மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 33

ப்ரியா ஆனந்த் - விக்ரம் பிரபு
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியா ஆனந்த் - விக்ரம் பிரபு

- கலைப்புலி எஸ்.தாணு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த வாரம் கொரோனா நிதி அளிப்பதற்காகச் சந்தித்தேன். அங்கே எனக்கு N95 மாஸ்க் கொடுத்தார்கள். அதை அணிந்தபடியே முதலமைச்சரைச் சந்திக்க உள்ளே போனேன். என்னைப் பார்த்தவர், ‘`என்ன, வெயிட் லாஸ் பண்ணிட் டீங்க?’’ எனக் கேட்டிருக்கிறார். ஆனால், என் காதில் அது ‘`என்ன லேட்டா வந்துட்டீங்க’’ என்பதுபோல் விழுந்துவிட்டது. ‘`இல்லல்ல... நீங்க நிதி கொடுக்கலாம்னு சொன்ன மே மாசமே நான் டிடி எடுத்து வெச்சிட்டேன். ரொம்ப பிஸியா இருக்கும் நேரம் தொந்தரவு பண்ண வேணாமேன்னு இப்பதான் நேரம் கேட்டேன்’’ என்றேன். ‘`இல்ல நீங்க எடை குறைஞ்சிட்டீங்க என்று சொன்னேன்’’ என்றவர், ‘`முதல்ல உட்காருங்க’’ என்று என்னை வாஞ்சையோடு பார்த்தார். முதல்வருக்கு இரண்டு பக்கக் கடிதம் எழுதியிருந்தேன். ‘`முதல் பக்கத்தில் என் பாணியில் உங்களைப் புகழ்ந்து எழுதியிருந்தேன். நீங்கள் யாரும் புகழக் கூடாது என்று சொல்லி விட்டதால் அதை எடுத்துட்டு இதை மட்டும் வைத்திருக்கிறேன்’’ என்று நான் சொன்னதும் அவர் சிரித்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 33

‘`கர்ணன் படம் ரிலீசான அந்த வாரமே கொரோனாவால 50 சதவிகிதமா இருக்கைகள் குறைஞ்சிடுச்சு. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நைட் ஷோவுக்கு அனுமதியில்லை. அதற்கடுத்த வாரம் தியேட்டர்களே முழுவதுமா மூடப்பட்டுடுச்சு. அதனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய ‘கர்ணன்’ படத்தின் லாபம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. அதனால அள்ளிக்கொடுக்க முடியாம, கிள்ளிக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்ல, மீண்டும் சிரித்தார் முதல்வர். ‘`நீங்க எப்ப அழைத்தாலும் வருவேன், என்ன சொன்னாலும் செய்வேன்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

‘துப்பாக்கி’ படம் நல்லபடியாக முடிந்து வசூல்ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. அதுவரையிலான விஜய் படங்களை எல்லாம் தாண்டிய வசூல். இந்தப் படத்தை அப்படியே இந்தியில் அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்தார்.

ஆனால், அதன் ஷூட்டிங்கின்போது தயாரிப்புத் தரப்பில் முறையாக அனுமதி வாங்காமல் பல பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர். ‘`சென்னையில இருந்துக்கிட்டே இங்க எல்லா பர்மிஷனையும் வாங்கி, சிக்கல் இல்லாம படத்தை தாணு சார் எடுத்து முடிச்சார். ஆனா, இங்க இருக்கிற இந்தித் தயாரிப்பாளர்கள் ஒரு பர்மிஷன் வாங்கவே இவ்ளோ தடுமாறுறாங்க’’ என்று சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விஷயம்தான் அவருக்கு இன்னும் என் மேல் மரியாதையைக் கூட்டியிருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் அல்லு அர்ஜுனோடு ஒரு படம் பண்ணப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்திடம் ‘`தாணு சார் தயாரிப்பாளரா இருந்தா நல்லா இருக்கும்’’ எனச் சொல்லியிருக்கிறார். அரவிந்த் சாரும் ‘`ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘மகதீரா’ படத்தின் டப்பிங் உரிமையை வாங்கி ‘மாவீரன்’ என ரிலீஸ் செய்து, மிகப்பெரிய விளம்பரங்கள் செய்தார் தாணு. அதனால் எனக்கும் அவர் மிகவும் நெருக்கமானவர்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் ‘கத்தி’ படத்தை எடுத்து முடித்தார். ஆனால், இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான லைகா இந்தப் படத்தைத் தயாரித்தது அப்போது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக வெடித்தது. தம்பி விஜய் படம், நமக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதால் நானாகவே இந்தப் பிரச்னைக்குள் இறங்கி, படம் வெளியாவதற்காக சிலரோடு சேர்ந்து முயற்சிகள் எடுத்தேன். இறுதியாக சென்னை, செங்கல்பட்டில் படம் ரிலீஸாவதில் சில முட்டுக்கட்டைகள் எழுந்தன. இதனால் ரோகிணி தியேட்டர் பன்னீர்செல்வத்தையும், அபிராமி ராமநாதன் அவர்களையும் சந்தித்து கியாரன்ட்டி கொடுத்து, படம் நல்லபடியாக ரிலீஸ் ஆக உதவி செய்தேன்.

உண்மைகள் சொல்வேன்! - 33

இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லவேண்டும். அப்போது லைகா நிறுவனத்தின் மிக முக்கிய அதிகாரியாக இருந்தவர் ஐங்கரன் கருணாகரன். இவர்தான் ‘தமிழ்ப் படங்களுக்கு சர்வதேச அளவில் மார்க்கெட் இருக்கிறது. இந்திப் படங்களுக்கு நிகராகத் தமிழ்ப் படங்களை விற்பனை செய்ய முடியும், மக்களை தியேட்டருக்கு வரவழைத்துப் படம் பார்க்க வைக்க முடியும்’ என்பதை நிரூபித்தவர். இங்கிருந்துதான் தமிழ்ப் படங்களுக்கான ஓவர்சீஸ் பிசினஸ் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதனால் கருணாகரன் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு.

‘கந்தசாமி’ படம் முடிந்ததும், கெளதம் மேனனோடு ஒரு படம் நடிக்க விரும்பினார் விக்ரம். கெளதம் மேனனை நம்ம வீட்டுப் பிள்ளையாகத்தான் நான் எப்போதும் நினைப்பேன். ‘காக்க காக்க’, ‘கர்ஸனா’ என இரண்டு படங்கள் அவரோடு சேர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். அவரது வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அடுத்து இந்தப் படத்தையும் பண்ணிவிடலாம் என ஆரம்பக்கட்ட வேலைகளில் இறங்கினேன். ஆனால், இந்த புராஜெக்ட்டைத் தொடங்க முடியவில்லை.

அடுத்து சூர்யாவுடன் ஒரு புராஜெக்ட் சேர்ந்து செய்வதாக முடிவெடுத்தோம். ஆனால், இறுதிவரை கௌதம் படத்தின் முழுக் கதையை சூர்யாவிடம் சொல்லாமலே விட்டதால் இந்தப் படமும் தொடங்க முடியாமல்போனது.

இதற்கிடையில் தம்பி விஜய்யோடு ஒரு படம் பண்ணும் வாய்ப்பும் வந்தது. ‘யோஹன் அத்தியாயம் 1’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தை கெளதம் மேனனோடு இணைந்து பண்ணச் சொன்னார் விஜய். ‘`தம்பி, இவரு ஃபர்ஸ்ட் காப்பி கேட்பார். ஃபர்ஸ்ட் காப்பி கொடுத்தா அது சரிவருமான்னு எனக்குத் தெரியல. நாங்க ரெண்டு பேரும் வெளில போய்ப் பேசிட்டு, திரும்பி வர்றோம்’’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறி நானும் கெளதமும் ஈசிஆர் சாலையில் சுற்றிச் சுற்றி வந்தோம்.

உண்மைகள் சொல்வேன்! - 33

அப்போது நான், ‘`கௌதம், உன்கூட இருக்கிறவங்க ஒரு படத்தை சரியா பிளான் பண்ணிச் செலவு பண்ற மாதிரி எனக்குத் தெரியல. உன்னோட எல்லாப் படமும் ரிலீஸ்ல சிக்கல் ஆகுது. அப்ப, எங்கேயோ நிர்வாகத்திறன் மைனஸ் ஆகுற மாதிரி எனக்குத் தெரியுது. அதனால, நீ டைரக்‌ஷன் மட்டும் பண்ணு. உன் சம்பளத்தை நீ வாங்கிக்கோ. தயாரிப்பை நான் பார்த்துக்குறேன்’’ என்றேன். ‘`சரி சார்... எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க’’ என்று சொல்லிவிட்டுப் போனார் கௌதம். அதன்பிறகு அவர் இதுபற்றி என்னிடம் பேசவில்லை. நானும் விட்டுவிட்டேன்.

இதற்கிடையே கெளதம் மேனன் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் எடுத்துக்கொண்டிருந்தபோது என்னிடம் வந்தார். ‘`படத்தைத் திரையிடுறதுல சில பிரச்னைகள் இருக்கு. ஒரு கோடி ரூபாய் வேணும் சார். நீங்க கொஞ்சம் உதவி பண்ணுனா நல்லா இருக்கும்’’ என்றார். ‘`சரி கெளதம்... நாளைக்கு ஆர்டிஜிஎஸ் பண்ணிடுறேன்’’ என்றுசொல்லிவிட்டு அவரது அக்கவுன்ட்டுக்கு ஒரு கோடி ரூபாய் அனுப்பிவைத்தேன். மீண்டும் பட ரிலீஸின்போது இன்னொரு கோடி வேண்டும் என்று வந்து கேட்டார். மீண்டும் அதேபோல் கொடுத்தேன். இது நடந்தது 2012-ம் ஆண்டு.

உண்மைகள் சொல்வேன்! - 33

நான் ஏற்கெனவே சொன்னபடி சிவாஜி சாரின் குடும்பத்தினர்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையும், அன்பும் உண்டு. ஒரு நாள் இளைய திலகம் பிரபு அவர்கள் அவரின் மகன் விக்ரம் பிரபுவை அழைத்துவந்து என்னிடம் அறிமுகப்படுத்தினார். ‘`எங்க அப்பாவை பெருமாள் முதலியார் அறிமுகப்படுத்தின மாதிரி, நீங்க என் மகனை அறிமுகப்படுத்தணும்’’ என்று சொன்னார். ‘`நிச்சயமா பண்ணிடலாம்’’ என்று சொல்லி அவருக்காகக் கதைகள் கேட்க ஆரம்பித்தேன். இதற்கு நடுவில்தான் லிங்குசாமி அவர்கள் தயாரிக்க, பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ கதை பிடித்துப்போக, அந்தப் படத்தைப் பண்ணலாம் என முடிவெடுத்தார்கள். பிரபு சார் என்னிடம் விஷயத்தைச் சொன்னார். ‘`தம்பி, அதை முடிச்சிட்டு வரட்டும். நாம அடுத்த படம் பண்ணுவோம்’’ என்று சொன்னேன். அதற்கேற்றபடி ‘துப்பாக்கி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆனந்த் சங்கர் என்னிடம் சொன்ன கதை பிடித்துப்போக, விக்ரம் பிரபுவை வைத்து ‘அரிமா நம்பி’ படம் எடுத்தோம்.

நான் இசையமைப்புப் பணிகளைச் செய்தபோது எனக்கு டிரம்ஸ் வாசித்தவர் சிவமணி. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.திறமையானவர். நான் வாழ்ந்த வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த விரும்பினேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மிக முக்கியமான டிரம்மராக இருந்த சிவமணியை ‘அரிமா நம்பி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தோம். பாடல்கள் ஹிட்டாகின. படமும் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.

அதேபோல ‘துப்பாக்கி’ படத்தில் இன்னொரு உதவி இயக்குநராகப் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதையும் பிடித்துப்போக ஓகே சொல்லி, படம் எடுத்தோம். அதுதான் ‘கணிதன்.’ முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடித்தார். சிவமணிதான் இந்தப் படத்துக்கும் இசையமைத்தார்.

‘சச்சின்’, ‘துப்பாக்கி’ படங்களை அடுத்து மீண்டும் தம்பி விஜய்யுடன் ‘தெறி’ படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் இயக்குநராக அப்போது ‘ராஜா ராணி’ எனும் படத்தை மட்டுமே இயக்கியிருந்த அட்லி வந்தார். தம்பி விஜய், அட்லியோடு நான் இணைந்து பணியாற்றிய ‘தெறி’ படம் பற்றிய சுவாரஸ்ய சம்பவங்கள், ரிலீஸின் போது சந்தித்த பிரச்னைகளையெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்