
கலைப்புலி எஸ்.தாணு
ஊட்டியில் `சச்சின்' ஷூட்டிங் தொடங்க வேண்டும். திடீரென வடிவேலு ``சென்னைக்கு அவசரமாகப் போகவேண்டும், மனது சரியில்லை'' என்கிறார். வடிவேலுவிடம் நான் என்ன சொல்லச் சொன்னேன், வடிவேலு மனம் மாறினாரா என்பதற்கு முன்பு, கடந்த வார ஆனந்த விகடனில் `தாணு சொல்வதில் உண்மையில்லை' என முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் எழுதியிருக்கும் கடிதத்திற்கு என் தரப்பைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

`உண்மைகள் சொல்வேன்' என ஆனந்த விகடனில் தொடர் எழுதுவதால் மட்டுமல்ல, எப்போதுமே நான் மனதில் பட்டதைப் பேசுபவன். வாழ்வில் சந்தித்த மனிதர்களையும், அவர்களோடு பழகிய பழக்கத்தையும், நான் தயாரித்த சினிமாக்களையும், அதன் வெற்றி தோல்விகளையும், பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் வெளிப்படையாக இந்தத் தொடரில் எழுதுகிறேன். அப்படித்தான் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
அண்ணன் கண்ணப்பன்மீது களங்கம் கற்பிக்கவேண்டும் என்கிற எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது. கண்ணப்பனின் திறமைக்கும், அவரது உழைப்புக்கும்தான் அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. ஆனால், அந்தப் பதவி அவருக்கு இல்லாமல் வேறு ஒருவருக்குத் தரப்பட இருந்தபோது அதற்காக சண்டை போட்டேன் என்றுதான் சொன்னேன். ''எனக்கு மந்திரி பதவி வேண்டும். வைகோவிடம் கேளுங்கள்'' என்று கண்ணப்பன் என்னிடம் சண்டை போடச் சொல்லவில்லை. அவர்மேல் உள்ள அன்பால், மரியாதையால் நான் உரிமையெடுத்துச் செய்தது அது. நடந்த சம்பவங்களை எந்தக் கூட்டலும் கழித்தலும் இல்லாமல்தான் சொல்கிறேன்.

வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ அமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என நானும்தான் முதலில் வற்புறுத்தினேன். ஆனால், அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே, அதாவது 1998-99 வாஜ்பாயின் ஒன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஒருமுறை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏற நின்றுகொண்டிருந்தபோது நான் வைகோவிடம், ``நீங்க பெட்ரோலியத்துறையைக் கேட்டு வாங்கி அமைச்சராகுங்க சார்'' என்று சொன்னேன். ஆனால் அவரோ, ``ஊருக்கு ஊரு பெட்ரோல் பங்க் கேட்பாங்கண்ணே. ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா பிரச்னையாகிடும். கட்சிக்காரங்களை நாம தவிர்க்கமுடியாதுண்ணே... வேண்டாம்'' என மறுத்துவிட்டார்.
``நீங்க யோக்கியனா இருங்க சார். வாஜ்பாய் எப்படி நல்ல பேர் எடுக்கிறாரோ, அதுபோல நீங்க அமைச்சர்களில் நல்ல பேர் எடுங்க. உங்களுக்கு நல்ல மரியாதை, செல்வாக்கு கிடைக்கும்'' என்று நான் வற்புறுத்தினேன். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை.
1999-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றிபெற்றுப் பதவியேற்றது. அப்போது இரண்டாவது முறையாக வாஜ்பாய் கேட்டும் வைகோ அமைச்சர் பதவியை மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் ``தாணு சார், கண்ணப்பன் அண்ணனுக்கு அமைச்சர் பதவி தரல'' என ஈரோடு கணேசமூர்த்தி எனக்கு போன் செய்து தகவல் சொல்கிறார். ``செஞ்சி ராமச்சந்திரன் அமைச்சர் பதவி கேட்க, 200 பேரைக் கூட்டிட்டு ட்ரெய்ன்ல வைகோவைப் பார்க்க டெல்லிக்குப் போயிட்டாரு. நீங்க உடனடியா தலையிட்டுப் பேசுங்கண்ணே... அப்பதான் கண்ணப்பன் அண்ணணுக்குப் பதவி கிடைக்கும். அண்ணன் இதுபத்தி எதுவும் பேசமாட்டேங்கிறார். நீங்க கேளுங்கண்ணே... இல்லைன்னா மிஸ் ஆகிடும்'' என்கிறார் கணேசமூர்த்தி. இதைக் கண்ணப்பன் அவர்கள் கணேசமூர்த்தியிடம் இப்போதும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.


கணேசமூர்த்தி என்னிடம் சொன்னபிறகுதான் நான் வைகோவுக்கு போன் அடித்தேன். ``இதோ பாருங்க சார்... கண்ணப்பன் அண்ணன், கலைஞருக்கு கார் ஓட்டியாக இருந்தது மட்டுமல்ல... மந்திரிப் பதவியில் இருந்துட்டு நம்ம கட்சிக்கு வந்தவர். அவருக்கு மந்திரி பதவி தராம, செஞ்சியாருக்கு நீங்க கொடுத்தீங்கன்னா தயவுசெய்து என்னை மறந்துடுங்க'' என வருத்தப்பட்டுப் பேசினேன். இதற்கு அடுத்துதான் அவர் கண்ணப்பனிடம் பேசினார்.
ம.தி.மு.க-வுக்கு இரண்டாவது அமைச்சர் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக வைகோ, வாஜ்பாயைப் பார்த்துப் பேசி கன்வின்ஸ் செய்கிறார். அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா என எல்லோரையும் பார்த்துப் பேசி, ராத்திரி தூக்கம் இல்லாமல் அலைந்து திரிந்து இரண்டாவது மந்திரி பதவியை வாங்கிவிட்டார். நள்ளிரவில் கண்ணப்பனுக்கு மரபுசாரா எரிசக்தித் துறை தனி அமைச்சர் பொறுப்பும், செஞ்சி ராமச்சந்திரனுக்கு நிதித்துறையில் இணை அமைச்சர் பொறுப்பும் வாங்கிவிட்டார்.
அந்த இரவில் டெல்லியில் இருந்து அண்ணன் கண்ணப்பன் எனக்கு போன் செய்தார். ``என்ன நீங்க, வைகோகிட்ட வருத்தப்பட்டுப் பேசியிருக்கீங்க. நான்தான் வேண்டாம்னு சொன்னேனே. நீங்க ஏன் தலையிட்டீங்க? இவ்ளோ பேரைப் பார்த்துப் பேசி ரொம்பக் கஷ்டப்பட்டு எனக்கு மந்திரி பதவி வாங்கிக் கொடுத்திருக்கார். எனக்கு உங்க மேல பாசம் இருந்தாலும், வைகோவைக் கஷ்டப்பட வெச்சிட்டீங்களேன்னு உங்க மேல வருத்தமும் இருக்கு'' என கண்ணப்பன் என்னிடம் சொல்கிறார். ``உங்களுக்கு வருத்தம் இருக்கலாம்ணே... ஆனா, கட்சிக்காரங்க ரெண்டு மந்திரி பதவி கிடைச்சதுக்கு எவ்ளோ சந்தோஷப் படுவாங்கண்ணே'' என்று சொன்னேன். உடனே வைகோவிடம் கண்ணப்பன் போனைக் கொடுத்தார். ``போதுமாண்ணே... உங்களுக்கு சந்தோஷ மாண்ணே.. திருப்தியாண்ணே'' என்றுதான் வைகோ என்னிடம் பேசினார். இதை கண்ணப்பன் மறுக்கமுடியுமா, வைகோதான் மறுக்கமுடியுமா, இல்லை கணேசமூர்த்திதான் மறுப்பாரா?!


கண்ணப்பன் மந்திரி பொறுப்பேற்றுக்கொண்டு சென்னை திரும்பியதும், விமான நிலையத்தில் கொண்டாட்டம். அவருக்கு மாலை போடுகிறார்கள். அவருக்கு விழுந்த முதல் மாலையைக் கழற்றிக்கொண்டுவந்து, எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிப் பிடித்து என் கழுத்தில் போட்டார். நான் எந்தவகையிலும் அவரோடு துணை நிற்கவில்லையென்றால் அந்த மாலையை ஏன் எனக்குப் போட்டார்? அப்போது அந்த மாலை உண்மையில்லையா?
கண்ணப்பனின் பேரன் கோவிந்த் என்கிற நந்தாவை வைத்து முதலில் `என்ன சொல்லப் போகிறாய்?' என 80 லட்சம் ரூபாய் செலவு செய்து படம் எடுத்துப் பாதியில் அப்படியே நின்றுவிட்டது. அடுத்து `புன்னகை பூவே' படம் எடுத்து ரூ. 2.87 கோடி நஷ்டம். 2000-களில் இந்தப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நஷ்டங்களுக்காகத்தான் என்னைக் கூப்பிட்டு அந்த சித்தூர் மின்சார புராஜெக்ட்டைக் கொடுக்க முன்வந்தார் கண்ணப்பன். ஆனால், அது என் கையை விட்டுப் போய்விட்டது என்று என்னிடம் சொன்னவர், அண்ணன் கண்ணப்பனிடம் உதவியாளராக இருந்த பாலன். ``அண்ணே, அவர் ஹைதராபாத்காரருக்குக் கொடுத்துட்டார்'' என்று சொன்னார். பாலனிடம் கண்ணப்பன் இப்போதும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கண்ணப்பன் கட்சியை விட்டுப் போகும்போது நான் அவ்வளவு வருத்தப்பட்டேன், அவர் என்னிடம் என்னவெல்லாம் சொல்லிவிட்டு கலைஞரிடம் போனார் என்பதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. கண்ணப்பன் மேல் எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. அது இறுதிவரை தொடரும்.
சுனாமி, மரணம், என் மனது சரியில்லை என சென்னைக்கு உடனடியாகப் போக ஏதேதோ காரணங்கள் சொல்கிறார் வடிவேலு. `கிழக்குச் சீமையிலே' படத்தில் கவுண்டமணி நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க வந்த சம்பவம், அவருக்கு அப்போது சம்பளத்தில் ஏற்பட்ட தகராறைத் தீர்த்தது எனப் பல விஷயங்களை அவரிடம் சொல்லச் சொல்கிறேன். ஆனால், அவர் விடாப்பிடியாக சென்னை கிளம்பிவிட்டார். பின்னர் வேறொரு தேதியில் வந்துதான் `சச்சின்' படத்தில் நடித்துக்கொடுத்தார்.
ஊட்டியில் ஷூட்டிங்கை திட்டமிட்டதற்கு முன்பாகவே முடித்துவிட்டார்கள். நான் விஜய் தம்பியை வைத்துப் படம் ஆரம்பித்ததுமே நல்ல தொகைக்குப் படம் வியாபாரமாகிவிட்டது. ஆனால், ஷூட்டிங்கை முன்கூட்டியே முடித்துவிட்டதால் எனக்கு அதிக லாபம் வரும் சூழல். இதனால் சென்னையில் மால்களில் எடுக்கத் திட்டமிட்டிருந்த ஷூட்டிங்கை சென்னை கோலா ஃபேக்டரியில் மிக பிரமாண்டமாக செட் போட்டு எடுத்தேன். தோட்டாதரணிதான் செட் போட்டார். அங்கே சண்டை, பாடல் எனப் பல காட்சிகளைப் படமாக்கினோம்.
அடுத்து தரமணி பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் செட் போட்டு தொடர்ந்து 14 நாள்கள் சண்டைக்காட்சியைப் படம்பிடித்தோம். மழையில் நனைந்துகொண்டு விஜய் சண்டை போடுவதுபோன்ற காட்சி. 14 நாள்களும் செயற்கை மழையில் படம் பிடித்தோம். விஜய் மிகவும் பொறுமையோடு, அதிக சிரத்தை எடுத்து, கடுமையாகத் தன் உழைப்பைக் கொடுத்தார். ஸ்டன்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயன். அப்போதுதான் ஆயிரம் ஃப்ரேம் கேமராக்கள் வந்திருந்தன. அதை வைத்துதான் இந்தச் சண்டைக்காட்சியை எடுத்தோம்.
இதற்கிடையே பாடலில் ஒரு பிரச்னை வந்தது. படத்துக்கு இசை தேவிபிரசாத். அவர் தெலுங்கில் இசையமைத்த ஒரு பாடலை எடுத்து, இயக்குநரிடம் ஓகே வாங்கி `சச்சின்' படத்தில் சேர்த்துவிட்டார். ஆனால், நான் அவரிடம் ``ஏற்கெனவே 'ஆளவந்தான்' பட நேரத்தில் எங்களுக்கும் ஜெமினி லேப் மனோகர் பிரசாத், ரவிசங்கர் பிரசாத்துக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் அவர்கள் படத்தின் பாடலை எடுத்து நம் படத்துக்குப் பயன்படுத்தினால் பிரச்னையாகும்'' என்று சொன்னேன். ``இல்ல சார், நான் அவர்களிடம் பேசிவிட்டேன்'' என்று சொன்னவர் என் முன்பாகவே ஜெமினி லேபில் சம்பந்தப்பட்ட வர்களிடம் பேசினார். அவர்களும் ஓகே சொன்னார்கள். அதன்பிறகுதான் அந்தப் பாடலை ஷூட் செய்தோம்.
பிபாஷா பாசுவும், விஜய்யும் நடனம் ஆடும் `டேய் டேய் டேய் கட்டிக்கோடா' என்கிற பாடல் அது. ஆனால், படத்தின் ரிலீஸுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக `பாடலை எங்களிடம் அனுமதி பெறாமல் எடுத்துவிட்டார்கள்' என நீதிமன்றத்தில் ஜெமினி லேப் நிறுவனம் தடை கேட்கிறார்கள். பாடலை நீக்கச் சொல்லாமல், படத்துக்கே தடைவிதிக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொலைக்காட்சியில், `சச்சின்' படம் வெளிவருவதில் சிக்கல்... படப் பிரதியைப் பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு'' என ஃப்ளாஷ் நியூஸ் வருகிறது. அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் கொடுக்கவில்லை. `வேறு ட்யூன் போட்டுக்கொள்ளலாம் அல்லது அந்தப் பாடலையே நீக்கிவிடலாம்' என்றுதான் உத்தரவு வருகிறது. ஆனால், படத்துக்கே தடை என்பதுபோல செய்தி வெளியாகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் எல்லோரும் பணத்தைக் கட்டாமல் பின்வாங்குகிறார்கள். இன்னும் இரண்டு நாள்களில் விஜய் தம்பியின் `சச்சின்' படம், ரஜினி சாரின் `சந்திரமுகி' படத்தோடு ரிலீஸாகவேண்டும். ஆனால், பாடல் வடிவில் பிரச்னை வந்து நிற்கிறது.
`சச்சின்' படத்துக்குக்கு எனக்குக் கடன் கொடுத்த ஃபைனான்சியரைப் பார்க்கச் செல்கிறேன். முந்தைய படத்தில் கிடைத்த லாபம், மேற்கொண்டு ஃபைனான்சியரிடம் கடன் என இரண்டையும் சேர்த்துப் படம் எடுப்பதுதான் என் தயாரிப்பு முறை. எனக்குத் தெரிந்த ஒரே தொழில் சினிமாதான்.
நான் தேடி ஓடிய ஃபைனான்சியர் யார், அவர் என்ன சொன்னார், விஜய்யின் `சச்சின்' பட ரிலீஸ் பிரச்னைகள் தீர்ந்தது எப்படி, நான் ஏன் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை சந்தித்தேன்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்