
- கலைப்புலி எஸ்.தாணு
ரிலீஸுக்கு முன்பாக `சச்சின்' படத்தின் ப்ரிவியூ காட்சியை விஜய் தம்பியுடன் சேர்ந்து பார்க்கிறேன். படம் முடிந்ததும் விஜய் என்னிடம், ``சார், ஒரு குழந்தை இறந்துடுது... அதற்கு அடுத்த சீனே நான் பீர் குடிப்பதுபோல இருந்தா அது நல்லாருக்காது. அதை மட்டும் டைரக்டர் கிட்ட சொல்லி மாத்துங்க சார்'' என்கிறார். உடனடியாக இயக்குநர் ஜான் மகேந்திரனைக் கூப்பிட்டு அந்தக் காட்சியை அப்படியே மாற்றச் சொல்லி விட்டேன்.
`விஜய்யின் சச்சின் படத்துக்குத் தடை... படப்பிரதிகளைக் கைப்பற்ற உத்தரவு' எனச் செய்தி தவறாக வெளியானதும், எனக்கு படத்துக்காக ஃபைனான்ஸ் செய்த சத்திய ராமமூர்த்தியைச் சந்தித்து, கண்கலங்கியபடியே பேசுகிறேன். ``சார், தவறான செய்தி பரவுகிறது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனச் சூழ்ச்சி நடக்கிறது. நீங்கள் கிளியரன்ஸ் கொடுத்துவிடுங்கள். பிரின்ட் பாக்ஸைக் கொண்டுபோய் நான் என் அலுவலகத்தில் வைத்துக்கொள்கிறேன். அப்போதுதான் எல்லோரும் என்னிடத்தில் வந்து பணம் கட்டிப் படத்தை வாங்கிக்கொண்டு போவார்கள். உங்களுக்கான பணத்தையும் நான் கொடுக்க முடியும்'' என்கிறேன்.

சத்திய ராமமூர்த்தி என்கிற அந்த மாமனிதர், உடனடியாகத் தன் மகன் ரமேஷை அழைத்தார். இவர்கள் இருவரும்தான் இந்தப் படத்துக்கு ஃபைனான்சியர்கள். ரமேஷ் பின்னர் விஜய் தம்பியை வைத்து `போக்கிரி' படத்தைத் தயாரித்தவர். ``உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா... நீங்கள் இவ்வளவு சொல்ல வேண்டுமா?'' என்று சொன்னவர், உடனடியாகக் கடிதம் எழுதி வாஹினி லேபுக்கு அனுப்பி, பிரின்ட்டை எல்லாம் கொடுக்கச் சொல்லிவிட்டார்.
`ஆளவந்தான்' படத்தின்போது ஜெமினி லேபோடு எனக்குப் பிரச்னை ஏற்பட்டது. அப்போது நடத்தமுடியாமல் முடங்கியிருந்த வாஹினி ஸ்டூடியோவை நான் லீஸுக்கு எடுத்து நடத்தினேன். தரமணி, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இருந்து சீஃப் இன்ஜினீயரை அழைத்துவந்து அங்கே மெஷினை எல்லாம் இயங்கவைத்து, லேபை மீண்டும் பழையபடி இயக்கத்துக்குக் கொண்டுவந்தேன். அதிக டிஸ்கவுன்ட் கொடுத்து, பல படங்களுக்கு அங்கே பிரின்ட் போட்டுக் கொடுத்தேன். நஷ்டத்தில் இருந்த அந்த நிறுவனம் லாபத்துக்கு வந்தது. மூன்று ஆண்டுகள் இந்த நிறுவனத்தை நடத்திவிட்டு, பின்னர் அதன் நிறுவனர்களிடமே ஒப்படைத்தேன்.
இந்தச் சூழலில்தான் சத்திய ராமமூர்த்தியிடம் இருந்து கடிதம் வாங்கி, வாஹினி ஸ்டூடியோவில் இருந்து எல்லா பிரின்ட்டையும் என்னுடைய அலுவலகத்துக்குக் கொண்டுவந்துவிட்டேன். ஒரே பதற்றம். ஒரு பக்கம் `சந்திரமுகி' ரிலீஸ், இன்னொரு பக்கம் `சச்சின்' ரிலீஸ்.
படத்துக்கு பூஜை போடும்போதே எப்போது ரிலீஸ் என்பதையும் சொல்லிவிடுவது என் வழக்கம். அப்படித்தான் `சச்சின்' படத்தையும் ஆரம்பித்தபோதே ஏப்ரல் ரிலீஸ் என விளம்பரம் செய்தேன். அதனால் எனக்கு மிகவும் நெருக்கமானவரான ரஜினி சாரின் படம் அன்று வெளியானாலும், ஏற்கெனவே உறுதியளித்தபடி சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். ``ரஜினியின் `சந்திரமுகி' ரிலீஸ் ஆகும் தேதியில் `சச்சின்' படத்தை தாணு ரிலீஸ் செய்யமாட்டார்'' என்ற பேச்சுகளும் ஓடிக்கொண்டிருந்தன.
ஆற்காடு வீராசாமியிடம் பேசி, எழில் எனும் வழக்கறிஞரைப் பிடித்தேன். நீதிமன்றத்தில் வாதாடி, ``பாடல் ட்யூனை மட்டும் மாற்றி, படத்தை வெளியிடலாம்'' என உத்தரவு வாங்கி, படத்தின் ரிலீஸுக்கு முழுமூச்சில் தயாராகிவிட்டேன். இரவோடு இரவாக தேவி பிரசாத் பாடல் ட்யூனை மட்டும் அப்படியே மாற்றிக்கொடுக்க, பாடல் பிரச்னை முழுவதுமாகத் தீர்ந்தது.
இதற்கிடையே ‘படப்பிரதியைக் கைப்பற்ற உத்தரவு' எனச் செய்தி வெளியிட்ட சேனல் `சச்சின்' படத்தின் பாடல்கள், டிரெய்லர் என எதையும் வெளியிடவில்லை. படம் சொன்னபடி `சந்திரமுகி' ரிலீஸ் ஆன அதே நாளில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. சென்னை ஆல்பட் தியேட்டரில் 200 நாள்கள் படம் ஓடியது. கடைசி வாரம்கூட எனக்கு ஆயிரம் ரூபாய் ஷேர் வந்தது. ஆல்பட் மாரியப்பனுக்கு நன்றி.

வெற்றி தந்த மகிழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரைப் போய்ப் பார்த்தேன். ``சார், எனக்கு நல்ல லாபம் வந்திருக்கிறது. அந்த லாபத்திலிருந்து உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என விரும்புகிறேன். தம்பிகிட்ட சொல்லிடுங்க'' என்கிறேன். ``ஹாஹாஹா'' எனச் சிரித்தார் எஸ்.ஏ.சி சார். தெய்விகமான சிரிப்பு அது. ``ஒரு படம் வெற்றிபெற்று, நல்ல லாபம் வந்திருக்கிறது என்று ஒரு தயாரிப்பாளர் சொல்வதே பத்துப் படம் பண்ணுன மாதிரி சந்தோஷம். எங்களுக்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் கொடுத்த சம்பளமே போதும். நல்லபடியாகப் படத்தை முடித்து, இவ்வளவு பிரச்னைகள் வந்தபோதும் சொன்னபடி ரிலீஸ் செய்து, லாபம் வந்திருக்கிறது என்றும் சொல்கிறீர்கள். எங்களுக்குப் பெரிய திருப்தி. பணமெல்லாம் வேண்டாம். இந்த விஷயத்தை நிச்சயம் தம்பியிடம் சொல்வேன். நீங்கள் தம்பியோடு நிறைய படங்கள் பண்ணவேண்டும்'' என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
விஜய் தம்பியிடம் நான் ஏற்கெனவே கதை சொல்ல அனுப்பியிருந்த வி.இசட்.துரை அடிக்கடி வந்து என்னைச் சந்திப்பார். அவர் சொன்ன கதையை நான் ``பண்ணலாம்'' எனச் சொல்லி அட்வான்ஸும் கொடுத்து வைத்திருந்தேன். இந்தச் சூழ்நிலையில் திடீரென ஒருநாள் எதிர்பாராத வகையில் கேமராமேன் ராஜசேகர், இயக்குநர் வி.இசட்.துரையையும் நடிகர் சிம்புவையும் அழைத்துக்கொண்டு என் அலுவலகம் வருகிறார். எனக்கு ஆச்சர்யம். டி.ராஜேந்தரோடு அவரின் திருமணத்துக்கு முன்பிருந்தே பழகியவன் என்பதால் குழந்தையிலிருந்தே சிம்புவைப் பார்த்திருக்கிறேன். அதனால், சிம்பு மேல் எனக்குப் பிரியம் அதிகம். அறைக்குள் நுழைந்த சிம்பு ஆசீர்வாதம் வாங்குகிறார். அவர் குடும்பத்தின் நலம் விசாரிக்கிறேன்.
``அங்கிள், `தொட்டி ஜெயா' படத்தின் கதையைக் கேட்டுட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் பண்ணணும்'' என்கிறார். ``தம்பி... உனக்கு என்ன நடந்ததுன்னு எல்லாம் தெரியும். பின்னாடி பிரச்னை வரும். வேண்டாம்பா'' என்கிறேன். ``அதெல்லாம் ஒண்ணும் நடக்காது அங்கிள். நான்தான் இந்தப் படம் பண்ணுவேன். எந்தப் பிரச்னையும் வராது. நான் பார்த்துக்கிறேன்'' என உரிமையோடு, செல்லமாக சிம்பு பேசிய பாங்கு எனக்கு மிகவும் பிடித்தது. திரும்பவும் ``இல்லப்பா! நீ இப்ப சொல்லுவ. ஆனா, பின்னாடி யார் யாரோ வந்து தலையிடுவா ங்க. நமக்குள்ள பிரச்னை வரும். வேற யாராவது தயாரிப்பாளர்கூட பண்ணு'' என்கிறேன். ``இல்ல அங்கிள், இந்தப்படம் நீங்கதான் பண்ணணும். ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க தைரியமாகப் பண்ணுங்க'' என்கிறார்.
``சரிப்பா... பண்ணலாம்'' எனச் சொல்லி சம்பளத் தொகையைச் சொல்கிறேன். நான் சொன்ன சம்பளத்தை அப்படியே ஒப்புக்கொண்டு ``அங்கிள், அட்வான்ஸை மட்டும் வீட்டுக்கு வந்து கொடுக்கணும்'' என்கிறார். ``எங்கள் வீட்டில் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். நீங்கள் வீட்டுக்கு வந்து கொடுத்தால் எனக்கு சந்தோஷம்'' எனச் சொல்ல, அவர் வீட்டுக்குப் போனேன். அவரின் அம்மா உஷாவைப் பார்த்துப் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தேன். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை. வில்லனாக இந்தி நடிகர் பிரதீப் ராவத்தைக் கேட்டார்கள். அவரை ஃபிக்ஸ் செய்துகொடுத்தேன்.
இந்த நேரத்தில் ஒருநாள் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பின் அட்டைப்படத்தில் ஓர் இளம் பெண்ணின் புகைப்படம் பார்த்தேன். பார்த்ததுமே அந்தப்பெண் `தொட்டி ஜெயா' படத்தின் கதாநாயகி ரோலுக்கு சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவரின் விவரங்களை தேவிஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டர் மேலாளர் சதீஷிடம் விசாரிக்கச் சொல்கிறேன். `அட்டையில் டயானா' என அந்த நாளிதழில் குறிப்பிட்டிருந்தது. கேரளாவில் தேடிப் பிடித்து அந்த டயானாவை ரயிலிலேயே என் அலுவலகத்துக்கு அழைத்துவந்துவிட்டார் சதீஷ். டயானா தன் அப்பா, அம்மாவோடு வந்திருந்தார்.
எனக்கு அந்த டயானாவைப் பிடித்துவிட்டது. ஆனால், மலையாளத்தில் `4 the People' என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். அந்தப் படத்தில் கோபிகா நடித்திருக்கிறார். அப்போதே ``தமிழில் ஒரு கதை இருக்கிறது. அந்தப் படம் எடுக்கும்போது நீங்கள்தான் ஹீரோயின்’' என ராஜசேகரும், வி.இசட்.துரையும் கோபிகாவிடம் உறுதிகொடுத்து விட்டிருக்கிறார்கள். இது எனக்குத் தெரியாது. அதனால், `இந்த டயானாதான் ஹீரோயின்' என நான் சொன்னதும், ``சார், டெஸ்ட் எடுத்துக்கலாமா'' என்கிறார்கள் இருவரும். ``சரி எடுத்துக்கோங்க'' என்கிறேன்.

ஒரு ஹேண்டிகேம் கொண்டுவந்து என் அலுவலகத்தின் மாடியிலேயே வைத்து ஷூட் செய்கிறார்கள். ஷூட் முடிந்ததும் ``அப்புறம் நாம பேசிக்கலாம் சார்'' என ராஜசேகரும் துரையும் சொல்ல, டயானாவிடமும் அவர் பெற்றோரிடமும் விரைவில் தகவல் சொல்வதாகச் சொல்லி அனுப்புகிறேன்.
அவர்கள் போனதும், ``சார், இந்தப் பொண்ணு வேணாம் சார். நடிக்கத் தெரியல'' என்கிறார்கள் இருவரும். ஷூட் பண்ணியதை ஹேண்டிகேமில் பார்க்கிறேன். அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார் டயானா. நான் அவர்கள் இருவரிடமும், ``நீங்க யாருக்கோ வாக்கு கொடுத்துட்டு நல்ல கதாநாயகியை மிஸ் பண்றீங்க. இந்தப் பொண்ணு பெரிய நடிகையா வருவாங்க பாருங்க'' என்று சொல்லிவிட்டு அவர்கள் விருப்பப்படியே விட்டுவிட்டேன். நாங்கள் தவறவிட்ட அந்த டயானாதான் இப்போதைய நயன்தாரா. இப்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாராவின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் `நாம அறிமுகப்படுத்தியிருக்க வேண்டிய பொண்ணாச்சே' என்கிற எண்ணம் எனக்கு எழும்.
`தொட்டி ஜெயா' படம் ரிலீஸுக்கு நெருங்கும் நேரத்தில் ஒரு பிரச்னை வருகிறது. சிம்புவுக்கு நான் பேசிய சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன். ஆனால், அவர்கள் வீட்டில், ‘குறைவா குடுத்திருக்காங்க' என ஒரு பிரச்னையை உருவாக்குகிறார்கள். பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போகிறது. கே.ஆர்.ஜி முன் கூட்டம் கூடுகிறது. சிம்புவின் தந்தை வந்திருக்கிறார். நானும் போயிருக்கிறேன். ``நான் என்ன சம்பளம் பேசினேன், எவ்வளவு கொடுத்தேன் என்பதை சிம்புவை இந்த இடத்துக்குக் கூப்பிட்டுக் கேளுங்கள். அவர் குறைவாகக் கொடுத்தாகத் சொன்னால், அவர்கள் பெற்றோர் கேட்கும் பணத்தை இங்கே வைத்துவிடுறேன்'' என்கிறேன். சிம்பு அந்தக் கூட்டத்துக்கு வந்தாரா, அவருடைய தந்தை முன் என்ன சொன்னார், `தொட்டி ஜெயா' எப்படி ரிலீஸ் ஆனது... அடுத்த வாரம் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்