சினிமா
Published:Updated:

“மாமன்னன் வடிவேலுக்கும், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு!”

எடிட்டர் செல்வா ஆர்.கே
பிரீமியம் ஸ்டோரி
News
எடிட்டர் செல்வா ஆர்.கே

நான் எப்போவும் டிரெயிலர்ல கதை சொல்லணும்னு நினைப்பேன். டிரெயிலர் பார்க்கறவங்க தியேட்டர் வந்து ஏமாந்திடக்கூடாது

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் தங்களின் எடிட்டிங் வித்தைகள் மூலம் நம்மைக் கவர்ந்திருக்கிறார்கள். அப்படி இந்தக் காலத்து எடிட்டர்களில் செல்வா ஆர்.கே முக்கியமானவர். ‘பரியேறும் பெருமாள்', ‘சார்பட்டா பரம்பரை', ‘கர்ணன்' போன்ற அழுத்தமான கதைகளைத் தன் எடிட்டிங்கில் மேலும் மெருகேற்றி திரையோடு நம்மை இணைய வைக்கும் மந்திரக்காரர். இப்போது ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தைச் செதுக்கியிருக்கிறார். ‘‘எடிட்டிங் என்பது ஒரு படத்தில் தேவையில்லாததை நீக்குவதல்ல. ஒரு படத்தைக் கட்டமைப்பது'' என்கிற செல்வாவின் வார்த்தைகளில் அவ்வளவு பொறுப்பு.

``பா.இரஞ்சித் எப்போவும் உங்ககிட்ட கதையைச் சொல்வாரா, அல்லது ஸ்கிரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொல்வாரா?’’

‘‘படத்தின் ஒன்லைனை மட்டும் சொல்வார். அப்புறம் கையில ஸ்கிரிப்டைக் கொடுத்திடுவார். அதைப் படிக்கும்போதே படம் பார்க்கிற அனுபவம் கிடைக்கும். அவ்ளோ டீட்டெயிலிங் இருக்கும். ‘சார்பட்டா'வுக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது'க்கும் எழுத்திலேயே அவ்வளவு வித்தியாசம் இருந்தது. ‘நட்சத்திரம் நகர்கிறது' ஸ்கிரிப்டைக் கொடுத்துட்டு, ‘இந்தப் படத்தை நாம ஒரு பரிசோதனையாதான் முயற்சி பண்றோம். இது எத்தனை பேருக்குப் பிடிக்கும்னு தெரியலை. முழு சுதந்திரத்தோட நமக்கு என்ன தோணுதோ அதைப் பேசணும்னு நினைக்கிறேன். எடிட்லயும் ஜாலியா உனக்குப் பிடிச்ச மாதிரி பண்ணு'ன்னு சொன்னார். அப்படித்தான் ஆரம்பமாச்சு படம். எங்களுடைய பரிசோதனை முயற்சி வெற்றியாகியிருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.’’

`` ‘சார்பட்டா', ‘நட்சத்திரம் நகர்கிறது' ரெண்டு டிரெயிலரும் பேசப்பட்டவை. அது பத்திப் பேசலாம்...’’

‘‘நான் எப்போவும் டிரெயிலர்ல கதை சொல்லணும்னு நினைப்பேன். டிரெயிலர் பார்க்கறவங்க தியேட்டர் வந்து ஏமாந்திடக்கூடாது. ‘சார்பட்டா' படத்துலதான் நான் முதல்முறை இரஞ்சித் அண்ணன்கூட வேலை செய்றேன். அதனால, அந்தப் படத்துடைய டிரெயிலர்ல அவரை எக்ஸைட் பண்றதுதான் எனக்கான முதல் சவால். அவர் வர்றதுக்கு முன்னாடி நானே டிரெயிலர் கட் பண்ணி அவருக்குக் காட்டினேன். பார்த்துட்டு, ‘எப்போவும் என் படத்துல நான்தான் எதெல்லாம் டிரெயிலர்ல வந்தா நல்லாருக்கும்னு சொல்வேன். இப்போ நீ திடீர்னு டிரெயிலரைக் காட்டிட்ட. எனக்குக் கொஞ்சம் டைம் கொடு'ன்னு சொன்னார். ரெண்டு நாள் கழிச்சு, ‘நீ பண்ணுனதுதான் சரி. அதுல கொஞ்சம் கரெக்‌ஷன் பண்ணுவோம்’னு சொன்னார். அப்படிதான் ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கும் நடந்தது. இந்த டிரெயிலர்ல இதனுடைய லீடு கேரக்டர்கள் காதலை எப்படிப் பார்க்கிறாங்க, வெளியில இருக்கவங்க எப்படிப் பார்க்கிறாங்கன்னு ரெண்டா பிரிச்சோம். இதற்கிடையிலதான் டைட்டிலே வரும். அது நல்லா வொர்க்காச்சு. இந்தப் படத்துடைய எடிட்டிங்கை அழகியலோடு கையாள வேண்டியதா இருந்தது. படத்தை ஒரு மணி நேரம் தூக்கிட்டேன். 5 மணி நேரம் ‘சார்பட்டா.' அதை 3 மணி நேரமா மாத்தினேன். அதே மாதிரி, இது 4 மணி நேரம் 20 நிமிஷம் இருந்தது. அதை 2 மணி நேரம் 50 நிமிஷத்துக்குக் கொண்டு வந்தோம். ஒரு கேரக்டரையே தூக்க வேண்டியதாகிடுச்சு.’’

``படத்தின் நீளம் பத்தி உங்க கருத்து என்ன?’’

‘‘ஓ.டி.டி வந்தபிறகு, படம்னா 2 மணி நேரம்தான்னு மைண்ட் செட் பண்ணிட்டாங்க. ஆனா, ‘சார்பட்டா’ 3 மணி நேரம் கொடுத்தபோது அது போரடிக்கலைன்னு சொன்னாங்க. நாம எவ்வளவு டைட்டா வேலை செஞ்சிருக்கோம்னு தெரிஞ்சது. அது ஸ்கிரிப்ட்டுடைய பவர்தான். ஸ்கிரிப்ட் சரியா இல்லைன்னா, 2 மணி நேரமே போரடிக்கும்.’’

“மாமன்னன் வடிவேலுக்கும், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு!”

``எடிட்டர் பிரவீன் கே.எல்கிட்ட அசிஸ்டென்ட் எடிட்டரா இருந்த நாள்கள்?’’

‘‘நான் லயோலால படிச்சுக்கிட்டிருந்தேன். அப்போ இன்டர்ன்ஷிப்பிற்காக பிரவீன் சாரை சந்திச்சேன். மறுநாளே வந்து சேர்ந்துக்கச் சொன்னார். அப்புறம் அவர்கிட்ட சேர்ந்துட்டேன். ‘மங்காத்தா'ல இருந்து ‘மெட்ராஸ்' வரைக்கும் பிரவீன் சார்கிட்ட இருந்தேன். என் வொர்க் பார்த்துட்டு பிரவீன் சார் நிறைய வேலைகள் கொடுத்தார். ‘அலெக்ஸ்பாண்டியன்' படத்துல வர்ற ‘Bad boy' பாடலை நான்தான் கட் பண்ணினேன். அது பிரவீன் சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்து, ‘இதை இவன்தான் கட் பண்ணினான்’னு நிறைய பேர்கிட்ட சொல்லியிருந்தார். டைரக்டர் சுராஜ் சாருக்கும் தெரியும். அப்படித்தான் அவருடைய ‘சகலகலாவல்லவன்' படத்துல எடிட்டராக்கினார். அப்போ ஆரம்பிச்சு இப்போ ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' வரைக்கும் தொடருது. ‘மெட்ராஸ்' படத்துல அசிஸ்டென்ட் எடிட்டரா வேலை செஞ்சேன். அங்கதான் இரஞ்சித் அண்ணன் அறிமுகம் கிடைச்சது.’’

``‘பரியேறும் பெருமாள்', ‘கர்ணன்', ‘மாமன்னன்'னு மாரி செல்வராஜ்கூட தொடர்ந்து பயணிக்கிறது எப்படியிருக்கு?’’

‘‘மாரி செல்வராஜுடைய கதைல அவ்ளோ டீட்டெய்லிங் இருக்கும். பேக் கிரவுண்ட்ல ஒரு போஸ்டர் இருந்தால்கூட அதுக்கு ஒரு கதை வெச்சிருப்பார். அவர் வாழ்க்கையில பார்த்த நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்குவார். ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் அர்த்தம் இருக்கும். எல்லாமே யதார்த்தமா இருக்கும். நிறைய மான்டேஜ் எடுத்துட்டு வருவார். அதுல கதை சொல்ல நினைப்பார். ‘இன்டர்கட்'தான் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு இடத்துல கட் பண்ணி வேறொரு இடத்துல அதுக்கு பதில் இருக்கணும்னு நினைப்பார். உவமைப்படுத்தி ரொம்ப அழகா சொல்வார். ‘மாமன்னன்'லயும் அப்படி நிறைய இருக்கும்.’’

``ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி இயக்குநரும் நீங்களும் என்னவெல்லாம் டிஸ்கஸ் பண்ணுவீங்க?’’

‘‘ஸ்கிரிப்ட் எடிட் பண்ணுவோம். சமீபமா, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' பட இயக்குநர் அதியன் ஆதிரையின் அடுத்த ஸ்கிரிப்டை நான், அவர், ஒளிப்பதிவாளர் மூணு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். தேவையில்லாமல் ஏதாவது இருந்தால், அதை முன்னாடியே சொல்லிட்டா, ஷூட் பண்ணமாட்டாங்க. புரொடக்‌ஷன் பணமும் மிச்சமாகும். சில நேரங்கள்ல சில சீன்களே புதுசா உருவாகும். ஸ்கிரிப்ட் எடிட் ரொம்ப ஆரோக்கியமான விஷயமா இருக்கு.’’

``படம் பார்க்கும்போது எமோஷன் எங்களுக்குக் கனெக்ட்டாகுது. எடிட் பண்ணும்போது அதை உங்களாலயும் கனெக்ட் பண்ணிக்க முடியுமா?’’

‘‘மியூசிக் எதுவும் இருக்காது. ஆனா, எடிட் பண்ணும்போது ஒரு ஃபீலுக்காக வேற படங்களுடைய மியூசிக்கை ஒரு ரெஃபரன்ஸா வெச்சு எடிட் பண்ணுவோம். முதல் நாளே சண்டை போடுற சீனை ஷூட் பண்ணிடுறாங்க. அதை முதல்ல கட் பண்றீங்கன்னா, எதுக்கு சண்டைன்னே தெரியாமல் கட் பண்றோம்ல, அப்போ அந்த கட் தப்பாதான் இருக்கும். அடுத்த சீன் எடிட் டேபிளுக்கு வந்த பிறகு, ஒரு கரெக்‌ஷன் நடக்கும். இப்படி ஒவ்வொன்னா கரெக்‌ஷன் பண்ணி, கடைசியா பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்கும். எடிட்லயே திருப்தியா இருந்தால் மட்டுமேதான் வொர்க் ஆகும். மியூசிக், சவுண்ட் வரும்போது இன்னும் மெருகேறும். ஆனா, அதெல்லாம் சரியா இருந்து எடிட் சரியில்லைன்னா, அவ்வளவுதான். திரையில இருந்து ஆடியன்ஸுடைய கவனத்தை திசை திரும்பாமல் இருக்க வைக்குறதுதான் எடிட்டருடைய வேலை.’’

“மாமன்னன் வடிவேலுக்கும், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு!”

``‘மூக்குத்தி அம்மன்', ‘வீட்ல விசேஷம்'னு ஆர்ஜே பாலாஜி கூட தொடர்ந்து வேலை செஞ்சுட்டு இருக்கீங்க. எடிட் ரூம்ல அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் எப்படி இருக்கும்?

‘‘ரொம்ப எனர்ஜடிக்கான மனிதர். சூப்பரா பிளான் பண்ணுவார். சினிமாவைத் தாண்டி நிறைய பேசுவோம். நிறைய அட்வைஸ் கொடுப்பார். இந்த சீன் வொர்க்காகலை, வேண்டாம்னு சொன்னா, ‘எவ்வளவு செலவு பண்ணி எடுத்துட்டு வர்றோம். தூக்கச் சொல்ற'ன்னு கேட்பார். ஆனா, கடைசியா தூக்கிடுவோம். அவர்கூட வொர்க் பண்றது ஜாலிதான்.’’

``‘மாமன்னன்' எடிட் பண்ணிட்டிருக்கீங்க. பகத் பாசில், வடிவேலுன்னு நடிப்பு அரக்கர்களெல்லாம் இருக்காங்க. எடிட் பண்ணும்போது எப்படி இருக்கு?’’

‘‘பகத் பாசில் சார், வடிவேலு சார் நடிக்கும்போது நமக்குப் பெரிய பொறுப்பு வந்திடும். அவங்க சீன் எடிட் பண்ணும்போது ஸ்கிரீனுடன் அவ்வளவு கனெக்ட் கிடைக்கும். பிரமாதமா வந்துட்டிருக்கு. ‘மாமன்னன்'ல வர்ற வடிவேலு சாருக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' வடிவேலு சாருக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கு. ரெண்டு படத்திலும் கலக்கியிருக்கார். டைரக்டர் கட் சொல்ற வரைக்கும் அந்த கேரக்டர்ல நடிச்சுக்கிட்டே இருக்கார். அவர் போர்ஷன்ல அவரை வெச்சுதான் கட் பாயின்ட்டே முடிவு பண்றேன்.’’