சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

டி.சந்தானகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.சந்தானகிருஷ்ணன்

1990-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அடிஷனல் கலெக்டராக நியமிக்கப்பட்டேன். அங்க 16mm புரொஜெக்டர் நல்ல விலையில் கிடைச்சுது. சில படங்களின் பிலிம்களையும் பல ஊர்கள் சுத்தி அலைஞ்சு வாங்கினேன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

திரையிசைப்பாடல்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக 9 வயதிலிருந்தே கிராமபோன் ரிக்கார்டுகளை வாங்கித் தனது சேகரிப்புப் பணியைத் தொடங்கிய திருநின்றவூர் டி.சந்தானகிருஷ்ணனுக்கு இப்போது வயது 80. சென்னையின் புறநகர்ப்பகுதியான நெமிலிச்சேரியில் உள்ள இவர் வீட்டின் முதல் தளத்துக்குச் சென்றால் இவரது 71 ஆண்டுக்காலச் சேகரிப்புகளைக் கண்டு பிரமித்துப்போவோம். ஆயிரக்கணக்கான கிராமபோன், லாங் ப்ளே, எக்ஸ்டண்டட் ப்ளே ரிக்கார்டுகள், அதற்கான ப்ளேயர்கள், அலமாரியில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கோப்புகளுக்குள் பழைய பாட்டுப் புத்தகங்கள், கிடைத்தற்கரிய புகைப்படங்கள், ஆயிரக்கணக்கில் படப்பாடல்கள் மற்றும் பன்மொழிப்பட டி.வி.டி-க்கள் என நிறைந்திருக்கும் இவருடைய சேகரிப்புகள் தனிமனிதரின் தீவிர ஈடுபாட்டால் உருவாகியிருக்கும் ஓர் ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது. 71 ஆண்டுகள் இதை வாழ்நாள் தவமாகச் செய்துவரும் சந்தானகிருஷ்ணனைச் சந்தித்தேன்...

‘‘இசை மேல வந்த ஈடுபாடுதான் இத்தனை சேகரிப்புகளுக்கும் ஆதாரமா இருக்கு. பிற்காலத்தில் இதெல்லாம் முக்கியமான ஆவணாமாகும்ங்கிற திட்டத்தோடவெல்லாம் நான் சேகரிக்க ஆரம்பிக்கலை. இயல்பா உண்டான ஆர்வம் என் வாழ்க்கையாவே மாறிடுச்சு’’ என்கிறார் சந்தானகிருஷ்ணன். இவரது சொந்த ஊரான திருநின்றவூருடன் சேர்த்தே இவர் அழைக்கப்படுகிறார்.

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

‘‘திருநின்றவூர்ல மூணாம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்கு மேல படிக்கிறதுக்காக 1949-ம் ஆண்டு ஏழுகிணற்றில் இருந்த என் மாமா வீட்டுக்கு என்னை அனுப்பி வெச்சாங்க. அங்கதான் எனக்கு சினிமா ஆர்வமே உருவாச்சுன்னு சொல்லலாம். குறிப்பிட்ட சில டீக்கடைகளில் ஹெ.எம்.வி (his masters voice) ப்ளேயர்ல எந்நேரமும் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும். வர்றவங்க பாட்டைக் கேட்டுக்கிட்டே டீ குடிப்பாங்க. அன்னைக்கு கிராமபோன் ப்ளேயர்லாம் பெரிய பணக்காரங்க வீட்டுலதான் இருக்கும். அது ஒரு அந்தஸ்தாகவும் இருந்துச்சு. செல்வந்தர்கள் வீட்டுக்கு வெளியே பெரிய திண்ணை இருக்கும். அந்தத் திண்ணையில் கிராமபோன் ப்ளேயரை வெச்சு பாட்டு போடுவாங்க. அந்தப் பகுதி மக்கள் எல்லாரும் திண்ணைக்குக் கீழ உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டிருப்பாங்க. தமிழ்ப் பாடல்களுக்கு சமமா இந்திப் பாடல்களையும் அர்த்தம் புரியாமக்கூட கேட்டு ரசிச்சாங்க. நானும் அது மாதிரி சினிமாவை பிரமிப்போட ரசிச்சேன்.

அம்மா என்னைப் பார்க்க வரும்போது அஞ்சு ரூபாய் கொடுப்பாங்க. ஒரு ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி வித்த காலத்துல அஞ்சு ரூபாய் பெரிய தொகை. அம்மா 5 ரூபாய் கொடுத்ததை மாமாகிட்ட சொல்லாம நாலணா, எட்டணா கொடுத்தாங்கன்னு சொல்லிட்டு அந்தக் காசை வெச்சு சினிமாவுக்குப் போவேன். ஏழுகிணற்றைச் சுத்தியும் ‘கினிமா சென்ட்ரல்’ ‘மினர்வா’ ‘பிரபாத்’ ‘ப்ராட்வே’ ‘க்ரௌன்’ ‘கிருஷ்ணா’னு தியேட்டர்கள் இருந்தது. மினர்வா ஏ.சி தியேட்டர், அங்கதான் முதன்முதலா 3 1/3 அணா டிக்கெட்டில் ‘பவானி ஜங்ஷன்’னு இந்தி டப்பிங் படம் பார்த்தேன். ப்ராட்வே தியேட்டர்ல பெரும்பாலும் இந்திப்படங்கள்தான் ஓடும். கினிமா சென்ட்ரல் தியேட்டர்லதான் தென்னிந்தியாவோட முதல் பேசும்படமான காளிதாஸ் படம் போடப்பட்டது. அது நாளடைவில்  முருகன் தியேட்டரா மாறி இப்ப அதை இடிச்சுட்டாங்க. 3 1/3 அணா, 8 அணா, 10 அணான்னு டிக்கெட் விலை இருந்தது. அன்னைக்கு படம் பாக்குறதுதான் முக்கியமான பொழுதுபோக்கா இருந்ததால கூட்டம் அலைமோதும். சினிமாவை மிகப்பெரும் திருவிழாவா கொண்டாடின மக்கள் நிறைய இருந்தாங்க’’ என்று அந்தக் காலகட்டத்தை நம் கண்முன் விரித்தவர், அடுத்ததாக கிராமபோன் வரலாறு மற்றும் அதனைச் சேகரித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்...

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

‘‘1894-ம் ஆண்டே எடிசன் கிராமபோனைக் கண்டுபிடிச்சிருந்தாலும் 1916-ம் ஆண்டுதான் அது புழக்கத்துக்கு வந்தது. எடிசன் ரிக்கார்ட்ஸ்தான் முதலில் கிராமபோன் ப்ளேயர் மற்றும் ரிக்கார்டைத் தயாரிச்சாங்க. அதுக்குப் பிறகு நிறைய கம்பெனிகள் அதைத் தயாரிச்சுது. இந்தியாவில் ஹெச்.எம்.வி, கொலம்பியா, ஹட்சன், ப்ராட்காஸ்ட், மெலடின்னு சில கம்பெனிகள் இருந்தன. அன்னைக்கு கிராமபோன் பிளேயர் 120-150 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டுச்சு. ரிக்கார்டு 2-3 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுச்சு. பணம்படைச்சவங்க மட்டுமேதான் கிராமபோன் வாங்க முடியும்ங்கிற நிலைமை இருந்தது. கேட்டு முடிச்ச ரிக்கார்டுகள் மூர்மார்க்கெட்ல இரண்டாம்தரமா விற்பனைக்கு வரும். 2 அணா, 3 அணா விலைகளில் அந்த ரிக்கார்டுகளை வாங்கிச் சேகரிக்க ஆரம்பிச்சேன். கொலம்பியா, ஹெச்.எம்.வி கம்பெனிகளோட ரிக்கார்டு எல்லாம் கொல்கத்தா `டம் டம்'லதான் அச்சாகி வரும். தமிழ்ப்பாட்டுதான்னு இல்லை, என்னென்ன பாட்டு கிடைக்குதோ எல்லாத்தையும் வாங்கிடுவேன். நம்ம தமிழ் சினிமாவே பாடல்களிலிருந்துதான் தொடங்கி வளர்ந்துச்சு.

லயோலா கல்லூரியில் படிச்சு முடிச்சிட்டு 1964-ம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்தேன். 85 ரூபாய் சம்பளத்துல 50 ரூபாயை வீட்டுச் செலவுகளுக்குக் கொடுத்துட்டு 35 ரூபாய்க்கு ரிக்கார்டு வாங்கினேன். என் சேகரிப்புகள் மூலமா பல பகுதிகளிலும் என்னுடைய தொடர்புகள் வளர்ந்தன. அதனால தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திப் படப் பாடல்களை சுலபமா வாங்க முடிஞ்சுது. 1972-ல் வெளிவந்த ‘சுபோதயம்’ படத்துல ‘ஆசிந்த நீகோரா’ பாடல் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல். அந்தப் படத்தோட இ.பி-யில் (extented play) அந்தப் பாட்டு மட்டும் இல்லை. அந்த ஒரு பாட்டைத் தேடிப் பல இடங்களில் அலைஞ்சும் எனக்குக் கிடைக்கலை. ஒருத்தர் எங்கிட்ட ஒரு மூட்டை ரிக்கார்டரைக் கொடுத்து எதாவது விலைக்கு வாங்கிக்கங்கன்னு சொன்னார். அதுல இருந்து ஒரு ரிக்கார்டை வெளியே எடுத்துப் பார்த்தா அது ‘ஆசிந்த நீகோரா’ பாட்டு. இப்படி எதிர்பாராத விதமாவும் எனக்குப் பல பாடல்கள் கிடைச்சிருக்கு'' என்றவர், தனது அரசு அலுவலகப் பணிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்த சேகரிப்புப் பணி குறித்துக் கூறினார்.

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

``1990-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அடிஷனல் கலெக்டராக நியமிக்கப்பட்டேன். அங்க 16mm புரொஜெக்டர் நல்ல விலையில் கிடைச்சுது. சில படங்களின் பிலிம்களையும் பல ஊர்கள் சுத்தி அலைஞ்சு வாங்கினேன். அதே காலத்தில்தான் வி.ஹெச்.எஸ் (video home system) கேசட்டுகளும் வர ஆரம்பிச்சுது. 250 ரூபாய்னு வித்த கேசட்டுகளை வரிசையா வாங்க ஆரம்பிச்சேன். 1995-ம் ஆண்டு தமிழ்வளர்ச்சித்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறைகளில் இணைச்செயலாளராகப் பணி உயர்த்தப்பட்டேன். பணி நிமித்தமா டெல்லி, மும்பை, கொல்கத்தான்னு பல பகுதிகளுக்கும் போக வேண்டிய சூழல். ஒவ்வொரு ஊருக்கும் போய்ட்டுத் திரும்பி வரும்போது சினிமா தொடர்பான சேகரிப்புகளோடுதான் வருவேன். `அங்கெல்லாம் நிறைய எலெக்ட்ரானிக் பொருள்கள் குறைஞ்ச விலையில கிடைக்குமே. அதெல்லாம் வாங்கிட்டு வர மாட்டீங்களே’ன்னு என் மனைவி எங்கிட்ட கோவிச்சுக்குவாங்க. ஒரு எலெக்ட்ரானிக் பொருள் வாங்கறதுக்கு பதில் 50 ரிக்கார்டுகளை வாங்கிட்டு வரலாம் இல்லையா. அது மட்டுமல்லாம, இந்தச் சேகரிப்புகளைத் தாண்டி மற்ற விஷயங்களில் என் கவனமே போனதில்லை'' என்கிறார் சந்தானகிருஷ்ணன்.

இவரின் சேகரிப்புகளைத் துல்லியமாக அளவிட்டுக் கூற முடியாது. 1934-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது இவரது இசைச் சேகரிப்புகள். சராசரியாக 25,000 கிராமபோன் ரிக்கார்டுகள், 15,000 லாங் ப்ளே ரிக்கார்டுகள், 8,000 எக்ஸ்டண்டட் ப்ளே ரிக்கார்டுகள், இந்திய சினிமா மட்டுமல்லாது ஹாலிவுட், கொரியன், ஈரான், லத்தீன் அமெரிக்கா என உலகப்படங்களும் சேர்த்து 20,000 டி.வி.டி-க்கள் இவரது அலமாரியை நிரப்பியிருக்கின்றன. 1931-2000 வரையிலான 3,500 பாட்டுப்புத்தகங்கள், பேசும்படம், பொம்மை, பேசும்பறவை, குண்டூசி, நாரதர், சினிமா தூது போன்ற 70க்கும் மேற்பட்ட சினிமாப் பத்திரிகைகள், மௌனப்படங்கள் தொடங்கி தற்போது வரையிலுமான அரிய புகைப்படங்கள், நெகட்டிவ்கள் எனப் பட்டியல் நீள்கிறது.

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

‘‘நானா தேடிப் போய் வாங்கினது ஒரு பக்கம்னா, தானா தேடி வந்ததும் நிறைய. முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவங்க சேகரிச்சு வெச்சுட்டுப்போறதோட மதிப்பு அடுத்த தலைமுறைக்குத் தெரியுறதில்லை. அதையெல்லாம் இடத்தை அடைச்சுக்கிட்டிருக்க குப்பையாதான் பார்க்குறாங்க. இதனாலதான் பல ஓலைச்சுவடிகள் அழிஞ்ச மாதிரியே திரைப்படங்களும் அழிஞ்சுது. தென்னிந்தியாவின் முதல் பேசும்படம்ங்கிற சிறப்புக்குரிய காளிதாஸ் படம் இப்ப யார்கிட்டயும் இல்லை. அதுக்கும் முந்தைய மௌனப்படங்கள் எல்லாத்தையுமே நாம இழந்துட்டோம். ஆனால் புனேவில் ஆவணக்காப்பகம் தொடங்கப்பட்டதால இந்தி, மராத்தி, பெங்காலின்னு வடஇந்தியத் திரைப்படங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டிருக்கு. தென்னிந்தியாவிலும் அதைச் செய்திருக்கணும்’’ என்கிறார்.

இவர் சேகரித்திருக்கும் ஆவணங்கள் இவரோடு மட்டுமே நின்றுவிடவில்லை. 2002-2006-ம் ஆண்டில் ஆல் இந்தியா ரேடியோவில் இவர் நடத்திய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘சினிமா நேரம்’ ஆகிய சினிமா குறித்த நிகழ்ச்சிகள் பரவலான நேயர்கள் மத்தியில் கவனம் பெற்றது. ‘நிழல்’ எனும் மாற்று சினிமா குறித்த சிற்றிதழில் நாம் கடந்து வந்த சினிமாவைப் பற்றி விரிவான தொடரை எழுதியிருக்கிறார். கவிஞர் வாலி தனது ஆயிரம் பாடல்களைத் தொகுக்க நினைத்தபோது அவற்றுள் பெரும்பாலான பாடல்களை இவர்தான் தனது சேகரிப்பிலிருந்து தொகுத்துக் கொடுத்தார். தொடர்ந்து வாலி டூ சிவாஜி, வாலி டூ எம்.ஜி.ஆர், வாலி டூ ஜெமினி என வெளியான புத்தகங்களைத் தொகுக்க உதவியது இவருடைய சேகரிப்புகள்தான். அதேபோல கவிஞர் வைரமுத்து தனது ஆயிரம் பாடல்களைத் தொகுத்ததில் இவரது பங்களிப்பும் இருக்கிறது.

``கவிஞர் வாலிக்காகப் பாடல்களைத் தொகுத்துக் கொடுத்ததுக்கு மரியாதை செய்ற விதமா அவர் தாம்பூலத் தட்டுல 25,000 ரூபாய் பணம் வெச்சுக்குடுத்தார். `பணம் எனக்கு வேண்டாம்'னு சொன்னேன். `சினிமாக்காரங்கிட்ட இருந்து பணம் வருதுன்னா வாங்கிக்கய்யா...'ன்னு அவருக்கே உண்டான பாணியில சொல்லி, கொடுத்தார்'' என்கிறார்.

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

யதார்த்த நடிப்புக்குப் பெயர்போன டி.எஸ்.பாலையாவின் நூற்றாண்டையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை ‘நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா’ என்கிற தலைப்பில் நூலாக எழுதியிருக்கிறார். டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜானகி, சுசீலா போன்றோருடன் நட்பு பாராட்டியிருக்கிறார். டி.எம்.சௌந்தரராஜனின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி எடுக்கப்பட்ட ‘இமையத்துடன்’ ஆவணத் தொடரிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது.

``டி.எம்.எஸ் கூட நெருக்கமான உறவு இருந்தது. அவரைப் பத்தின ஆவணத் தொடருக்காக அவர் பாடின பல பாடல்களை என் சேகரிப்பிலிருந்து தொகுத்துக் கொடுத்தேன். டி.எம்.எஸ் பத்தி இசைக்கலைஞர்கள் பலர்கிட்ட பேட்டி எடுத்தோம். மும்பைக்குப் போய் லதா மங்கேஷ்கரைச் சந்திச்சு பேட்டி எடுத்துட்டு வந்தோம்'' என்கிறார்.

தனது வாழ்வின் பெரும்பகுதி காலத்தையும், லட்சக்கணக்கில் பணத்தையும் செலவழித்துதான் இந்த ஆவணக்காப்பகத்தை உருவாக்கியிருக்கிறார் சந்தானகிருஷ்ணன். கனடாவில் இயங்குகிற ஒரு பண்பலையில் இருந்து சில கோடிகளுக்கு இவரது சேகரிப்புகள் மொத்தத்தையும் கேட்டபோது, இவர் தர மறுத்துவிட்டார். ``எனக்கு இதை வித்துப் பணம் சம்பாதிக்கணும்ங்கிற எண்ணம் இல்லை. என் வாழ்க்கையே இந்தச் சேகரிப்புகளுக்காகத்தான் இருந்திருக்கு. இதன் மேல உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கு. ஒவ்வொரு சினிமாவுக்குப் பின்னாலும் பலரின் உழைப்பு அடங்கியிருக்கு. அதை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்குறது ரொம்பவே முக்கியம். சினிமா குறித்து ஆராய்ச்சி பண்றவங்களுக்குப் பயன்படணும்ங்கிறதுக்காகத்தான் இந்தக் காப்பகத்தை உருவாக்கியிருக்கேன். எனக்குப் பிறகு என் பேரன் சாய் கண்ணா இதை நிர்வகிச்சுக்குவான். என் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது வழி வழியா தொடரணும்ங்கிறது என் ஆசை’’ என்கிறார் சந்தானகிருஷ்ணன்.

தனியொருவரின் சினிமா ஆவணக் காப்பகம்!

அவரது சேகரிப்புகளில், 1940களில் வெளியான திரைப்படங்களின் புகைப்படங்கள்கூட அவ்வளவு தெளிவாக இருக்கின்றன. கறுப்பு வெள்ளைத் திரைப்படக் காலகட்டத்தில் வெளியான பாட்டுப் புத்தகங்களில் பாடல்கள் மட்டுமன்றி படத்தின் கதைச்சுருக்கம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பாடல்களின் பல்லவி, சரணமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவரது சேகரிப்பில் உள்ள லாங் ப்ளே தட்டுகளில் திரையிசை மட்டுமன்றி காந்தி, நேரு போன்ற தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 1920-ம் ஆண்டு பதியப்பட்ட குடுகுடுப்பை ஒலி அடங்கிய கிராமபோன் ரிக்கார்டை ஒலிக்க விட்டார். 100 ஆண்டுகளைக் கடந்தும் ஒலியின் தரம் குறையவில்லை. திரும்பியபின்பும் நீண்ட நேரம் அது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.