
- கலைப்புலி எஸ்.தாணு
ரஜினி சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. அந்தக் கனவு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறும் போது ரஜினி சார் பிரமிக்கும் அளவுக்கு எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்பினேன்.
மலேசியாவுக்குப் போய் எங்கெல்லாம் ஷூட் செய்ய வேண்டுமோ அந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்தார் இயக்குநர் பா.இரஞ்சித். முதலில் நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனத்தால் மலேசியாவில் புரொடக்ஷன் வேலைகளை சரிவரப் பார்க்க முடியவில்லை. அதனால் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளே வந்தது. மாலிக், ஸுபேர் என்பவர்கள் தலைமையில் முழுக்க முழுக்க இளைஞர்கள் நிரம்பியிருந்த டீம் அது. சினிமாத் தயாரிப்புப் பணிகளில் முன்னனுபவம் இல்லை என்றாலும் தைரியமாக ‘`நாங்கள் பண்ணுவோம்’’ என்று சொல்கிறார்கள். ‘35 ஆண்டுகளுக்குப்பிறகு ரஜினி சார் கால்ஷீட் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் அனுபவம் இல்லாதவர்களை வைத்து எப்படிப் பண்ணுவது’ என எனக்குள் பலவிதமான யோசனைகள்.


‘கபாலி’, ‘தெறி’ என இந்த இரண்டு படங்களின் தயாரிப்பையும் என் மூத்த மகன் பரந்தாமன்தான் முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். அதனால் அவரிடமும் கலந்து பேசி மாலிக் நிறுவனத்திடமே புரொடக்ஷன் பணிகளைக் கொடுத்தோம். அனுபவம் இல்லையே என்கிற என்னுடைய அச்சத்தை மலேசியாவில் போய் இறங்கிய முதல் நாளே மொத்தமாகத் துடைத்தெறிந்து பிரமிக்க வைத்துவிட்டார்கள் மாலிக் நிறுவனத்தினர். விமானநிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும் வழி முழுக்க ட்ராஃபிக்கை க்ளியர் செய்திருந்தது, பாதுகாப்பாகப் பயணிக்க கான்வாய் என எல்லா ஏற்பாடுகளும் மிகச்சிறப்பாக இருந்தது.
விமான நிலையத்தில் ரஜினி சார் இறங்குகிறார். கிட்டத்தட்ட 5000 பேர் அடங்கிய மக்கள் கூட்டம் நிற்கிறது. மலேசிய போலீஸ் வியந்துபோய்ப் பார்க்கிறது. எங்களிடம் ஓடிவந்து ‘`இந்தக் கூட்டத்தில் நீங்கள் வெளியே போகமுடியாது… ஏதேனும் ஆபத்துகள் நிகழலாம்’’ என விமானநிலையத்திலிருந்து பின்வழியே அழைத்துப்போகிறார்கள். ஆனால், இது தெரிந்து பின்பக்க வழியாகவும் கூட்டம் வந்துவிட்டது. ரஜினி சார் போகும் வழி முழுக்க மக்கள் கூட்டம்.


மலேசியா கிளம்புவதற்கு முன்பாகவே ரஜினி சாரை பிரமிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசையில், என் மகனிடம் ‘`மலேசியாவிலேயே மிக உயர்ந்த ஹோட்டலில், மிகப்பெரிய அறையை ரஜினி சாருக்குப் பாரு’’ என்று சொல்லியிருந்தேன். அதன்படி அவர்களும் கோலாலம்பூரில் உள்ள கான்கார்ட் ஹோட்டலைப் பார்த்து இறுதி செய்தார்கள். இந்த ஹோட்டலில் 1996-ல் மைக்கேல் ஜாக்சன் வந்து தங்கியிருக்கிறார். அவர் வருவதற்கு மூன்று மாதங் களுக்கு முன்பு ஹோட்டலைப் பார்வையிட வந்த டீம், அறையைப் பார்த்துவிட்டு ‘`இங்கெல்லாம் ஜாக்சன் தங்கமாட்டார்… வேறு இடம்தான் பார்க்க வேண்டும்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள். உடனே அந்த ஹோட்டலின் உரிமையாளர் ‘`உங்களுக்கு அறைகள் எப்படியிருக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். நான் உடனே அதுபோல் செய்து தருகிறேன்’’ என்று சொல்லி, 7 அறைகளை இடித்து அதை அப்படியே ஒன்றாக்கி சிறு அரண்மனை போல மாற்றி மைக்கேல் ஜாக்சன் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார்.
அவர் தங்கிவிட்டுப் போன பிறகு அந்த அறையை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. அதைப் பொக்கிஷமாக அப்படியே பாதுகாத்துவருகிறார்கள். அவர் எழுதிய பேப்பர் உட்பட பல விஷயங்களும் அப்படியே அந்த அறையில் இருக்கின்றன. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நான் அந்த அறையை ரஜினி சாருக்குப் கொடுக்கும்படி கேட்டேன். அந்த ஹோட்டலின் உயர் அதிகாரிகள் இதைப்போய் அதன் உரிமையாளரிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘`மைக்கேல் ஜாக்சன் அறையைக் கேட்கிறாங்க சார்... நாம எப்படி கொடுக்க முடியும்’’ என்று சொல்ல, அந்த ஹோட்டல் முதலாளி ‘`ரஜினி நம் ஹோட்டலில் தங்குவது நமக்குத்தான் பெருமை. விதிகளையெல்லாம் தளர்த்தி அவருக்குக் கொடுங்கள்’’ என்று சொல்லிவிட்டார். உடனே அந்த அறை மற்றும் ஹோட்டலை முழுவதுமாக வீடியோ எடுத்து ‘ரஜினி சார் இங்கேதான் தங்கப்போகிறார்’ என எங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த ஹோட்டலும், அந்த அறையும் கிடைத்த உற்சாகத்தில் நாங்களும் ‘இதுதான் ரஜினி சார் தங்கப்போகும் இடம்’ என ரஜினி சாரின் மேலாளர் சுப்பையாவுக்கு அனுப்பிவிட்டோம். சுப்பையா ரஜினி சாரிடம் காட்டியிருக்கிறார்.


‘`எதுக்காக இப்படியெல்லாம் பண்றாங்க? முடியவே முடியாது, இந்த ஹோட்டலில் நான் தங்கவே மாட்டேன். மகாராஜா தங்குற ரூம்லாம் எனக்கு வேண்டாம்’’ என்று சொல்லி அதை கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார். இதன்பிறகு Shangri-la எனும் ஹோட்டலில் அவருக்கு ரூம் எடுத்தோம். அங்கேயும் நேரில் போய்ப் பார்த்தபிறகு ‘`இவ்வளவு பெரிய அறையிலெல்லாம் நான் தங்கமாட்டேன்’’ என, கீழே லாபியில் போய் உட்கார்ந்துவிட்டார். அவருக்கு அங்கே 6 லட்சம் ரூபாயில் ரூம் போட்டிருந்தோம். ஆனால், அவர் தங்கியது 80,000 ரூபாய் ரூமில்!
அடுத்து கோலாலம்பூர் சிட்டிக்குக் கொஞ்சம் வெளியே பங்சார் எனும் பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. ரஜினி சார் அங்கே வருகிறார் என்று கேள்விப்பட்டு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கூடிவிட்டார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் திணறுகிறது. கூட்டத்தைத் தாண்டி ஒரு கார்கூட உள்ளே நுழைய முடியாது என்கிற நிலை. ரஜினி சாரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டுமே என மலேசிய அரசாங்கமும் எங்களோடு சேர்ந்து எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்கிறது. ஆனால், மக்கள் ரஜினி சாரின் மீது வைத்திருந்த அன்பு கட்டுக்கடங்காமல் இருந்தது. ரஜினி சார் காரில் இருந்து இறங்கி எல்லோரையும் கைகூப்பியபடி வணங்கி, அருகில் வந்தவர்களுக்கெல்லாம் கை கொடுத்து வாழ்த்தினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ரஜினி சாரின் கையைப் பிடித்து இழுத்து, நகத்தால் கீறிவிட்டார். இருந்தாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு சமாளித்து மக்களை வாழ்த்திவிட்டு உள்ளே வந்தார். பார்த்தால் கையில் ரத்தம். உடனடியாக மருத்துவரை வரவழைத்து ஆன்ட்டி செப்டிக் இன்ஜெக்ஷன் போட்டோம்.




மலேசியாவின் மலாக்கா மாகாண கவர்னர் ரஜினி சாரை விருந்துக்கு அழைத்தார். ரஜினி சார், இயக்குநர், நான், என் மகன், மாலிக், ஸுபேர் எனப் பலரும் அந்த விருந்தில் கலந்துகொண்டோம். மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து விருந்தளித்தார்கள். மலாக்கா கவர்னர் மாளிகையில் தமிழர், மலாய், சீனர் எனப் பலதரப்பட்ட மக்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோருமே கவர்னரிடம் போய் ‘ரஜினி சாரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார்கள். தமிழர்கள் கேட்டால் பரவாயில்லை, மலாய், சீனர்கள் என எல்லோருமே கேட்கிறார்களே என கவர்னரும் வியந்துபோய் ரஜினி சாரோடு எல்லோரையும் நிற்கவைத்துப் படம் எடுக்க ஏற்பாடு செய்துகொடுத்தார்.
அடுத்து சென்னையிலேயே தாய்லாந்துக் காட்சிகளை செட் போட்டு எடுத்திருந்தாலும், ஒரிஜினாலிட்டிக்காகத் தாய்லாந்தில் இரண்டு நாள் மட்டும் ஷூட் வைத்திருந்தோம். தாய்லாந்து அரச குடும்பத்தின் உறவினர், தாய்லாந்து இளவரசிக்கு இணையான Mom Luang Rajadarasri Jayankura விமானநிலையத்துக்கே வந்து ரஜினி சாரை வரவேற்றார். புத்தரைப் பற்றிய புத்தகங்கள், நினைவுப் பொக்கிஷங்களை எல்லாம் கொடுத்தவர், ஹோட்டலுக்கும் வந்து எங்களையெல்லாம் சந்தித்து வாழ்த்திவிட்டுப்போனார். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் தன்னுடைய பரிவாரங்களோடு வந்து ‘எங்களுக்கு ஷூட்டிங்கில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை’ என உறுதி செய்துகொண்டு போனார்.
‘`தாய்லாந்துல ரெண்டு நாள்தான் சார் ஷூட்டிங். இங்கேயாவது என் ஆசைக்காக பெரிய ரூம்ல தங்குங்க சார்’’ என்றேன். ‘`எனக்கு ரொம்பச் சின்ன ரூம் போதும் தாணு சார்… புரிஞ்சிக்கோங்க’’ என அங்கேயும் கீழே லாபியில் வந்து உட்கார்ந்துவிட்டார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ரஜினி சார்போல் தயாரிப்பாளர் மேல் அக்கறை கொண்ட நடிகர்களும், டெக்னீஷியன்களும் இருந்துவிட்டால் தமிழ்த்திரையுலகில் நிறைய புதுப்புதுத் தயாரிப்பாளர்கள் வருவார்கள்.


‘`நெருப்புடா… நெருங்குடா’’ பாடல் ஷூட்டிங் நடக்கும்போது ரஜினி சாருக்கு 102 டிகிரி காய்ச்சல். டாக்டர் நடிக்கக்கூடாது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகக்கூடாது என அட்வைஸ் செய்கிறார். நான் சென்னையில் இருக்கிறேன். ரஜினி சாரின் இரண்டு மகள்களும் என்னிடம் பதறிப்போய் போனில் பேசுகிறார்கள். ‘`அப்பாவுக்கு ஃபீவர் அங்கிள்… இன்னும் அதிகமாகிடக்கூடாது... பத்திரமா பார்த்துக்கச் சொல்லுங்க… பத்திரமா பார்த்துக்கச் சொல்லுங்க’’ என்கிறார்கள். லதா மேடமும் பேசினார். உடனடியாக என் மகனையும், இயக்குநர் இரஞ்சித்தையும் போனில் அழைத்து ஷூட்டிங்கை கேன்சல் செய்து, பேக்அப் செய்யச் சொல்கிறேன். இயக்குநர் இரஞ்சித் ரஜினி சாரிடம் போய் ‘`சார் உங்களுக்கு ஜுரமா இருக்கு. தாணு சார் உடனே பேக்அப் பண்ணிக்கச் சொல்லியிருக்கார். உங்க உடம்பு சரியான பிறகு திரும்ப வந்து எடுத்துக்கலாம் சார்’’ என்று சொல்லியிருக்கிறார். ‘`நோ… நோ... இன்னும் ரெண்டு மூணு நாள்தானே ஷூட். முடிச்சிட்டே போலாம். மெட்ராஸ்ல இருக்குறவங்களுக்கு யார் இந்தத் தகவல் எல்லாம் சொன்னது’’ என்று சொல்லி டாக்டரை அழைத்து, ‘`ஏன் சார் எனக்கு ஜுரம்னு வெளியே சொன்னீங்க?’’ என வருத்தப்பட்டிருக்கிறார். ‘`நான் முடிச்சிக் கொடுத்துட்டுத்தான் போவேன்’’ என்று சொல்லி மாத்திரை மருந்துகளை உட்கொண்டு ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் சென்னை வந்தார்.
‘கபாலி’ படத்தின் கடைசிக்கட்ட ஷூட்டிங், ரஜினி சார் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது, ‘கபாலி-2’ எடுக்க என்னிடம் ரைட்ஸ் கேட்டது, தனுஷின் மகன் துடுக்காக ‘`தாத்தாவை வெச்சுப் படம் பண்ணிட்டீங்க… அப்பாவை வெச்சு எப்ப பண்ணப் போறீங்க’’ என உரிமையோடு கேட்டு தனுஷோடு இணைந்து நான்கு படங்கள் தொடர்ந்து பயணிக்கக் காரணமாக இருந்தது… அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!
- வெளியிடுவோம்