Published:Updated:

"தன் வீடுன்னா இப்படி அனுமதி வாங்காம கட்டியிருப்பாரா ராதாரவி?"- டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் ஆவேசம்!

சீல் வைக்கப்பட்ட ராதாரவி வளாகம்

டப்பிங் யூனியன் கட்டத்துக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி. நடிகர் ராதாரவிதான் காரணமா? டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் யூனியனின் செயலாளரும் சொல்வது என்ன?

Published:Updated:

"தன் வீடுன்னா இப்படி அனுமதி வாங்காம கட்டியிருப்பாரா ராதாரவி?"- டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் ஆவேசம்!

டப்பிங் யூனியன் கட்டத்துக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி. நடிகர் ராதாரவிதான் காரணமா? டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் யூனியனின் செயலாளரும் சொல்வது என்ன?

சீல் வைக்கப்பட்ட ராதாரவி வளாகம்
சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களுக்கென பிரத்யேகமாக 'டத்தோ ராதாரவி வளாகம்' இயங்கி வருகிறது. தற்போது, இந்த டப்பிங் யூனியன் கட்டடம் அரசு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதற்கு சீல் வைத்துள்ளது சென்னை மாநகராட்சி.

நடிகர் ராதாரவி தலைவராக இருக்கும் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதன் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை எனத் தெரியவர, தொடர்ந்து சங்க நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வரும் தாசரதியிடம் பேசினோம்.

தாசரதி
தாசரதி

‘’டப்பிங் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சம்பளத்துல ஒரு பகுதியைக் கொடுத்து அதன் மூலமா வளர்ந்த சங்கம் இது. ஆனா நிர்வாகிகளா இருக்கிற சிலருடைய அடாவடியான செயல்களால் இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்கு.

இப்ப இருக்கிற கட்டடம், கட்டடத்துடனே விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா நிர்வாகக் கணக்குகள்ல இடத்தை மட்டும் தனியா வாங்குனதாகவும் பிறகு கட்டடம் எழுப்பியதாகவும் தனித்தனியா கணக்குக் காட்டியிருக்காங்க. அந்த வகையிலேயே பெரிய நிதி மோசடி நடந்திருக்கு.

கட்டடமா வாங்கிட்டு மூணு மாடிகளை எழுப்பியபோது முறைப்படி அனுமதி வாங்கலை. உறுப்பினர்கள் யாராவது இதுபத்திக் கேட்டு, கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யுங்கன்னு சொன்னா, அவங்களைச் சங்கத்துல இருந்து நீக்கிட வேண்டியது. எத்தனை நாளைக்கு இந்த மோசடிகளைத் தொடர்ந்து செய்திட்டே இருக்க முடியும்? அதான் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கு.

எங்களுடைய கேள்வி என்னன்னா, நிர்வாகத்துல இருக்கிற ஒரு சிலருடைய சுயநலத்துக்காக சுமார் 2000 உறுப்பினர்களுடைய வியர்வையிலயும் ரத்தத்துலயும் வளர்ந்த சங்கம் பலியாகணுமாங்கிறதுதான்.

ராதாரவியோ அவருக்கு ஆதரவா இருக்கிற யாருமோ சொந்தமா வீடு கட்டுறாங்க. அப்ப இந்த மாதிரி அனுமதி வாங்காம கட்டுவாங்களா? சங்கத்தைச் சொந்த வீடு மாதிரி நினைச்சு வேலை செய்யறதா இருந்தா பொறுப்புக்கு வரணும். இல்லாட்டி ஒதுங்கிடணும்.

எங்களுக்கு இன்னொரு வருத்தமும் இருக்கு. டப்பிங் யூனியன் பெப்சியின் ஒரு அங்கம். ஆனா இவ்ளோ நடக்கறப்ப தலையிட்டு நல்லதொரு தீர்வு காண முயற்சி செய்யாம எனக்கென்னனு இருக்கு பெப்சி. இது ரொம்பவே தப்பு!’’ என்கிறார் தாசரதி.

தற்போது யூனியனின் செயலாளராக இருக்கும் கதிரிடம் பேசினோம்.

"மாநகராட்சி அதிகாரிகள் சீல் வச்சிட்டுப் போயிட்டாங்க. கட்டடத்துக்கு முதல் மாடிக்கு அனுமதி வாங்கலைங்கிறது நிஜம்தான். ஆனா அதனால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.

இந்த மாதிரி நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரமா எடுக்கத் தொடங்குச்சுன்னா பாதி சென்னையை இடிச்சாகணும்.

ராதாரவி
ராதாரவி

சங்கத்துல உறுப்பினரா இருந்த கண்ணன்ங்கிறவர், ராதாரவிக்கு எதிராகச் செயல்படணும் நினைச்சு மொத்த சங்கத்தையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கார். இத்தனைக்கும் அவருடைய அப்பா இறந்த போது கூடவே நின்னவர் ராதாரவி சார்.

இந்த விவகாரத்தை நாங்க சும்மா விடப்போறதில்லை. வழக்கறிஞர்களுடன் ஆலோசிச்சு அடுத்தகட்டமா சட்டபூர்வமா என்ன செய்யணுமோ அதைச் செய்து இதே கட்டடத்தை மீட்போம்ங்கிறது மட்டும் உறுதி!" என்கிறார் அவர்.

சில சங்க உறுப்பினர்களிடம் இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசினோம்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர்கள், "சங்கத்துல நிர்வாகிகளா இருக்கிறவர்களுக்குள்ளேயே சுமூகமான ஒத்துழைப்பு இல்லை. ராதாரவியும் அவரைச் சுத்தி இருக்கிற ஒருசிலருமே எல்லா விஷயங்களையும் தன்னிச்சையா முடிவு செய்துடுறாங்க. அதனால்தான் இந்த மாதிரியான சிக்கல்களையெல்லாம் சந்திக்க வேண்டி வருது" என்கிறார்கள்.