
- கலைப்புலி எஸ்.தாணு
என்னுடைய 40 ஆண்டுக்கால சினிமா அனுபவத்தில் இயக்குநர் வெற்றிமாறன் எனக்குக் கிடைத்த வாழ்நாள் பொக்கிஷம். படம் முடிந்தால் போதும், ரிலீஸ் ஆனால் போதும் என நினைப்பவர்கள் மத்தியில், ஒரு படம் முழுமையாக மிகச்சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதில் வெற்றிமாறன் காட்டும் அக்கறையும் மெனக்கெடலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். போஸ்ட் புரொடக்ஷனில் வெற்றிமாறன் அளவுக்கு அவ்வளவு நுணுக்கமாக கவனம் செலுத்தும் இயக்குநர்கள் மிகச்சிலரே.
‘விஐபி-2' ஷூட்டிங்கின்போது தம்பி தனுஷ் என்னை அழைத்து ‘`அடுத்து இயக்குநர் வெற்றிமாறனோடு படம் பண்ணலாம்’’ என்று சொன்னபோதே எனக்கு அளவில்லா சந்தோஷம். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ என ஏற்கெனவே அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய படங்கள் சூப்பர் ஹிட். அடுத்து அவர்கள் அப்போது ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்டிருந்த ‘வடசென்னை’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அடுத்து ‘அசுரன்' படத்தின் கதையும் களமும் என்னை வியக்கவைத்தது. இளைஞர், முதியவர் என தனுஷுக்கு இரண்டு ரோல், ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன், சமூகக் கருத்துகள் என வெற்றிமாறன் திரைக்கதை அமைத்திருந்த விதத்தைக் கேட்டபோதே எனக்கு வெற்றி கைகூடிவிட்ட எண்ணம் வந்துவிட்டது.
தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர் நடித்தால் நன்றாக இருக்கும் என டீமில் முடிவெடுத்து அவரிடம் பேசினோம். மஞ்சு வாரியர் சென்னை வந்து இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்துக் கதை கேட்டவுடன், மிகவும் பிடித்துப்போய் உடனே ஒப்புக்கொண்டார். சம்பளம் பேசி அவர் கேட்ட சம்பளத்தில் பாதித் தொகையையும் கொடுத்துவிட்டோம். படம் நல்லபடியாக ஷூட்டிங் போகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வரும் தகவல்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. ஷூட்டிங் முடிந்து வரும் டெக்னீஷியன்கள், நடிகர்கள் என எல்லோருமே படத்தைப் பற்றியும், ஹீரோ தனுஷின் அர்ப்பணிப்புள்ள நடிப்பு பற்றியும், வெற்றிமாறனின் இயக்கம் பற்றியும் அவ்வளவு சிலாகித்துச் சொல்கிறார்கள். என்னுடைய பூரிப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.
மஞ்சு வாரியரின் போர்ஷன் ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், மீதிச் சம்பளம் பற்றிப் பேசும்போது ‘`இப்ப வேணாம்… நான் எப்ப சொல்றேனோ அப்ப கொடுங்க'’ எனச் சிரித்தபடியே மீதிச் சம்பளத்தை இரண்டு, மூன்று முறை வாங்காமல் தவிர்க்கிறார். இந்தச் சம்பவம் நடக்கும்போது எனக்கு ஐஸ்வர்யா ராய் ஞாபகம்தான் வந்தது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்துக்கு சம்பளம் பேசி முக்கால்வாசிப் பணம் கொடுத்துவிட்டோம். மீதி 11 லட்சம் ரூபாய் அவருக்குத் தரவேண்டும். ஆனால், ‘`இப்போது வேண்டாம், இப்போது வேண்டாம்’’ என்று சொல்லித் தவிர்த்துக்கொண்டே இருந்தார் ஐஸ்வர்யா. படம் ரிலீஸான பிறகும் அவர் மீதிச் சம்பளத்தை வாங்கவில்லை. பின்னர் நான் இயக்குநர் ராஜீவ் மேனனை அழைத்துக்கொண்டு மும்பை போய் அந்த 11 லட்சம் ரூபாய் டிடி-யைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஐஸ்வர்யா ராயைப் போலவே மஞ்சு வாரியரும் செய்கிறாரே என்று எனக்கு அப்போது தோன்றியது. இறுதியாக ‘அசுரன்’ பாடல் வெளியீட்டு விழாவின்போது மேடையில் வைத்தே மீதிச் சம்பளமான 27 லட்சத்துக்கான வரைவோலை கொடுத்தேன். அங்கேதான் சம்பளத்தை வாங்கினார் மஞ்சு வாரியர். இதை ஏன் சொல்கிறேன் என்றால், படம் தொடங்குவதற்கு முன்பாக நடிகர்கள் ஒரு சம்பளம் பேசுவார்கள். ஆனால், படத்தை எடுக்கும்போது இயக்குநர், தயாரிப்பு டீமின் செயல்பாடுகளைப் பார்த்து, வாங்கிய சம்பளமே போதும் என முடிவெடுக்கிறார்கள். அப்படி ஓர் எண்ணத்தைச் சில நடிகர்/நடிகைகள் மனதில் எழ வைத்த இயக்குநர்களுக்கும், என்னுடைய தயாரிப்பு நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

‘அசுரன்’ படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடப்பதைக் கேள்விப்பட்டபடியே இருந்த நேரத்தில், அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி சரஸ்வதி பூஜை, விஜயதசமி எனத் தொடர்ந்து ஆறு நாள்கள் விடுமுறை தினமாக வருவது நினைவுக்கு வருகிறது. ‘இந்த நாள்களில் படத்தை ரிலீஸ் செய்தால் கலெக்ஷன் மிகப்பிரமாதமாக இருக்கும். தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் என எல்லோருமே சந்தோஷப்படுவார்களே’ என மனதுக்குள் பல கணக்குகளைப் போட்டபடியே முதல்முறையாக ‘அசுரன்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரில் போகிறேன்.
முதலில் தனுஷைச் சந்திக்கும் வாய்ப்பு அமைய, ‘`அக்டோபர் 4 ரிலீஸ் வெச்சா நல்லாருக்கும் தம்பி'’ என்கிறேன் அவரிடம். ‘`சார், இது பத்தி நீங்க டைரக்டர்கிட்டதான் கேட்கணும்'’ என்கிறார். அடுத்து வெற்றிமாறனிடம் ‘`தம்பி, அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி ஆறு நாள் தொடர்ந்து லீவ் வருது. இப்படி ஒரு டேட் அமையறது அபூர்வம். இந்த லீவ்ல படத்தை ரிலீஸ் பண்ணுனோம்னா படம் மிகப்பெரிய வெற்றிப்படமா இருக்கும். ஹவுஸ்ஃபுல் ஷோவா படம் போகும்’’ என்றேன். அவர் ‘`சார், நான் இப்படி ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டு வொர்க் பண்ணுனதேயில்ல. போஸ்ட் புரொடக்ஷனுக்குன்னு எனக்குத் தனி டைம் வேணும்’’ என்கிறார். நான் தொடர்ந்து பேசி சமாதானம் செய்கிறேன். ‘`இந்தத் தேதியை விட்டுற வேண்டாம்'’ என்கிறேன். நீண்ட யோசனைக்குப்பிறகு ‘`சரி சார், நான் பண்றேன். நீங்க ரிலீஸ் டேட்டை அனௌன்ஸ் பண்ணிடுங்க. ஆனா, அடுத்து நாம பண்ற ‘வாடிவாசல்' படத்துக்கு நீங்க என் விருப்பப்படிதான் ரிலீஸை வைக்கணும்'’ என்கிறார். ‘`நிச்சயமா தம்பி… ‘வாடிவாசல்' படத்தைப் பொறுத்தவரைக்கும் ஷூட்டிங்ல இருந்து ரிலீஸ் வரைக்கும் நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படிதான் செய்வேன்’’ என்று உறுதி அளித்துவிட்டு ‘அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டேன்.


அலைச்சல் இருக்கக்கூடாது என்பதற்காக படத்துக்கான டப்பிங், மிக்ஸிங், கலரிங், எடிட்டிங் என எல்லா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் ஒரே இடத்தில் வைத்தேன். இயக்குநர் வெற்றிமாறன் வீட்டுக்குப் போய் வருவதில் இரண்டு மணி நேரம் வீணாகிவிடுகிறது என அந்த டப்பிங் ஸ்டூடியோ அருகிலேயே இருந்த ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி, பணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள் நான் அந்த ஸ்டூடியோவுக்குப் போகும்போது இயக்குநர் அங்கே இல்லை. மருத்துவமனைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். போனில் அழைத்தேன். “ஒண்ணும் இல்ல சார். கொஞ்சம் ஜுரமா இருக்கு. பிளட் டெஸ்ட் கொடுத்துட்டு வந்தேன்’’ என்றார். அடுத்த நாள் ஸ்டூடியோவுக்குப் போகிறேன். பெட்டில் படுத்தபடியே எடிட்டிங் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு டெங்கு காய்ச்சல் என்கிற தகவல் அப்போதுதான் எனக்குத் தெரியவருகிறது. ‘`வேணாம் தம்பி… ரிலீஸைத் தள்ளிவெச்சிக்கலாம். உங்க உடம்புதான் முக்கியம். நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க'’ என்கிறேன். “இல்ல சார்… நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். நான் உங்ககிட்ட வாக்குக் கொடுத்துட்டேன். படம் அக்டோபர் 4 ரிலீஸ்னு ரசிகர்கள்கிட்டயும் எதிர்பார்ப்பு உருவாகிடுச்சு. இனிமேல் தள்ளிவெச்சா நல்லாருக்காது. நீங்க கவலைப்படாதீங்க… நான் முடிச்சிக் கொடுத்துடுறேன்'’ என்கிறார். `இயக்குநருக்கு அதிக சிரமம் கொடுத்துவிட்டோமே’ என்கிற யோசனையிலே அங்கிருந்து வெளியே வந்தேன்.
அந்த நேரத்தில் தனுஷ் அடுத்த படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். அதனால் ஸ்கைப் மூலமாக இயக்குநரும், ஹீரோவும் பேசிப் பேசியே டப்பிங்கை முடித்தார்கள். அக்டோபர் 4-ம் தேதி படத்தை ரிலீஸுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்பதில் இயக்குநர் வெற்றிமாறன் முழுமூச்சோடு இருந்து முடித்துக் கொடுத்தார்.
படம் சென்சாருக்குத் தயாராகிவிட்டது. அந்த நேரத்தில் புரொடக்ஷனில் இருந்து எனக்கு போன் செய்து ‘`சார், டைட்டில்ல டைரக்டர் பேர் இல்ல'’ என்கிறார்கள். அதிர்ந்துபோய் உடனே இயக்குநரைச் சந்திக்கக் கிளம்பிப் போனேன். ‘`தம்பி, நான் உங்களை ரொம்பவே வருத்தப்பட வெச்சிட்டேன். உங்களுக்கு ரொம்ப பிரஷர் கொடுத்துட்டேன். அந்த நாள்ல தொடர்ந்து லீவ் வர்றதால ஜனங்க தியேட்டருக்கு வருவாங்கன்னுதான் நம்பி அந்தத் தேதியைச் சொன்னேன். என்னோட இவ்வளவு நாள் தயாரிப்பு அனுபவத்துல, டைரக்டர் பேர் இல்லாம ஒரு படத்தை நான் கனவுலகூட நினைச்சுப் பார்த்ததில்ல. படம் ரொம்ப நல்லாருக்கு தம்பி. எந்த மிஸ்டேக்கும் எனக்குத் தெரியல. ஜனங்க கொண்டாடுவாங்க'’ என்று அவரிடம் கண்கள் பனிக்கப் பேசுகிறேன். ‘`சார், மத்த யாருக்கும் தெரியலைன்னாலும் எனக்குத் தெரியுது சார். என் மனசாட்சிக்குத் தெரியும் சார். நான் இப்படி ஒரு அவசரத்துல எந்தப் படத்துக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பண்ணுனதில்ல. அதனாலதான் என் பேரைப் போட வேண்டாம்னு சொன்னேன்'’ என்றார்.
‘`தம்பி, என் கண்ணுக்கு எதுவும் தெரியல. மத்தவங்களுக்கும் எதுவும் தெரியல. படம் பிரமாதமா இருக்கு. மக்கள் கொண்டாடுவாங்க. வசூலும் நல்லாருக்கும், விருதும் கிடைக்கும் தம்பி. எனக்காக உங்க பேர் போடுங்க. உங்க பேர் இல்லாம படத்தை நான் எப்படி ரிலீஸ் பண்ணுவேன்?'’ என்று கலங்கியபடியே மன்னிப்புக் கோருகிறேன். ‘`சார், பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சார்’’ என்கிறார். ‘`உங்க பேர் போட்டுத்தான் படத்தை ரிலீஸ் பண்ணுவேன் தம்பி. உங்க குடும்பத்துல ஒருத்தரா கேட்கிறேன்... நீங்க மறுக்கக்கூடாது'’ என அங்கிருந்தபடியே எடிட்டில் இருத்தவர்களிடம் சொல்லி டைட்டிலில் இயக்குநரின் பெயரைச் சேர்க்கச் சொன்னேன்.
படம் திட்டமிட்டபடி அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸ் ஆனது. ‘அசுரன்' படத்தை மக்களும் விமர்சகர்களும் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். படம் மிகப்பெரிய வெற்றி. எதிர்பார்த்தபடியே ‘அசுரன்' வசூல் சாதனைகளை உடைக்கிறது. நடிகர் தனுஷின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘அசுரன்’ அமைந்தது. ஆனந்த விகடன் விருது தொடங்கி பல விருதுகள் வரிசை கட்டி வந்தன. நடிகர் தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், எனக்குச் சிறந்த தயாரிப்புக்கான தேசிய விருதும் கிடைத்தது. என்னுடைய தயாரிப்பு அனுபவத்திலும் ‘அசுரன்' மிக மிக முக்கியமான படமாக அமைந்தது.

தம்பி தனுஷும் நானும் ஏற்கெனவே மூன்று படங்கள் தொடர்ந்து பயணிப்பது என முடிவெடுத்திருந்தோம். அதன்படி ‘அசுரன்' முடிந்ததும் ‘கர்ணன்' தொடங்கியது. முதல் படமாக ‘பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிப் பெரிய வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் குவித்திருந்த மாரி செல்வராஜ் இயக்குநரானார். ‘கர்ணன்' படத்தின்போது சந்தித்த சவால்கள், ரிலீஸின்போது ஏற்பட்ட சிக்கல்கள், நான் ஏற்கெனவே சொல்லாமல் தவிர்த்த சில சம்பவங்கள்… அடுத்த வாரம் நிறைவு செய்கிறேன்!
- வெளியிடுவோம்