
- கலைப்புலி எஸ்.தாணு
எனக்கும் தெலுங்கு சினிமா உலகுக்கும் நல்ல நட்பு உண்டு. அந்த நட்பு வட்டத்தில் மிக முக்கியமானவர் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த். 1989-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ‘மாப்பிள்ளை’ படத்தைத் தமிழில் தயாரிக்க வந்தார் அல்லு அரவிந்த். அப்போது நான் விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராகி ‘யார்’, ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’ என மூன்று படங்களைத் தயாரித்திருந்தேன். அதனால், அல்லு அரவிந்த் என்னிடம் ‘`ரஜினி சாருக்கான மார்க்கெட் எந்தெந்த ஏரியாவில் எப்படி இருக்கிறது, படத்தை எப்படி வியாபாரம் செய்யலாம்’’ என்கிற விவரங்களை எல்லாம் கேட்டார். அவர் கேட்ட எல்லா விவரங்களும் கொடுத்தேன். நான் என்ன குறித்துக் கொடுத்தேனோ, அதன்படிதான் அவர் வியாபாரம் செய்தார். ‘`ஆந்திராவில் இருந்து வந்து எப்படி இங்க படத்தை வியாபாரம் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தோம். அழகா ஒரு கணக்குப் போட்டுக் கொடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி’’ என்று சொன்னார். எங்கள் இருவருக்குமான நட்பு அப்போதிருந்து தொடங்கியதுதான்.
இந்தச் சூழலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், அல்லு அரவிந்தின் சகோதரி மகனுமான ராம் சரண் தேஜா ஹீரோவாக அறிமுகமாகிறார். அதற்காக 2009-ல் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ‘மகதீரா’ படத்தைத் தயாரிக்கிறார் அல்லு அரவிந்த். ராம் சரணை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்துகிறார் என்பதால் மிக பிரமாண்டமாக அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படத்தின் ரீ-ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தபோது என்னை ஹைதராபாத்துக்கு அழைத்தார். ‘`என்னுடைய தயாரிப்பு அனுபவத்திலேயே மிகப்பெரிய பொருட்செலவில் பண்றோம். இந்தப் படத்தைத் தமிழில் நீங்க பண்ணிக் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்’’ என்றார்.

முதலில் ‘மகதீரா’ படத்தின் பாடல் ட்ராக் எல்லாம் வாங்கி வாலி சாரிடம் கொண்டுபோய்க் கொடுத்தேன். ‘`சார், இந்தப் படத்தோட எல்லாப் பாடல்களையும் நீங்க எழுதினா நல்லா இருக்கும்’’ என்று சொன்னேன். அடுத்து இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களைச் சந்தித்தேன். ‘`சார், இந்தப் படத்துக்கு நீங்க டயலாக் எழுதித்தரணும். நீங்க டப்பிங் படங்களுக்கு எழுதினது இல்லைன்னு எனக்குத் தெரியும். எனக்காக இதை நீங்க செஞ்சி கொடுக்கணும் சார்’’ என்றேன். ‘`என் மகனை ஹீரோவா அறிமுகப்படுத்தினீங்க. உங்களுக்காக நான் இதைப் பண்ண மாட்டேனா’’ என்று சொல்லி எழுதிக்கொடுத்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள மியூசிக் ஸ்டூடியோவில் பாடல்கள் எல்லாம் தயார் செய்து அல்லு அரவிந்த், ராம்சரண் இருவருக்கும் காட்டினேன். இருவருமே ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். ‘`தெலுங்கில் எந்த அளவுக்கு லிப் சிங்க் சரியாக இருக்கிறதோ, அதே அளவுக்குத் தமிழில் செய்திருக்கிறீர்கள்’’ என்று சொல்லி மகிழ்ந்தார்கள். வாலி சார் பாடல் வரிகளைப் பார்த்து எழுத மாட்டார். சத்தத்தைக் கேட்டுத்தான் எழுதுவார். சில இடங்களில் மட்டும் கொஞ்சம் லிப் சிங்க் ஒட்டாமல் இருந்தது. அப்போது அவரிடம் போய் ‘`சார் சில வரிகள் மட்டும் மாத்தணும்’’ என்று சொன்னேன். ‘`ரெண்டு, மூணு வரிகள்தானேயா… நீயே கவிஞன்தானே மாத்திடுய்யா… உடம்பு முடியல’’ என்றார். அப்படி அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். அவர் உடல்நிலையைப் புரிந்துகொண்டு நான் சில வரிகள் மட்டும் மாற்றினேன். உதட்டசைவுக்கு ஏற்றபடி, ‘`வாளை ஏந்தும் வீரன் எந்தன் தோளைத் தாங்க வா’’ என்று ஒரு இடத்தில் மாற்றியிருந்தேன்.
ராம்சரண் என்னைக் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது நானும் நெகிழ்ந்துபோனேன். ‘மகதீரா’வை தமிழில் ‘மாவீரன்’ ஆக்கி, படத்தை முடித்துக்கொடுத்தேன். ‘மாவீரன்’ டைட்டில் ரஜினி சாரிடம் இருந்தது. அல்லு அரவிந்த் கேட்டதுமே அந்த டைட்டிலை ரஜினி சார் கொடுக்க ஒப்புக்கொண்டார். இப்போது அல்லு அர்ஜுனோடு ஒரு தமிழ் இயக்குநரை இணைத்து ஒரு படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்.
விஜய் தம்பிக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை வைத்து நல்லபடியாகப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சுழற்சி முறையில் மீண்டும் படம் கொடுப்பார். அப்படி அவருடன் ‘சச்சின்’, ‘துப்பாக்கி’ படங்கள் நான் செய்திருந்த நிலையில் மீண்டும் 2015-ல் ஒரு படம் ஆரம்பிக்கும் சூழல் உருவானது. ஒரு நாள் தம்பி விஜய்யின் மேனேஜர் ராமு என்னை வந்து சந்தித்தார். ‘`விஜய் சார் உங்களைப் பார்க்கணும்னு சொல்றாரு. நாளைக்கு ரெண்டு மணிக்கு ஆச்சி மனோரமா ஹவுஸுக்கு வந்துடுங்க சார்’’ என்றார்.

நான் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த அந்த இடத்திற்குப் போனேன். கேரவனில் உட்கார்ந்து நானும், விஜய்யும் பேச ஆரம்பித்தோம். ‘`சார் ‘ராஜா ராணி’ படம் பண்ணுன டைரக்டர் அட்லிகிட்ட கதை கேட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தப் படம் நாம பண்ணலாம். ஆனா, அவர் ஏற்கெனவே ஒருத்தருக்குக் கதை சொல்லி அதைப் பண்றதா இருந்திருக்கு. படத்துக்காக கொஞ்சம் செலவெல்லாம் பண்ணியிருக்காங்க. ஆனா, நான் உங்களுக்குத்தான் படம் பண்ணுவேன், நீங்கதான் தயாரிப்பாளர்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். அதனால அவங்களுக்கு சரி பண்ணிக் கொடுத்துடுங்க. முதல்ல கதை கேட்டுடுங்க. நாம சேர்ந்து பண்ணலாம்’’ என்றார்.
அட்லி கதை சொன்னார். இன்டர்வல் வரை கேட்கும்போதே எனக்குக் கதை பிடித்துவிட்டது. சென்டிமென்ட், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியலாக இருந்ததால் ‘`இதுவரைக்கும் சொன்னதே போதும் தம்பி… படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும்’’ என்று சொன்னேன். ‘`இல்லண்ணே, நீங்க செகண்ட் ஹாஃபையும் கேட்டுடுங்க’’ என்று சொன்னார். அடுத்த நாள் காலை இரண்டாவது பாதி கதையைக் கேட்டேன். உடனே தம்பி விஜய்க்கு போன் போட்டு, ‘`தம்பி, செம கமர்ஷியலா இருக்கு. ‘துப்பாக்கி’யைப் போல இந்தப்படமும் பெரிய ஹிட் ஆகும்னு தோணுது’’ என்றேன். அப்போது இயக்குநர் அட்லி என்னிடம் ‘`அண்ணே, எழுதி வச்சிக்கோங்க… நீங்க இதுவரைக்கும் பண்ணுன படங்கள்லயே மிகப்பெரிய ஹிட் படமா ‘தெறி’ இருக்கும்’’ என்றார். அவர் சொன்னபடியே அதுவரையிலான என்னுடைய தயாரிப்புகளில் ‘தெறி’தான் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அட்லி சொன்னது அப்படியே நடந்தது.
அட்லி கதை சொல்லி முடித்ததும், அடுத்தமுறை அட்லியோடு டிவி மகேந்திரன் வந்தார். ‘`அண்ணே, இந்தப் படம் என் மூளையில் உதித்த குழந்தை. இந்தப் படம் பண்றதுக்காக ஆபீஸ் போட்டு கிட்டத்தட்ட 69 லட்சம் செலவு பண்ணியிருக்கேன். விஜய் சார் உங்களுக்குத்தான் படம் பண்ணுவேன்னு சொல்லியிருக்கார். ‘நீங்க தாணு சாருக்குக் கொடுக்கிறதா இருந்தா இந்தப் படம் பண்ணலாம், இல்லன்னா வேற நடிகரை அப்ரோச் பண்ணுங்க’ன்னு சொன்னார். வேற நடிகர் கிட்ட போற எண்ணம் எங்களுக்கு இல்லண்ணே. நீங்களே தயாரிங்க... எங்களுக்கு என்ன பண்ண முடியுமா அதைப் பார்த்துப் பண்ணுங்க’’ என்றார் மகேந்திரன். ‘`தம்பி, நீங்க செலவு பண்ணிய 69 லட்சத்தை நான் கொடுத்துடறேன். அதில்லாம, படம் முடிஞ்சதும் உன்னை சந்தோஷப்படுத்துறேன்’’ என்று சொன்னேன். அதற்கேற்றபடியே அவர்கள் செலவு செய்திருந்த 69 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து, டிவி மகேந்திரனுக்கு அட்வான்ஸாக 25 லட்ச ரூபாய் பணமும் கொடுத்தேன்.
‘சச்சின்’, ‘துப்பாக்கி’ படங்களை எனக்கு எஸ்.ஏ.சி சார் கொடுத்ததால் ‘தெறி’ படம் கன்ஃபர்ம் ஆனதும், இயக்குநர் எஸ்.ஏ.சி அவர்களைச் சந்தித்து, ‘`சார், விஜய் தம்பி படம் கொடுத்திருக்கு சார்… ரொம்ப சந்தோஷம்’’ என வாழ்த்து பெற்றேன். அவரும் ‘`படம் மிகப்பெரிய வெற்றியடையும்’’ என வாழ்த்தி அனுப்பினார்.
அட்லியின் சென்ட்டிமென்ட்படி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்தோம். விஜய் தம்பி வந்துவிட்டார். அவரது பெற்றோர் எஸ்.ஏ.சி சாரும், ஷோபா மேடமும் வந்துவிட்டார்கள். என் வீட்டில் இருந்து எல்லோரும் வந்துவிட்டார்கள். அட்லியின் அப்பா, அம்மாவும் வந்துவிட்டார்கள். யார் முதலில் விளக்கேற்றுவது என அட்லி என்னிடம் கேட்டபோது, ‘`உங்க அம்மாவைக் கூப்பிட்டு விளக்கேத்தச் சொல்லுப்பா’’ என்றேன். ‘`அண்ணே, இவ்ளோ பெரிய ஆள்கள் இருக்கும்போதே எப்படிணே சரியா இருக்கும்’’ என்றார். ‘`ஏத்தச் சொல்லு தம்பி’’ என்று சொன்னேன். அட்லியின் அம்மா விளக்கேற்ற ‘தெறி’ படம் தொடங்கியது. ‘`விஜய் தம்பியின் பெற்றோர், என் குடும்பத்தினர் என எல்லோருமே பல படங்களுக்கு விளக்கேற்றி, படத்தைத் தொடங்கியிருக்கிறோம். ஆனால், முதன்முதலாக தன் மகனின் படத்துக்கு அந்தத் தாய் விளக்கேற்றிவைக்கும்போது இறைவனிடம் என்னவெல்லாம் வேண்டுவார் என்பது எனக்குத் தெரியும். நிச்சயம் படம் உங்க அம்மாவின் ஆசீர்வாதத்தோடு மிகப்பெரிய வெற்றியடையும் தம்பி’’ என்று சொன்னேன்.

படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டோம். இந்த நேரத்தில் ரஜினி சார் வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. உடனடியாக போயஸ் கார்டனுக்குப் போகிறேன். ‘`தாணு, நீங்க இப்ப ஒரு படம் பண்ணிட்டிருக்கீங்கன்னு தெரியும்… இந்த நேரத்துல நான் டேட் கொடுத்தா, என்னோட உங்களுக்குப் படம் பண்றதுல ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே’’ என்று கேட்டார். ‘`சார், என்ன சார் சொல்றீங்க… கரும்பு தின்னக் கூலியா சார்? ‘யார்’ நூறாவது நாள் விழாவுல தாணுவுக்கு நான் ஒரு படம் பண்ணுவேன்னு சொன்னீங்க. 30 வருஷ காத்திருப்பு சார். நிச்சயம் பெருசா பண்ணலாம் சார்’’ என்கிறேன். ‘`சரி தாணு… இயக்குநர் சுந்தர்.சி-யை அனுப்புறேன். அவர்கிட்ட கதை கேளுங்க…’’ என்கிறார்.
அளவில்லா மகிழ்ச்சியோடு போயஸ் கார்டனிலிருந்து வெளியே வருகிறேன். ரஜினி சாரின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘முத்து’ எனப் பல படங்கள் 90-களில் நான் பண்ணவேண்டியதாக இருந்து பின்னர் சூழல் சரியாக அமையாமல் வேறு தயாரிப்பாளர்களுக்கு மாறின.
ரஜினி சார் படத்தைத் தயாரிக்கவேண்டும் என்கிற 30 ஆண்டுக் கனவு நிறைவேறிய தருணம், ரஜினி சாரோடு நடந்த சந்திப்பின் சுவாரஸ்யங்கள், விஜய் தம்பியுடனான ‘தெறி’ பிரமாண்டம்… அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!