மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 36

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

- கலைப்புலி எஸ்.தாணு

போயஸ் கார்டன் ரஜினி சார் வீடு… பா.இரஞ்சித் ஒவ்வொரு காட்சியாக விவரித்துச் சொல்ல, நாங்கள் இருவரும் கவனமாகக் கேட்கிறோம். க்ளைமாக்ஸில் எதிரியின் இடத்துக்கே போய் அழித்துவிட்டு வரும் காட்சியைச் சொல்லி முடித்ததும், நான் எழுந்துபோய் இரஞ்சித்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். ‘`என்ன தாணு… எல்லாம் ஓகேவா’’ என்றார் ரஜினி சார். ‘`படத்துல ஆக்‌ஷன் இருக்கு. அப்பா பொண்ணு சென்டிமென்ட் இருக்கு. மனைவியைத் தேடிப்போய்க் கண்டுபிடிக்கிற எமோஷன் இருக்கு. பிரமாதமாக வொர்க் அவுட் ஆகும் சார்’’ என்றேன். ‘`உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் ஓகேதான்’’ என்றார். அங்கிருந்து தொடங்கியதுதான் ‘கபாலி’யின் பயணம்.

இரஞ்சித் ‘மெட்ராஸ்’ படத்தில் அவரோடு பணியாற்றிய டீமை அப்படியே ‘கபாலி’யிலும் பயன்படுத்த விரும்பினார். அதற்கு நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். ரஜினி சாரோடு படம் முழுக்க ட்ராவல் செய்யும் நண்பன் கதாபாத்திரத்துக்கு மட்டும் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்கலாம் எனப் பேச்சு வந்தது. நான் பிரகாஷ்ராஜை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். ‘`60 நாள் கால்ஷீட் வேணும் சார். ரஜினியோட படம் முழுக்க நீங்க வருவீங்க’’ என்றேன். ‘`பண்ணிடலாம் சார்’’ என்றவர் அடுத்தகட்ட விஷயங்களை அவருடைய மேனேஜரிடம் பேசச் சொன்னார். மிகப்பெரிய தொகையைச் சம்பளமாகக் கேட்டார்கள். அந்த நேரத்தில் கமல்ஹாசன் சாரின் ஒரு படத்திலும் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து நடிக்க அதில் அவர் ஒப்பந்தமாகியிருந்த சம்பளத் தொகை மிகவும் குறைவு. ஆனால், இது ரஜினி சார் படம் என்றதும் அதைவிட மூன்று மடங்கு அதிகமான சம்பளம் கேட்டதில் எனக்கு வருத்தம். அதனால், ஜான் விஜய்யைக் கொண்டுவந்தோம்.

உண்மைகள் சொல்வேன்! - 36

திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் எந்தத் தாமதமும் சிக்கல்களும் இல்லாமல் விறுவிறுவென நடந்தது. தாய்லாந்துக் காட்சிகளைச் சென்னையிலேயே செட் போட்டு எடுத்தோம். தாய்லாந்திலிருந்து 300 துணை நடிகர்களை இங்கே கொண்டுவந்து நடிக்கவைத்தோம். கலை இயக்குநர் ராமலிங்கம் சொன்னதைக் கேட்டு அப்படியே தாய்லாந்து செட்டைத் தத்ரூபமாகப் போட்டுக் கொடுத்து பிரமிக்க வைத்தார் மேஸ்திரி ராமலிங்கம்.

ரஜினி சார் தன் மனைவி ராதிகா ஆப்தேவைத் தேடிப்போகும் காட்சியை சென்னை செட்டிநாடு அரண்மனையில் எடுக்க விரும்பினோம். ஏற்கெனவே ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தைக் கானாடுகாத்தான் அரண்மனையில் படம் பிடித்திருந்த அனுபவம் இருந்ததால், எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டேன். ரஜினி சார் அந்த அரண்மனைக்குள் வர, ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. அந்த நேரம் பார்த்து எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களின் வளர்ப்பு மகனான ஐயப்பனிடம் இருந்து போன் வருகிறது. ‘`கோர்ட்டில் எனக்கும் என் தந்தைக்கும் இடையே வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் யாரைக் கேட்டு இங்கே படப்பிடிப்பு நடித்துகிறீர்கள்? உடனடியாக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும்’’ என்கிறார். ‘`தம்பி, உங்க அப்பாகிட்ட பேசி முறையா அனுமதி வாங்கித்தான் ஷூட்டிங் நடத்துறோம். ரஜினி சார் உள்ள இருக்கார், ஷூட்டிங் நடந்துட்டிருக்கு. பெரிய மனுஷன் உள்ளே இருக்கும்போது வெளில போங்கன்னு சொல்றது தப்பு தம்பி’’ என்றேன். ‘`இன்னையோட ஷூட்டிங்கை முடிச்சிக்கோங்க. நாளைக்கு நடத்தக்கூடாது’’ என மீண்டும் அவருடைய சிக்கல்களையெல்லாம் சொன்னார். நான் இயக்குநர் இரஞ்சித்துக்கு போன் அடித்து, ‘`செட்டிநாடு அரண்மனைல எடுக்கவேண்டியதையெல்லாம் இன்னைக்கே எடுத்துடுங்க’’ என, பிரச்னையை அவருக்கு விளக்கினேன். அதன்படி அவரும் அன்றோடு அங்கே ஷூட்டிங்கை முடித்துவிட்டார்.

உண்மைகள் சொல்வேன்! - 36

ரஜினி சாருக்கு இந்த விஷயத்தை நாங்கள் சொல்லவில்லை. இதற்கிடையே அரண்மனையை விட்டு வெளியே போகச்சொன்ன ஐயப்பன், மீண்டும் போன் செய்து ‘`தப்பா எடுத்துக்காதீங்க. அங்க ஒரு பிரச்னை. அதான் அப்படிப் பேசிட்டேன். இந்தப் படத்துக்கு என்ன உதவின்னாலும் கேளுங்க. நான் பண்றேன்’’ என்றார். பின்னர் மருத்துவமனைக் காட்சிகளெல்லாம் செட்டிநாடு ஹாஸ்பிட்டலில்தான் ஷூட் செய்தோம்.

‘தெறி’ படத்தின் கதையைப் பொறுத்தவரை அதிக பிரமாண்டம் தேவையில்லாத நல்ல கதை. அதனால் ஷூட்டிங் செலவுகள் தேவைக்கு அதிகமாக இருக்காது என என் மனதில் கணித்துவைத்திருந்தேன். விஜய் தம்பி சம்பள விஷயத்தை எப்போதுமே நேரடியாகவே பேசுவார். வேறு ஆட்கள் யாரும் அவர் சார்பாகப் பேசமாட்டார்கள். நானும் அவரும் மட்டுமே அறைக்குள் உட்கார்ந்திருக்க, பேச ஆரம்பித்தோம்.

‘`தம்பி, என்ன செய்யணும் சொல்லு, பண்ணிடலாம்’’ என்கிறேன். ‘`நீங்களே சொல்லுங்க சார்’’ என எப்போதும்போல சிரித்துக்கொண்டே ஜாலியாகச் சொன்னார். ‘`நீயே சொல்லு தம்பி’’ என்றதும் ‘`சார், நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். நீங்க சொல்றதுதான் சரியா இருக்கும்’’ என்றார். நான் ஏற்கெனவே சம்பள விஷயங்களை மனதுக்குள் முடிவெடுத்துவிட்டுத்தான் அங்கே போயிருந்தேன். விஜய் தம்பியோடு நான் முன்பு செய்த ‘துப்பாக்கி’ படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என எல்லோருமே சீனியர்கள் என்பதால் அவர்களுக்கும் பெரிய சம்பளங்கள் போனது. ‘தெறி’யைப் பொறுத்தவரை டெக்னீஷயன்களுக்கான சம்பளம் குறைவு. அதில் மிச்சமாகும் சம்பளத்தை அப்படியே விஜய் தம்பிக்குக் கொடுத்துவிட வேண்டும் என நான் மனதுக்குள் கணக்குப் போட்டு வைத்திருந்ததால் சட்டெனப் பெரிய தொகையைச் சொன்னேன். ‘`சார்… சார்’’ என என் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டவர், ‘`நல்லா யோசிச்சுச் சொல்லுங்க சார்’’ என்றார். ‘`இல்ல தம்பி… இந்தப் படம் பட்ஜெட்ல சரியா இருக்கு. நான் நல்லா சம்பாதிச்சிடுவேன் தம்பி. அதனால இந்தச் சம்பளம்தான் உங்களுக்கு சரியான சம்பளம். மார்க்கெட்டுக்கு ஏத்த சம்பளம்’’ என்கிறேன். அறையை விட்டு வெளியே வந்தபிறகு திரும்பவும் ‘`நல்லா யோசிச்சுச் சொல்லுங்க சார்’’ என்கிறார். ‘`இதான் தம்பி சரியான சம்பளம்’’ எனச் சொல்ல, இருவரும் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி விடைபெற்றோம்.

உண்மைகள் சொல்வேன்! - 36

படத்தின் கதைக்கு அதிக பிரமாண்டம் தேவைப்படவில்லையே தவிர, பாடல்களுக்கு அதிக பிரமாண்டம் தேவைப்பட்டது. இயக்குநர் அட்லி பாடல்களைத்தான் முதலில் ஷூட் செய்தார். ‘ஜித்து ஜில்லாடி’ என்கிற ஓப்பனிங் பாடலுக்குப் பெரிய செட் போட்டு, கேரளாவிலிருந்து குழந்தைகளையெல்லாம் வரவழைத்து ஷூட்டிங் நடத்தினோம். 500 டான்ஸர்கள், அவர்களுக்கு 5 விதமான காஸ்ட்யூம்கள், அணிகலன்கள் என பிரமாண்டமாக அந்தப்பாடல் ஷூட் செய்யப்பட்டது.

எப்போதுமே ஒரு படத்தில் பாடல்களைக் கடைசியாகத்தான் ஷூட் செய்யவேண்டும். அப்போதுதான் கணக்கு பார்த்து, ஒவ்வொரு பாடலுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என முடிவெடுக்க முடியும். முதலிலேயே பாடல்களை ஷூட் செய்தால் படத்தின் பட்ஜெட் சிரமத்துக்குள்ளாகும். ‘தெறி’ விஷயத்தில் முதலில் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளின் ஷூட் நடந்ததால் செலவு கூடிக்கொண்டே போனது.

படத்தில் மிக முக்கியமான சண்டைக் காட்சியான பாரிஸ் கார்னரில் நடக்கும் சண்டைக்காட்சியைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 25 ஏக்கரில் செட் போட்டு எடுத்தோம். பாரிஸ் கார்னரில் எவ்வளவு பேருந்துகள், வாகனங்கள் போகுமோ அந்த அளவுக்கு வாகனங்களை செட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தி, ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களையும் கொண்டுவந்து, தொடர்ந்து ரிகர்சல்கள் பார்த்து, அந்தச் சண்டைக் காட்சியை மிகத்தத்ரூபமாக எடுத்தோம். 1000 அடிக்கு தார்ச்சாலையே செட்டுக்குள் போட்டோம். கிராஃபிக்ஸிங் பங்கும் அந்தக் காட்சியில் உண்டு. ஆனால், முன்பே சொன்னதுபோல ஆரம்பத்திலேயே இந்தக் காட்சிகளை எடுத்ததால் படத்தின் பட்ஜெட் ஏகத்துக்கும் ஏற ஆரம்பித்துவிட்டது.

அட்லியைக் கூப்பிட்டு, ‘`தம்பி, கதை சொல்லும்போது பட்ஜெட்ல இருந்த தெளிவு இப்ப இல்லாத மாதிரி இருக்கு. செலவு அதிகமாகுது’’ என்று சொன்னேன். ‘`இல்லண்ணே… இனிமேல் நான் குறைச்சிக்கிறேன்’’ என்றார். அதன்பிறகு செலவுகளைச் சரிசெய்து படத்தை நல்லபடியாக முடித்தோம். இறுதியில் இன்னொரு பாடல் ஷூட் செய்யவேண்டும் என்று சொன்னபோது நான் அதுகுறித்து இயக்குநரிடம் கேள்வி எழுப்பினேன். இது விஜய் தம்பியின் காதுக்குப்போக, அவர் உதவியாளரிடம் இருந்து பிளாங்க் செக் வருகிறது. ‘`எவ்ளோ குறையுதோ அதைப் போட்டுக்கச் சொன்னார் சார்’’ என்கிறார் அந்த உதவியாளர். ‘`தம்பி, மூணு முறை பட்ஜெட் மாத்தியிருக்கோம். அதனால்தான் கேட்டேனே தவிர வேறு ஒரு பிரச்னையும் இல்லை. இதை அப்படியே தம்பிகிட்ட கொடுத்துடுங்க’’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

படத்தை 2016 தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்வது என்பது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு. அதன்படி வேலைகள் நடந்தன. ஆனால், ரிலீஸ் நேரத்தில் வேறு ஒரு ரூபத்தில் சிக்கல் வருகிறது. ரோகிணி பன்னீர்செல்வம் ‘‘செங்கல்பட்டில் படத்தை ரிலீஸ் செய்யமாட்டேன்’’ என பிரச்னை செய்கிறார். அதற்கு அவர் சில காரணங்களை வைத்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தைப் பலரும் பல வகைகளில் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து திசை திருப்பினார்கள். பலவகையான செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஃபெடரேஷனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்லியும், ரோகிணி பன்னீர்செல்வம் சம்மதிக்கவில்லை. இதனால் ‘தெறி’ படம் செங்கல்பட்டில் மட்டும் சில தியேட்டர்களில் ரிலீஸாகாமல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

உண்மைகள் சொல்வேன்! - 36

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் நாங்கள் அதுவரை தயாரித்த படங்களைவிடவும் மிக அதிக வசூல். ஆனால், ‘`செங்கல்பட்டில் படம் முழுமையாக ரிலீஸ் ஆகவில்லையே… என் ரசிகர்கள் எங்கெங்கோ பயணித்துப் படம் பார்த்தார்களே’’ என்பதில் விஜய் தம்பிக்கு வருத்தம் இருந்தது. அவரைச் சந்தித்து நடந்த முழு விவரங்களையும் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார்.

‘கபாலி’ ஷூட்டிங் மலேசியாவில் தொடங்கிவிட்டது. திடீரென ரஜினி சாருக்குக் காய்ச்சல். என்ன செய்வது என என்னிடம் கேட்கிறார்கள். நான் என்ன சொன்னேன், மலேசியா ஷூட்டிங் எப்படி நடந்தது, ‘கபாலி’ ரிலீஸ் மற்றும் அதன்பின்னர் நடந்த சம்பவங்கள், ரஜினி சாருடன் படம் முடித்ததும் தனுஷ் தம்பியுடன் ‘விஐபி-2’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ எனத் தொடர்ந்து மூன்று படங்கள்… அனைத்தையும் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்