மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 26

கருணாநிதி, தாணு
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி, தாணு

- கலைப்புலி எஸ்.தாணு

கலைஞரைப் பற்றிச் சொல்ல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் என் நினைவின் அடுக்குகளில் இருக்கின்றன. இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சினிமா உலகத்தினருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக இரண்டு, மூன்று சம்பவங்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கலைஞர் அளவுக்குத் தமிழக அரசியலில் புகழையும், துரோகத்தையும் சந்தித்தவர்கள் யாரும் இருக்கமுடியாது. புகழ்ந்தாலும் சரி, தாக்கினாலும் சரி, இரண்டையும் ஒரேமாதிரி எடுத்துக்கொள்வார். அதேபோல் தன் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, பிரச்னை என்றால் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ நினைப்பார். தி.மு.க-வில் இருந்து பிரிந்துபோய் அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்களை மரியாதையோடுதான் நடத்துவார். உதவி என்று கேட்டுப்போனால், ‘`முடியாது’’, ‘`இல்லை’’ என்கிற வார்த்தைகள் அவரிடமிருந்து வராது. ‘`பார்த்துப் பண்ணிடலாம்யா’’ என்றுதான் சொல்லுவார். இக்கட்டான சூழலாக இருந்தாலும், அவரிடம் நகைச்சுவை உணர்வு குறையாது.

1989-ல் ஆட்சிக்கு வந்தார் கலைஞர். 1991 ஜனவரியில் மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு கலைஞர் ஆட்சியைக் கலைத்துவிட்டது. சந்திரசேகர் அரசும், காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் அடுத்த இரண்டே மாதங்களில் கவிழ்ந்துவிட்டது. இதனால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கிறது தமிழ்நாடு. மே மாதம் தேர்தல். மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். தமிழ்நாடு முழுக்கக் கலவரங்கள் நடக்கின்றன.

உண்மைகள் சொல்வேன்! - 26

இதற்கிடையே கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி, அதாவது ராஜீவ் காந்தி இறந்த 12 நாள்களில் வருகிறது. ஆட்சி கலைந்துவிட்டது, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுவிட்டார், தேர்தலும் முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத அரசியல் சூழல். வழக்கமான கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. ஊரே வெறிச்சோடி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் யாரும் இல்லை. நான் மதியம் கலைஞரின் வீட்டுக்குப் போகிறேன். கலைஞர், ‘தினகரன்’ நாளிதழின் கே.பி.கந்தசாமி, துரைமுருகன், ஆற்காட்டார் ஆகியோர் இருக்கிறார்கள். ஐந்து பேரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துகிறோம். யாரும் பெரிதாக எதுவும் பேசாமல் இறுக்கமான சூழல் நிலவுகிறது. நல்ல பசியில் நாங்கள் எல்லோரும் நிறைய சாப்பிடுகிறோம். கலைஞர் மட்டும் குறைவாகச் சாப்பிடுகிறார். உடனே ஆற்காட்டாரிடம் துரைமுருகன் கிண்டல் தொனியில் ‘`என்ன கலைஞர் ரொம்ப கம்மியா சாப்பிடுறார்’’ என்கிறார். அதற்கு ‘`எனக்குத் தெரியலையே?’’ என்கிறார் ஆற்காட்டார். ‘`தெரியலையா… இன்னைக்கு பொறந்தநாள் இல்லையா… இங்க கொஞ்சம் சாப்டுட்டு அங்க (கோபாலபுரம் இல்லம்) கொஞ்சம் போய் சாப்பிடணும் இல்ல’’ என்கிறார். உடனே எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து சத்தம்போட்டுச் சிரித்துவிட்டோம். அந்த நேரத்தில் நிலவிய பெருத்த மெளனத்தை துரைமுருகனின் அந்தப் பேச்சு கலகலப்பாக்கியது. உடனே கலைஞரின் முகத்திலும் சிரிப்பைப் பார்க்க முடிந்தது.

1992-93 காலகட்டம். வைகோ தி.மு.க-வை விட்டுப் பிரியாத நேரம். கலைஞரின் பேத்தி, அதாவது செல்வியின் மகள் எழிலரசிக்குத் திருமணம் நடக்கிறது. அறிவாலயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. வரவேற்புக்கு வருபவர்கள் மணமேடையில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு கீழே இறங்கி, இன்னொரு இடத்தில் இருக்கும் கலைஞரைப் பார்த்து நன்றி தெரிவித்துவிட்டு வெளியே போவார்கள். அப்போதைய வழக்கம் அது. நான் மேடையில் பரிசுப்பொருள் கொடுத்துவிட்டு கலைஞரின் அருகில்போய் நின்றுகொண்டேன். அப்போது வைகோவுக்குக் கட்சிக்குள் சிக்கலான நேரம். நான் வைகோவுக்கு நட்பாக இருக்கிறேன் என்பதும் கலைஞருக்குத் தெரியும். இந்த நிகழ்வுக்குக் கொஞ்ச நாள் முன்னர்தான் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு ஒரு விழாவுக்குப் போகிறார். இந்தத் தகவலை வைகோ என்னிடம் சொல்ல, நான் விளம்பர ஏற்பாடுகளைச் செய்தேன். ஸ்டாலின், அவருக்குப் பின்னால் வைகோ வருவதுபோல படம் போட்டு ‘கலைஞரின் கண்களே… கழகத்தின் தூண்களே… வருக வருக!’ என அதில் எழுதியிருந்தேன்.

இந்த நேரத்தில்தான் எழிலரசி திருமணம் நடக்கிறது. கலைஞருக்கு அருகில் நான் உட்கார்ந்திருக்கிறேன். தூரத்தில் வைகோ தனியாக நின்றுகொண்டிருக்கிறார். டி.ஆர்.பாலு என்னை அழைத்து, வைகோவுடன் போய்ப் பேசிக்கொண்டிருக்கச் சொன்னார். நான் போய் வைகோவோடு நிற்கிறேன். கொஞ்ச நேரத்தில் ஆற்காட்டார் என்னை அழைக்கிறார். ‘`தலைவரு சாப்பிடப் போறாருயா. வைகோவையும் கூப்பிடுறாரு… கூட்டிட்டு வாய்யா’’ என்கிறார். வைகோவைக் கூட்டிக்கொண்டு நானும் போனேன். பந்தியில் கலைஞர் போய் உட்காருகிறார். அவர் பக்கத்தில் கட்சிக்காரர்கள் எல்லோரும் உட்காருகிறார்கள். அந்த வரிசையின் கடைசியில் வைகோ உட்கார, அவர் அருகில் நானும் உட்காருகிறேன். கொஞ்ச நேரத்தில் கலைஞரின் உதவியாளர் கோபால் ஓடிவருகிறார். ‘`அண்ணே, நீங்க சாப்பிட உட்கார்ந்துட்டீங்களான்னு தலைவர் கேட்டார்’’ என கோபால் சொல்ல, வைகோ எழுந்து மிகவும் பவ்யமாக ‘`நான் சாப்பிட உட்கார்ந்துட்டேன்… தலைவர்கிட்ட சொல்லிடுங்க’’ என்றார். வைகோ நன்றாக சாப்பிடுவதையும் உறுதிசெய்தபடியே இருந்தார் கலைஞர். அரசியலில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அதைக் காட்ட மாட்டார்.

90-களில் ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு படவிழாவுக்குக் கலைஞர் வந்திருக்கிறார். எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. எனக்கு கூட்டத்துக்கு வரும் அழைப்புதானே தவிர மேடையில் உட்காரும் அழைப்பு இல்லை. நான் தூரமாக நிற்கிறேன். என்னை கலைஞர் அழைத்து மேடையில் உட்கார வைக்கிறார். பேசவும் வைக்கிறார். அந்த விழாவில் முக்தா சீனிவாசன் தன்னுடைய ஆதங்கங்களைச் சொல்லி ஒரு வேண்டுகோள் வைக்கிறார். இறுதியாக கலைஞர் பேசும்போது ‘`முக்தா சீனிவாசன் தன் வருத்தத்தைச் சொன்னார். கேட்காதது அவர் குற்றமே தவிர, தராதது என் குற்றம் அல்ல’’ என்றார். விழா முடிந்ததும் முக்தாவிடம் தனியாகப் பேசி என்ன வேண்டும் என்பதைக் கேட்டுக்கொண்டார். ‘`கேட்டாதானய்யா எனக்குத் தெரியும். நீங்களாவே எனக்குத் தெரியும்னு நினைச்சா எப்படி’’ என்பார். சினிமாப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் சொல்லச்சொல்வார்.

ஒருநாள் அதிகாலை கலைஞர் வீட்டில் இருந்து போன் வருகிறது. காலை எட்டரை மணிக்கே அவர் வீட்டுக்குப் போகிறேன். மிக முக்கியமான தயாரிப்பாளர், அவர் தம்பி பெரிய இயக்குநர் என சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவரைப் பற்றி என்னிடம் சொல்கிறார். அந்தத் தயாரிப்பாளர் அதற்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தவர். அவரின் தம்பி கலைஞர் கதாபாத்திரம்போல ஒரு படமே எடுத்தவர். ``என்னய்யா பிரச்னை? நேத்து நைட்டு போன் வருது, ‘இந்த மாதிரி இவர் குடிச்சிட்டு, நின்னுட்டிருந்த லாரி மேல வண்டி ஓட்டி விபத்துல மாட்டிக்கிட்டார்’னு சொல்றாங்க. பென்ஸ் காருன்றதால் அவருக்கு எந்த அடியும் இல்லை. இவ்ளோ பெரியா ஆளு. வீட்டுக்குள்ளயோ, ஹோட்டல்லயோ இருக்கவேண்டியதுதான. குடிச்சிட்டு வண்டி ஓட்டுற அளவுக்கு என்னய்யா கஷ்டம்?’’ என்று கேட்டார். அந்தத் தயாரிப்பாளரின் சிக்கலையும் அதன்பின் தீர்த்துவைத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 26

அதேபோல் தெலுங்கின் மிக முக்கியத் தயாரிப்பாளர், ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோ உரிமையாளர் குடும்பத்தில் ஒரு பிரச்னை. கலைஞர் என்னிடம், ‘`யோவ், பெரியவரோட பசங்க ஒருத்தருக்கொருத்தர் துப்பாக்கியால் சுட்டுக்குற அளவுக்குப் போயிட்டாங்களாம். உடனே இந்தப் பிரச்னையை முடிக்கணும்யா… யாரை வெச்சு சமாதானம் பேசுனா சரியா இருக்கும்?’’ எனக் கேட்டார். ஏவிஎம் சரவணன் அவர்கள் குடும்பத்துக்குக் கொஞ்சம் நெருக்கம் என்பதைச் சொன்னேன். பிறகு அந்தப் பிரச்னையை சுமுகமாக முடிக்க தன்னாலான எல்லா விஷயங்களையும் செய்தார்.

1990… பிரதமர் வி.பி.சிங் சென்னை வருகிறார். அவரை வரவேற்க கலைஞர், ஆற்காடு வீராசாமியோடு காரில் விமான நிலையம் போகிறார். நான் அறிவாலயத்துக்கு முன்பாக கலைஞரின் முகம் மட்டும் இருப்பதுபோல 50 அடி கட் அவுட், அன்பகத்துக்கு முன்பாக ஸ்டாலின் முகம் மட்டும் இருப்பதுபோல 40 அடியில் கட் அவுட் வைத்திருக்கிறேன். அப்போது இதைப் பார்த்தபடியே போகும் கலைஞர், ‘`என்னய்யா, தாணு மானாவாரியா செலவு பண்றான். அவனுக்குப் பொருளாதார முடைன்னு கேள்விப்பட்டேன். அவனை கவனிய்யா’’ என்று சொல்லியிருக்கிறார்.

நான் ‘தெருப்பாடகன்’ படம் எடுத்து நஷ்டத்தில் விழுந்திருந்த நேரம் அது. ‘`தாணு, உனக்குப் பொருளாதாரப் பிரச்னை இருக்குன்னு சொல்றாங்க. அறிவாலயம் கட்டுன சேட்டுகிட்ட 20 லட்சம் ரூபாய் வாங்கி உன்கிட்ட தலைவர் கொடுக்கச் சொன்னார். வந்து வாங்கிட்டுப் போ’’ என்கிறார் ஆற்காட்டார். ‘`அண்ணே, நான் செஞ்சதுக்கு எல்லாம் பிரதியுபகாரம் மாதிரி செய்றீங்க. நான் எதையோ எதிர்பார்த்து செஞ்ச மாதிரி ஆகிடும். அதனால் வேண்டாம். கலைஞர் மேல இருக்கும் அன்பாலதான் நான் எல்லாம் செய்றேன்’’ என்றேன். ஆற்காட்டார் தொடர்ந்து வற்புறுத்தியும் நான் மறுத்துவிட்டேன்.

அடுத்து கனிமொழி திருமணம். துணைப் பிரதமர் தேவிலால் வந்து திருமணத்தை நடத்திவைக்கிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவு வந்திருந்தது. அதில் தி.மு.க தோல்வியடைந்திருந்தது. அதனால் கொஞ்சம் மகிழ்ச்சிகரமான சூழல் அங்கே இல்லை. நான் உள்ளே நுழைந்து கலைஞருக்கு முன்னால் போய் முட்டி போட்டபடி உட்காருகிறேன். என்னை நலம் விசாரித்தவர், திரும்பி ஆற்காட்டாரைப் பார்த்தார். ஆற்காட்டார் என்னை அழைத்துக்கொண்டுபோய் ‘`யோவ், கலைஞர் காசு வாங்கிக் கொடுத்தாச்சாயான்னு கேட்குறார்யா. வாங்கிக்கோ. உன் பிரச்னைகளை முடி’’ என்கிறார். 90-ன் ஆரம்பத்தில் 20 லட்சம் ரூபாய் என்பது இன்றைய சில கோடிகளுக்குச் சமம்.

நான் ஆற்காட்டாரிடம் ‘`ரஜினி சார் எனக்கு சீக்கிரம் கால்ஷீட் கொடுப்பாரு. அவரை வெச்சு எப்ப படம் ஆரம்பிக்கிறேனோ அப்ப நான் இந்தப் பணத்தை உங்ககிட்ட இருந்து வாங்கிக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டு வந்தேன். ரஜினியை வைத்துப் படம் தயாரிக்கவேண்டும் என்கிற கனவு 1986-ல் ஆரம்பித்தது. அது தள்ளிக்கொண்டே போய் 2016-ல்தான் அவரோடு ‘கபாலி’ படம் மூலம் இணைந்தேன். ‘தொட்டி ஜெயா’வுக்குப் பின்னர் நான் தயாரித்த அடுத்த படங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஒவ்வொருமுறையும் ரஜினி சாரைச் சந்தித்தது, நாங்கள் படம் தயாரிப்பது பற்றித் தொடர்ந்து பேசியதையும் சொல்லவேண்டும். அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்