மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 32

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

- கலைப்புலி எஸ்.தாணு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஏற்பட்ட மனக்காயத்தை உடனடியாக சரி செய்வதற்காக மும்பையில் ‘துப்பாக்கி’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்குப் போனேன். கேரவனில் இயக்குநருடன் தனியாகப் பேசினேன். ‘`தம்பி, எனக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் ஆங்கிலத்தில் மெயில் போட்டதால், என்னுடன் இருந்தவர்களை வைத்து பதில் மெயிலை அனுப்பினேன். அந்த வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தும் என்று தெரியாது. வேண்டும் என்றே இதை நான் செய்யவில்லை. இனிமேல் எதுவாக இருந்தாலும் நேரிலோ, போனிலோ பேசிக்கொள்ளலாம். என்ன வேண்டுமானாலும் நேரடியாகக் கேளுங்கள்’’ என்று சொல்லி சமாதானம் செய்துவிட்டு வந்தேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததே விஜய் தம்பிக்குத் தெரியாது. இப்போது ‘ஆனந்த விகடன்’ மூலம்தான் அவர் தெரிந்துகொள்வார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனக்கும் முருகதாஸுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது. ஷூட்டிங் வேக வேகமாக நடந்தது. ஒரு கால்பந்து மைதானத்தில் ஷூட்டிங் நடத்த வேண்டும். இயக்குநர் முருகதாஸின் அசோசியேட்கள் மைதானத்தைப் பார்த்து இறுதி செய்துவிட்டார்கள். அடுத்த நாள் அங்கே ஷூட்டிங் நடத்துவதற்காக முருகதாஸ் தனது குழுவினருடன் போகிறார். அப்போதுதான் அவருக்கு அந்த மைதானத்தில் ஷூட்டிங் நடத்த ஒரு நாளுக்கு 5 லட்சம் ரூபாய் கட்டணம் எனத் தெரியவருகிறது. ‘`என்னது... அஞ்சு லட்சமா? ஒரு லட்ச ரூபாய்ல வேற இடத்தைப் பாருங்க’’ என்று சொல்லி ஷூட்டிங்கை வேறு ஒரு இடத்துக்கு மாற்றி வேறு காட்சிகளை எடுத்தார். பின்னர் ஒன்றேகால் லட்சம் ரூபாய்க்கு ஒரு மைதானத்தைப் பார்த்து ஷூட்டிங்கை நடத்தினார்கள்.

இதற்கு நடுவே ‘ஜெமினி லேப்’ மனோகர் பிரசாத் ஒரு மீட்டிங் போட்டு, முதலில் அக்ரிமென்ட் போட்டதைவிடவும் 5 கோடி ரூபாய் குறைக்கச் சொல்கிறார். மீட்டிங்கில் முருகதாஸும் இருந்தார். அப்போது அவர் ‘`சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணிடுங்க’’ என்கிறார். ‘`சரி தம்பி… ஆனா, அவரை இந்த பேமென்ட்டையாவது ஒழுங்கா கொடுத்துடச் சொல்லுங்க’’ என்றேன். ஆனால், அதன்பிறகும் பேமென்ட் சரியாக வரவில்லை. மனோகர் பிரசாத்துக்கு பண நிர்வாகம் செய்வதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால் அவர் தடுமாறினார். ஆனால், இப்போது அவர் மகன் ஆனந்த் மிகத்திறமையாக அந்த நிறுவனத்தை வழிநடத்தி வளர்த்துவருகிறார் என்பதை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் சுவிட்சர்லாந்தில் எடுக்க வேண்டும். எனக்கு அந்தப் பாடலுக்கான பட்ஜெட்டாக 80 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார்கள். ஆனால், இறுதியாக ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் வந்தது. நான் இயக்குநரிடம் ‘`தம்பி, பட்ஜெட்டைத் தாண்டிப் போகுதே’’ என்றேன். ‘`நாம ரொம்ப சிக்கனமாதான் சார் எடுக்குறோம். ஆனா, இவ்வளவு பேரை சுவிட்சர்லாந்துக்குக் கூட்டிட்டுப் போகவேண்டியிருக்கு. அதனால பட்ஜெட் அதிகமாகுது’’ என்றார்.

உண்மைகள் சொல்வேன்! - 32
உண்மைகள் சொல்வேன்! - 32

இந்த விஷயம் விஜய் தம்பியின் காதுக்குப் போகிறது. விஜய் அவருடைய உதவியாளர் ராமுவிடம் 65 லட்சம் ரூபாய் காசோலையைக் கொடுத்து என்னிடம் அனுப்புகிறார். நான் ராமுவிடம் ‘`தம்பி, என்னைத் தயாரிப்பாளரா தேர்ந்தெடுத்துட்டு அவர் செலவு பண்றது சரியா இருக்குமா? பட்ஜெட்டுக்கு மேல இருக்குன்னுதான் சொன்னேனே தவிர, பண்ணமாட்டேன்னு சொல்லல. இந்த செக்கை அப்படியே விஜய் தம்பிகிட்ட கொடுத்துடுங்க’’ என்று சொல்லி அனுப்பினேன்.

‘சொன்ன பட்ஜெட்டைத் தாண்டிப் போய்விட்டது, அதனால் அந்தச் செலவை நாம் ஏற்றுக்கொள்வோம்’ என்கிற தம்பி விஜய்யின் மனதை எண்ணி நெகிழ்ந்துபோனேன். பாடலை சுவிட்சர்லாந்தில் சிறப்பாக எடுத்து முடித்தோம். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சுவிட்சர்லாந்து போக முடியாத சூழல். அதனால் நட்டியை ஒளிப்பதிவு செய்ய அனுப்பி வைத்தேன்.

பின்னணி இசை வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது ஒரு நாள் ஹாரிஸ் ஜெயராஜ் எனக்கு போன் செய்தார். ‘`சார், படம் சூப்பரா இருக்கு. ஒரு 20 நிமிஷம் மட்டும் குறைச்சா படம் இன்னும் வேற லெவல் போயிடும்’’ என்கிறார். ‘`சரிங்க... நீங்க ரீரெக்கார்டிங் எல்லாம் முடிங்க. ஃபர்ஸ்ட் காப்பி பார்த்ததும் இயக்குநர்கிட்ட நான் பேசுறேன்’’ என்றேன்.

ஃபர்ஸ்ட் காப்பி தயாரானது. தம்பி விஜய்யும் நானும் மட்டும் ஜெமினி லேபில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம். படம் முடிந்ததும் விஜய் தம்பி ‘`சார், நான் கிளம்புறேன். அப்புறம் பேசிக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார். நான் வெளியே இருந்த இயக்குநரின் உதவியாளர்களிடம் ‘’டைரக்டர் கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

காரில் ஏறியதும் விஜய்க்கு போன் அடித்தேன். ‘`தம்பி, படம் எக்ஸ்ட்ராடினரியா வந்திருக்கு. படம் பார்க்குறதுக்கு முன்னாடி இருபது நிமிஷம் குறைக்கணும்னு நினைச்சிதான் வந்து உட்கார்ந்தேன். ஆனா, ஒரு நிமிஷம்கூட குறைக்க வேணாம் தம்பி... படம் பிரமாதமா இருக்கு’’ என்றேன்.

‘`சார், நீங்க அந்த மைண்ட்ல இருக்கீங்கன்னு எனக்கும் தகவல் வந்துச்சு. ஆனா, ஒரு ஃபிரேம்கூட குறைக்க வேணாம் சார். அப்படியே ரிலீஸ் பண்ணுங்க... படம் சூப்பரா இருக்கு’’ என்றார் விஜய். அடுத்து இயக்குநருக்கு போன் அடித்தேன். ‘`தம்பி, படம் பிரமாதமா பண்ணியிருக்க. நேர்ல இருந்தா கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பேன். படம் எனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு. உன்னைக் கொண்டாடணும் போல இருக்கு. ஒரு இடத்துலகூட கிரிப் குறையல. படம் சூப்பர் ஹிட்டு தம்பி’’ என்றேன். ‘`சார்... சார்... சார்…’’ என நெகிழ்ந்தவர், ‘`எங்க நீங்க ஏதாவது குறைக்கச் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ரொம்ப சந்தோஷம் சார்’’ என்றார்.

ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. ஆனால், எனக்கான பேமென்ட்டாக 2 கோடியே 17 லட்சம் ரூபாய் வரவே இல்லை. படம் ரிலீஸான பிறகும் வரவில்லை. ஆனால், நான் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவன். அதுவும் இது விஜய் தம்பியின் படம். அதனால் எந்தத் தாமதமும் இல்லாமல் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்தேன்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு. படத்துக்கான பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதல் ஷோவில் இருந்தே கூட்டம் குவிகிறது. ஆனால், ‘துப்பாக்கி’ படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து பிரச்னை வருகிறது. ‘`உடனடியாக படத்தைத் தடை செய்யவேண்டும்’’ என்கிறார்கள்.

என் சார்பாக சிங்கப்பூர் முஸ்தபா ‘`தயாரிப்பாளர் தாணு நமக்கு நெருங்கியவர். அவர் நிச்சயம் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்திப் படம் எடுக்க மாட்டார். அவருக்கு நாம் துணை நிற்க வேண்டும். படத்துக்குத் தடை கேட்கக் கூடாது’’ என்று அமைப்புகளிடம் பேசுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீமான் முக்கியமான பலருக்கு போன் செய்து, ‘`படத்துக்குத் தடை கேட்காதீங்க. நீங்க என்ன கேட்டாலும் தாணு சாரை பண்ணித் தரச் சொல்றேன்’’ என்கிறார். நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால், என்மீது கொண்ட அன்பால் இஸ்லாமிய சமூகத்தினரிடம் என் சார்பில் பலரும் பேசினார்கள்.

தமிமுன் அன்சாரி மற்றும் சிலருடன் போயஸ் கார்டனில் உள்ள சிங்கப்பூர் முஸ்தபா வீட்டில் சந்திப்பு நடந்தது. அப்போது நான் அவர்களிடம் ‘`படத்தில் எந்தெந்தக் காட்சிகள் தவறாக இருப்பதாக நினைக்கிறீர்களோ, அதையெல்லாம் சொல்லுங்கள். நான் எடுத்துவிடுகிறேன்’’ என்றேன்.

உண்மைகள் சொல்வேன்! - 32

அதைத் தொடர்ந்து சவேரா ஹோட்டலில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் சார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நான் என மூவரும் அதில் கலந்து கொள்கிறோம். என் சார்பில் 15 பேர் மீட்டிங்கிற்கு வந்தார்கள். இஸ்லாமிய அமைப்புகளிலிருந்து 50 பேர் வந்து உட்காருகிறார்கள். எல்லோருமே இளைஞர்கள். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ‘படத்தைத் தடை செய்தே ஆக வேண்டும்’ என்பதுதான் அவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. மிகவும் கொந்தளிப்போடு சொல்கிறார்கள். கடுமையாக விவாதிக்கிறார்கள்.

அந்த நேரத்தில் நான் எழுந்து, ‘`ஒரே ஒரு நிமிஷம் நான் பேசுறேன்... தயவுசெய்து கேளுங்க. அதன்பிறகு நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் பண்றேன்’’ என்றேன். ‘`எனக்கு இஸ்லாமிய சமூகத்தினர்மீது அளவுகடந்த அன்பு இருக்கிறது. என் மனைவியின் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றபோது சிங்கப்பூர் முஸ்தபாதான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தேவையான அத்தனை உதவிகளையும் செய்தார். மருத்துவமனைக்கு அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை முழுவதுமாக அவரே கொடுத்து, எங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளாமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்து எங்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து நான் இஸ்லாமியர் யாரைப் பார்த்தாலும் எனக்கு அவர்கள் முஸ்தபாவாகத்தான் தெரிவார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்புகூட வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தன் மனைவியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு எனக்குக் கடிதம் அனுப்பியிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு உடனடியாகப் பணம் அனுப்பி வைத்தேன். அதற்கான வங்கி விவரங்களைக்கூட நீங்கள் பார்க்கலாம். முஸ்தபாவுக்கு செய்யவேண்டிய நன்றிக்கடனை நான் இப்படித்தான் செய்துவருகிறேன்.

எனக்கு இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்திரித்துப் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் கிடையாது. தயவுசெய்து படத்துக்குத் தடை கேட்காதீர்கள். பல கோடிகளைப் போட்டுப் படத்தை எடுத்திருக்கிறேன். நான் தெருவுக்கு வந்து விடுவேன். அதனால் நீங்கள் எந்தக் காட்சி வேண்டாம் என்கிறீர்களோ, அதை எடுத்து விடுகிறேன். தயவுசெய்து பிரச்னை வேண்டாம்’’ எனக் கண்கள் கலங்கியபடியே பேசினேன். எனக்கு அடுத்து இயக்குநர் எஸ்.ஏ.சி சார் அவர்களும் உருக்கமாகப் பேசினார்.

உண்மைகள் சொல்வேன்! - 32

அடுத்து இயக்குநர் முருகதாஸ் பேச எழுந்தார். ஆனால் அவரை ‘`நீ பேசாதே’’ எனக் கூட்டம் தடுத்தது. எல்லோரையும் சமாதானப்படுத்தி இயக்குநரைப் பேசவைத்தோம். ‘`எனக்கு சினிமாவில் முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தவர் அப்துல் காதர் என்கிற நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான். அவர் கொடுத்த 5,000 ரூபாயில் இருந்துதான் என் வாழ்க்கை தொடங்கியது. செய்திகளில் இடம்பிடித்த தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய சம்பவங்களைத் தொகுத்து ஒரு கதையாக எழுதினேனே தவிர, எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் வந்து விடும். அதனால் தடை வேண்டாம்’’ என்று அவர் பேசினார்.

எங்கள் மூவரின் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் கொஞ்சம் கன்வின்ஸ் ஆனார்கள். மீட்டிங் முடிந்ததுமே சத்யம் தியேட்டர், தேவி தியேட்டர், குட்லக் ப்ரிவியூ தியேட்டர் என மூன்று இடங்களிலும் இஸ்லாமிய சகோதரர்கள் படம் பார்க்க ஏற்பாடு செய்தோம். நூறு பேருக்கு மேல் படத்தைப் பார்த்தார்கள். அதன்பின் அவர்கள் எந்தெந்தக் காட்சிகளையெல்லாம் நீக்கச் சொன்னார்களோ அதையெல்லாம் நீக்கினோம். சில காட்சிகள் படத்தின் கதைக்கு எந்த அளவு முக்கியம் என்பதை எடுத்துச்சொல்லி அவர்கள் அனுமதியோடு அதை வைத்தோம். பிரச்னைகள் முடிந்தது. படம் மிகப் பெரிய ஹிட்டானது.

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றி என்னையும் இயக்குநர் முருகதாஸையும் தொடர்ந்து பயணிக்கவைத்தது. அடுத்து அவர் அல்லு அர்ஜுனோடு ஒரு படம் இயக்கத் தயாரானர். அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளராக என்னைத்தான் தேர்ந்தெடுத்தார். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன, ‘துப்பாக்கி’யில் முருகதாஸின் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களை, இயக்குநர்களாக்கி நான் எடுத்த ‘அரிமா நம்பி’, ‘கணிதன்’ அடுத்து விஜய் தம்பியுடன் ‘தெறி’... சுவாரஸ்ய சம்பவங்கள் பல. அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

வெளியிடுவோம்...