
- கலைப்புலி எஸ்.தாணு
‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் எனக்கு கதாசிரியராக அறிமுகமான ரத்னகுமாரின் முன்கோபம் பல சிக்கல்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
2011-ம் ஆண்டு இறுதி… இளையராஜா சார் திடீரென என்னைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். அப்போது இளையராஜா சார் அவர் மகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு போனேன். அவர் மட்டும்தான் அப்போது அந்த வீட்டில் இருந்தார்.

‘‘தாணு, ரத்னகுமார் ‘செங்காற்று பூமியிலே’ன்னு ஒரு படம் பண்ணியிருக்கார். ரொம்ப அருமையான கதை. நான் மியூசிக் பண்ணியிருக்கேன். எனக்காக நீங்க அதை ரிலீஸ் பண்ணிக் கொடுங்க’’ என்றார். திரையுலகில் நான் மிகவும் மதிக்கும் மிக உயர்ந்த மனிதர் இளையராஜா சார். அதனால் அவரிடம், ‘‘சார், உங்க பேச்சை நான் தட்டவே மாட்டேன். ஆனா, நடந்துவந்த பாதையை மறந்தவங்களுக்கு இதைப் பண்ணச் சொல்றீங்களே’’ எனச்சொல்லி, சில நியாயங்களை அவரிடம் சொன்னேன். அவற்றை இங்கே பகிர்கிறேன்.
‘என்ன சொல்லப் போகிறாய்’ படம் எடுத்து, ரத்னகுமாரின் கோபத்தால் அந்தப் படம் பாதியிலேயே நின்றது. நந்தாவுக்கும் சரி, ரத்னகுமாருக்கும் சரி, அடுத்து ஒரு படம் பண்ணவேண்டும் என அந்தச் சூழ்நிலையிலும் முடிவெடுத்தேன். நந்தாவை வைத்து ‘புன்னகைப் பூவே’ எடுத்தேன். அடுத்து ரத்னகுமாரை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்தச் சூழலில்தான் ஒருநாள் எஸ்.ஜே.சூர்யாவோடு, ரத்னகுமார் என்னை வந்து பார்த்தார். ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலேயே ஒரு பாடலில் நடித்திருந்தவர் எஸ்.ஜே.சூர்யா.

‘வாலி’ வெற்றிக்குப்பிறகு ‘தேவி ஸ்ரீதேவி’ சதீஷ்தான் என் வீட்டுக்கு எஸ்.ஜே.சூர்யாவை அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். வெள்ளை நிற சான்ட்ரோ கார், எண் கூட இன்னும் என் நினைவில் இருக்கிறது. 6138 என நினைக்கிறேன். ‘இந்தக் காரை அஜித் சார் பரிசளித்தார்’ என்று சொன்னார். ‘‘சார், அஜித் சாரோட அடுத்து ஒரு படம் பண்றேன். படம் பேரு ‘நியூ.’ அஜித் சார் எனக்கு கால்ஷீட் கொடுத்திருக்கார். நீங்க எனக்கு ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில இந்தப்படம் பண்ணித்தரணும்’’ என்றார். படத்தின் டிசைன்களை எல்லாம் என்னிடம் காட்டினார். துடிப்பான இளைஞர், மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார். முதல்முறையாக நம்மிடம் வந்திருக்கிறார் எனப் பல விஷயங்களையும் மனதில் நிறுத்தி, ‘‘சரி தம்பி, பண்ணிடலாம்’’ என்றேன். ‘‘எனக்கு ஒரு 50 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கணும் சார்’’ என்றார். ‘‘நாளைக்கு வாங்க தம்பி’’ என்று சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் 50 லட்சம் ரூபாய்க்கு டிடி எடுத்துத் தயாராக வைத்திருந்தேன். வந்தவர் கொஞ்சம் வருத்தமாகப் பேசினார். ‘‘சார், சில தவிர்க்கமுடியாத காரணங்களால அஜித் சார் கால்ஷீட் தள்ளிப்போகுது. அதனால, இப்ப அந்தப்படம் பண்ணமுடியல சார். என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க’’ என்றார். ‘‘எதுவும் பிரச்னையில்ல தம்பி. எதிர்காலத்துல நிச்சயம் நாம சேர்ந்து படம் பண்ணலாம்’’ என்று சொல்லி அவரை அனுப்பினேன். பிறகு அவரே ‘நியூ’ படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
அதனால், எஸ்.ஜே.சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்டவர் ரத்னகுமாரோடு வந்ததும் என்ன செய்வது என யோசித்தேன். ‘சார், நாம சேர்ந்து படம் பண்ணலாம்’ என்கிறார்கள் இருவரும். ‘‘ரத்னகுமார் கோபக்காரர். கொஞ்சம் அனுசரிச்சு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போகணும். நீங்க நடிக்கணும்னு விரும்புறீங்க. நானும் ரத்னகுமாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைக்கிறேன். பண்ணலாம்’’ என்று சொன்னேன்.

அப்போது எஸ்.ஜே.சூர்யா, ‘‘இந்தப்படம் எடுக்க என்ன செலவு ஆகுமோ அதை நீங்க கொடுத்துடுங்க சார். வியாபாரத்தின்போது உங்க முதலீடு போக என்ன லாபம் வருகிறதோ அதில் மூன்றில் ஒரு பங்கு உங்களுக்கு, எனக்கு, இயக்குநருக்கு எனப் பிரிச்சிக்கலாம்’’ என்றார். ரத்னகுமாரும் சந்தோஷமாக ஓகே சொல்ல, ‘திருமகன்’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஆனால், ரத்னகுமார் ஷூட்டிங் ஸ்பாட்டான மதுரை மண்ணுக்குப் போனதுமே அவருடைய வழக்கமான கோபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பல பிரச்னைகள். அங்கிருந்து பலரும் எனக்கு போன் செய்து ‘‘இப்படியெல்லாம் பேசுறாங்க சார்... இப்படி நடத்துறார் சார்’’ என்பார்கள். ஒருநாள் எஸ்.ஜே.சூர்யா என்னைப் பார்க்க வந்தார். ‘‘சார் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் ஒத்துக்கிட்டோம்னு நினைக்கிறேன்’’ என்றவர், ‘‘சார், எனக்கு சம்பளமே கொடுத்துடுங்க’’ என்றார். அவருக்கான சம்பளமாக 75 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
படம் முடியும் நேரத்தில் கதைப்படி போகாமல் க்ளைமாக்ஸை மாற்றி எடுத்துவிட்டார் ரத்னகுமார். படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஹீரோ இறுதியில் யாருடன் சேருகிறார் என்பதுதான் கதை. ஆனால், அவர் சொன்ன கதையின்படி இல்லாமல் ஹீரோ வேறு ஒரு ஹீரோயினோடு சேர்வது போல எடுத்துவிட்டார். இறுதியாக ஒரு பாட்டும் எடுக்கவேண்டிய சூழலில் என்னிடம் பிரச்னையைச் சொல்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா ‘பாடல் எடுக்கவேண்டும்’ என்று விரும்பினார்.


‘‘கதையை மாற்றக்கூடாது. என்ன சொன்னீங்களோ அதன்படி படத்தை எடுங்க’’ என்றேன் நான். ‘‘க்ளைமாக்ஸை மாத்தி எடுத்தாச்சு. அது அவ்ளோதான். நான் இல்லாம உங்களை பாட்டையும் எடுக்க விடமாட்டேன்’’ என்கிறார் ரத்னகுமார். ‘‘இல்ல ரத்னகுமார்... நீங்க எடுக்கமாட்டீங்கன்னா பரவாயில்லை. நான் படத்தை முடிச்சி ரிலீஸ் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘‘நான் இல்லாம இந்தப்படத்தை உங்களை முடிக்கவிடமாட்டேன்’’ என என் முன்னால் இருந்த டேபிளைத் தட்டி சவால்விட்டு விட்டுப்போனார் ரத்னகுமார்.
எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து நடந்த சம்பவத்தைச் சொன்னேன். ‘‘சார், படத்தோட ஆரம்பத்துல இருந்து உங்களை நான் பார்க்குறேன். உங்க சாப்பாட்டை நான் சாப்பிட்டிருக்கேன். நான்தான் ரத்னகுமாரை அழைச்சிட்டு வந்தேன். என்னோட சம்பளத்தையும் கேட்டு வாங்கிட்டேன். அதனால, இந்தப்படத்துக்கு என்னாலான விஷயங்கள் அத்தனையையும் நான் செய்றேன். நீங்க படத்தை ரிலீஸ் பண்றீங்க சார்’’ என எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பக்கபலமாக நின்றார்.
இதற்கிடையே ரத்னகுமார் பெப்ஸியிடம் போக, அங்கே விசாரணை நடந்தது. நான், ‘‘ரத்னகுமார் முதலில் என்ன எழுதிக் கொடுத்தாரோ அதன்படி க்ளைமாக்ஸை எடுக்கச் சொல்லுங்க. நான் எந்தத் தடையும் போடமாட்டேன். தாராளமா அவர் எடுக்கலாம். ஆனா, டேபிளைத் தட்டி சவால்விட்டுட்டுப் போனதுக்கு வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்க’’ என்றேன். எஸ்.ஜே.சூர்யாவும் உண்மையின் பக்கம் நிற்க, பெப்ஸி தரப்பு ரத்னகுமாரிடம் பேசியது. அவர் எழுந்து போய்விட்டார். ரத்னகுமார் வருத்தம் தெரிவிக்க மறுத்ததால், பெப்ஸி எனக்குப் படத்தை எடுக்க அனுமதி கொடுத்தது.
பாடல் காட்சியை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கி முடித்தார். எடிட்டர் ஆன்டனியும் எஸ்.ஜே.சூர்யாவும் இரவு பகல் பார்க்காமல் உழைத்த உழைப்பை மறக்கவேமுடியாது. அத்தனை போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் எஸ்.ஜே.சூர்யாவே முன்னின்று செய்தார். படத்தை முடித்து ரிலீஸ் செய்தோம். ஆனால், க்ளைமாக்ஸ் உட்பட அத்தனையும் ஏற்கெனவே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதால் கதையில் மாற்றங்கள் செய்யமுடியாமல் ‘திருமகன்’ படம் ரிலீஸானது. வியாபார ரீதியாக படம் சரியாகப் போகவில்லை.
இந்த விஷயம் உட்பட, ரத்னகுமாருக்கு தனிப்பட்ட முறையில் நான் செய்த உதவிகளையும் இளையராஜா சாரிடம் சொல்லி, ‘‘இவ்ளோ நடந்திருக்கு சார். என்னைத் தப்பா நினைக்காதீங்க’’ என்றேன். ‘‘நீ ரொம்ப உடைஞ்சிருக்க தாணு... நான் உன்னை இனி வற்புறுத்தமாட்டேன்’’ என்றார் ராஜா சார். தனக்காக இவ்வளவு தூரம் சிபாரிசு செய்த இளையராஜா சாரைத்தான் சமீபத்தில் ஒரு யூட்யூப் பேட்டியில் தவறாகப் பேசியிருந்தார் ரத்னகுமார்.


சினிமாத் தொழில் என்னோடு போகவேண்டும் என நான் நினைத்தேன். ஆனால், என் இரண்டாவது மகன் பிரபுவுக்கு சினிமா இயக்கவேண்டும் என்பது கனவு. அலுவலகத்தில் இருந்து ஒருநாள் இரவு வீட்டுக்குப் போனதும் என் மகள் என்னிடம் பேசினாள். ‘‘நீ எல்லாரையும் வெச்சு படம் பண்ற. உன் பையனை வெச்சுப் பண்ணமாட்டியா’’ எனக் கொஞ்சம் கோபமாகவே சண்டை போட்டாள். அன்று இரவே மகனை மாடிக்கு அழைத்துக்கொண்டுபோய் அவனிடம் கதை கேட்டேன். முதல் பாதிக் கதையைத்தான் கேட்டேன். அவ்வளவு சிறப்பாக இருந்தது. ‘‘செகண்ட் ஹாஃபே நீ எனக்கு சொல்லவேண்டாம்டா. படம் எடு’’ என்று சொல்லி, பாக்யராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்க ‘சக்கரகட்டி’ படம் எடுத்தோம். ஏ.ஆர்.ரஹ்மானிடம், ‘‘என் பையன் ஒரு படம் டைரக்ட் பண்றான். நீ மியூஸிக் பண்ணமுடியுமா ரஹ்மான்?’’ எனக் கேட்டேன். ‘‘Why not Sir’’ என்று சொல்லி இசையமைத்துக் கொடுத்தார். படத்தின் ஃபைனல் ரீரெக்கார்டிங் நடந்துகொண்டி ருந்தபோது, ‘‘நான்கூட மற்ற புரொட்யூசர் பசங்க மாதிரி, பணம் இருக்குன்னு ஏதோ ஒரு மசாலா படம் எடுப்பார்னு நினைச்சேன். ஆனா, உங்க பையன் ஈரான் படம் மாதிரி எடுத்திருக்கார். ரொம்ப நல்லாருக்கு’’ எனப் பாராட்டினார். ஆஸ்கர் விருது வாங்கிய ரஹ்மானிடம் இருந்து அப்படி ஒரு பாராட்டு என் மகனுக்குக் கிடைத்ததை நான் ஆஸ்கர் விருதாகவே நினைக்கிறேன். விரைவில் பிரபு இன்னொரு படமும் இயக்கவிருக்கிறார்.

‘சக்கரகட்டி’ படம் முடிந்ததும் விக்ரம் நடிக்க ‘கந்தசாமி’ படம். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘கந்தசாமி’ படத்தில் விக்ரம் நடிக்கக்கூடாது என ஒரு தொலைக்காட்சி நிர்வாகி பிரச்னை கொடுத்ததில் ஆரம்பித்து, ‘கந்தசாமி’ படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என அனைத்தையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்