மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 25

உண்மைகள் சொல்வேன்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்

- கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்திவிட்டது. விவேக்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான். ஒரு கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அவரே அதைத் தயாரித்து நடிக்க விரும்பினார். என்னிடம் இயக்குநரை அறிமுகப்படுத்தி, கதையைச் சொல்லவைத்தார். ஆனால், ‘`சினிமா இப்போதிருக்கும் சூழலில் நீ திரைப்படத் தயாரிப்பில் இறங்காதே விவேக். வேறு ஒரு தயாரிப்பாளரிடம் படத்தைக் கொடுத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்து. இப்போது வேண்டாம்’’ என்றேன். அதை அவர் ஏற்றுக்கொண்டாலும், ஒரு படத்தைத் தயாரிக்கவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

உண்மைகள் சொல்வேன்! - 25

தம்பி தனுஷ் நடிக்க, நாங்கள் தயாரித்த ‘விஐபி-2’ படத்தில் மிகச்சிறப்பாக அவர் நடித்துக்கொடுத்தார். அதேபோல் இப்போது இயக்குநர் செல்வராகவன், தம்பி தனுஷை வைத்து இயக்கும் ‘நானே வருவேன்’ படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். உடனடியாக விவேக்கிற்கு போன் அடித்து இயக்குநரைப் பார்க்கச் சொன்னேன். கதை கேட்டுவிட்டு வந்து என்னிடம் பேசினார். ‘`பிரமாதமான ஸ்கிரிப்ட் சார். எனக்கு ரொம்ப நல்ல ரோல். நிச்சயம் நான் நடிக்கும்போது அந்த ரோல் இன்னும் கவனம்பெறும்’’ என்று சந்தோஷத்தோடு பேசினார். இப்போது அவர் நம்மிடையே இல்லை என நினைக்கும்போது மனம் உடைந்து போகிறது.

விவேக்கைப் பற்றி நினைக்கும்போது அவரது குருநாதர் கே.பாலசந்தர் சார் நினைவுக்கு வருகிறார். 2007-ம் ஆண்டு ஒருநாள் பாலசந்தர் சார் என்னை அழைக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை அருகே மூகாம்பிகை காம்ப்ளெக்ஸில் 5,000 சதுர அடியில் அவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருக்கிறது. ‘`உடையார் மகனிடம் பேசி அதை அடமானம் வைத்து எனக்குப் பணம் வாங்கிக்கொடு’’ என்கிறார். ‘`என் பையன் கைலாசம் தெரியாத்தனமா ஒரு புராஜெக்டைக் கையில எடுத்துட்டு, என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கான்யா. அவன் முகத்தை என்னால பார்க்கவே முடியலை. ரொம்ப வேதனையா இருக்குய்யா’’ என மனம் உடைகிறார். நான் உடனே ‘`சார், ரஜினி சாரிடம் டேட் கேட்கலாமே’’ என்கிறேன். ‘`எவ்ளோயா பண்ணுவான்... இன்னும் எவ்ளோதான்யா பண்ணுவான்... எத்தனை தடவையா நான் அவன்கிட்ட போய்க் கேட்குறது… எத்தனையோ முறை அவன் எனக்கு உதவி பண்ணிட்டான்யா’’ என்கிறார். பாலசந்தர் சார் மனம் உடைந்து கலங்கியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வதென்று ஒரே யோசனை.

உண்மைகள் சொல்வேன்! - 25

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என எல்லா நல்ல நாள்களிலும் ரஜினி சாருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவது என் வழக்கம். அப்போதும் ஒரு நல்ல நாள் வருகிறது. ரஜினி சாருக்கு போன் அடிக்கிறேன். ‘`சார், ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சார். உங்க டைம் வேண்டும்’’ என்கிறேன். ‘`அடுத்த வாரம் பேசிடலாம் தாணு’’ என்கிறார். இதற்கிடையே ‘சிவாஜி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் மைசூர் செல்லவேண்டிய சூழல் வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நான் ஹைதராபாத் செல்வதற்காகக் காத்திருக்கிறேன். ரஜினி சாரும் மைசூர் போவதற்காக வருகிறார். விமான நிலையத்துக்குள் என்னைப் பார்த்தவர் வேக வேகமாக வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘`சார், பர்சனலா ஒரு விஷயம் பேசணும். தள்ளிட்டே போகுது சார்’’ என்கிறேன். ‘`11 நாள்தான் ஷூட்டிங் தாணு. திரும்ப சென்னை வந்ததும் மீட் பண்ணிடலாம்’’ என்கிறார். ஆனால், அவர் திரும்பி வந்தபிறகும் பேசும் சூழல் இல்லை.

இங்கே பாலசந்தர் சாரின் பிரச்னையும், அவரது மன உளைச்சலும் உச்சத்துக்குப் போகின்றன. இனியும் தாமதிக்கக்கூடாது என ரஜினி சாரை போனில் அழைக்கிறேன். ‘`சார், பாலசந்தர் சார் பெரிய பிரச்னையில் இருக்கிறார்’’ என, நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு ‘`கே.பி-க்கு 80 வயசு ஆகப்போகுது. இப்ப நீங்க அவருக்கு ஒரு படம் பண்ணீங்கன்னா நல்லாருக்கும்’’ என்கிறேன். ‘`கே.பி சார் எப்போது இந்த விஷயத்தை உங்களிடம் சொன்னார்?’’ என்றார் ரஜினி சார். ‘‘ஒரு மாசத்துக்கு மேல ஆகுது சார்’’ என்கிறேன். ‘`நீங்க நாளைக்குக் காலைல வீட்டுக்கு வந்துடுங்க’’ என்கிறார். அடுத்த நாள் வீட்டுக்குப்போய் நடந்த விஷயங்கள், இயக்குநர் சிகரத்தின் பிரச்னைகள் எல்லாவற்றையும் சொல்கிறேன். ‘`சரி தாணு, நாம ரெண்டு பேரும் பேசின விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிக்காதீங்க’’ என்று என்னை அனுப்பிவைக்கிறார்.

இந்த இடத்தில் ரஜினி சார் என்னை மன்னிக்கவேண்டும். இந்த விஷயத்தை நான் ஏன் இப்போது வெளியே சொல்கிறேன் என்றால், நன்றி மறக்கக்கூடியதாக இன்றைய உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதுவும் சினிமா உலகம் இதில் உச்சம். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், தன்னுடைய குருநாதர் ஒரு கஷ்டத்தில் இருக்கிறார் என்றதும், ‘தான் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், தனக்கு எப்படிப்பட்ட சங்கடங்கள் இருந்தாலும் உடனடியாக உதவவேண்டும்’ என்கிற ரஜினி சாரின் நல்ல மனம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். ரஜினி சாரிடம் பேசிவிட்டு வெளியே வந்ததுமே கே.பி சாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

அடுத்த நாள் கே.பி சாரிடமிருந்து போன் வந்தது. ‘`யோவ், ரொம்ப தேங்க்ஸ்யா… ரஜினி போன் பண்ணான்யா. ‘கதை பறையும்போல்’னு ஒரு மலையாளப் படத்தை ஒருமுறை பார்த்துடுங்கன்னு சொன்னான். நான் ஏற்கெனவே பார்த்துட்டேன்னு சொன்னேன். ‘சரி, அப்ப நான் வீட்டுக்கு வரேன்’னு சொல்லிட்டு உடனே நேரா வீட்டுக்கு வந்துட்டான்யா. வந்ததுமே ‘இந்தப் படம் நாம பண்றோம்’னு சொல்லிட்டான்யா. ரொம்ப நன்றிய்யா’’ என்றார். ‘`சார், அவர் உங்களுக்குச் செய்யவேண்டியது கடமை சார். உண்மையான சிஷ்யன்னா ரஜினி சார்தான். உங்களுக்கு ஒரு கஷ்டம்னதும் ஓடி வந்து நிற்கிறார் பாருங்க’’ என்றேன். ‘`நாளைக்கு வீட்டுக்கு வாய்யா’’ என்றார். அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குப் போனேன். என்னை அப்படியே சில நிமிடங்கள் கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த அன்பின் கதகதப்பை என்னால் இப்போதும் உணரமுடிகிறது.

உண்மைகள் சொல்வேன்! - 25

‘குசேலன்’ படம் நல்லபடியாக முடிந்தது. சில விஷயங்களையெல்லாம் கே.பி செட்டில் செய்தார். ஆனால், சில காலங்கள் கழித்து மீண்டும் அவருக்கு ஒரு பிரச்னை. என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘`சார், ஆழ்வார்பேட்டை சிஷ்யர்கிட்ட சொல்லலாமே’’ என்றேன். ‘`நான் என்னன்னுய்யா போய்ச் சொல்றது. அவங்களுக்கே தெரியும்யா. ‘உத்தம வில்லன்’ படத்துல நடிச்சேன், 10 லட்சம் ரூபாய் செக் கொடுத்திருக்கார்யா. இல்ல, வேணாம்யா... செத்துடுறேன்யா… நான் செத்துடுறேன்’’ என மிகவும் மனம் வருந்திப் பேசினார்.

நான் மிகவும் மதிக்கும் இயக்குநர்கள் பாரதிராஜாவோடு ‘கிழக்குச் சீமையிலே’ படம் செய்துவிட்டேன். மகேந்திரன் சார் கதை, திரைக்கதை, வசனத்தில் ‘தையல்காரன்’ படம் எடுத்துவிட்டேன். பாலுமகேந்திரா சார் இயக்கத்தில் ‘வண்ண வண்ண பூக்கள்’ எடுத்தேன். அதேபோல் கே.பி சாரோடு ஒரு படம் பண்ண ஆசைப்பட்டேன். ஒருநாள் கே.பி சார் ‘மன்மத லீலை’ படத்தை மீண்டும் பண்ணலாம் எனச் சொன்னார். அடுத்த நாளே 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் அட்வான்ஸாகக் கொடுத்தேன். ‘`என்னய்யா, நான் டைரக்ட் பண்ணுன படங்களுக்கு சம்பளமே இவ்ளோ வாங்கலைய்யா’’ என்றார். அப்போது சில நடிகர்களிடம் இந்தப் படத்தில் நடிக்கப் பேசினோம். ஆனால், இயக்குநரின் வயது இடைவெளி காரணமாக பல இளம் நடிகர்களும் தயங்கினார்கள். அதனால், படம் தள்ளிக்கொண்டே போனது. இந்தச் சூழலில், ‘`யோவ், நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கு. ‘மன்மத லீலை’லாம் வேண்டாம்யா. வேற ஒரு கதை இருக்கு. ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்’’ எனச் சொல்லி ஒரு பெரிய ஃபைலை மேஜையில் எடுத்து வைத்து ‘`இந்தப் படம் பண்ணலாம்யா’’ என்றார். ‘`சார், நீங்க தடி ஊன்றிக்கிட்டு வந்து டைரக்ட் பண்ணுனாக்கூட படம் எடுக்க நான் ரெடி’’ என்றேன். ஆனால், சில வாரங்களில் உடல்நிலை மோசமாகி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இறந்துவிட்டார். பாலசந்தர் சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு.

கே.பி சாரோடு எனக்குப் பழக்கம் ஏற்படக் காரணம், கலைஞர். நான் ஏற்கெனவே இந்தத் தொடரில் சொன்னதுபோல 1989-ல் முதலமைச்சர் ஆனதும் ‘நல்லவன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை நடத்த கலைஞரை அழைத்தேன். அப்போது அவர் ‘`எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் பாலசந்தர். அவரை விழாவுக்குக் கூப்பிடுய்யா’’ என்றார். எனக்கு பாலசந்தர் சாரோடு அறிமுகமே கிடையாது. கலைஞர் சொன்னதால் முதல்முறையாக கே.பி சாரைப் போய்ப் பார்த்தேன். ‘`கலைஞர் என்னைக் கூப்பிடச் சொன்னாராய்யா?’’ என்று கேட்டு, மனமகிழ்ச்சியோடு விழாவுக்கு வந்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 25

இப்போது, கடந்த வாரம் சொன்ன `தொட்டி ஜெயா’ சம்பளப் பிரச்னை விவகாரத்துக்கு வருகிறேன். சிம்புவுக்காகக் காத்திருக்கிறோம். தயாரிப்பாளர் கவுன்சிலில் கே.ஆர்.ஜி முன்னிலையில் ஒருபக்கம் சிம்புவின் பெற்றோர் நிற்க, மறுபக்கம் நான் நிற்கிறேன். ‘`நான் என்ன சம்பளம் பேசினேன், என்ன கொடுத்தேன் என்பதை சிம்புவையே நேரில் வந்து சொல்லச் சொல்லுங்கள். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நான் செய்கிறேன்’’ எனச் சொன்னதால் சிம்புவை அழைத்தார்கள். சிம்பு வந்தார். அந்த இடத்தில் ஒரு நீதிமானாக அவர் நின்றார். பெற்றோரைப் பார்க்கவில்லை. அங்கே இருந்த மற்றவர்களைப் பார்க்கவில்லை. ‘`தாணு சார் என்ன சொல்கிறாரோ அது சரி’’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். அவரின் பெற்றோருக்குக் கோபம் கொப்புளிக்க ஆரம்பித்துவிட்டது. கடுமையாகப் பேச ஆரம்பித்தார்கள். ஆனாலும், சிம்பு வீட்டினர் என்ன சம்பளம் கேட்டார்களோ அந்தத் தொகையை அப்படியே அங்கேயே கொடுத்துவிட்டு வந்தேன். இப்போதும் சிம்பு மேல் எனக்குத் தனிப்பாசம் உண்டு. அது எப்போதும் குறையாது.

கே.பி சார் சந்தித்த பிரச்னையின்போது நான் அவரோடு இருந்த விவரங்களைச் சொன்னேன். சினிமா உலகில் ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக அதைத் தீர்க்க முன்வருபவர் கலைஞர். சினிமா உலகிற்கு அவர் செய்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. கலைஞரைப் பற்றியும், என்னுடைய அடுத்த படங்கள் ‘சென்னைக் காதல்’, ‘திருமகன்’, ‘சக்கரகட்டி’ பற்றியும் அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.