பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.

Siddharth, Lijomol Jose
பிரீமியம் ஸ்டோரி
News
Siddharth, Lijomol Jose

ஸ்ட்ரீட் ரேஸரும் டிராஃபிக் போலீஸும் சந்தர்ப்ப வசத்தில் மாமன் - மச்சான் ஆகி, சண்டக்கோழி யானால் அது `சிவப்பு மஞ்சள் பச்சை.’

டமை, கண்ணியம், காவல்துறை காவல் அதிகாரியாக சித்தார்த். மிடுக்கான உடல்மொழியும் துடுக்கான பேச்சுமாக ஆச்சர்யப்படுத்துகிறார். அக்காவின் அன்புத் தம்பியாக, அக்காவுக்கு அன்புத்தகப்பனாக, ஸ்ட்ரீட் ரேஸ் ஓட்டும் ரேஸராக ஜி.வி.பிரகாஷ். முதிர்ச்சியில்லாத பதின்பருவத்துக் கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

 G. V. Prakash, Kashmira Pardeshi
G. V. Prakash, Kashmira Pardeshi

கதையின் அச்சாணியான ராஜி பாத்திரத்தில் கொஞ்சமும் பிசிரில்லாமல், பிரமாதமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார் அறிமுக நடிகை லிஜோமோல் ஜோஸ். நல்வரவு! ஜி.வி-யின் காதலியாக வரும் காஷ்மீராவுக்கு நடிப்பதற்கான இடங்கள் குறைவு என்றாலும் குறையில்லாத நடிப்பு. ஜி.வி.பிரகாஷ் அத்தையாக நடித்திருக்கும் `நக்கலைட்ஸ்’ தனத்தை இனி நிறைய படங்களில் பார்க்கலாம். பைக் ரேஸர் பாய்ஸும் செம நெருப்பு!

சித்துகுமார் இசையில் `மயிலாஞ்சியே’ பாடல், மயிலிறகின் வருடல். பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமாரின் கேமரா, ரேஸ் காட்சிகளிலெல்லாம் வெறித்தனம் காட்டியிருக்கிறது. ஷான் லோகேஷின் படத்தொகுப்பு, படத்தின் வேகத்தை ஜிவ்வெனக் கூட்டியிருக்கிறது.

சினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.

சசியின் படங்களில் சமூக அக்கறையுடன் சென்டிமென்ட் கலவை இருக்கும். இந்தப் படத்திலும் அதே. முதிரா இளைஞனின் முரட்டுத்தனத்தையும் உறவுகளின் முரண்பாடுகளையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் சசி. ஆனால் சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகிப்போனதில் சீரியல் வாடை அடிக்கிறது.

‘சாந்துப்பொட்டு ஒரு சந்தனப்பொட்டு...எடுத்து வெச்சுக்க வெச்சுக்க மாமோய்’ என்று ‘ஆண்மை என்றால் வீரம்’, ‘பெண்மை என்றால் கோழைத்தனம்’ என்று நூற்றாண்டாகச் சித்திரிக்கும் தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான குரலை முன்வைத்ததற்காக சசிக்கு அழுத்தமான கைகுலுக்கல்.

சினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.

நாடகத்தனம் ஆங்காங்கே சிவப்பு விளக்கு போட்டாலும், பாசத்துக்கும் சமூக அக்கறைக்கும் பார்வையாளர்கள் பச்சைவிளக்கு காட்டலாம்.