
- கலைப்புலி எஸ்.தாணு
‘கபாலி’ இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்கிற கனவில் இருந்தேன். ஆனால், ரஜினி சார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. பட ரிலீஸின்போதும் அவர் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். அதனால் அமெரிக்க விநியோகஸ்தரிடம் சொல்லி, ரிலீஸுக்கு முன்பாக பிரத்யேகமாக ரஜினி அங்கே படம் பார்க்க ஏற்பாடு செய்தோம்.
‘கபாலி’ படத்துக்குப் பிறகு ஒரு நாள் ரஜினி என்னை அழைத்தார். ‘`தாணு, நான் தனுஷுக்கு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். பா.இரஞ்சித்தான் இயக்குநர். ‘கபாலி-2’ எடுக்கலாம்னு பிளான். அதனால நீங்க ‘கபாலி’ டைட்டில் கொடுத்தா நல்லாருக்கும்’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ‘`கொடுத்துட்டேன் சார்’’ என்றேன். சந்தோஷப்பட்டவர், ‘`தனுஷ் உங்ககிட்ட பேசுவார்’’ என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனுஷிடமிருந்து போன். ‘`சார், உங்களைப் பார்க்க வரேன்’’ என்றார். ‘`இல்ல தம்பி… நானே வரேன்’’ என்று சொல்லி, ‘கபாலி’ டைட்டிலைப் பயன்படுத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கையெழுத்து போட்ட கடிதத்தையும் எடுத்துக்கொண்டு தனுஷ் வீட்டுக்குப் போனேன்.

‘`இந்தப்படம் ரொம்ப நல்லா வரும். வாழ்த்துகள் தம்பி’’ எனச் சொல்லிவிட்டு, கீழே இறங்க லிஃப்ட் அருகே வந்தேன். அப்போது ‘`நாம எப்ப சார் படம் பண்ணுவோம்?’’ எனப் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. லிஃப்ட்டை நிறுத்திவிட்டு அப்படியே திரும்பி அவர் வீட்டுக்குள் வந்துவிட்டேன். ‘`இன்னொரு காபி கொடுப்பா’’ என்றேன். ‘`தம்பி, ‘கபாலி’ பண்ணிட்டிருந்த நேரம், பொங்கலுக்கு ரஜினி சாரைப் பார்க்க போயஸ் கார்டன் போயிருந்தேன். ரஜினி சார் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அந்த நேரம் உங்க மகன் லிங்கா பட்டு வேட்டி, பட்டு சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு என் முன்னாடி வந்து உட்கார்ந்தார். ரொம்ப சுட்டியா, ‘தாத்தாவோட படம் பண்ணிட்டீங்க… எப்ப எங்க அப்பாவோட படம் பண்ணப்போறீங்க’ன்னு இதே கேள்வியைக் கேட்டார். ‘உங்க அப்பாகிட்ட போய் சொல்லுப்பா… நான் ரெடி’ன்னு சொன்னேன். அப்ப ரஜினி சாரும் வந்துட்டார். இந்த விஷயத்தை அவரிடம் சொன்னதும், ‘அப்படியா கேட்டாரு… அப்படியா கேட்டாரு’ என ஆச்சரியப்பட்டார். உங்க மகன்கிட்ட சொன்ன அதே பதில்தான் தம்பி… நான் ரெடி. எப்ப வேணா பண்ணலாம்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ரஜினி சாரின் மகள் செளந்தர்யா ஒரு படம் பண்ணுவதற்காக என்னிடம் ஏற்கெனவே ஒரு கதை சொல்லியிருந்தார். பிரமாதமான கதை. புதுமுகங்களை வைத்து எடுப்பதாக இருந்தது. இந்த நேரம்தான் தனுஷுடனான இந்தச் சந்திப்பும் நிகழ்ந்தது.
செளந்தர்யாவிடம், ‘`தனுஷை வெச்சு கதை பண்ணலாமா?’’ என்றேன். அப்போது தொடங்கியதுதான் ‘வேலையில்லா பட்டதாரி-2.’ இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க விரும்பினேன். செளந்தர்யா, ‘`அங்கிள், கஜோல் நடிச்சா நல்லாருக்கும்’’ எனச் சொல்ல, கஜோல் மூலமாக படம் இந்திக்கும் போகும் என்பதால் உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

கதைப்படி கஜோல் வில்லி. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் கஜோல் பழகிய விதம் செளந்தர்யாவைக் கவர்ந்துவிட்டது. அதனால் க்ளைமாக்ஸைக் கொஞ்சம் மாற்றி கஜோலை நல்லவராகக் காட்டியிருப்பார்கள். இதனால் படத்தின் இயல்பும் கொஞ்சம் மாறிவிட்டது. படத்துக்கான விமர்சனங்களும் கலவையாக வந்தன.
‘விஐபி-2’ படத்தின்போதே தனுஷ் என்னிடம், ‘`அடுத்து நாம இயக்குநர் வெற்றிமாறனோடு ஒரு படம் பண்ணலாம் சார்’’ என்றார். வெற்றிமாறனைச் சந்தித்துப் பேசி அட்வான்ஸும் கொடுத்துவிட்டேன். ஆனால், ‘வடசென்னை’ ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போக, தனுஷும் அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸுக்குள் போக, நாங்கள் திட்டமிட்ட படம் தள்ளிப்போனது. வெற்றிமாறன் என்னை வந்து சந்தித்து, ‘`சொன்ன தேதியில் படம் பண்றேன்னு அட்வான்ஸ் வாங்கினேன். அது தள்ளிப்போயிடுச்சு. இன்னும் தள்ளிப்போனா சங்கடமாகிடும். நீங்க கொடுத்த பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்துடுறேன் சார்’’ என்கிறார். ``நீ நம்ம வீட்டுப் பிள்ளை தம்பி. நாம நிச்சயம் படம் பண்றோம். ஒண்ணும் அவசரம் இல்லை. எனக்கு இதுல எந்த சங்கடமும் இல்லை’’ எனச் சொல்லி அனுப்பினேன்.
இதற்கிடையே என் இரண்டாவது அண்ணன் மகன்கள் இருவரும் என்னிடம் வந்து ‘`நடிகர் விக்ரமின் டேட்ஸ் இருக்கிறது… நாங்கள் படம் பண்ணப் போகிறோம்’’ என்றார்கள். அவர்களுக்கு சினிமாவில் பெரிய அனுபவம் இல்லை. ஒரு ஆர்வத்தில் இறங்கிவிட்டார்கள். விக்ரமும் டேட் கொடுத்துவிட்டார். இதற்கு முன்பு ‘சிங்கம் புலி’ என ஒரு படம் எடுத்து அதில் பிரச்னையைச் சந்தித்திருந்தார்கள். அந்தப் படத்தை ஆர்.பி செளத்ரியிடம் சொல்லி ரிலீஸ் செய்ய வைத்தேன். அதற்கு ஆர்.பி.செளத்ரியிடம் என்ன சொல்லியிருந்தேனோ அதையெல்லாம் செய்துவிட்டேன்.
விக்ரமை வைத்து ஆரம்பித்த படத்தின் பெயர் ‘கரிகாலன்.’ விக்ரம் படத்துக்காக நடித்தது ஒரே ஒரு நாள்தான். ஆனால், அவர் போர்ஷன் இல்லாமலேயே படத்தின் 30 சதவிகித ஷூட்டிங்கை முடித்துவிட்டார்கள். இந்தச் சூழலில் இயக்குநருக்கும், தயாரிப்பு டீமுக்கும் பிரச்னையாகி, படம் நின்றுபோனது. விக்ரம் ‘`நீங்கள் வேறு படம் பண்ண டேட் தருகிறேன்’’ எனச் சொல்ல, அப்போது ஆரம்பித்ததுதான் ‘ஸ்கெட்ச்.’ விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கினார்.

ஆனால், படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைக்கவில்லை. என் அண்ணன் என்னிடம் வந்து பேசினார். ‘`இந்த ஒருமுறை நீ உதவி பண்ணுடா… இனிமேல் பசங்க சரியாகிடுவாங்க’’ என்றார். நானும் எமோஷனலாகி ஃபர்ஸ்ட் காப்பி போல படத்துக்குப் பணம் தந்தேன். ஆனால், படத்தின் செலவுக்காகக் கொடுத்த பணத்தை அண்ணன் மகன்கள் வேறு விஷயங்களுக்குச் செலவு செய்தது, படம் முடிந்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. படத்தின் க்ளைமாக்ஸிலும் எனக்கு உடன்பாடில்லை.
படத்தை 2018 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவேண்டும் என்றார்கள். சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் பொங்கலுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ‘`ரெண்டு படமும் ரிலீஸானா கூட்டம் பிரியும். வருமானம் பாதிக்கும். ஜனவரி 25-ல் ரிலீஸ் பண்ணலாம்’’ என்றேன். ஆனால், ‘`விக்ரம் சார், ‘ஆறு நாள் லீவ் வருது… இந்த டேட்டை விட்றாதீங்க’ என்கிறார்’’ என்றார்கள். ‘நான் சொன்ன தேதியில் ரிலீஸ் பண்ணி படம் சரியாகப் போகவில்லை என்றால் என்னைத்தான் காரணமாகச் சொல்வார்கள்’ என நானும் விருப்பம் இல்லாமலேயே ஓகே சொல்லிவிட்டேன்.
அண்ணன் மகன்களுக்கு ஏற்கெனவே இருந்த கடன் 10 கோடியை அடைத்து, படத்தை ரிலீஸ் செய்தேன். ‘ஸ்கெட்ச்’ படத்தால் எனக்கு 10 கோடி இழப்பு. ஒரு தொழிலில் இறங்கும் முன் அதில் அனுபவமும், அந்தத் தொழில் மேல் பக்தியும் வேண்டும். அது இல்லையென்றால் அத்தொழிலில் நீடிக்க முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணம்.
‘அன்னக்கிளி’ செல்வராஜ் எனக்கு நல்ல நண்பர். அடிக்கடி சந்திப்பார். கதைகள் சொல்வார். நக்ஸலைட்கள் பற்றி அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் படமாகப் பண்ண விரும்பினேன். செல்வராஜிடம் ‘`கதை ரொம்ப நல்லாருக்கு. உங்க மகன் தினேஷை டைரக்ட் பண்ணச் சொல்லுங்க’’ என்றேன். தினேஷ், மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்கிற படமும் எடுத்திருந்தார். தினேஷின் அணுகுமுறையும், பழகும்விதமும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். செல்வராஜ் சொன்னபடி தினேஷ் என்னை வந்து சந்தித்தார்.
‘`சார்… நான் ஒரு கதை சொல்றேன். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கலைன்னா அப்பா சொன்ன கதையையே படமா எடுக்கிறேன்’’ என்றார். அவருடைய தன்னம்பிக்கை, அவர் பேசியவிதம் எனக்குப் பிடித்துப்போய், ‘`சரி தம்பி, கதை சொல்’’ என்றேன். அதுதான் ‘துப்பாக்கி முனை.’ விஜயகாந்த்தை வைத்து நான் இயக்கி, இசையமைத்த ‘புதுப்பாடகன்’ படத்தில் எனக்கு ஆர்க்கெட்ஸ்ட்ரேஷனில் உதவியவர் இசை மேதை எல்.வைத்யநாதன். அவர்மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரின் மகன்கள் கணேஷ் மற்றும் முத்துவைத்தான் ‘துப்பாக்கி முனை’ படத்துக்கு இசையமைக்க வைத்தேன்.

பிரகாஷ் ராஜின் மேலாளர் கஃபார் சிறந்த தயாரிப்பாளர். அவர்தான் ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தேவின் டேட்ஸை எனக்கு வாங்கிக் கொடுத்தவர். அவர் ஒரு நாள் வந்து, ‘`பிரகாஷ் ராஜுக்கு ஃபர்ஸ்ட் காப்பில ஒரு படம் பண்ணிக் கொடுங்க. இந்தச் சூழல்ல அவருக்கு ஒரு படம் தேவைப்படுது’’ என்றார். கன்னடத்தில் வெளியான ‘Godhi Banna Sadharana Mykattu’ என்கிற படத்தை ரீமேக் செய்வதுதான் திட்டம்.
‘மொழி’ படம் பார்த்ததில் இருந்தே ராதாமோகனோடு ஒரு படம் பண்ணவேண்டும் என எனக்கு ஆசை. இந்தப் படத்தையும் அவர்தான் இயக்கப்போகிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன். பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி நடிக்க ‘60 வயது மாநிறம்’ படம் எடுத்தோம். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படை என்பதால் ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது, கதையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இறுதியில் பார்த்தால் கதையையே மாற்றிவிட்டிருந்தார்கள். பிரகாஷ் ராஜின் ஃபார்ம் ஹவுஸில் வைத்தே முழுப் படத்தையும் எடுத்து முடித்ததும் எனக்கே பெரிய ஷாக்தான்.
நான் ஏற்கெனவே இந்தத் தொடரில் சொன்னதுபோல ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை முதலில் நாங்கள் தயாரிப்பதாக இருந்துதான் பின்னர் அது மாறியது. அதனால் அந்தப் படத்தின் இயக்குநர் கிருஷ்ணாவோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகரும் கிருஷ்ணாவும் ஒருமுறை தெலுங்கில் படம் பண்ண ஒரு கதை சொன்னார்கள். கிருஷ்ணா கதை சொல்லச் சொல்ல அவ்வளவு மகிழ்ந்து சிரித்தேன். ‘`கதை பிடிச்சிருக்கு... பண்ணலாம்’’ எனச் சொல்லிவிட்டேன். கார்த்திகேயா எனத் தெலுங்கில் வளர்ந்துவரும் ஹீரோவை வைத்துப் பண்ணலாம் என்று சொன்னார்கள். படத்தின் பெயர் ‘ஹிப்பி.’ ஆனால், படத்தை சொன்னபடி எடுக்காததோடு, ஆபாசப் படம் போல எடுத்துவிட்டார்கள். வசனம், காட்சிகள் என அனைத்திலும் ஆபாசம். ‘`உங்களை நம்பிப் பயணித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்’’ எனச் சொல்லி அவர்களிடம் வருத்தப்பட்டேன். என் தயாரிப்புப் பயணத்தில் ‘ஸ்கெட்ச்’, ‘60 வயது மாநிறம்’, ‘ஹிப்பி’ மூன்று படங்களுமே எனக்கு நல்ல பாடம்.
இந்தப் படம் முடிந்ததும் தனுஷ் - வெற்றிமாறன் படத்தைத் தொடங்குவதற்கான நேரம் வந்தது. ‘அசுரன்’ பட ஷூட்டிங் அனுபவம், ரிலீஸ் டேட்டை இறுதிசெய்துவிட்டு அதற்கேற்றபடி பணிகள் செய்ததில் ஏற்பட்ட சங்கடங்கள்… அடுத்த வாரம் சொல்கிறேன்.
வெளியிடுவோம்