
கொலைத்தொழில் பழகும் ஒருவன், அன்பும் சிவமுமாய் வாழும் ஒருவன்...
இவர்கள் இருவரையும் வாழ்க்கை ஏற்றி, இறக்கி, தீண்டி விளையாடும் பரமபத ஆட்டமே இந்த ‘மகாமுனி.’
அரசியல்வாதி இளவரசுவின் ஆஸ்தான அடியாள் மகாதேவன். தன்னை, தன் மனைவியைக் கேவலமாகப் பேசும் எதிர்க்கட்சிப் பேச்சாளரைக் கடத்திவரும் பொறுப்பை மகாதேவன் (எ) ஆர்யாவிடம் கொடுக்கிறார் இளவரசு. அந்த வேலை, சில அரசியல் காரணங்களால் விபரீதத்தில் முடிகிறது. மறுபக்கம் கொங்கு மண்டலத்தின் பசுமையான கிராமம் ஒன்றில் யோகா, இயற்கை விவசாயம், வாசிப்பு, கல்விச்சேவை என நற்பண்புகளுடன் வாழ்கிறார் முனிராஜ் என்ற மற்றொரு ஆர்யா. ஆதிக்கச் சாதியில் பிறந்து முற்போக்குச் சிந்தனைகளுடன் வாழும் இதழியல் மாணவி மஹிமாவோடு ஆர்யா பழகுவது, சாதியத்தில் ஊறிய தந்தை ஜெயப்பிரகாஷுக்கும் அவர் சகாக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆணவக் கொலைக்கு நாள் குறிக்கிறார்கள். வாழ்வுக்கும் மரணத்துக்குமான ஊசலாட்டத்தில் நிற்கும் மகா-முனி இருவரின் வாழ்க்கையில் வென்றது மகாமுனியா, மரணமா என்பதைக் கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.

திரைவாழ்க்கையில் நினைவு வைத்துக் கொள்ளும்படியான பாத்திரங்கள் ஆர்யாவுக்கு. காத்திருந்ததுபோல மொத்தத் திறமையையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். மரணத்தை நித்தமும் சந்திக்கும் மகாவின் முகத் தெளிவு, இயலாமையில் புழுங்கும் முனியின் கண்களில் தேங்கிப்போன கோழைத்தனம் என இரண்டு கதா பாத்திரங்களையும் தனித்தனியாகச் சுமந்து இறுதியில் மகாமுனியாக பிரமாண்டமாக நிற்கிறார். காதல், பயம், பதற்றம், சோகம், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் தன் கண்களிலேயே கடத்தியிருக்கிறார் இந்துஜா. சுயசாதியை விமர்சிக்கும் சமூக உணர்வுள்ள பெண்ணாக மஹிமா, ஜி.எம்.சுந்தர், யோகி, ஜெயபிரகாஷ், ரோகிணி எனத் திரையில் வரும் அனைவரும் ஏதோவொரு கணத்தில் நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தித் திரும்பிப் பார்க்கவைக்கிறார்கள்.
சாந்தகுமாரின் உடலுக்குள் புகுந்து அவரின் கண்களாகவே மாறிக் கதை சொல்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் பத்மநாபன். இயக்குநரின் குரலில் தொடங்கி முடியும் கதைக்கு இவரின் ஒளிப்பதிவு பெரிய பலம். வலி விதைக்கும் ஃப்ரேம்களும் பதற்றம் கூட்டும் வண்ணங்களுமாக விரிகிறது அருளின் கைவண்ணம். முதல்பாதியில் கச்சிதமாக எடுபடும் தமனின் பின்னணி இசை இரண்டாம்பாதியில் தேங்கி நிற்கிறது. படத்தில் வரும் வீடுகளும் தங்கள் பங்கிற்குக் கதை சொல்கின்றன. உபயம் : கலை இயக்குநர் ரெம்போம் பால்ராஜ். சென்னைக்கும் ஈரோட்டிற்கும் மாறி மாறிப் பயணித்தாலும் கதை தேங்காமல் ஓடுவது சாபு ஜோசப்பின் படத்தொகுப்பால்தான்!

தெளிவாய்த் தொடங்கி முடியும் காட்சிகள் ஒவ்வொன்றும் குறுங்கதைகள். சாவைப் பரிசளிக்கும் தூதுவன் தன் மகனுக்காகப் பள்ளியில் போய் அன்பை போதிக்கும் இடம் அழகான முரண். நிச்சயமின்மை நிரம்பி வழிய பேருந்தில் திரும்பிப் பார்த்தபடி போகும் இந்துஜாவின் முகம் சோகக் கவிதை. பெற்றவர்களைப் பறிகொடுத்த சிறுவன் தனியாய் மரபெஞ்சில் அமர்ந்திருக்கும் காட்சி உள்ளூர எதையோ உடைக்கிறது. இப்படி தேர்ந்த எழுத்தாளராய் படம் முழுக்க ஒளிர்கிறார் இயக்குநர்.
காட்சியமைப்புகளில் கவனம் செலுத்திய சாந்தகுமார் கதாபாத்திர வடிவமைப்பில் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக் கலாம். ஸ்கெட்ச் போட்டுக் கொலைத் திட்டங்கள் தீட்டும் மகா, தன்னை அரசியல்வாதி ஏமாற்றுகிறார் என்பதைக் கடைசிவரை அறியாத அப்பாவியாகவா இருப்பார்? அதேபோல் முனிராஜின் பாத்திரப் படைப்பிலும் தெளிவு இல்லை. சாதியப் படிநிலைகள் பற்றி நன்றாகத் தெரிந்தவர் ஆணவக்கொலை முயற்சி எனத் தெரிந்த பின்னும் ‘ஐயா... ஐயா’ எனக் கெஞ்சிக்கொண்டே இருப்பாரா என்ன?

கடவுள் பற்றி முனிராஜ் பேசும் வசனமும் அதற்கு மஹிமா எதிர்வினை ஆற்றாமலிருப்பதும் அந்தந்த பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்புடையதாக இல்லை. விவேகானந்தர், அம்பேத்கர், பெரியார், விபூதி, ருத்திராட்சம், ‘புதிய திராவிடம்’, சார்லி சாப்ளின், சாவித்ரிபாய் பூலே, சாரு நிவேதிதா எனப் படம் முழுக்கத் தொடரும் குழப்பம் பாத்திரங்களுக்கு மட்டுமா, இயக்குநருக்குமா?
இரண்டரை மணிநேரம், கதையைக் காட்சிகளாக விவரித்த இயக்குநர், கடைசி இரண்டு நிமிடங்கள் வாய்ஸ் ஓவரில் படபடவென முடிவை விவரிப்பதும் அதுவரை இருந்த நேர்த்தியுடன் ஒட்டாமல் நிற்கிறது. துப்பாக்கிக் குண்டைச் சுமந்தபடியே பழிவாங்கும் கடமையை முடித்து, பயணங்களையும் மேற்கொண்டு மகாதேவன் சாவகாசமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பதெல்லாம் எந்த தர்க்கத்திலும் எடுபடவில்லையே?
கமர்ஷியல் சினிமாவுக்குள் நல்ல கதை சொல்லும் முயற்சிதான். ஆனால், முழுமை பெற்றிருந்தால் இன்னும் கொண்டாடியிருக்கலாம்.