
- கலைப்புலி எஸ்.தாணு
திரைப்படத் தயாரிப்பு என்பது மிக மிகச் சவாலானது. நீடித்த பொறுமையும், எல்லாவற்றையும் தாங்கும் மனவலிமையும், தவறுகளைத் திருத்திக் கொள்ளும் பக்குவமும் இருந்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே பல முனைகளில் இருந்தும் சவால்கள் வரும். திடீர் நெருக்கடிகள் சூழும். நாம் போடும் கணக்குகள் தவறாகும். எதற்கும் பதற்றப்படாமல் பொறுமையும் தெளிவுமாக இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சில நேரங்களில் வெற்றி தாமதமாகும். ஆனால், ஒருபோதும் நம் வெற்றியை யாராலும் பறித்துவிட முடியாது.
முன்பே சொன்னது போல், தம்பி தனுஷுடன் மூன்று படங்கள் தொடர்ந்து பயணிப்பது என முடிவெடுத்தபடி ‘அசுரன்' படம் தயாரிப்பில் இருக்கும் போதே ஒரு நாள் என்னை அழைத்தார். ‘`சார், ‘பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ் கிட்ட ஒரு கதை கேட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. அதைப் படமா பண்ணலாம். நீங்களும் கதை கேட்ருங்க’’ என்றார்.

மாரி செல்வராஜ் வந்து முதலில் பவுண்டட் ஸ்கிரிப்ட் புக்கைக் கொடுத்துவிட்டுக் கதை சொன்னார். கதை சொல்ல ஆரம்பித்ததுமே நான் கதையோடு பயணிக்க ஆரம்பித்து விட்டேன். இறுதியில் ‘கர்ணன்' மடிவதுபோல் பூடகமாக முடித்தார். ‘`தம்பி, நல்ல கதையில் இது வேண்டாம் தம்பி. ஊருக்காகப் பாடுபட்ட ‘கர்ணன்' கடைசியில ஜெயிச்சு நல்லா வாழணும். வீழக்கூடாது. அவன் வாழ்ந்தாதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும்’’ என்றேன். ‘`இதையேதான் ஹீரோவும் சொன்னார் சார். ஃபைனலா பார்த்துக்கலாம்'’ என்றார். ‘`இல்ல தம்பி... இப்பவே ஃபிக்ஸ் பண்ணிக்கோ… கர்ணன் வாழணும்’’ என்றேன்.
‘கர்ணன்' படம் எடுக்கும்போதே தம்பி தனுஷுடன் என்னுடைய மூன்றாவது படமான செல்வராகவன் இயக்கும் படத்தையும் ஆரம்பிக்க முடிவெடுத்தோம். ‘`சார், காலையில இருந்து 6 மணி வரைக்கும் ‘கர்ணன்' ஷூட், சாயங்காலம் 6 மணில இருந்து நைட் 2 மணி வரைக்கும் செல்வா சார் பட ஷூட்டிங் பண்ணிடலாம்'’ என்றார் தனுஷ். இப்படி அயராமல் உழைக்கத் தயாராக இருக்கிறாரே என்றாலும், எனக்கு தனுஷின் உடல்நிலையை மனதில் கொள்ளும்போது சங்கடமாக இருந்தது. அதனால், ‘`நைட் அண்ட் டே ஷூட் பண்ணுனா ஹெல்த் பாதிக்கும். சரியாத் தூங்கலைன்றது முகத்துல தெரியும் தம்பி. செல்வாவோடு 10 வருஷம் கழிச்சு, திரும்ப படம் பண்றீங்க. அதனால ‘கர்ணன்' முடிச்சதும் அதைப் பண்ணிடலாம்’’ என்றேன். அவரும் சரி என்று சொல்ல, ‘கர்ணன்' வேலைகளை முழுவீச்சில் தொடங்கினோம்.
இந்தப் படத்துக்காக ஒரு ஊரையே செட்டாகப் போட முடிவு செய்தோம். 25 ஏக்கர் நிலத்தைச் சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்து மொத்தப் பணத்தையும் கொடுத்து செட் போட்டோம். ஆனால், செட் போடும்போதே மழை, வெள்ளம் எனப் பல பிரச்னைகள். எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து செட் போட்டு முடித்து, படத்தை எடுக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த போதே உள்ளூரில் சின்னச் சின்னத் தகராறுகள் வந்தன. அவற்றைச் சரிசெய்து படத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது கொரோனா லாக்டெளன் வந்துவிட்டது.

லாக்டெளன் முடியும்போது நாங்கள் செட் போட்டிருந்த இடத்துக்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. அவர்கள் திரும்ப இடம் கொடுக்கத் தயங்கினார்கள். போலீஸும் சில பிரச்னைகளை மனதில் வைத்து அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்காமல் அமைதி காத்தது. அதனால், அதேபோல சென்னைப் பூந்தமல்லியில் உள்ள ஈவிபி-யில் மீண்டும் செட் போட்டுப் படத்தை எடுத்தோம். க்ளைமாக்ஸ் காட்சியை ஊருக்குப் போய் எடுத்தால்தான் சரியாக இருக்கும் என இயக்குநர் சொன்னதால், அதை மட்டும் மீண்டும் அங்கே போய் எடுத்தோம். தம்பி தனுஷ் எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொண்டு மிகச்சிறப்பாக நடித்துக்கொடுத்தார்.
ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்தன. தனுஷ் ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா செல்லவேண்டி யிருந்தது. ஒரே நாளில் டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்து ‘தட்டான் தட்டான்' பாடலையும் பாடிக்கொடுத்து, படத்துக்கான டப்பிங்கையும் பிரேக் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த உழைப்பு என்னை பிரமிக்க வைத்துவிட்டது. கலை இயக்கம் மட்டு மல்லாமல் இசை, எடிட்டிங் என அத்தனை விஷயங்களிலும் அவ்வளவு ஈடுபாட்டுடன் உழைத்தார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து படம் பார்த்தேன். படம் முடியும்போது இயல்பாகவே என் கண்கள் பனித்தன. இயக்குநரை ஆரத் தழுவிக் கொண்டேன்.
‘கர்ணன்' படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யவேண்டும் என முன்பே முடிவெடுத்துவிட்டேன். அதன்படி படம் ஏப்ரல் 9 திரையரங்குகளில் ரிலீஸ் என அறிவிப்பும் கொடுத்துவிட்டேன். ஆனால், கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்குவதாகச் செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. `எந்த நேரம் வேண்டுமானாலும் லாக்டெளன் வரலாம், தியேட்டர்கள் மூடப்படலாம்' என்றார்கள். ஆனால், என்ன வந்தாலும், சொன்னபடி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்த நேரத்தில் பட ரிலீஸுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 8-ம் தேதி தமிழக அரசின் லாக்டெளன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப் படுகின்றன. ஏப்ரல் 10 முதல் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்கிறார்கள். நலம் விரும்பிகள் பலரும் போன் செய்து, ‘`படத்தை இந்த நேரத்துல ரிலீஸ் பண்ணாத. பிரச்னைல மாட்டிப்ப’’ என்றார்கள். ஆனால், நான் ‘`மக்களுக்கு ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதிலிருந்து பின்வாங்கவேண்டாம். என்ன நடக்கிறதோ நடக்கட்டும்'’ என உறுதியாகச் சொன்னேன்.
ஏப்ரல் 8-ம் தேதியே இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஒரு மிகப்பெரிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் மூலம் அனுப்பினேன். ‘`என்ன சார், என்ன சார்'’ என்றார். ‘`தம்பி, அடுத்து நாம இன்னொரு படம் பண்றோம். அதுக்கான அட்வான்ஸ்’’ என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார். படம் ஏப்ரல் 9 ரிலீஸ் ஆனது. மக்களும் விமர்சகர்களும் படத்தைக் கொண்டாடினார்கள். தியேட்டர்களில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். இரண்டாம் நாளில் இருந்து 50 சதவிகித இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் மக்கள் கூட்டம் குவிந்தது. ஆனால், ஒரு வாரத்துக்குள் நிலைமை தலைகீழாக மாறி கொரோனாப் பரவல் அதிகரித்ததால் தியேட்டர்கள் மூடப் பட்டன. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய ‘கர்ணன்' படத்தின் லாபம் சற்றுக் குறைந்தது. ஆனால், எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. படத்தைப் பல நெருக்கடிகளுக்கு இடையில் ஷூட் செய்தோம், ரிலீஸ் செய்தோம். மக்கள் பார்த்து `சிறந்த படம்' எனக் கொண்டாடிவிட்டார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்!
என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் என்மேல் ஒரு விஷயத்தில் சிலருக்குத் தவறான புரிதல் இருக்கிறது. அதை இந்த இடத்தில் தெளிவுபடுத்தித் தன்னிலை விளக்கம் தர நினைக்கிறேன்.
2003-ம் ஆண்டு… ‘ஆளவந்தான்' படம் ரீலீஸாகி நான் மிகுந்த நஷ்டப்பட்டு மீண்டெழுந்த நேரம். நந்தா நடிக்க, சபாபதி இயக்கத்தில் ‘புன்னகை பூவே’ படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது இசைத்துறையைச் சேர்ந்த ஒருவர் என்னை அவரது இல்லத்துக்கு அழைத்தார். அவரின் மனைவியும் உடன் இருந்தார். ‘`கமல் சாரோட மனைவி சரிகா கொஞ்சம் ஃபினான்ஷியலா கஷ்டப்படுறாங்க. திரும்ப சினிமால நடிக்கணும்னு சொல்றாங்க. நீங்க இப்ப எடுத்துட்டு இருக்கிற படத்தில் ஒரு கேரக்டர் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க அவங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்'’ என இருவருமே சேர்ந்து சொல்கிறார்கள்.
‘`சார், ஏற்கெனவே கமல் சாருக்கும் எனக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது எல்லோருக்குமே தெரியும். இந்த நேரத்துல அவங்க திரும்ப நடிக்க நான் காரணம்னா அது தப்பாகிடும் சார். இண்டஸ்ட்ரில தப்பாப் பேசுவாங்க. எனக்கும் அதுல விருப்பம் இல்ல'’ என்கிறேன். ‘`என்னப்பா இது, எல்லோரும் இப்படியே சொல்றீங்க'’ எனச் சொன்னவர், சிலரின் பெயர்களைச் சொல்லி, ‘`பண்றேன்னு சொல்லிட்டுக் கடைசில பண்ணலைன்னு சொல்லிட்டாங்க. கடைசியாதான் உங்க கிட்ட நீங்க பண்ணுவீங்கன்ற நம்பிக்கைல கேட்குறேன். ஆனா, நீங்களும் இப்படியே சொல்றீங்களே’’ என்றார். ‘`சார்… ஃபினான்ஷியலா நாம உதவி பண்ணலாம்’’ என்கிறேன். ‘`அவங்க வேலை செஞ்சி சம்பாதிக்கணும்னு சொல்றாங்க. அவங்க யார்கிட்டயும் பண உதவி எதிர்பார்க்கல. பொருளாதார உதவின்னா நானே பண்ணிடமாட்டேனா'’ என்கிறார்.
அன்று மாலை மீண்டும் போன் வந்தது. அவரது இல்லத்துக்குப் போனேன். அங்கே சரிகா மேடம் இருந்தார். ‘`என்னுடைய இப்போதை சூழலைச் சரிபண்ணிக்க நான் திரும்ப சினிமாவுக்குள்ள வரணும். எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க'’ என்கிறார். ‘`நீங்க படத்துக்கு காஸ்ட்யூம் பண்ணலாமே’’ என்கிறேன். அப்போது அவர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னார். ‘`ஒரு பெண் டாக்டர் அந்த வேலையிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் வந்தால் அவர் டாக்டராகத்தான் வேலை செய்கிறார். ஒரு வழக்கறிஞர் வேலையை நடுவில் விட்டுவிட்டுத் திரும்பி வந்தால் வழக்கறிஞராகத்தான் வேலையைத் தொடர்கிறார். நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவள். திறமையான நடிகையாக வேண்டும் என்பதுதான் என் கனவு. பாதியில் நடிப்பை விட்டுப் போன நான் மீண்டும் நடிகையாக வரக்கூடாதா?’’ என்றார்.
அந்தக் கேள்வி என்னை யோசிக்கவைத்தது. ‘`ஒருநாள் டைம் கொடுங்க'’ என்று சொல்லிவிட்டு என் நலம்விரும்பிகள் சிலரைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொன்னேன். எல்லோருமே யோசித்தார்கள். ‘`கொடுன்னு சொன்னாலும் தப்பாகிடும். கொடுக்காதன்னு சொன்னாலும் தப்பாகிடும்’’ என்றார்கள்.
இசைத் துறையைச் சேர்ந்தவர் வீட்டிலிருந்து மீண்டும் போன் அழைப்பு. போனேன். சரிகா மேடத்திடம் ‘`இண்டஸ்ட்ரில எல்லோரும் தப்பா நினைப்பாங்க. ஏன், உங்க குழந்தைகளே கூட நாளைக்கு நீங்க திரும்ப சினிமாவுக்கு வர்றதைத் தப்பா நினைக்கலாம்'’ என்கிறேன். ‘`I will bring my children’’ என்றவர் ஸ்ருதியையும், அக்ஷராவையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அப்போது ஸ்ருதி, ‘`அங்கிள், அம்மா கஷ்டப்படுறாங்க. நீங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்'’ என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்ததும் நான் சம்மதம் சொல்லிவிட்டேன்.
உடனே சரிகா மேடம் ‘`எவ்வளவு சம்பளம் தருவீங்க’’ எனக் கேட்க, ‘`நீங்களே சொல்லுங்க'’ என்றேன். ‘`ரெண்டு லட்சம் கொடுக்க முடியுமா’’ என்றார். ‘`இல்ல மேடம்… மூணு லட்சம் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்’’ என்றேன். உடனே, ‘`எப்ப அட்வான்ஸ் கொடுப்பீங்க'’ என்றார். ‘`இன்னைக்கு சாயங்காலமே’’ என்றேன். அதன்படியே மாலை அந்த இசைத்துறையைச் சார்ந்தவர் வீட்டுக்கு அட்வான்ஸ் பணத்தோடு போனேன். அங்கே பிரமாண்டமான பூஜை அறை இருந்தது. ‘`எல்லாக் கடவுள்களின் முன்னிலையில் கொடுங்கள்'’ என இசைத் துறையைச் சேர்ந்தவரின் மனைவி சொல்ல, அட்வான்ஸ் கொடுத்தேன். சரிகா மேடம் அன்று சிந்திய கண்ணீர் என்னை உலுக்கியது. அதுதான் நான் கடைசியாக சரிகா மேடத்தை நேரில் பார்த்த நாள். அதன்பிறகு சரிகா மேடத்தை இயக்குநர் சபாபதி சந்தித்து, காட்சிகளை விவரித்து அவரை நடிக்கவைத்தார். இதுதான் நடந்த உண்மை. நான் கமல் சாரை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காக சரிகா மேடத்தை நடிக்க வைக்கவில்லை. விகடன் வழியாக, நடந்த உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டேன். கமல் சாரும் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.

‘இந்த சினிமா உலகத்துக்கும் மக்களுக்கும் நம் மூலமாகச் சில உண்மைகள் தெரிந்தால் நல்லது தானே. பின்னால் வரும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் அது உதவுமே’ என்ற எண்ணத்தில்தான் இந்த ‘உண்மைகள் சொல்வேன்’ தொடர் பயணம் தொடங்கியது. தொடருக்கு விகடன் வாசகர்கள் தந்த வரவேற்பு என்னை மகிழ்ச்சிக் கடலுக்குள் தள்ளிவிட்டது. ஒவ்வொரு வாரமும் எனக்கு வரும் போன் அழைப்புகளும், மெசேஜ்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. எந்த இடத்துக்குப் போனாலும் என்னிடம் ‘உண்மைகள் சொல்வேன்' தொடர் பற்றிப் பேசிவிட்டுத்தான் மற்ற விஷயங்கள் பேசுவார்கள். கடந்த வாரம்கூட ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது ‘`அவங்க போலீஸ் எஸ்.பி-யின் மனைவி… உங்ககிட்ட சில வார்த்தைகள் பேச விரும்புறாங்க’’ என்றார்கள். ‘உண்மைகள் சொல்வேன்’ தொடர் பற்றி அவ்வளவு சிலாகித்து, நான் எழுதிய பல சம்பவங்களையும் குறிப்பிட்டு அவ்வளவு மகிழ்ச்சியோடு பேசினார் அவர். இப்படிச் சென்ற இடங்களிலெல்லாம் என்னைக் கொண்டாடிய விகடன் வாசகப் பெருமக்களுக்கு நன்றி. என்னை மக்களிடம் இன்னும் நெருக்கமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்த ஆனந்த விகடன் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களுக்கும், 40 வாரங்களாக என்னோடு பயணித்து இத்தொடரைத் தொகுத்து எழுதிய தேவன் சார்லஸுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

என்னால் பல உண்மைகளை இந்தத் தொடர் வழியாகச் சொல்லமுடியவில்லை என்பதே உண்மை. சொன்ன உண்மைகள் மூலம் சிலர் காயப்பட்டதாக என்னிடமே வருந்தினார்கள். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இத்தொடரில் நான் சிலாகித்த பலரும் என்னிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறள் வழி வாழவேண்டும் என்கிற கொள்கை உடையவன் நான். பயணம் தொடர்கிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்!
- நிறைந்தது.
- தொகுப்பு தேவன் சார்லஸ்