப்பினா, சைட் அடிச்சா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாங்க. அதேபோலத்தான் இன்ஸ்டாவிலும் நாங்க இருக்கோம். நான் என் பசங்களோட இன்ஸ்டாவை ஃபாலோ பண்றேன்; அவங்க என் இன்ஸ்டாவை ஃபாலோ பண்றாங்க. அவங்க போடுற போஸ்ட் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தா படிப்பேன், அவங்க ஏஜ் குரூப்ல இருந்தா விட்டுடுவேன்.
என் குழந்தைகள் இன்ஸ்டால போட்டோஸ் போடும்போது யாராவது விரும்பத்தகாத கமென்ட் பண்ணினா, அடிபட்ட தாய்ப்புலி மோடுக்கு நான் மாறிடுவேன். நான் ஒரு நடிகை, அரசியல்வாதிங்கிறதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுட்டு, கமென்ட்ல இறங்கி பதிலடி கொடுப்பேன். ஏன்னா, எனக்கு அம்மாங்கிற ரோல்தான் உலகத்திலேயே முக்கியமானது!”
அர்ச்சனா
‘` ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே என் இன்ஸ்டாவில் ஸாராவோட போட்டோஸை போட்டுட்டிருக்கேன். இந்த நிகழ்ச்சியை என்கூட சேர்ந்து ஸாராவும் நடத்த ஆரம்பிச்சதுலேருந்து, அவளோட, எங்களோட ஹேப்பி மொமென்ட்களை இங்க அதிகமா ஷேர் பண்ண ஆரம்பிச்சேன்.

என்னை அர்ச்சனாவா பார்த்தவங்க இப்போ ‘அச்சும்மா’ன்னு கொண்டாடுறாங்க. சமீபத்துல ஒரு உறவினரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போயிருந்தப்போ, மாஸ்க்கையும் மீறி என்னை அடையாளம் கண்டு, ‘அச்சும்மா என்னாச்சு..?’ன்னு விசாரிச்சாங்க ஒரு அம்மா. 65 வயசு அம்மாவுக்கும் நான் ‘அச்சும்மா’ன்னு நினைச்சப்போ சந்தோஷமா இருந்தது. என் இன்ஸ்டா போஸ்ட்கள்ல, ஸாராவோட அம்மா அச்சும்மாவை நிறைய பார்க்கலாம். ஸாரா... பல நேரங்கள்ல அவதான் எனக்கு அம்மாவா இருக்கா!”
அஞ்சனா
“நான் என் குழந்தை ருத்ராக்ஷோட போட் டோவை இன்ஸ்டால ஷேர் பண்ணும்போது நிறைய பேர் பார்த்துட்டு, ‘குழந்தை ரொம்ப அழகா இருக்கான்’, ‘குழந்தை சீக்கிரம் வளர்ந்துட்டான்’னு தங்களோட சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் ஷேர் பண்ணும்போது, அது மனசுக்கு ஒரு நல்ல ஃபீல் கொடுக்கும்.

என் இன்ஸ்டா பேஜ் ஃபாலோயர்ஸ்ல நிறைய இளம் வயது அம்மாக்கள் இருக்காங்க. குழந்தை வளர்ப்பு பத்தி நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை அவங்களோடு பகிர்ந்துப்பேன். குழந்தை வளர்ப்பு பற்றி ஏதாவது சந்தேகம் கேட்கும்போது, எனக்கு அதைப் பத்தித் தெரியலைன்னாலும், சம்பந்தப்பட்ட எக்ஸ்பர்ட்ஸ் நம்பர் வாங்கி அவங்களுக்கு ஷேர் பண்ணுவேன். இப்டிதான் என் அக்கவுன்ட் அப்பப்போ ஒரு ‘மதர்ஸ் க்ளப்’பாகி கலகலன்னு இருக்கும்.”
சுஜா வருணி
“என் குழந்தை அத்வைத் பிறந்து ரொம்ப நாள் கழிச்சு ஒருநாள் இன்ஸ்டால லாகின் ஆனப்போ, ‘சுஜா, நார்மல் டெலிவரியா?’, ‘கணவர் லேபர் ரூம்குள்ள வந்தாரா?’, ‘எவ்ளோ நேரம் பிரசவ வலி இருந்தது?’, ‘உங்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் வந்துடுச்சா?’ன்னு என் ஃபாலோயர்கள் நிறைய பேர் ப்ரைவேட் மெசேஜ்ல நலம் விசாரிச்சிருந்தாங்க. அவங்களுக்கும், மற்ற பெண் களுக்கும், ஒரு அம்மாவா என் அனுபவங்களை இன்ஸ்டா போஸ்ட்களா போட ஆரம்பிச்சேன். இன்ஸ்டால என்னோட முதல் ‘மாம் போஸ்ட்’. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பற்றி நிறைய கேள்விகள் வர, ‘நான் டாக்டரின் பரிந்துரையில் வயிற்றை மாய்ஸ்ச்சரைஸ் பண்ணிட்டே இருந்தேன், அதனால எனக்கு மார்க்ஸ் இல்ல. ஒருவேளை இருந்திருந்தாலும், அதை நான் என் குழந்தை என் வயித்துல வரைஞ்ச ஓவியமா நினைச் சிருப்பேன்’னு போட்ட போஸ்ட்டுக்கு, கமென்ட்ஸ்ல நிறைய அன்பு கிடைச்சது.

‘எனக்குத் தாய்ப்பால் சுரப்பு சரியா இல்லையே’ன்னு கேட்டிருந்தவங்களுக்கு, ‘எனக்கும் குழந்தை பிறந்த ரெண்டு நாள் அப்டிதான் இருந்தது, டாக்டர் அறிவுரையைப் பின்பற்றி அதை அதிகரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி தாய்ப்பால் பற்றிப் போட்டிருந்த போஸ்ட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்!”

விஜயலட்சுமி
“நிலன் பிறந்ததுக்கு அப்புறம், என் இன்ஸ்டா அக்கவுன்ட் ரொம்ப அழகாயிடுச்சு. அவன் போட்டோஸ், வீடியோஸ்னு போட்டுட்டே இருப்பேன். உண்மையைச் சொல்லணும்னா, இப்போ என்னைவிட நிலன் குட்டிக்குத்தான் நிறைய ஃபேன் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. கொஞ்ச நாள் அவன் போட்டோ போடலைன்னா, ‘நிலன் போட்டோ ஷேர் பண்ணுங்க’ன்னு அவங்களே கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. நிலனோட மூன்றரை நிமிஷம் வீடியோ ஒண்ணு போஸ்ட் பண்ணி யிருந்தேன். சாப்பிடும்போது, விளையாடும் போதெலாம் அவன் அனிச்சையா ‘மம்மி லுக், மம்மி லுக்...’னு சொல்லிட்டே இருப்பான். கிட்டத்தட்ட 50 தடவை அப்படி அவன் என்னைக் கூப்பிட்டதையெல்லாம் தொகுத்த வீடியோ அது. அதுக்கு அவ்ளோ வரவேற்பு. குழந்தை வளர்ப்பு பத்தி நான் போடுற போஸ்ட் எல்லாம் படிச்சிட்டு நிறைய பேர் இன்பாக்ஸ்ல வந்து, ‘எனக்கு மூணு மாசத்துல ஒரு குழந்தை இருக்கு...’ன்னு ஆரம்பிச்சு டிப்ஸ்லாம் கேப்பாங்க. நானும் சொல்வேன். இதெல்லாம் ஒரு மாதிரி நிறைவா இருக்கு. எனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் நிலன் பண்ணுற சேட்டையெல்லாம் பார்க்கும்போது எல்லாமே மறந்துபோயிடும். என் உலகம் இப்போ அவனைச் சுத்திதான். அவன் வளர்ந்துட்டே வர்றான்.”