சினிமா
Published:Updated:

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

எடிட்டர் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
News
எடிட்டர் ஆண்டனி

நான் எடிட் பண்ணும்போதே ஆடியன்ஸ் மனநிலையில இருந்துதான் பண்ணுவேன். அதனால, அந்த சீன் எனக்குப் பிடிச்சிருந்தால் கைதட்டி விசில் அடிச்சு எடிட் பண்ணுவேன்

எடிட்டர் ஆண்டனி... ஃபாஸ்ட் கட்ஸ், புதுப்புது டிரான்ஸிஷன்கள் என தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்க நினைக்கும் கோலிவுட்டின் சீனியர் எடிட்டர். சாதாரண திரைக்கதையைக்கூட தனது படத்தொகுப்பால் விறுவிறுவெனக் கொடுப்பது ஆண்டனி ஸ்டைல். இவர் பட்டறையில் உருவான மாணவர்கள் பலர் இன்று கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் எடிட்டர்களாக இருக்கிறார்கள். ‘என்னுடைய அசிஸ்டென்ட்ஸ்தான். இருந்தாலும் அவங்க என் போட்டியாளர்கள்' என டஃப் கொடுத்து எடிட்டிங்கில் அசத்திவரும் ஆண்டனியைச் சந்தித்து அவரது பயணம் குறித்துப் பேசினேன்.

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

``விளம்பரப் படங்கள் எடிட் பண்ணிட்டு, அப்புறம்தான் ‘காக்க காக்க' மூலமா சினிமாவுக்கு வந்தீங்க. நீங்க எடிட் பண்ணுன முதல் விளம்பரப்படம் எது?’’

‘‘வி.கே.பிரகாஷ்னு ஒரு இயக்குநர் பெங்களூர்ல இருக்கார். இப்போ கன்னட சினிமாவுல முக்கியமான இயக்குநர். அவருடைய ஏஜென்ஸியின் முதல் விளம்பரப் படத்தை நான் எடிட் பண்ணினேன். ‘டைட்டன்' பிராண்டுக்காக எடுத்த விளம்பரம் அது. நான் இந்தத் துறைக்கு வர முக்கியக் காரணம், அருள்மூர்த்தின்னு ஒரு சார்தான். அவர் இல்லைனா நான் இங்கில்லை. நானே ட்ரயல் அண்ட் எரர் முறையில Avid கத்துக்கிட்டேன். அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தாங்க. அதுல ஒருத்தர்தான் ராஜீவ் மேனன் சார். இங்க வொர்க் பண்ணின பிறகு, ஏவிஎம்ல சேர்ந்தேன். அங்க ராஜீவ் சாருடைய ‘மின்சார கனவு', ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' எடிட் பண்ணுனாங்க. அந்தப் படங்களுக்கான ட்ரெய்லரை நான்தான் எடிட் பண்ணினேன். அப்படிப் பழக்கமானவர்தான் ராஜீவ் சார். அவர்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணின கெளதம் மேனனும் அறிமுகமானார். அவர் ‘காக்க காக்க' பண்ணும்போது, ‘என்னைக் கொஞ்சம் மாற்றி' பாட்டை மட்டும் எடிட் பண்ணிக்கொடுத்தேன். அது பிடிச்சுப்போய் படத்தையே எடிட் பண்ணச் சொல்லிட்டார். அப்போதிலிருந்து இப்போ ‘வெந்து தணிந்தது காடு' வரை இணைந்து பயணிக்கிறோம்.

‘காக்க காக்க’ பார்த்துட்டு முதலில் போன் பண்ணிப்பேசியது சிம்புதான். ’பிரதர், நான் சிலம்பரசன் பேசுறேன். படம் பார்த்தேன். உங்க வொர்க் சூப்பரா இருந்தது. நான் அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணப்போறேன். நீங்கதான் எடிட் பண்ணணும். நாம சந்திக்கலாம்'னு சொன்னார். அந்தப் படம்தான், ‘மன்மதன்.''

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”
“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

``ஒரு படத்தை உங்களால ரசிகரா பார்க்கமுடியுமா அல்லது அதுக்குள்ள கட்ஸ்தான் தெரியுமா?’’

‘‘நான் எடிட் பண்ணும்போதே ஆடியன்ஸ் மனநிலையில இருந்துதான் பண்ணுவேன். அதனால, அந்த சீன் எனக்குப் பிடிச்சிருந்தால் கைதட்டி விசில் அடிச்சு எடிட் பண்ணுவேன். நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன். கதை எனக்குத் தெரிஞ்சுடுச்சுனா, ஆர்வமும் சஸ்பென்ஸும் இல்லாமல் அது ஒரு வேலையா மட்டும் போயிடும். கதை தெரியாததனால, ஒவ்வொரு சீன் எடிட் பண்ணும்போதும் அடுத்து என்னன்னு ஆர்வம் இருந்துக்கிட்டே இருக்கும். அடுத்த சீன் எப்போ எடிட் டேபிளுக்கு வரும்னு காத்திருப்பேன். எடிட் பண்ண இல்லை, அடுத்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிருக்கிறதுக்காக.''

``நீங்க எடிட் செய்த பாடல்கள் எல்லாம் புதுமையா இருக்கும். பாடல்களின் எடிட்டில் குஷியாகிடுவீங்களா?’’

‘‘எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்கும். அதனாலகூட இருக்கலாம். டான்ஸ் மூவ்மென்ட்ஸுக்குத் தகுந்த மாதிரி, அதுக்குத் தேவையான ட்ரான்ஸிஷன், எஃபெக்ட்ஸ் எல்லாம் போட்டு எப்படி இருக்குன்னு பார்ப்பேன். ஒரு சீனை எடிட் பண்ணும்போது, டயலாக், எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கணும். ஆனா, ஒரு பாடலை எடிட் பண்ணும்போது சுதந்திரமா ஜாலியா அந்தப் பாடலைக் கேட்டு ரசிச்சு எடிட் பண்ணலாம். விஷுவல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சுனா, சிஸ்டத்தை ஷட் டவுன் பண்ணிட்டு என்னை அந்த மூடுக்குக் கொண்டுவந்து அப்புறம் ஜாலியா எடிட் பண்ண ஆரம்பிப்பேன். உதாரணத்துக்கு, ‘லஜ்ஜாவதியே' பாட்டை எடிட் பண்ணும்போது டான்ஸ் ஆடிக்கிட்டே பண்ணினேன்.''

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”
“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

``இயக்குநர் ஷங்கருடன் தொடர்ந்து ட்ராவல் பண்றீங்க. அவருடன் அறிமுகமானது எப்படி?’’

‘‘ஷங்கர் சாரை நேர்ல பார்க்காமலே ‘பாய்ஸ்', ‘அந்நியன்' படங்களுக்கு ட்ரெய்லர் கட் பண்ணிக் கொடுத்திருக்கேன். அவர் படங்கள்ல பாடல்கள் எல்லாம் பார்த்து மிரண்டு போயிருக்கேன். ‘ஏதாவது ஒரு பாடலை எனக்கு எடிட் பண்ணக் கொடுத்தாங்கன்னா, அடிச்சு துவம்சம் பண்ணிடலாமே’ன்னு தோணிக்கிட்டே இருக்கும். ஒரு ட்ரெய்லரைக் காட்டுறதுக்காக ஒரு நாள் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. பார்த்துட்டு ‘ரொம்ப நல்லா இருக்கு’ன்னு சொன்னார். ‘ரொம்ப நாளா என் மனசுல இருக்கிறதைக் கேட்டிடுறேன் சார்'னு சொன்னேன். சொல்லுங்கன்னார். சொன்னேன். ‘பாடல் என்ன, படத்தையே எடிட் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டார். அதுதான் ‘சிவாஜி.' அப்போ எனக்கு இருந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை.''

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”
“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

`` ‘அயன்'ல இருந்து கே.வி.ஆனந்துடைய எல்லாப் படங்களுக்கும் நீங்கதான் எடிட்டிங். அவரை எவ்வளவு மிஸ் பண்றீங்க?’’

‘‘ரொம்ப பிளான் பண்ணிதான் எல்லாமே பண்ணுவார். அவர் ஆறேழு கேமரா வெச்சு ப்ராப்பரா ஷூட் பண்ணுவார். அதனாலதான், அவர் படங்கள்ல நிறைய வித்தியாசமான ஆங்கிள்ல இருந்து ஃபுட்டேஜ் இருக்கும். ஒளிப்பதிவாளரா இருந்ததனால, இன்னும் அவர் செம ஸ்ட்ராங். கடைசியா, அவர் டைரக்ட் பண்ணுன படம் கேன்சலாகிடுச்சு. அது இன்னும் என் ஹார்டு டிஸ்க்ல இருக்கு. முதல் படத்துல இருந்து அவருக்கு என்னைப் பிடிக்காது. காரணம், ஏதாவது பிடிக்கலைன்னாலோ, நல்லாயில்லைன்னாலோ அவர்கிட்ட ஓப்பனா சொல்லிடுவேன். அதை பிளஸ்ஸா எடுத்துக்கிட்டு, ஒவ்வொரு படத்துக்கும் எடிட் பண்ண என்னைக் கூப்பிடுவார். ‘உன்னை எனக்குப் பிடிக்காதுய்யா. ஆனா, உன் வொர்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'னு அடிக்கடி சொல்வார். அவர் இழப்பு ரொம்ப அதிர்ச்சியானது.’’

“நான் எப்பவும் கதை கேட்கமாட்டேன்!”

`` ‘ஷட்டர்' ரீமேக் `ஒருநாள் இரவில்' இயக்கின பிறகு, ‘நான் ரீமேக் படங்களைத்தான் இயக்கணும்னு நினைக்கிறேன்’னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்க. ஏன்?’’

‘‘அது கொஞ்சம் ஈஸி. எனக்கு மேக்கிங்கா தெரியும். ஆனா, ஒரு இயக்குநர்கிட்ட அசிஸ்டென்டா வேலை செஞ்சு, கத்துக்கிட்டு இயக்குநராகலை. அதனால, ரீமேக் படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன். ரீமேக் பண்ணினாலும் அப்படியே காப்பி பண்ணலை. கொஞ்சம் மாத்தியிருக்கேன். ரெண்டு, மூணு ரீமேக் படங்கள் இயக்கி முடிச்சபிறகு, நான் ஒரு கதை எழுதி இயக்கலாம்னு இருக்கேன்.''

``இதுவரை நீங்க கிராமத்துப் படம் பண்ணுனதில்லையே?’’

‘‘ஆமாங்க. பண்ணணும்னு ஆசைதான். பார்ப்போம்.''