மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 27

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

- கலைப்புலி எஸ்.தாணு

மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அவருடைய இந்த வெற்றி சாதாரணமானதல்ல. மிகுந்த பொறுமையோடும் நற்பண்புகளோடும் பயணித்து இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறார். கலைஞரின் பொற்கால ஆட்சியை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்குமான தலைவராக மக்களின் மனங்களில் ஸ்டாலின் நீங்கா இடம் பிடிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கலைஞரைப் போன்று கலைத்துறையில் தனிக்கவனம் செலுத்தி அத்துறை மிகச்சிறப்பாகச் செயல்பட வழிவகுத்துத் தரும்படி முதலமைச்சர் ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் ஸ்டாலினைப் பற்றி சட்டென நினைவில் சில சம்பவங்கள் எழுகின்றன.

உண்மைகள் சொல்வேன்! - 27

1989-ல் திருச்சியில் தி.மு.க மாநாடு நடைபெறுகிறது. அப்போது நந்தனம் நந்தகுமார் எனும் இளைஞர் பொன்முடியின் உதவியாளராக இருந்தார். அவர் என்னிடம் வந்து, ‘‘அண்ணே… தளபதிக்கு திருச்சி மாநாட்டுல பிரமாதமான கட் அவுட் வைக்கணும்ணே’’ என்றார். பேன்ட் ஷர்ட் போட்டபடி, ஸ்டாலின் இளமைத் துள்ளலோடு ஸ்டைலாக இருக்கும் படம் வரைந்து வாங்கி 100 அடியில் கட் அவுட் வைத்தேன். கட் அவுட் ஸ்டாலினுக்குப் பிடித்துப்போக ‘‘யார் இதைச் செய்தது’’ என விசாரித்துவிட்டு என்னிடம் பேசினார். ‘‘பிரமாதமா இருக்குங்க… யார் வரைந்தது’’ எனக் கேட்டார். ‘‘நீங்க நேர்ல வந்து அந்த ஓவியரைப் பார்க்குறீங்களா, ரொம்ப சந்தோஷப்படுவார்’’ என்றேன். ‘‘தாராளமா வர்றேனே’’ என்று சொன்னவர், அன்று மாலையே வந்துவிட்டார். அந்த கட் அவுட் ஓவியத்தைத் தீட்டியவர் ஜே.பி.கிருஷ்ணா. மிகவும் திறமை வாய்ந்த ஓவியர் அவர். ஓலைக்கொட்டகைக்குள் நுழைந்து ஜே.பி.கிருஷ்ணாவை மனதாராப் பாராட்டினார். என் கையைப் பிடித்தபடி ‘‘ரொம்ப சந்தோஷங்க’’ என்று அவர் சொன்னதை இன்றும் மறக்கமுடியாது.

1989 தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது, தேர்தலில் உழைத்தவர்களை வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார் கலைஞர். என்னையும் அந்த வரிசையில் அழைத்திருந்தார். கலைஞரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘‘ஒரு நிமிஷம்’’ என்று தனியாக அழைத்தார் தளபதி ஸ்டாலின். இப்போது கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரின் படம் வைத்து வணங்கும் அறை அது. அங்கு என்னை அழைத்துக்கொண்டு போனவர், ‘‘ரொம்ப நல்லா பப்ளிசிட்டி பண்றீங்க… ரொம்ப சந்தோஷம்’’ என்றார். அப்போது நான் அவரிடம் ‘‘நீங்க ‘குறிஞ்சி மலர்’ சீரியல்ல நடிச்சீங்க. ‘ஒரே ரத்தம்’ படத்தில் ராதாரவியோடு ஒரு பாடல் காட்சியில் வந்தீங்க. இதெல்லாம் மக்கள்கிட்ட நல்ல ரீச் ஆகியிருக்கு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இளைஞனா உங்களை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு விரும்புறேன்’’ என்றேன். ‘‘தாராளமா நீங்க சொல்லுங்க. நல்ல சந்தர்ப்பம் வரும்போது நான் பண்றேன்’’ என்றார். ஆனால், அப்படியொரு தருணம் அமையாமலேயே போய்விட்டது.

உண்மைகள் சொல்வேன்! - 27

1991-ல் ராஜீவ் காந்தி இறந்தபோது சில போராட்டக்காரர்களால் என் வீடு தாக்கப்பட்டது. வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் பயந்து நடுங்கினர். இதைக் கேள்விப்பட்ட ஸ்டாலின், சைதை கிட்டு தலைமையில் ஒரு பெரிய தொண்டர் படையை அனுப்பி எங்கள் வீட்டுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். அதன்பிறகு நான் தி.மு.க-விலிருந்து விலகி ம.தி.மு.க-வில் இருந்த நேரம்.

‘ஆளவந்தான்’ படத்துக்கான படப்பிடிப்பைத் தாம்பரம் அருகே ஒரு மலைப்பகுதியில் நடத்தவேண்டும் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னார். கமல் சார் கார் ஓட்டிக்கொண்டே சண்டையிட்டு மேலேயிருந்து குளத்துக்குள் கார் விழுவதுபோன்ற காட்சி அது. ‘‘அந்த மலைப்பகுதிதான் சரியாக இருக்கிறது’’ என்று இயக்குநர் சொல்லிவிட்டதால், ‘அங்கே படப்பிடிப்பு நடத்த யாரிடம் கேட்டால் அனுமதி கிடைக்கும்’ என்று விசாரித்தேன். ‘தளபதி சொன்னால் நடக்கும்’ என்றார்கள். அன்பகம் போய் ஸ்டாலினை சந்தித்தேன். நான் வேறு கட்சியில் இருந்தாலும் எனக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கும்படி சொன்னதோடு மட்டுமல்லாமல், ‘‘எதையும் எதிர்பார்க்காமல் செய்துகொடுக்கவேண்டும்’’ என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னார். பனித்த கண்களோடு அந்த உதவியை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

உண்மைகள் சொல்வேன்! - 27

இயக்குநர் விக்ரமன் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான ‘புது வசந்தம்’ காலத்திலிருந்தே அவரோடு நல்ல பழக்கம். அடிக்கடி சந்திப்போம். ஆனால், சேர்ந்து படம் பண்ணும் சூழல் மட்டும் சரியாக அமையாமலேயே இருந்தது. ‘தொட்டி ஜெயா’ படம் வெளியிட்ட சூழலில் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்ன விக்ரமனைச் சந்தித்தேன். ‘‘சேர்ந்து படம் பண்ணலாம்’’ என்றவர், இரண்டு கதைகள் சொன்னார். இரண்டு நண்பர்கள், அவர்களுக்கிடையே ஒரு காதலி என எமோஷன் கலந்த சென்ட்டிமென்ட் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அதைப் பண்ணலாம் என்றேன். ‘‘இல்ல சார்… இப்ப யங்ஸ்டர்ஸ்லாம் வேற மாதிரி படங்கள் பண்றாங்க. நீங்க பிடிச்சிருக்குன்னு சொன்ன கதை என்னோட வழக்கமான படம்போலவே இருக்கும். இரண்டாவது கதை (சென்னைக் காதல்) இன்றைய இளைஞர்கள் பண்ற மாதிரியான படமா, நல்ல கமர்ஷியலா வரும் சார்’’ என்றார்.

‘‘எனக்கென்னவோ நண்பர்கள் கதைதான் சார் பிடிச்சிருக்கு’’ என்றேன். ஆனால், விக்ரமனோ ‘‘எனக்காக இது எடுங்க சார்… நல்லா வரும்’’ என்றார். நல்ல கலைஞனைக் காயப்படுத்தக்கூடாது என ‘‘ஓகே சார், பண்ணலாம்’’ என்றேன். பரத், ஜெனிலியா நடிக்க ‘சென்னைக் காதல்’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.

உண்மைகள் சொல்வேன்! - 27

விக்ரமன் சாரும் படத்தை நன்றாகவே எடுத்திருந்தார். ஆனால், படம் வெற்றிபெறவில்லை. இயக்குநர் விக்ரமன் என்கிற பெயர் பார்த்து படம் பார்க்கவந்த கூட்டத்துக்கு ‘இது விக்ரமன் படம் மாதிரி இல்லையே’ என்கிற ஏமாற்றம் எழுந்தது. படம் சரியாகப் போகவில்லை. படம் வெளிவருவற்கு முன்பாக அவருக்கு சம்பளமாக ஒரு தொகை கொடுத்திருந்தேன். சம்பளத்தில் மீதியை அதாவது 17.5 லட்சம் ரூபாய் அவருக்குத் தரவேண்டியிருந்தது. அதை படம் வெளிவந்த பிறகு டிடியாக எடுத்துக்கொண்டு அவர் அலுவலகத்துக்குப் போய் அவரிடம் கொடுத்தேன். ‘‘இந்தப் பணம் எனக்கு வேண்டாம் சார்’’ என்றார். ‘‘ஏன் சார், நிச்சயம் நீங்க வாங்கிக்கணும்’’ என்றேன். ‘‘தாணு சார், நான் ரெண்டு கதை சொன்னேன். ‘உங்க பாணியில இருக்கு… அதைப் பண்ணுங்க’ன்னு நீங்க சொன்ன கதையைத் தவிர்த்துட்டு, இதை எடுத்தேன். எனக்காக இந்தக் கதையை எடுத்து உங்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கு. நீங்க முதல்ல கொடுத்த பணத்தைச் செலவு பண்ணிட்டேன். இல்லைன்னா மொத்தமா என் சம்பளத்தை உங்ககிட்ட கொடுத்திருப்பேன்’’ என்றார். ‘‘அதெல்லாம் இல்ல சார். படத்துல லாபம் வந்திருந்தா அதில் இருந்து உங்களுக்கு ஒரு பங்கு தந்திருப்பேனா என்ன? உங்க சம்பளத்தைத்தானே கொடுக்கிறேன்… வாங்கிக்கோங்க’’ என அவர் டேபிளில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால், பின்னாடியே வந்து என் காரில் டிடியை வைத்தவர் ‘‘நீங்க இதை என்கிட்ட கொடுக்காம இருந்தாதான் சார் எனக்கு கெளரவம்’’ என்றார். தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட விக்ரமனின் இந்த நல்ல மனது, அவர்மீதான மரியாதையை இன்னும் உயர்த்தியது.

உண்மைகள் சொல்வேன்! - 27

விக்ரமனுக்கு செம ஸ்மார்ட்டான ஒரு மகன் இருக்கிறார். பெயர் கனிஷ்கா. சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார். அவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என விக்ரமனிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன். அவருக்காகக் கதைகள் கேட்டுக்கொண்டிரு க்கிறேன். விரைவில் அறிமுகப்படுத்துவேன். எதிர்காலத்தில் நல்ல கலைஞனாக அவர் வருவார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நடிகர் சரத்குமாரைப் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும். சரத்குமார் தமிழ் சினிமா உலகிற்குள் ‘கண் சிமிட்டும் நேரம்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப் படம் அவரின் சொந்தத் தயாரிப்பு. அதன்பிறகு நான் இசையமைத்து, எழுதி, இயக்கிய ‘புதுப்பாடகன்’ படத்தில் அவரை முதல்முறையாக வில்லனாக நடிக்கவைத்தேன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே அவருக்கு ‘புலன் விசாரணை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் முதலில் வெளியாகி, புகழ்பெற்றார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிகப்பெரிய உயரத்தை அடையவேண்டும் என்கிற தன்னம்பிக்கையில் வாழ்ந்தவர் அவர்.

உண்மைகள் சொல்வேன்! - 27

2005-ல் அவர் என்னோடு சேர்ந்து ஒரு படம் பண்ண விரும்பினார். ‘‘நிச்சயம் பண்ணலாம்’’ என்று சொல்லி அவருக்காகக் கதைகள் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘காக்க காக்க’ படத்தில் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மார்கன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்த மார்கன்தான் இப்போதைய மகிழ் திருமேனி. அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்துப்போக, ‘‘சரத்குமார் நமக்குப் படம் பண்றார். அவர்கிட்ட கதையைச் சொல்லுங்க’’ என்று அனுப்பினேன். சரத்குமாரும், ‘‘கதை சூப்பரா இருக்கு சார்… நாம பண்ணிடலாம்’’ என்றார். உடனே 6 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக சரத்குமாருக்குக் கொடுத்தேன். அது இயக்குநர் ஹரி ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தில் திடீரென ‘‘இயக்குநர் ஹரி கூப்பிடுறார். நான் ‘ஐயா’ படத்துல நடிச்சிட்டு வந்துடுறேன். நம்ம படத்தைத் தள்ளிப் பண்ணிக்கலாம்’’ என்றார் சரத்குமார். ‘‘சரி… அப்ப அதைப் பண்ணிடும்மா. என் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துடு’’ என்று சொல்லி அட்வான்ஸை வாங்கிவிட்டேன். அந்தப் படம் அப்படியே நின்றுபோனது.

‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் கதையைச் சொல்லி எனக்கு அறிமுகமான ரத்னகுமாரை, பின்னர் இயக்குநராகவும் நான் அறிமுகப்படுத்தினேன். நந்தா ஹீரோவாக நடித்த அந்த ‘என்ன சொல்லப்போகிறாய்’ படம் இயக்குநருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் நின்றுபோனதை ஏற்கெனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். பிரச்னையோடு வெளியே போன ரத்னகுமார், மீண்டும் ஒருநாள் என்னைச் சந்திக்கவந்தார். அவரோடு இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வந்தார். அந்தச் சந்திப்புதான் ‘திருமகன்’ படமாக மாறியது. எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தப்படம் எப்படி ஆரம்பித்தது, படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்கள் என அனைத்தையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்