
- கலைப்புலி எஸ்.தாணு
1996-ல் ஜெயலலிதா முதலமைச்சர். சென்னா ரெட்டி ஆளுநர். ‘`கவர்னர் ‘சிறைச்சாலை’ படத்தைப் பார்க்க விரும்புகிறார். ஏற்பாடு செய்யமுடியுமா’’ என என்னிடம் கேட்கிறார் ஆளுநரின் செயலாளர் ஷீலாபிரியா ஐஏஎஸ்.
கவர்னர் மாளிகையில் உள்ள தோட்டத்தில் ‘சிறைச்சாலை’ படத்தை ஸ்கிரீன் செய்கிறோம். படம் முடிந்ததும் ஆளுநர் கண்கலங்கியபடி ‘`நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடியிருக்கிறோம். ஆனால், எங்களுக்கும் முன்பு போராடியவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் இந்தப் படத்தில் மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். படத்தைத் தயாரித்த உங்களுக்கு நான் விருந்து கொடுக்க வேண்டும்’’ என்று என்னை மாளிகைக்குள் அழைத்துப் போகிறார்.

அப்போதும் எனக்கு மட்டும் சரியாக சைவ உணவு வருகிறது. எப்படி என்று கேட்கும்போது, இங்கேயும் மெக்ஸிகோ போலவே என் டேபிளுக்கு முன்பு ஒரு பௌலில் பூ வைத்து அதற்கு ஏற்றபடி பரிமாறியிருந்தார்கள். இந்தச் சம்பவத்தின் மூலம் எனக்கு ஷீலாபிரியா மேடத்தோடும், ஆளுநர் மாளிகையோடும் தொடர்பு ஏற்பட்டது. அது எனக்கு 2002-ல் ரஜினி உண்ணாவிரதம் இருந்தபோது பயன்பட்டது.
2002-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்குக் கர்நாடகா தண்ணீர் வழங்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் எல்லோரும் நெய்வேலிப் போராட்டத்துக்குப் போகிறார்கள். அதில், சில காரணங்களால் கலந்துகொள்ளாத ரஜினிகாந்த், அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
மாலையில் போராட்டத்தை முடிக்கும் முன் ரஜினி சாரிடம் ‘`இதோடு முடிக்காமல் ஆளுநரைச் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவைக் கொடுக்கலாம்’’ என்று சொன்னேன். ‘`ஆளுநர் மாளிகைக்குப் போக பர்மிஷன்லாம் வாங்கணுமே தாணு. அங்க நமக்கு யார் இருக்கா’’ என்றார் ரஜினி சார். உடனடியாக மேடையில் இருந்தபடியே ஷீலாபிரியா மேடத்துக்கு போன் செய்து அப்பாயின்மென்ட் வாங்கினேன். அப்போது தமிழ்நாட்டின் ஆளுநர் ராமமோகன் ராவ். ‘`5 பேர் மனு கொடுக்க வரலாம்’’ என்றார்கள். ரஜினிகாந்த் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தார்.

இப்போது ‘கந்தசாமி’ படத்துக்கு வருகிறேன். ‘கந்தசாமி’ படத்தில் நகைச்சுவைக்குத் தமிழில் வடிவேலுவையும், தெலுங்கில் பிரமானந்தத்தையும் வைத்து எடுக்க முடிவு செய்தோம். வடிவேலுவிடம் என் டீமில் இருந்து பேசிவிட்டார்கள். அவர் ஒப்புக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறார். ‘`சம்பளம்லாம் உங்ககிட்ட நான் என்ன சார் கேட்குறது. நீங்க என்ன கொடுக்குறீங்களோ வாங்கிக்கிறேன்’’ என்றார். 5 நாள் கால்ஷீட் வாங்கி, அதற்கான சம்பளத்தைக் கொடுத்து அவரது காமெடி போர்ஷன் முழுவதையும் எடுத்து முடித்தோம். பிரமாதமாக நடித்தார் வடிவேலு. அவர் போர்ஷனையெல்லாம் திருப்போரூரில் வைத்து ஷூட் செய்தோம். எனக்காக பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் வந்து சிறப்பாக நடித்துக்கொடுத்தார். அவருக்கு உயரதிகாரி கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணாவை நடிக்க வைத்தோம்.
இதற்கிடையே படத்தின் ஷூட்டிங்கைத் தாமதப்படுத்துகிறார் என இயக்குநர் சுசி கணேசன் மீது நடிகர் விக்ரமுக்கு வருத்தம். இந்த வருத்தத்தால் இயக்குநர் மணிரத்னம் ‘ராவணன்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டதும் ‘அங்கே போகிறேன்’ என்று சொல்லிவிட்டார். ‘`மணிரத்னம் சார் படத்துல நடிக்கணும்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை சார். பல வருஷத்துக்கு முன்னாடி என்னை ரிஜெக்ட் பண்ணி அனுப்பினார். அப்போ, அந்த பில்டிங்கை விட்டு வெளியே வரும்போது வருத்தத்தோடு வெளியே வந்தேன். இப்ப அவரே நடிக்க என்னைக் கூப்பிட்டிருக்கார். ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா நடிக்கிறாங்க. நான் அதை முடிச்சிட்டு இங்க வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டார். இதனால் படம் இன்னும் தள்ளிப் போனது.

சுசி கணேசன் என்னிடம் வந்து நிறைய விஷயங்களைக் கோபமாகச் சொல்லி, ‘`நானும் ஒரு படம் முடிச்சிட்டு வரேன்’’ என்றார். ‘`சரிப்பா… நீங்களும் போயிட்டு வாங்க. பணம் போட்ட தயாரிப்பாளர் பத்தி உங்களுக்கு என்ன கவலை’’ என்று வருத்தத்துடன் சொன்னேன். உடனே அவர், ‘`நான் என்னண்ணே பண்றது’’ என்று சில விஷயங்கள் பற்றியெல்லாம் பேசினார்.
சுசி கணேசன் பேசிய விஷயங்கள் விக்ரமின் மேனேஜர் கிரியின் காதுக்குப் போகிறது. கிரி போல மேனேஜர் ஒரு நடிகருக்கு அமைந்துவிட்டால் நடிகர்களுக்கு எந்த நேரத்திலும் பிரச்னை வரவே வராது. இயக்குநர் கோபத்தில் சொல்லும் எதையும் விக்ரமின் காதுக்கு அவர் கொண்டு போகவே மாட்டார். அதேபோல் விக்ரம் சொல்லும் எதுவும் இயக்குநருக்கு வராது. ‘`தாணு சார், நான் விக்ரம் சார் கிட்ட எப்படியாவது டேட் வாங்கிக் கொடுத்துடுறேன். நீங்க படத்தை முடிச்சிடுங்க’’ என்று படம் நல்லபடியாக முடிய தன்னால் ஆன எல்லா உதவிகளும் செய்தார் கிரி. பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்த கிரியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். எத்தனையோ முறை ‘`விக்ரமிடம் கால்ஷீட் வாங்கி நீங்களே படம் பண்ணுங்க கிரி. நான் ஃபண்ட் பண்றேன்’’ எனச் சொல்லியிருக்கிறேன். ‘`எனக்குக் கிடைக்கும் சம்பளமே போதும் சார்’’ என்று சொன்ன உயரிய மனிதர். இப்போது அவர் விக்ரமிடம் இல்லை.

ஒருவழியாக எல்லாம் முடிந்து, பிரசாத் மிக்ஸிங் ஸ்டூடியோவில் படம் பார்க்கிறோம். 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடுகிறது. வெளியே வந்து ஒரு மரத்தடியில் நின்றபடி சுசி கணேசனிடம், ‘`தம்பி, படத்துல 40 நிமிஷம் குறைச்சிடு. இரண்டரை மணி நேரம்தான் சரியா இருக்கும். ஏன்னா, மக்கள் வீட்ல இருந்து கிளம்பி தியேட்டருக்கு வர அரை மணி நேரம், திரும்ப வீட்டுக்குப் போக அரை மணி நேரம், இன்டர்வெல், பார்க்கிங்னு தியேட்டர்ல அரை மணி நேரம், படம் ரெண்டரை மணி நேரம்னு இதுவே நாலு மணி நேரம் ஆகும். படமே 3 மணி நேரத்துக்கு மேல இருந்தா ஒரு படத்துக்காக ஒரு குடும்பம் 5 மணி நேரம்லாம் செலவழிக்காது தம்பி. நீளத்தைக் குறைச்சுதான் ஆகணும்’’ என்றேன்.
‘` ‘லகான்’ படம் மூணு மணி நேரம் போகலையான்ணே… எனக்கு நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு இவ்ளோ விஷயம் பண்ணியிருக்கீங்க. நிறைய செலவு பண்ணியிருக்கீங்க. தலைசிறந்த இயக்குநர்கள்ல ஒருத்தரா நான் வருவேண்ணே. அடுத்தடுத்து நாம படங்கள் பண்ணலாம். இந்த ஒரு இடம் மட்டும் எனக்கு விட்டுக்கொடுங்கண்ணே… உங்க கால்ல கூட விழுறேன்’’ என்கிறார் சுசி கணேசன்.


‘`சுசி, இன்னைக்குச் சொல்றேன் ஒண்ணு கேட்டுக்கோ. நான் படம் நிறைய செலவு பண்ணிப் பண்ணியிருக்கேன்னு அடுத்து என்னைத் தேடி நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் வருவாங்க. விக்ரமையும் தேடி நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போவாங்க. ஆனா, உன்னைத் தேடி ஒரு தயாரிப்பாளரும், நடிகரும் வரமாட்டாங்க. இது நடக்கும். நான் சொல்றதைக் கேளு. படத்தை இரண்டரை மணி நேரமாக்கு. படம் நிச்சயம் ஹிட் ஆகும்’’ என்றேன். ஆனால், அவர் கேட்கவில்லை.
படம் அப்படியே ரிலீஸ் ஆனது. முதல் ஷோவிலிருந்தே ‘`படம் பயங்கர நீளம்’’ என்கிற வாய்வழி விமர்சனங்கள் பரவி, அடுத்தடுத்த ஷோக்களை அது பாதித்தது. மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம் எனக்கு லாபத்தைத் தரவில்லையென்றாலும் நஷ்டம் இல்லாமல் தப்பிக்க வைத்தது.

பட ரிலீஸுக்கு முன்பாக 10 கிராமங்களைத் தத்தெடுத்துச் சீரமைப்போம் என்கிற திட்டத்தை அறிவித்து, கந்தசாமி டிரஸ்ட் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கினோம். 10 செல்வந்தர்களை வரவழைத்துப் பேசினோம். அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், அவர் சொந்த ஊரில் பள்ளிச் சீரமைப்பு, சாலைச் சீரமைப்பு எனப் பல பணிகளையும் செய்தார். படத்தின் தயாரிப்பாளராக நாங்கள், இயக்குநர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேனி அருகே அவரின் சொந்த கிராமம் மற்றும் இன்னொரு கிராமத்தைத் தத்தெடுத்து குடிநீர், கோயில் புனரமைப்பு, பள்ளியில் அடிப்படை வசதிகள் எனச் செய்தோம். ஆனால், ‘`அந்தத் தெருவில் குடிநீர்க் குழாய் போடக்கூடாது, எங்க தெருவில்தான் போடணும்’’, ‘`அங்கே ரோடு போடக்கூடாது, இங்கேதான் போடணும்’’ என ஊருக்குள்ளேயே சண்டையாகி, கலவரமே வந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்னை போக, நாங்கள் அந்த இரண்டு கிராமங்களோடு பணிகளை நிறுத்திவிட்டோம். இந்தப் பிரச்னையால் அந்தத் திட்டத்தை அப்படியே கைவிட்டுவிட்டோம். இப்போதும், கந்தசாமி ஃபவுண்டேஷன் அப்படியே இருக்கிறது.
படம் ரிலீஸான நேரம் ‘கந்தசாமி’ படத்தின் டிவி ரைட்ஸ் வாங்குவதற்காக கலைஞர் டிவியின் ஆலோசகர் எழில்மணி, நிர்வாகி சரத், ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் மூவரும் வருகிறார்கள். ஆனால், அதற்கு முந்தைய நாள்தான் படத்தின் டிவி உரிமையைக் கொடுப்பதாகப் புகழுக்கு (கலாநிதி மாறன்) வாக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். வந்தவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, ‘`சார், நேத்துதான் புகழ்கிட்ட வாக்குக் கொடுத்தேன். இப்ப நான் கலைஞர் டிவிக்குக் கொடுப்பது சரியா இருக்காது. அடுத்தடுத்த படங்களைக் கலைஞர் டிவிக்குக் கொடுக்கிறேன். தலைவர் கிட்ட சொல்லிடுங்க’’ என்கிறேன். ‘`நாங்க படத்தை 6 கோடிக்கு வாங்கலாம்னு முடிவெடுத்தோம்’’ என்றார்கள். ‘`இல்ல சார், புகழ்கிட்ட நாலரைக் கோடிக்குத்தான் தரேன்னு சொல்லியிருக்கேன். எனக்கு உங்ககிட்ட கொடுக்குறது லாபம்தான். ஆனால், அவர்கிட்ட வாக்குக் கொடுத்துட்டேன். இனி பேச்சு மாறினா தப்பாகிடும்’’ என்று சொன்னேன். அவர்கள் கலைஞரிடம் போய் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘`பாசத்தை இங்கே காட்டுறான். வியாபாரத்தை அங்க பண்றானாயா’’ எனச் சிரித்தபடியே சொல்லியிருக்கிறார். ஆனால், என்னுடைய முந்தைய படங்களான ‘சென்னைக் காதல்’, ‘திருமகன்’ படங்களை நானாகவே கொண்டு போய் கலைஞர் டிவிக்குக் கொடுத்துவிட்டு வந்தேன்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் தம்பியுடன் இணைகிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி.’ இந்தப் படத்தின்போது நடந்த சுவாரஸ்யங்கள், ரிலீஸின்போது எழுந்த சிக்கல்கள், ‘அரிமா நம்பி’, ‘கணிதன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் தம்பியுடன் ‘தெறி’... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்