
சினிமா
முதல் பாடல் எழுதிய பிறகு, ஒன்பது மாதங்களுக்குப் பாடல் வாய்ப்பே இல்லை. இன்றைக்கு இவர் எழுதிய ஒரு பாடலையாவது கேட்காமல், நம் ஒருநாளைக் கடந்துவிட முடியாது என்கிற அளவுக்கு பிஸியாக எழுதிக்கொண்டிருப்பவர், கவிஞர் யுகபாரதி. அவரை தீபாவளி மலருக்காகச் சந்தித்தோம்.
``பாடலாசிரியர் ஆக வேண்டும் என்கிற முதல் புள்ளி எங்கு தொடங்கியது?’’
“என் ‘மனப்பத்தாயம்’ கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு, லிங்குசாமியின் உதவி இயக்குநர் தியாகு என்னை லிங்குசாமியிடம் அழைத்துக்கொண்டு போனார். அவரும் அந்தத் தொகுப்பைப் படித்திருந்தார். ‘ஆனந்தம்’ படத்தில் காதலன், அவன் நினைவாகக் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு. காதலி பாடுவதாக ஒரு சூழலைச் சொல்லி, பாடல் எழுதச் சொன்னார். என்ன எழுதுவது... ஒன் ரூபி... ஒரு ரூபாய்... ஒற்றைக் காசு என்று ஏதேதோ குழப்பங்கள். இணை இயக்குநர் பிருந்தா சாரதி, ‘சின்னச் சின்ன வரியா எழுதுங்க’ என்றார். எவையெல்லாம் வட்டமாக இருக்கும் என்று யோசித்து, ஒரு பல்லவியை எழுதிக்கொண்டு போய்க் கொடுத்தேன். அது ஒவ்வோர் உதவி இயக்குநரின் கைக்கும் போய், கடைசியாக லிங்குசாமியிடம் போனது. அதைப் படித்த ஒருவரின் முகத்திலும் மலர்ச்சி இல்லை. கடைசியாக அதைப் படித்த லிங்குசாமி, ‘ம்ம்ம்... முன்னாடியே சொன்னீங்க... எழுதிப் பழக்கமில்லைன்னு... முயற்சி பண்ணணும்’ அப்படின்னார். நான் அவரிடமே, `சினிமாப் பாடல்கள் சமூகத்தை சீரழிக்குது. எனக்கு ஆர்வமும் இல்லை’ என்று சொன்னேன்.
வித்யாசாகர் அதைப் படித்து ஆரத்தழுவி, `இப்படி வர வேண்டும் என்றுதான் நேற்றுக் கொஞ்சம் கடிந்துகொண்டேன்’ என்றார். பிறகுதான் அவர் கவிதைகளை மிகவும் ரசிப்பவர் என்று தெரிந்தது. அவருக்கு 200 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். தந்தைக்கும் சகோதரனுக்கும் அடுத்த நிலையில் அவர் இருக்கிறார்.
நான்கு மாதங்கள் கழித்து தியாகு என்னை அழைத்து, ‘பல்லவி ட்யூன் பண்ணியாச்சு. சரணம் நீங்கதான் எழுதணும். வாங்க’ என்றார். `உங்களுக்கு இருந்த தயக்கம்போலவே எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் எப்படி இந்தப் பாட்டை ஆரம்பிக்கறதுனு தெரியலை. `எழுதின வரிகள் எதுவும் இருக்கா?’னு கேட்டார். உங்க வரிகளைக் கொடுத்தோம். அவர் போட்ட ட்யூன் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. `நல்லா எழுதியிருக்கான். நல்லா வருவான். அவனையேவெச்சு சரணம் எழுதுங்க’னு சொன்னார் தியாகு. அப்படி இரவோடு இரவாக நான் எழுதினதுதான், `பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...’ பாடல். இப்போது கேட்கும்போதும், `சரியாக எழுதவில்லை... வரிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்’ என்று தோன்றும். ஆனால், இவற்ற்றையெல்லாம் தாண்டி பாடல் ஹிட்.’’
“ `காதல் பிசாசு’ பாடல் உருவானதிலும் சுவாரஸ்யம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது பற்றி...”

“முதல் பாட்டு பெரிய ஹிட். ஆனாலும் ஒன்பது மாதங்களுக்கு மேலாக பாட்டெழுத வாய்ப்பில்லை. மீண்டும் லிங்குசாமி அவருடைய ‘ரன்’ படத்துக்காக வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்தினார். ‘பல்லாங்குழி எப்படி வட்டமாகும்... அது குழிவட்டமல்லவா?’ என்றார் வித்யாசாகர். அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.
45 நிமிடங்கள் பாட்டு எப்படி எழுதக் கூடாது என்பதை எடுத்துச் சொன்னார். `காதல் கடிதம் எழுதுறது மாதிரி சூழல். ‘அன்புள்ள’ வேண்டாம். ‘நலமா கூடாது’னு நிறைய சொன்னார். கோபமாக வந்துவிட்டேன். லிங்குசாமி சமாதானப்படுத்தினார். ‘பெண் என்னும் மாயப் பிசாசு’னு சித்தர் பாடல்கள் படிச்சிட்டு இருந்தேன். அப்படித்தான், `காதல் பிசாசு’னு எழுதினேன். அடுத்தநாள் காலையில நண்பன் ஒருவன், `எப்படி இருக்கே?’ என்று கேட்க, `ஏதோ இருக்கேன்’ என்று சொன்னேன். அதையே ‘ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்றெழுதினேன். இப்படியே தனிமைகள், தவிப்புகள் என்று அன்றைய என் நிலை எல்லாவற்றுக்கும், `பரவாயில்லை’ போட்டு முடித்தேன். அடுத்தநாள் நண்பருடன் வித்யாசாகரைப் பார்க்க பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனிடம் வரிகளைச் சொல்ல... அவன் கேட்டுக்கொண்டே ஓட்டி ஒரு காரில் இடித்துவிட்டான். சட்டென்று, `இப்படியே செத்துப்போனால் பரவாயில்லை’ என்று முடித்தேன்.
ராஜா சார், ‘இது சாதாரணம் என்று நீ உன் அறிவிலிருந்து தீர்மானிக்கிறே... உன் அறிவிலிருந்து இது நல்லது, இது கெட்டதுனு தீர்மானிக்காதே. உன் உணர்வுலருந்து தீர்மானி. அறிவை வைத்துக்கொண்டு கலையைத் தீர்மானிக்கக் கூடாது. ரசனைதான் முக்கியம்'' என்றார்.
வித்யாசாகர் அதைப் படித்து ஆரத்தழுவி, `இப்படி வர வேண்டும் என்றுதான் நேற்றுக் கொஞ்சம் கடிந்துகொண்டேன்’ என்றார். பிறகுதான் அவர் கவிதைகளை மிகவும் ரசிப்பவர் என்று தெரிந்தது. அவருக்கு
200 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். தந்தைக்கும் சகோதரனுக்கும் அடுத்த நிலையில் அவர் இருக்கிறார்.’’
``பிரத்யேகமான உணர்வு காதல். திரும்பத் திரும்பச் சொல்லும்போது சலிப்பு உணர்வு ஏற்படும். காதல் உணர்வுகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க என்ன செய்வீர்கள்?’’
`` `கண்ணக் காட்டு போதும்’ என்று ஒருவரி எழுதிவிட்டேன். இனி எத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதினாலும் அந்த வரியை எழுதவே கூடாது. இதுதான் சவாலே. மற்றபடி உணர்வுகள் புதியதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஒரே சொற்களைப் பயன்படுத்தும்போதுகூட உணர்வுகள் மாறும். `பார்த்திபன் கனவு’ படத்தில் கரு.பழனியப்பனுக்கு முதலில் எழுதும்போது ‘காதல் பிசாசே’, ‘வெட்கக் கவிதை’ இப்படியெல்லாம் ஏன் கடினமா கஷ்டப்படுத்தறீங்க? ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ - இது எவ்வளவு எளிமையா இருக்கு?’ என்று கேட்டார். நல்ல விஷயமாத் தோணிச்சு. அந்தப் படத்துல ‘கனா கண்டேனடி’ பாடலில் `எதையோ என் வாய் சொல்லத் தொடங்க, அதையே உன் வாய் சொல்லி அடங்க’ என்று எழுதியிருப்பேன். அது ஒண்ணுமில்லை... ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ வரிகளோட விரிவுதான்.’’
“பாடல் காட்சிகளில் ஒரு பெண் இருக்கிறாள் என்றால், உங்களது கற்பனையில் ஒரு பெண் இருக்குமா... அந்தச் சூழலில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு எழுதுவீர்களா... அந்த ப்ராசஸ் எப்படி நடக்கிறது?”
“ ‘எம்டன் மகன்’ படத்தின் ஒரு பாடலுக்கு ‘எனக்கு மொதல்ல மெட்டு வந்தா அதுக்கு நீ எழுது. உனக்கு மொதல்ல வரிகள் வந்தா அதுக்கு நான் மெட்டு போடறேன்’ என்றார் வித்யாசாகர். நான் எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். அவர் போட்டுக்கொண்டிருந்த மெட்டுக்கு பொருத்தமான வரிகளாக அவை இருந்தன. அதுதான் ‘கோலிக்குண்டு கண்ணு... கோவைப்பழ உதடு’ பாடல். அதை எழுதியபோது நாயகி யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கோபிகாவின் கண்கள் பெரிது பெரிதாக இருக்கவும் ரொம்பப் பொருந்திப் போய், பாட்டு செம ஹிட்.”
“கவிஞனாக இருப்பதால் கவித்துவமான வார்த்தைகளை உங்களால் உருவாக்க முடியும். `சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்துவிட்டோமே’ என்று நினைத்தது உண்டா?”
“ஒருமுறை ராஜா சாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பல்லவி சாதாரணமாகத்தானே இருக்கிறது?’ என்று சொன்னேன். அவர், ‘இது சாதாரணம் என்று நீ உன் அறிவிலிருந்து தீர்மானிக்கிறே... உன் அறிவிலிருந்து இது நல்லது, இது கெட்டதுனு தீர்மானிக்காதே. உன் உணர்வுலருந்து தீர்மானி. அறிவை வைத்துக்கொண்டு கலையைத் தீர்மானிக்கக் கூடாது. ரசனைதான் முக்கியம். ரசனையாக இந்தப் பாட்டு நல்லா இருக்குதா, ஓர் உணர்வைக் கிளப்புகிறதா என்பது முக்கியம். அதைவிட்டுவிட்டு இது பழசு, நல்லா இல்லை என்று சொல்லக் கூடாது’ என்றார். அது எனக்கு வேத வாக்கியமாக மாறியது. அதன் பிறகு எந்தச் சொற்களின் மீதும் ரசனைக் குறைவு ஏற்படவில்லை. மெட்டுக்கு அழகாக, எளிமையாக, எல்லோருக்கும் புரியும்விதமாக இருந்தால் போதும் என்பேன்.’’
“ராஜா சார் ட்யூன் போடும்போதே முதல் பல்லவி எழுதிவிடுவார் என்று சொல்வார்கள். அப்படி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா?’’
“ஆம். `அழகர்சாமியின் குதிரை’யில் ‘பூவக்கேளு காத்தக்கேளு’ பாட்டின் முதல்வரி ஏற்கெனவே மெட்டில் ராஜா சார் எழுதியது. பதற்றத்தில் அந்த வரியில் கைவைக்கவே இல்லை. அதைத் தவிர, எல்லா வரிகளும் யோசித்துவைத்திருந்தேன். ஆனால் ராஜா சாரே, `முதல்வரி மாத்திக்கலாமா?’ என்று கேட்டார். `மாத்தக் கூடாது’ என்று சொன்னேன். ஒருவிதமான புரிதல் அது.’’
“பழைய படங்களில் நகைச்சுவைப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்று நிறைய வகைகள் இருக்கும். அந்த மாதிரி இன்றைய சினிமாவில் சவால்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா?”
“இன்றைக்கு மனநிலையில் நிறைய மாற்றங்கள். அன்றைக்கு மாதிரி இல்லை என்று நினைப்பதே சமூகத்துக்கு விரோதமானது. தேவைகளும் ஆசைகளும் சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. சமூகத்தின் புறக்காரணிகள் என்னவாக இருக்கின்றனவோ, அவைதான் சினிமாவில் காண்பிக்கப்படுகின்றன. சமூகமே அப்படி இல்லை. பாடலில் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டாம்.”
“உங்களுடைய இடதுசாரி சித்தாந்த மனம், பாடல் எழுதுவதற்கு இடையூறாக இருந்திருக்கிறதா?”
“சமூகத்துக்கு எதிராகவோ, பெண்களைக் கொச்சைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது என்பதில் கவனமா இருப்பேன். ‘சண்டாளி’ என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. பல்லவியில் இருந்தது. ஜி.வி.பிரகாஷிடம் `வேண்டாம்’ என்று சொன்னேன். அதற்கு இணையாகப் பல வார்த்தைகள் எழுதியும் குடுத்தேன். கேட்டுக் கேட்டு, `அதுவே செட் ஆகிருச்சு’ என்று அவர் மாற்றவில்லை. வெளியான பிறகு, சிலர் என்னைத் திட்டி எழுதியிருந்தார்கள். அவர்களிடம் இதையெல்லாம் விளக்கவும் முடியாது. அந்த மாதிரி நேரத்தில் இடதுசாரி மனோபாவம் தவித்து வெம்பிப்போகும்.”
`காலம் கடந்தும் பாடலாசிரியர்களின் பெயர் நினைவிலிருக்கும்’ என்பது மட்டும்தான் கவிஞர்களின் நம்பிக்கை...
“கவிஞராக இருந்து பாடலாசியராக ஆன பிறகு, இசை சார்ந்த பயிற்சிகள் எடுத்திருக்கிறீர்களா?”
“இடைக்கால இலக்கியங்கள் என்று சொல்லப்படும் பக்தி இலக்கியங்களைப் படித்தாலே போதும். சந்தங்களைக் கையாள்வது பக்தி இலக்கியங்களில் மட்டும்தான் இருக்கிறது. சந்தக் கட்டுமானங்கள், மரபுச் சொற்களிலிருக்கும் இசை ஆகியவற்றை அதில் அற்புதமாகக் காண முடியும். ஒரே சொல்லுக்கு பல பொருள்கள் தரக்கூடிய சொற்கள், பல பொருள்களை ஒரு சொல்லுக்குள் அடக்கும் சொற்களை அவை தருகின்றன. நெடில், குறில் பிரயோகங்கள்; ஒரு பாடல்வரி முடியும்போது குறிலில் முடிந்தால் பாடகருக்குச் சிரமம் போன்ற சிலவற்றை அனுபவத்தில் கற்றுக்கொண்டேன்.”
“சக கவிஞர்கள் மீதான போட்டியைக் கடந்து, 'நேற்றைய காற்று' புத்தகத்தில் நிறைய பாடலாசிரியர்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறீர்கள். அப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று ஏன் தோணியது?”
“நான் எழுதிய பாடலையே வேறு யாரோ எழுதியதாக வானொலியில் கேட்டிருக்கிறேன். `காலம் கடந்தும் பாடலாசிரியர்களின் பெயர் நினைவிலிருக்கும்’ என்பது மட்டும்தான் கவிஞர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமல் போகும்போது வருத்தமாக இருந்தது. என்னை பாதித்த கவிஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேடியபோது புத்தகங்கள் இல்லை. அப்படி என்னை எழுதத் தூண்டியதுதான் ‘நேற்றைய காற்று.’ ஒரே கவிஞரின் பாடல்களை மூன்று மாதங்கள் கேட்பது, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தகவல்கள் திரட்டுவது என்று எழுதினேன். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் இருவரும் கவிஞர்களாக இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அதை எழுதும்போதுதான் எனக்குத் தோன்றியது, இவையெல்லாமே 20 வருடங்களுக்கு முன்னர் நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய பாடல்கள், தகவல்கள். அவ்வளவு விஷயங்களை நம் முன்னோடிகள் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.”
“உங்களுடைய சக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்தமான பாடல்?”
“மாரிசெல்வராஜ், `பரியேறும் பெருமாளி’ல் எழுதிய `நான் யார்' பாடல் ரொம்பப் பிடிக்கும். உமாதேவியின் 'மாயநதி', அருண்ராஜா காமராஜ் எழுதிய `ஒத்தையடி பாதையில', அதே படத்தில் ஜிகேபி எழுதிய `வாயாடி பெத்தபுள்ள'... இப்படி நிறைய. `விஸ்வாச’த்தில் தாமரை எழுதிய `கண்ணான கண்ணே' பாடல் அபாரமாக இருந்தது.”
“உங்கள் துணைவியார், பிள்ளைகள் உங்களுடைய பாடல்களை எப்படிப் பார்க்கிறார்கள்... அவங்களுக்குப் பிடித்த பாடல்கள் என்னென்ன?”
“என் மகளுக்குத் துள்ளலிசைப் பாடல்கள் பிடிக்காது. சமீபத்தில் ` `கோடி அருவி கொட்டுதே...’ பாட்டு கேட்டேன். பரவால்ல, நல்லா இருக்கு’ என்று சொன்னார். இசையமைப்பாளருக்கு போன் செய்து, `என் பொண்ணு நல்லாயிருக்குனு பாராட்டுனாங்க’ என்று சொன்னேன். ‘எல்லாமே ஹிந்துஸ்தானி சார்’ என்று அவர் சொன்னார். என் மகள் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்கிறார். அதனால்தான் அவருக்கு அது பிடித்திருக்கிறது என்று தோன்றியது. மனைவியைப் பொறுத்தவரை, `எல்லாப் பாடல்களும் நல்லா இருக்கு’ என்று சொல்வார். ஏதாவது பாடலைச் சொல்லி, `அதைப் போடுங்க’ என்று சொன்னால் அவருக்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.”
“ஒரு பாடலாசிரியராக எதிர்காலக் கனவுகள்..?”
“பாடலாசிரியர் ஆக வேண்டும் என்றே கனவு காணவில்லை. அதனால், ஒரு கனவும் கிடையாது. நான் ஒரு பாடலை முதல் பாடலாக நினைத்து எழுதுவதே கிடையாது. கடைசிப் பாடலாக நினைத்துதான் எழுதுவேன். அது ஒருவிதமான தனித்துவமான உணர்வை, தனித்துவமான மனநிலையைக் கொடுப்பதாக இருக்கிறது. `கோடி பேர் கேட்கும் பாடலை நான் மட்டும் தனித்த அறையில் உட்கார்ந்து எழுதுகிறேன்’ என்பது, கோடி பேருக்கும் நம்பகமான ஒரு மனிதனாக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான். தவிர, இப்போது நான் இருக்கும் இடம் என் இடமும் அல்ல... எனக்குரிய இடமும் இது அல்ல. காலம் தூக்கி எறிந்த மாலை என் கழுத்தில் விழுந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கழற்றி, இன்னொருவர் தோளுக்குக் காலம் மாற்றிவிடும். இல்லையென்றால் நானே கழற்றி மாட்டுவேன். எனக்கு முந்தைய கவிஞர்களைப் பற்றிப் படித்து அறிந்துகொண்டபோது, இவ்வளவு பெரிய சாதனையாளர்கள் இருந்த இடத்தில் எதுவும் தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறோம் என்ற அச்சம் எனக்குள் எப்போதும் இருக்கிறது. பெரிய கனவுகள் இல்லை. ஏற்கெனவே சம்பாதித்து வைத்துவிட்டுப் போனவர்களின் பெயரை, கொஞ்சமாவது கெடுக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலம்தான் அதற்குக் கருணை புரிய வேண்டும்!”