மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 31

உண்மைகள் சொல்வேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்!

- கலைப்புலி எஸ்.தாணு

2010-ம் ஆண்டு... என் இரண்டாவது மகன் கலா பிரபுவுக்குத் திருமணம். அப்போது தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா. இருவரையுமே நேரில் பார்த்து அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்கிறேன். ஜெயலலிதா மேடத்திடம் நேரம் கிடைக்க சற்று தாமதமாகும் என நினைத்திருந்தேன். ஆனால், அன்று மாலையே வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டார்.

முதலமைச்சருக்குப் பத்திரிகை தராமல், ஜெயலலிதாவுக்கு முதலில் கொடுத்தால் தவறாகிவிடுமோ என உள்ளுக்குள் ஒரு யோசனை. இருந்தாலும் ‘கலைஞர் புரிஞ்சிப்பார்’ என போயஸ் கார்டனுக்குப் போய்விட்டேன். ‘`மேடம், நீங்க மூத்த மகன் திருமணத்திற்கு வரல. நிச்சயம் இந்தத் திருமணத்திற்கு வரணும்’’ என்றேன். ‘`அப்ப, ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்னால வர முடியல. இந்தமுறை நிச்சயம் வரேன்’’ எனச் சொல்லி வாழ்த்தி அனுப்பினார். நான் ஜெயலலிதாவைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த செய்தி உடனடியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது.

உண்மைகள் சொல்வேன்! - 31

இந்த நேரத்தில் கலைஞர் வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. ‘`நாளைக் காலை 8 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வரச் சொல்லிட்டார்’’ என்கிறார்கள். மகள், மருமகனோடு கோபாலபுரம் போனேன். கலைஞர் தயாளு அம்மாவையும் அழைத்து, ‘`நாங்க சேர்ந்து வாங்குறோம்’’ எனச் சொல்ல, குனிந்து ஆசீர்வாதம் வாங்குகிறேன். அப்போது என் சட்டைப் பைக்குள் இருந்த சாமி புகைப்படங்கள், சில்லறைகளுடன், ஒரு பத்து ரூபாய் நோட்டு கீழே விழுந்தது. அந்த நோட்டை எடுத்து ‘`தலைவரே, இந்த நோட்டு ஞாபகம் இருக்கா?’’ என்றேன். ‘`என்னய்யா... ஒரு நோட்டை காமிச்சு ஞாபகம் இருக்கான்னு கேட்குற’’ என்றார். ‘`ஒரு முறை வருஷப் பொறப்புக்கு உங்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க வந்தேன். சின்னம்மா ‘ஆசீர்வாதம் வாங்குறவங்களுக்கு ஏதாவது பணம் குடுக்கணும்’னு உங்ககிட்ட சொன்னாங்க. ‘அப்படியா’ன்னு சொல்லிக்கிட்டே நீங்க கனிமொழிக்குப் பத்து ரூபா, என்கிட்ட பத்து ரூபா, அப்புறம் அப்ப வந்திருந்த விஜயா தாயன்பனுக்குப் பத்து ரூபா கொடுத்தீங்க. அந்தப் பத்து ரூபாதான் தலைவரே இது... அப்படியே பத்திரமா எழுதி வச்சிருக்கேன் பாருங்க’’ என்றேன். உடனே கலைஞர் என் மகளைப் பார்த்து ‘`எம்மா, உங்க அப்பன் பெரிய நடிகன்மா’’ என்றார். சிரித்துக்கொண்டே ‘`தலைவரே... என் மூஞ்சைப் பார்த்துச் சொல்லுங்க. நான் நடிக்கிறேனா, நான் நடிக்கிறேனா’’ எனக் கேட்டேன். ‘`விளையாட்டுக்குச் சொன்னேன்யா’’ எனச் சிரித்தார்.

அடுத்து அப்போது துணை முதல்வராக இருந்த தளபதி ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வைக்கப் போனேன். அவர் வீட்டு வாசலிலேயே என்னை வரவேற்க அவருடைய உதவியாளர் இருந்தார். ‘`தளபதி நீங்க தனியா வர்றீங்களா, குடும்பத்தோட வர்றீங்களான்னு பார்த்து சொல்லச் சொன்னார். குடும்பத்தோட வர்றதா இருந்தா அவருடைய துணைவியார் துர்கா மேடத்தை ரெடியாகச் சொல்லணும்னு சொல்லியிருக்கார் சார்’’ என்றார். வீட்டுக்குள் போனதும் தளபதியும் துர்கா மேடமும் சேர்ந்து அழைப்பிதழ் வாங்கினார்கள்.

ஒருமுறை சீமானைச் சந்தித்துப் பேசியபோது, அவர் ‘பகலவன்’ எனும் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தம்பி விஜய்யிடம், சீமான் கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தேன். சீமான் கதை சொன்னார். அதன்பிறகு தம்பி விஜய் எனக்கு போன் செய்து ‘`சார்... கதை செமையா இருக்கு. ஒவ்வொரு சீனும் தீ மாதிரி பறக்குது. ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தணும். நீங்க அவர்கிட்ட சொல்லுங்க’’ என்கிறார். நான் சீமானிடம் விஷயத்தைச் சொல்கிறேன். ‘`க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தி திரும்ப தம்பியைப் பார்த்துச் சொல்லுங்க’’ என்றேன். அதன்பிறகு இரண்டு முறை விஜய்யைச் சந்தித்து சீமான் க்ளைமாக்ஸைச் சொன்னார். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் மட்டும் பிடிமானமாக வரவில்லை. இதனால் அந்தப் படம் தள்ளிப்போனது.

உண்மைகள் சொல்வேன்! - 31

இந்தக் காலகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தம்பி விஜய் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் ‘டிவி’ மகேந்திரன் (கமல்ஹாசனுடன் இருப்பவர்) எனக்கு போன் செய்தார். ‘`அண்ணா, எஸ்.ஏ.சி சார் - டைரக்டர் முருகதாஸ் புராஜெக்ட் உங்க கிட்ட வர மாதிரி இருக்குண்ணா… விஜய் சார் ‘புரொடக்ஷன் டென்ஷன் அப்பாவுக்கு அதிகம் இருக்கக் கூடாது’ன்னு நினைக்கிறார். அதனால, முருகதாஸ் கிட்ட மூணு தயாரிப்பாளர்கள் பேர் சொல்லி, நீங்க யாருக்கு வேணா படம் பண்ணலாம்னு கேட்டிருக்கார். அதில் முருகதாஸ் ‘நான் தாணு சாருக்கே பண்றேன்’னு சொல்லியிருக்கார். அதனால, உங்களுக்கு போன் வரும்ணே… பேசி முடிச்சிடுங்க’’ என்கிறார்.

அவர் சொன்னபடியே எஸ்.ஏ.சி சார் எனக்கு போன் செய்தார். ‘`முருகதாஸோட படம் பண்றது என்னோட புரொடக்ஷன் ஸ்டைலுக்கு செட் ஆக மாட்டேங்குது. என் வேகமும், அவங்க வேகமும் மேட்ச் ஆகல. அதனால, இந்த புராஜெக்ட்டை நீங்க எடுத்துப் பண்ணுனா நல்லா இருக்கும். சாயங்காலம் விஜய் தம்பியைப் பார்க்க நீங்க வரணும்’’ என்றார். மாலை நான் எஸ்.ஏ.சி சார் வீட்டுக்குப் போய், அங்கிருந்து இருவரும் தம்பி விஜய்யைப் பார்க்க நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பினோம்.

போகும் வழியில் ‘`சார், இந்தப் படத்தை ஜெமினி மனோகர் பிரசாத்துக்கு நான் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில பண்றதாதான் ஒப்பந்தம் போட்டிருந்தேன். நீங்க, அதை அப்படியே கொஞ்சம் ஃபாலோ பண்ணிக்கணும்’’ என்கிறார். ‘`சார்... ஏற்கெனவே, அவருக்கும் எனக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. எனக்குப் படம் கொடுக்கிறதா இருந்தா, எனக்குத் தனியா கொடுத்துடுங்க. இல்லைனா அவருக்குத் தனியா கொடுத்துடுங்க. ரெண்டு பேரும் வேணாம் சார்’’ என்கிறேன். ‘`ஒண்ணும் பிரச்னை இல்ல… எல்லாம் சரியா வரும்... நீங்க வாங்க’’ என்றபடியே விஜய் வீட்டுக்குள் என்னை அழைத்துப் போகிறார். அங்கே, ஜெமினி மனோகர் பிரசாத் இருக்கிறார்.

விஜய் தம்பி வந்தார். டைரக்டர் சொன்ன விஷயத்தைச் சொன்னார். மனோகர் பிரசாத்தை எதிரில் வைத்துக்கொண்டே, ‘`தம்பி, ஏற்கெனவே எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சங்கடம் இருக்கு. இவரு செக்கைக் கொடுப்பாரு, அப்புறம் ரிட்டர்ன் பண்ணுவாரு. போன்லகூட பிடிக்கமுடியாதுன்னு நிறைய சிக்கல் இருக்கு தம்பி. படம் ஆரம்பிச்ச பிறகு பிரச்னை வரக்கூடாது. அதனால நீங்க யாருக்காவது ஒருத்தருக்குப் பண்ணுங்க’’ என்கிறேன். உடனே விஜய் என்னைத் தனியே இன்னொரு அறைக்குள் அழைத்துப் போய், ‘`சார், அவங்க ‘நண்பன்’ படம் ரொம்ப நல்லா பண்ணித் தந்தாங்க. தெலுங்குலகூட நல்லபடியா பிசினஸ் பண்ணுனாங்க. அதனால ஒரு பிரச்னையும் வராம நான் பாத்துக்குறேன். நீங்கதான் தயாரிப்பாளர். அவங்க ஃபர்ஸ்ட் காப்பி வாங்கிப் பண்றாங்க. எனக்காக நீங்க இந்த புராஜெக்ட்டைப் பண்ணுங்க சார்’’ என்கிறார். ‘`உனக்காகப் பண்றேன் தம்பி’’ என்றேன்.

உண்மைகள் சொல்வேன்! - 31

அடுத்து விஜய் ‘`சார், நீங்க டைரக்டர் கிட்ட கதையைக் கேட்டுடுங்க’’ என்கிறார். இதற்கு நடுவில் எஸ்.ஏ.சி சார் படம் தொடர்பான எல்லா ஃபைல்களையும் என்னிடம் கொடுக்கிறார். அதில் படத்தின் ஒன்லைன் இருந்தது. கதை, இன்டர்வெல் பிளாக் எல்லாமே மிகப் பிரமாதமாக இருந்தது. உடனே, முருகதாஸுக்கு போன் அடித்து ‘`தம்பி, நான் படத்தோட ஒன்லைன் படிச்சிட்டேன். ரொம்பப் பிரமாதம். நான் கதையே கேட்க வேணாம். நாம புரொசீட் பண்ணிடலாம்’’ என்றேன். ‘`இல்ல சார்… ஹீரோ உங்ககிட்ட கதை சொல்லச் சொல்லியிருக்கார். சொல்லலைன்னா தப்பாகிடும்’’ என்கிறார். ‘`இல்ல தம்பி, நான் ஹீரோகிட்ட பேசுறேன். எனக்கு ரொம்ப சந்தோஷம்’’ எனச் சொல்லி அவருக்கான அட்வான்ஸைக் கொடுத்து விட்டேன்.

நானும், மனோகர் பிரசாத்தும் ஒப்பந்தம் போடுகிறோம். இந்த ஒப்பந்தப்படி மனோகர் பிரசாத் எனக்குக் கொடுக்கும் பணத்தில் நான் படத்தை முடிக்கவேண்டும். நான் தனியாக யாரிடமும் இந்தப் படத்துக்காக லோன் வாங்கக்கூடாது.

ஒப்பந்தப்படி முதல் பேமென்ட் சரியாக வந்தது. ஆனால், அடுத்தடுத்த பேமென்ட்கள் நான் எதிர்பார்த்தபடியே சரியாக வரவில்லை. 5 கோடி ரூபாய் செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதை எப்படிப் போய் விஜய் தம்பியிடம் சொல்வது என்று எனக்கு தர்மசங்கடம். கடன் வாங்காமல் என்னுடைய சோர்ஸில் இருந்தே பணம் திரட்டி படத்துக்குச் செலவுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

மும்பையில் ஷூட்டிங். அங்கே ஷூட்டிங் கிற்குத் தேவையான எல்லாவற்றையும் இரண்டு மாதம் தங்கியிருந்து எஸ்.ஏ.சி சார் இறுதி செய்துவைத்திருந்தார். அதனால், நேராக டீம் மும்பை போய்விட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் மேனேஜராக இருந்த சுந்தர்ராஜன்தான் தயாரிப்பு மேற்பார்வையைப் பார்த்தார். அவருக்கு ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இதனால் ஷூட்டிங்கில் சிக்கல்கள் வருகின்றன. இரண்டு நாள் பார்த்தேன். மூன்றாவது நாள் கிளம்பி மும்பை போய்விட்டேன்.

அங்கே போய் சூழலைப் பார்த்ததும் ‘பெப்சி’ விஜயன் மாஸ்டருக்கு போன் அடித்து விஷயத்தைச் சொன்னேன். ‘`மாஸ்டர், நீங்க நிறைய இந்திப் படம் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குத் தெரிஞ்ச நம்பகமான ஆள் பாம்பேல இருந்தா சொல்லுங்க’’ என்றேன். ‘`போனிகபூர் கிட்ட ஜெயராஜ்னு ஒரு பையன் இருக்கான். எல்லா வேலையையும் பக்காவா முடிச்சிடுவான்’’ என்றார். விஜயன் சொல்ல, ஜெயராஜ் வந்தார். எல்லா வேலைகளும் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தன. இன்னொரு நண்பர் மூலம் மும்பையில் பிரபல தயாரிப்பாளரும் பால் தாக்கரேவின் மருமகளுமான ஸ்மிதா தாக்கரேவின் அறிமுகம் கிடைத்தது. அவரை நான் நேரில்கூடப் பார்க்கவில்லை. ஆனால், ‘துப்பாக்கி’ படத்துக்குத் தேவையான போலீஸ் பர்மிஷன், டிராஃபிக் பர்மிஷன், மற்ற அனுமதிகள் என எல்லா விஷயங்களையும் அவர் செய்து கொடுத்தார். நான் சென்னை திரும்பி, இங்கிருந்தபடியே ஷூட்டிங் ஏற்பாடுகளை கவனித்தேன்.

மனோகர் பிரசாத்திடம் இருந்து பணம் சரியாக வரவில்லை. கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் நின்றுபோனது. இந்த இக்கட்டான சூழலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து ஆங்கிலத்தில் எனக்கு இ-மெயில் வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு உதவியாக இன்னொருவரை வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பதில் மெயில் அனுப்பினேன். அந்த மெயிலில் இருந்த சில வார்த்தைகள் முருகதாஸை வருத்தப்பட வைத்துவிட்டது. உடனடியாக அவர் மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபப்படுகிறார். அவரின் உதவியாளர்கள் என்னிடம் ‘`இன்னைக்கு ஷூட்டிங் நடக்காது போல இருக்கு’’ என்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல், உடனடியாகக் கிளம்பி மும்பை போனேன்.

இயக்குநர் முருகதாஸிடம் என்ன பேசினேன், ஷூட்டிங் மீண்டும் எப்படித் தொடர்ந்து நடந்தது, ஒரு பாடல் காட்சிக்காக தம்பி விஜய் எனக்கு போன் செய்தது, நானும் தம்பி விஜய்யும் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்து எடுத்த முடிவு, ரிலீஸுக்குப் பிறகு சில இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்ட சிக்கல்கள் என ‘துப்பாக்கி’ படம் பற்றிய சுவாரஸ்யங்களை அடுத்த வாரம் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்